2020-ல் யுவர்ஸ்டோரி வெளியிட்ட டாப் 10 இந்திய நிறுவன வெற்றிக் கதைகள்!
எஸ்எம்பிஸ்டோரி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய நூற்றுக்கணக்கான உள்நாட்டு வணிகங்களில் உங்களுக்கு உந்துதலளிக்கக்கூடிய 10 உள்நாட்டு வணிகங்கள் மற்றும் பிராண்டுகளின் தொகுப்பு.
2020-ம் ஆண்டு தொடக்கத்தில் மெல்ல பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் ஒவ்வொரு மாதமும் பன்மடங்காக அதிகரித்தது. இதன் சங்கிலி அறுக்கப்படுவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
போக்குவரத்து தடைபட்டது. யாரும் வெளியில் செல்ல முடியாமல் போனது. புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமங்களுடன் சொந்த ஊர் நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
சிறு வணிகங்கள் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது. பலர் வணிக நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக நிறுத்திக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.
அதேசமயம் இதுபோன்ற தடைகளை தங்களுக்கே உரிய உத்திகளை வகுத்து தகர்த்தெறிந்து முன்னேறி சென்று கொண்டிருப்பவர்களும் உண்டு.
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் தீவிரம் காட்டப்படும் நிலையில் எஸ்எம்பிஸ்டோரி நூற்றுக்கணக்கான உள்நாட்டு வணிகங்கள் மற்றும் பிராண்டுகளின் கதைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இதில் 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 இந்திய வணிகங்கள் மற்றும் பிராண்டுகளின் கதைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:
சுகுனா ஃபுட்ஸ் (Suguna Foods)
சகோதரர்களான சுந்தர்ராஜனும், சௌந்திரராஜனும் 1986-ம் ஆண்டு கோழிப்பண்ணை வணிகத்தைத் தொடங்கினார்கள். இயந்திரங்கள், கோழித்தீவனம் போன்றவற்றை மற்ற கோழிப்பண்ணை நிறுவனங்களுக்கு வழங்கி வந்தார்கள்.
விவசாயிகளுக்கு வங்கிகளில் முறையாக கடன் கிடைப்பதில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் கடன் வழங்குபவர்களிடம் இவர்கள் கடன் வாங்கி சிரமப்பட்டார்கள். இவர்களுக்கு நிலையான வருவாயும் இருப்பதில்லை.
இதைக் கண்ட பின்னரே இடைத்தரகர்களின் தலையீடு இல்லாத ஒப்பந்த விவசாய மாதிரியை உருவாக்கும் எண்ணம் தோன்றியுள்ளது. அப்படி உருவானதுதான் சுகுணா ஃபுட்ஸ். இதன்படி விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பிற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சுகுணா ஃபுட்ஸ் வழங்கிவிடும். விவசாயிகள் கோழிகளை வளர்த்து இந்நிறுவனத்திற்கு வழங்கும்படி ஒப்பந்தம் போடப்பட்டது.
கிட்டத்தட்ட 40,000 விவசாயிகளுக்கு நிலையான வருவாயை வழங்குகிறது சுகுணா ஃபுட்ஸ்.
தரமான சிக்கன் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் இந்த உள்நாட்டு நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 8,700 கோடி ரூபாய்.
போரோசில் (Borosil)
போரோசில் நிறுவனம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கியத் தயாரிப்பான போரோசிலிக்கேட் கிளாஸ் பெயரைக் கொண்டே போரோசில் என பெயரிடப்பட்டது.
இந்நிறுவனம் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி உபகரணங்கள், சமையலறையில் பயன்படுத்தப்படும் கண்ணாடி பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
2018-19 ஆண்டில் இந்நிறுவனம் 635 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
“எங்கள் தயாரிப்புகள் தரமானவை; பாதுகாப்பானவை; எளிதாகப் பயன்படுத்தக்கூடியவை. மைக்ரோவேவ் ஓவனில் பயன்படுத்துவதற்கான கண்ணாடி பாத்திரங்களுக்கு எங்கள் பிராண்ட் பிரபலமானது,” என்கிறார் போரோசில் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவர் கெருகா.
மெட்ரோ ஷூஸ் (Metro Shoes)
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் மாலிக் தேஜானி மும்பையில் ஒரு ஸ்டோரில் ஷூ விற்பனையாளராக பணியாற்றினார். இந்தியப் பிரிவினை காரணமாக அந்த ஸ்டோர் உரிமையாளர் நாட்டை விட்டு சென்றுவிடவே மாலிக் தெரிந்த நண்பரிடம் கடன் வாங்கி ஸ்டோரை வாங்கிக்கொண்டார்.
இன்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பி வாங்கும் பிரபல காலணி பிராண்டாக மெட்ரோ ஷூஸ் விளங்குகிறது.
மாலிக் தேஜானியைத் தொடர்ந்து அவரது மகன் ரஃபிக் மாலிக் வணிகத்தை நடத்தி வர இன்று மாலிக்கின் பேத்தி ஃபரா மாலிக் பன்ஜி சிஇஓ-வாக நிர்வகித்து வருகிறார். இன்று வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் தனித்தேவையையும் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முக்கியத்துவம் அளித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் சேவையளிக்கவேண்டிய சூழல் நிலவுவதாக ஃபரா மாலிக் குறிப்பிடுகிறார்.
இந்தியா முழுவதும் 128 நகரங்களில் 550 ஸ்டோர்கள் அடங்கிய நெட்வொர்க்குடன் செயல்படும் இந்த பிராண்டின் வருடாந்திர டர்ன்ஓவர் 1,411 கோடி ரூபாய்.
பிரதாப் ஸ்நாக்ஸ் (Prataap Snacks)
இந்தூரைச் சேர்ந்த பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனம் யெல்லோ டயமண்ட் பிராண்ட் சிப்ஸ் தயாரிக்கிறது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பிரதாப் ஸ்நாக்ஸ் 1,079.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
பெப்பி சீஸ் பால்ஸ் வெற்றியைக் கண்ட அமீத் குமாத் இந்தூரில் ஸ்நாக்ஸ் சந்தையில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை உணர்ந்து சொந்தமாக சீஸ் பால்ஸ் தயாரிப்புகள் தொடர்பான சில்லறை வர்த்தகத்தைத் தொடங்கினார்.
மம்மாஎர்த் (Mamaearth)
கசல், வருண் அலக் தம்பதி தங்கள் குழந்தை பிறக்கும் தினத்தை ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தார்கள். பச்சிளம் குழந்தைக்குத் தேவையான தரமான பொருட்களை வாங்குவதற்காக இணையம் வாயிலாக தீவிர ஆய்வில் இறங்கினார்கள்.
ஆனால் இவர்கள் பார்த்த அத்தனை தயாரிப்பிலும் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பதை அறிந்து ஏமாற்றமடைந்தனர். எனவே இந்தத் தம்பதி பச்சிளம் குழந்தைகளுக்கான பிராண்டை உருவாக்கினார்கள். 2016-ம் ஆண்டு Honasa Consumer Pvt Ltd என்கிற தாய் நிறுவனத்தின்கீழ் Mamaearth பிராண்டை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆசியாவிலேயே நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இல்லாத தயாரிப்புகள் என MadeSafe சான்றிதழ் பெற்ற ஒரே பிராண்டாக Mamaearth செயல்படுகிறது.
கெண்ட் ஆர்ஓ (Kent RO)
90-களில் மகேஷ் குப்தா குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாட சென்றிருந்தார். அப்போது இவரது குழந்தைகள் வெளியில் அசுத்தமான நீரைக் குடித்ததால் மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் மகேஷ் குப்தாவின் மனதில் ஆழப்பதிந்தது. தண்ணீரை சுத்திகரிப்பது குறித்து ஆய்வு செய்தார். வழக்கமான யூவி சுத்திகரிப்பால் தண்ணீரில் கரைந்திருக்கும் அசுத்தங்களை நீக்க முடியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.
அப்போதுதான் ஆர்ஓ செயல்முறை இவரது கவனத்தை ஈர்த்தது. இது மிகவும் பாதுகாப்பானது என்பதை அறிந்தார். அந்த சமயத்தில் யாரும் ஆர்ஓ பயன்படுத்தவில்லை. இதை முயற்சிக்க விரும்பிய மகேஷ் குப்தா அமெரிக்காவில் இருந்து மெம்பரேன் மற்றும் பம்ப் இறக்குமதி செய்தார். வீட்டிலேயே முதல் ஆர்ஓ பியூரிஃபையர் உருவாக்கினார். இப்படித் தொடங்கப்பட்டதுதான் கெண்ட் ஆர்ஓ பயணம்.
ஆர்ஓ பியூரிஃபையர் சந்தையில் 40 சதவீத அளவிற்கு பங்களிக்கும் இந்நிறுவனத்தின் டர்ன்ஓவர் 1,000 கோடி ரூபாய்.
நீல்கமல் (Nilkamal)
வாமன்ராய் பரேக், ஷரத் பரேக் சகோதரர்களின் குடும்பம் பட்டன் தயாரிப்பு வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவர்கள் இருவரும் 1981-ம் ஆண்டு இந்த வணிகத்தில் இருந்து விலகி பிளாஸ்டிக் வணிகத்தில் ஈடுபடத் தீர்மானித்தார்கள்.
நீல்கமல் பிளாஸ்டிக்ஸ் என்கிற பெயரில் மும்பையில் பக்கெட், மக், பாஸ்கெட் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இதுவே நீல்கமல் லிமிடெட் நிறுவனமாக பிரம்மாண்டமாக உருவெடுத்து நாற்பதாண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பகமாக பிராண்டாக மாறியுள்ளது.
இந்த சகோதரர்கள் 80-களில் ஜெர்மனியில் ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த சமயத்தில் இந்தியாவில் மரம் அல்லது உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட நாற்காலிகளே பயன்பாட்டில் இருந்தன. எனவே ஜெர்மனியில் நாற்காலி மோல்ட் வாங்கி இந்தியாவில் பிளாஸ்டிக் நாற்காலி தயாரிக்கத் தீர்மானித்தார்கள்.
இன்று இந்நிறுவனத்தின் டர்ன்ஓவர் 2,200 கோடி ரூபாய்.
வினதி ஆர்கானிக்ஸ் (Vinati Organics)
உலகின் மிகப்பெரிய கெமிக்கல் தயாரிப்பாளரான வினதி ஆர்கானிக்ஸ் 1989-ம் ஆண்டு வினோத் சரஃப் என்பவரால் தொடங்கப்பட்டது.
இன்று இந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.
இந்நிறுவனம் இந்த நிலையை எட்டுவதற்கு வினோத்தின் மகள் வினதி முக்கியப் பங்களித்துள்ளார். நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்க இவர் ஆலோசகரை நியமித்தார். இதனால் குறைந்த முதலீட்டில் உற்பத்தித் திறன் அதிகரித்தது. அதேபோல் தரத்தை மேம்படுத்தவும் நிபுணர்கள் நியமிக்கபட்டனர்.
சைக்கிள் பியூர் அகர்பத்தீஸ் (Cycle Pure Agarbathies)
என். ரங்கா ராவ் சிறு வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்புகளை சுமந்தார். சிறு வேலைகள் செய்து வருமானம் ஈட்டினார்.
1940-ம் ஆண்டில் வீட்டிலேயே ஊதுவர்த்தி தயாரிக்கத் தொடங்கினார். இவரது பாட்டி இவருக்கு உதவியுள்ளார். தினமும் சந்தைக்கு சென்று ஊதுவர்த்தி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கி வந்து தயாரித்து விற்பனை செய்தார். இதில் கிடைக்கும் வருவாய் கொண்டு மீண்டும் மூலப்பொருட்களை வாங்குவார். இப்படித் தொடங்கப்பட்டதுதான் சைக்கிள் பியூர் அகர்பத்தீஸ்.
இன்று 75 நாடுகளில் செயல்படும் இந்நிறுவனத்தின் டர்ன்ஓவர் 1,700 கோடி ரூபாய்.
ஜாகுவார் குரூப் (Jaguar Group)
1960-ம் ஆண்டு மெஹ்ரா பாத்ரூம் ஃபிட்டிங் வணிகத்தைத் தொடங்கினார். ஒழுங்குபடுத்தப்படாத இந்தச் சந்தையில் Essco என்கிற பிராண்ட் தொடங்கி பணத்திற்கு மதிப்பு சேர்க்கும் பல்வேறு பொருட்களை வழங்கத் தொடங்கினார்.
வாடிக்கையாளர்களின் தேவையை மையமாகக் கொண்டு செயல்பட்டதாலும் மெஹ்ராவின் கடின உழைப்பாலும் இந்த பிராண்ட் சந்தையில் பிரபலமானது. 1985-ம் ஆண்டில் ஆண்டு டர்ன்ஓவர் 30 லட்ச ரூபாய். இது வெறும் தொடக்கம் மட்டுமே.
இன்று ஜாகுவார் குரூப் 3,600 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்ட வணிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா