55 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவின் கல்லறையைக் கண்டுபிடித்து மரியாதை செலுத்திய மகன்!
தான் குழந்தையாக இருக்கும் போது வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்ற தந்தை இறந்த நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கல்லறையைக் கண்டுபிடித்த மகனின் கதை பலரையும் உருக வைத்துள்ளது.
தான் குழந்தையாக இருக்கும் போது வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்ற தந்தை இறந்த நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கல்லறையைக் கண்டுபிடித்த மகனின் கதை பலரையும் உருக வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வெங்கடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமாறனுக்கு தற்போது 56 வயதாகிறது. இவரது தந்தை பூங்குன்றன் என்கிற ராமசுந்தரம் மலேசியா உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்ற குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு வேலைக்குச் சென்ற 6 மாதங்களில் ராமசுந்தரம் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
“என் தந்தை 1967ம் ஆண்டு நோயால் இறந்தபோது அவருக்கு வயது 37. என் தாயார் ராதாபாய் அவரை அடக்கம் செய்து என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தார். எனது தாயும் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு எப்படியாவது எனது தந்தையை அடக்கம் செய்த இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தீவிர தேடலாக மாறியது,” என்கிறார்.
அந்த காலத்தில் தகவல் தொழில் நுட்பம் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை என்றாலும், இப்போது இருக்கும் இணைய வசதி தனது தேடல் முயற்சிக்கு நல்ல பலன் கொடுக்கும் என நம்பினார். உலகின் முன்னணி தேடு பொறித் தளமான கூகுளின் உதவியுடன் தனது தந்தையின் கல்லறையை தேடும் முயற்சியில் இறங்கினார்.
அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அவரது தந்தை எப்படிப்பட்ட மனிதர் என்பதையும் மலேசியாவில் அவரிடம் படித்த மாணவர்கள் மூலமாக தெரிந்து கொண்ட போது நெகிழ்ந்து போனார்.
“அவர் மலேசியாவின் கெர்லிங்கில் உள்ள கெர்லிங் தோட்டா தேசிய தமிழ்ப்பள்ளி பணிபுரிந்தார் என்பது எனக்குத் தெரியும். கூகுள் மூலம், பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து உள்ளதையும், பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதையும் கண்டேன். தலைமை ஆசிரியர் குமார் சிதம்பரத்தின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, எனது தந்தையின் கல்லறையைக் கண்டுபிடிக்க விரும்புவதாகச் சொன்னேன்,” என்கிறார்.
சிதம்பரம், ராமசுந்தரத்தின் பழைய மாணவர்களான மோகன ராவ் மற்றும் நாகப்பன் ஆகியோருடன் தொடர்பு கொண்டார், 80 வயதான இருவரும், கெர்லிங்கில் தங்கள் ஆசிரியரின் கல்லறையைக் கண்டுபிடித்து அது எங்கு உள்ளது என்ற தகவலை அவரது மகனான திருமாறனிடம் தெரிவித்துள்ளனர்.
“நவம்பர் 8 ஆம் தேதி நான் மலேசியாவுக்குச் சென்றேன். அங்கு என் தந்தையின் கல்லறையை புதருக்குள் பார்த்தேன். அந்த கல்லறை சிதிலமடைந்திருந்தாலும், அதில் என் தந்தையின் உருவப்படமும், பெயரும், பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இருந்தன. நவம்பர் 16 அன்று இந்தியா திரும்புவதற்கு முன்பு நான் பல முறை கல்லறையில் பிரார்த்தனை செய்தேன்...”
ராமசுந்தரத்தின் மாணவர்களில் ஒருவரான நாகப்பன் தனது தந்தை குறித்து கூறியதை திருமாறன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒருமுறை பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதற்காக அப்பா அடித்ததால் கமலம் என்ற மாணவி மயங்கி விழுந்துள்ளார். அதைப் பார்த்து துடிதுடித்துப் போன அப்பா, அந்த மாணவியை மடியில் கிடத்தி அவளுக்கு மயக்கம் தெளிய உதவியுள்ளார்.
இந்த கதை இணையத்தில் வெகுவானர்களை கவர்ந்ததைப் போலவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுகுறித்த ஆங்கில பத்திரிகை செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின்,
“மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு.இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன். இந்தப் பயணத்தில், திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் திரு.இராமசுந்தரம் அவர்கள் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரம் அவர்களை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே!. தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திருமாறன் அவர்கள், ஆதரவற்றவராக அல்லாமல, பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்...” என பதிவிட்டுள்ளார்.
அப்பா, அம்மா இருவரும் இல்லாமல் தனியாளான திருமாறன், தன்னைப் போல் ஆதரவற்ற, அனாதையானவர்களை பாதுக்காக்க இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 60 ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தர உதவியதோடு, 3,009 ரத்த தான முகாம்களை நடத்தியுள்ளார். பெற்றோரை இழந்த பிறகு முழுக்க முழுக்க தனது வாழ்க்கையை சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி
டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட அப்பா இன்று இல்லை; சோகத்திலும் நீட் தேர்வில் சாதித்த ஈரோடு மாணவி!