முருகன்-வள்ளியாக மிளிரும் ‘பார்பிகள்’ - அமெரிக்காவில் இருந்து பிரியாவின் கைவண்ண பொம்மைகள்!
நவராத்திரி கொலுவுக்கு ஒவ்வொருவரும் அழகிய பொம்மைகளை தேடிப்பிடித்து வாங்கி வந்து கொலுவை சிறப்பு செய்வது வழக்கம். அப்படியான தேடலில் இறங்கிய அமெரிக்காவில் செட்டிலாகிய சென்னைபெண், அதையே வெற்றிகர தொழிலாக்கி, இந்திய பாரம்பரியத்தையும் பரவச்செய்கிறார்.
அழகு அழகான கொலுபொம்மைகள் படிகளில் அலங்கரிக்கப்பட்டு ஒன்பது நாட்களாக ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளுடனும் பிராத்தனைகளுடனும் சிறப்பாய் கொண்டாடப்பட்டு வருகிறது நவராத்திரி விழா. வீடுகள், கோயில்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலுவுக்கு ஒவ்வொருவரும் அழகிய பொம்மைகளை தேடிப்பிடித்து வாங்கி வந்து கொலுவை சிறப்பு செய்வது வழக்கம். அப்படியான தேடலில் இறங்கிய அமெரிக்காவில் செட்டிலாகிய சென்னைபெண் ஒருவர், தேவைக்காக பொம்மையை செய்ய தொடங்கி இன்று அதையே வெற்றிகர தொழிலாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் குடிக்கொண்டுள்ள பிரியா ஸ்ரீராம், பார்பி மற்றும் கென் பொம்மைகளை, உருவதெய்வங்களாகும், நம் நாட்டு திருமண சடங்குகளை பிரதிபலிக்கும் பொம்மைகளாக மாற்றுவதில் வித்தகி.
கடந்த 2 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட பொம்மைகளை உருவாக்கிய அவர், உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார். தொழிலை வெற்றிகரமாக செய்வதுடன், அமெரிக்காவில் இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பரவச் செய்வதில் சிறு பங்காற்றுகிறார் பிரியா.
‘‘சென்னை தான் பூர்விகம். ஸ்கூல், காலேஜ் படிச்சதெல்லாம் சென்னையில் தான். 2009ல் கல்யாணம் முடிந்தவுடன், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டோம். 9வயசுல பையனும், 4வயசுல பொண்ணும் இருக்காங்க. சொந்த ஊரைவிட்டு தள்ளியிருப்பதால், இயல்பாகவே இந்திய பண்டிகைகள் வந்தால், கொஞ்சம் மிஸ்ஸிங்காக இருக்கும். அப்படிதான், கொலு வைக்கலாம் என்ற ஆசை வந்தது. அமெரிக்காவின் மினிசோட்டாவில் தான் முதலில் இருந்தோம். அங்கு பயங்கர குளிரா இருக்கும். வெளில போய், பொம்மைகள் வாங்க முடியாது. அதனால்,
வீட்டிலிருந்த பார்பி பொம்மையை மேக் ஓவர் செய்யலாம்னு நினைத்தேன். சின்ன வயசில பார்பி பொம்மைகளுக்கு சேலை அணிவித்து அலங்காரம் செய்து விளையாடிய அனுபவம் இருக்கிறது. அதனால், வீட்டிலிருந்த ரிப்பன், என்னோட தோடு, பொட்டு வைத்து கல்யாண கோலத்திலிருக்கும் ஐயங்கார் மாமா-மாமி தான் முதலில் செய்தேன். அந்த பொம்மை ரொம்ப நல்லாருக்குனு எல்லோரும் பாராட்டினாங்க,'' என்றார் கைவண்ணத்தில் பொம்மைகளுக்கு எக்ஸ்ட்ரா அழகு கூட்டும் பிரியா.
பொம்மை தயாரிப்பை முழுநேர தொழிலாக எடுத்துக்கொள்வது தான் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு என்ற பிரியா, அது குறித்து தொடர்ந்து பேசுகையில்,
‘‘நீ செய்யும் பொம்மைகளில் ஒரு நேர்த்தியிருக்கிறது. இதையே, நீ பிசினஸ் பண்ணுனு நிறைய ஃப்ரெண்ட்ஸ் ஐடியா கொடுத்தாங்க. அதே நேரம், சில ப்ரெண்ட்ஸ் நெகட்டிவ்வாவும் சொல்லி, டிஸ்கரேஜ்ஜும் பண்ணாங்க. எப்படி இந்த பொம்மையிலாம் வாங்குவாங்க என்பதில் வேறு ஒரு குழப்பம். அதனாலயே, சரியான ஒரு முடிவை எடுப்பதற்கு ஒரு ஆண்டு முழுவதும் யோசித்தேன். அப்பவும், முதலீடு அதிகம் செய்யாமல், வீட்டிலிருந்த பொருள்களை வைத்தும், பக்கத்திலே கிடைத்த பொருள்களை வைத்தும் பொம்மைகள் செய்தேன்."
ப்ரெண்ட் ஒருத்தங்க கொலுவில் வைக்க பொம்மை செய்து தரச்சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. அவுங்களுக்காக வியாபார ரீதியில் முதன் முதலில் பரதநாட்டிய பொம்மை ஒன்றை செய்தேன். ப்ரெண்ட் அந்த பொம்மையை அவருடைய கொலுவில் வைத்தார். அவங்க கொலுவை பார்க்கவந்த இரண்டு பேர், பொம்மை செய்துதர சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நல்ல ஸ்டார்ட்னு நினைத்து 15 பொம்மைகளை எந்த ஆர்டருமின்றி நானே செய்து வைத்தேன். ஆனால், அவற்றை அவ்வளவு எளிதில் விற்கமுடியவில்லை.
2017ம் ஆண்டில் ப்ரெண்ட் ஒருத்தங்க, அவங்க வீட்டிலேயே கைவினை பொருள்கள் செய்பவர்களுக்காக கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். என்னையும் அழைத்திருந்ததால், 15 பொம்மைகளுடன் ஒரு ஸ்டால் போட்டேன். கைக்குழந்தையை அம்மாவிடம் வீட்டிலேயேவிட்டு விட்டு 4 மணிநேரமாக ஸ்டாலில் உட்கார்ந்திருந்தேன். பொம்மைகளை பார்க்கும் ஒவ்வொருவரும் எப்படி செய்தீங்கனு முழுதா விசாரிப்பாங்க. ஆனா, ஒரு பொம்மைகூட விற்கலை. அந்த சமயத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஒருவேளை தொழில் ரீதியா வெற்றியடையாதோனு ஒரு எண்ணம் தோன்றியது.
ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு இந்தியா வந்திடுவேன். அப்படி, நான் இந்தியாவுக்கு டிராவல் செய்து கொண்டிருந்தபோது, ப்ரெண்ட் ஒருவர் என் பொம்மைகளை விற்று தருவதாகச் சொன்னார். வெறும் 4 நாட்களிலே 15 பொம்மைகளை விற்றுவிட்டார். எப்படி இது சாத்தியமானது? என்று கேட்டபோது, ஃபேஸ்புக்கில், போஸ்ட் செய்ததாகச் சொன்னார்.
அதன் பிறகு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ‘எக்ஸ்ப்ரசிஸ் டால்ஸ்' என்ற பெயரில் அக்கவுன்ட் ஓபன் செய்து தொடர்ந்து போஸ்ட் செய்யத் தொடங்கினேன். ஆனாலும்,
"டிஜிட்டல் உலகில் நம் தயாரிப்புகளை எளிதில் நகலெடுத்துவிடுகின்றனர். பதிவிடும் போட்டோக்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் அதற்கு தீர்வு காண எண்ணினேன். இப்போ, என் பொம்மைகளை விரும்புவர்கள் என்னையே தேடி வருவதால் கண்டுகொள்வதில்லை,'' என்றார் அவர்.
மெல்ல ஆர்டர்களும் வரத்தொடங்கியது. ஆனால், பொம்மை அலங்கரிப்பிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் சிரமத்தை சந்தித்துள்ளார் பிரியா. 6 மாத தேடலுக்கு பின்பே, அலங்காரப் பொருள்கள் விற்பனை கூடத்தை கண்டறிந்துள்ளார்.
கொலு சீசன்களில் முருகர், ஆண்டாள், ரங்கநாதர், ராமர், கிருஷ்ணர் என்று சாமி பொம்மைகள் ஆர்டர்களை பெற்றுள்ளார். ஆனால், அதை அவர் சீசன் பிசினஸாக மட்டும் நிறுத்திவிடவில்லை. கல்யாணம், தாவணி விழா தொடங்கி சகல விசேஷங்களையும், கிராண்ட்டா, கெத்தா கொண்டாட நினைக்கும் மக்களுக்காக எந்தவொரு நிகழ்ச்சிக்கும், ஏற்றாற் போன்ற கான்செப்டுடன் பார்பிப் பொம்மைகளை மேக் ஓவர் செய்து அளித்து அசத்துகிறார். அதில் அவருடைய திருமண சடங்குகளை பிரதபலிக்கும் பொம்மைகள் அவ்வளவு அழகு.
நவராத்திரி மற்றும் பண்டிகை நாட்கள் மட்டுமில்லாமல் கல்யாணம் போன்ற விசேஷ நாட்களுக்கும் இந்த பொம்மைகளை வரவேற்பறையில் அலங்காரப் பொருட்களாக வைக்க அதிகம் முன்னுரிமை கொடுக்கிறாங்க. ரிட்டர்ன் கிஃப்ட்டு மற்றும் கிஃப்ட்டுக்கு நல்ல தேர்வா வாங்குறாங்க. தொடக்கத்தில், இந்த பொம்மைகள் பற்றி மக்களுக்கு அவ்வளவு தெரியாது. இப்ப, நிறைய இடங்களில் காணும் நிலை இருக்கிறதால, மார்க்கெட் ஏற்பட்டிருக்கு. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிகம் வாங்கிறாங்க.
”விற்பனை அதிகமாகும் போது, அதற்கேற்ற நேர்த்தியில் செய்யனும்னு அதிகம் முயற்சி செய்வேன். அதனாலே, ஆர்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேதி குறித்து வைத்து கொள்வேன். ஏன்னா, நமக்கு பெர்பெக்ட்- ஆ செய்து கொடுத்தோம் என்ற திருப்தியும் வேணும், வாங்கும் கஸ்டமர்கள் சந்தோஷமும் படனும். இப்பவும், பிப்ரவரி மாதம் வரை ஆர்டர் ஃபுல்லா இருக்கும்,'' என்கிறார் பிரியா.
ரெப்ளிகா பொம்மைகள் எனப்படும் ஒருவரை போன்ற நகலெடுத்து உருவாக்கும் பொம்மைகளையும் செய்கிறார் பிரியா. 60ம் மற்றும் 80ம் கல்யாணங்களுக்கும் ஏற்றாற் போன்று, பார்பி பொம்மையை பாட்டி போன்றும், கென் பொம்மையை தாத்தா போன்றும், வெண்நிற தலைமுடி, முகச்சுருக்கங்கள், கண்ணாடியுடன் வயதானவர்களுக்குரிய ஒப்பனைகளுடன் கச்சிதமாய் வடிவமைக்கிறார்.
இதில் சிறப்பே, இளம் ஜோடிக்கு பயன்படுத்தப்படும் அதே பொம்மைகள் தான் முதியவர்களுக்கும் பயன்படுத்துகிறார். முக எக்ஸ்பிரேஷன்கள் மூலம், பொம்மைகளை வடிவமைப்பதில் கில்லாடி என்பதாலே பிசினசிற்கு ‘எக்ஸ்ப்ரசிவ் டால்ஸ்' என்று பெயரிட்டுள்ளார் அவரது கணவர்.
‘‘குடும்பத்திலிருந்து எனக்கு பயங்கர சப்போர்ட் கொடுப்பாங்க. ஒரு நாளுக்கு 5 மணி நேரம் பொம்மை செய்வேன். தலைமுடி, டிரஸ், நகைகள், மேக் அப்னு பேசிக்கா ஒரு பொம்மை செய்வதற்கு 5 மணிநேரமாகும்.
சில நாட்களில் உடனே வேணும்னு ஆர்டர் கொடுப்பாங்க. நைட்லாம் தூங்காம முழிச்சிருந்து வேலையை முடிப்பேன். நான் ஒரு ஆளா பண்றதால, அந்த சமயங்களில் பாப்பாவை பார்த்துக்கொண்டு எனக்கு நல்லா சப்போர்ட் செய்வாரு என் கணவர். ஏன், ஒரு முறை கல்யாண நாள் பரிசா, ‘எக்ஸ்ப்ரசிஸ் டால்ஸ்' என்ற பெயரில் வெப்சைட் தொடங்கி, நைட் 12 மணிக்கு காட்டி சந்தோஷப்படுத்தினார்.
அவங்களோடு ஊக்கமும் இருப்பதால் தான் என்னால் தொடர்ந்து இயங்கமுடியுது. ஏன்னா, மெட்டீரியல் விலை இங்கே அதிகம், அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு கொரியர் பண்ணும் போது டெலிவரி செலவும் அதிகம். அதற்காக பொம்மையின் விலையை பன்மடங்கு உயர்த்த முடியாது. அதற்கு பதிலாக என் வேலைக்கான பணத்தை குறைத்துக் கொள்வேன்.
இதுவே, நான் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போன, இதில் கிடைக்கும் வருமானத்தைவிட 3 மடங்கு சம்பளம் வாங்குவேன். ஆனாலும், மனதுக்கு பிடித்த, சந்தோஷத்தை அளிக்கிற வேலையை பார்க்கிறோம் என்பதில் கிடைக்கிறது ஒரு ஆனந்தம். அதைத் தாண்டி, நாடுகடந்து அட்லாண்டாவில் குடிகொண்டுள்ள எனக்கு இந்த பொம்மைகள் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு,'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் பக்கம்: Expressive dollz