2020 சிறப்பு: ஆரம்ப தொழில் முனைவைக் கொண்டாடும் வெற்றிக்கதைகள்!
தொழில்முனைவோர்கள் வெற்றிகரமான எண்ணங்களை கண்டறியும் தருணத்தில் கவனம் செலுத்தும் வார தொடராக தி டர்னிங் பாயிண்ட் பகுதி அமைகிறது. இந்த ஆண்டு, வாசகர்கள் அதிகம் விரும்பிய பத்து கதைகளை அளிக்கிறோம்.
தொழில்முனைவோராக இருப்பது எளிதல்ல. ஒரு நல்ல ஐடியா உங்களிடம் இருக்கலாம், ஆனால் அது நினைத்த பலனை அளிக்குமா என்பதில் தயக்கம் இருக்கலாம். சில நேரங்களில் ஊக்கம் இருக்கலாம், ஆனால் ஐடியா பற்றி தெளிவில்லாமல் இருக்கும். சில நேரங்களில் ஐடியாவை செயல்படுத்துவதற்கான சரியான காலம் பற்றிய குழப்பம் இருக்கலாம்.
இந்த கடுமையான சவால்களை கடந்து வந்தவர்கள், இப்போது வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் துறையில் கவனத்தை ஈர்க்கின்றனர்.
இந்த நிறுவனர்களைக் கொண்டாடும் வகையில், யுவர் ஸ்டோரி 2019 ஆகஸ்ட்டில் டர்னிங் பாயிண்ட் தொடரை துவக்கியது. இந்த தொடரின் ஒவ்வொரு கதையும், ஆரம்ப கால கஷ்டங்கள் மற்றும் அவற்றை தொழில்முனைவோர் வெற்றிகண்ட விதத்தை விவரிக்கின்றன.
சவால் மிகுந்த 2020ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், யுவர் ஸ்டோரி, இந்த ஆண்டு வாசகர்கள் அதிகம் விரும்பிய 10 கதைகளை தொகுத்து தருகிறது.
லூடோ கிங் - விகாஸ் ஜெய்ஸ்வால்
ஆன்லைன் விளையாட்டுகள் பிரபலமாக இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், கொரோனா உண்டாக்கிய பொது முடக்க சூழலில், பொழுதைக் கழிக்க, பலரும் அதிக நேரம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடத்துவங்கினர்.
இப்படி பலரும் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுகளில் ஒன்று, ஆன்லைன் பலகை விளையாட்டான Ludo King. விகாஸ் ஜெய்ஸ்வால் உருவாக்கிய இந்த விளையாட்டு பல மேடைகளில் முன்னிலை பெற்றது.
லூடோ கிங் மொபைல் கேமிங் ஸ்டார்ட் அப்'பிற்கு சொந்தமான, கேமிஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை உருவாக்கிய விகாஸ், சிறு வயதில் இருந்தே வீடியோ கேம்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
பாட்னாவில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கல்லூரியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்தார். விடுதியில் அவர் கம்ப்யூட்டர் பத்திரிகைகளுடன் வரும் இலவச மென்பொருள்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.
இந்த ஆர்வம் காரணமாக, Eggy Boy, எனும் வீடியோ கேமை உருவாக்கினார். இதன் பிறகு, வீடியோ கேம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது தொழில்முனைவு ஆர்வம் கொண்டார். இதன் பயனாக, 2010 கேமேஷன் நிறுவனத்தை துவக்கியவர், 2016ல் லூடோகிங்கை துவக்கினார்.
கேண்டிகிரஷ் சாகா, பப்ஜி, கிளாஷ் ஆப் கிளான்ஸ், சப்வே சர்பர்ஸ் உள்ளிட்ட விளையாடுகளுக்கு மத்தியில் நிலைத்து நிற்கும் ஒரே இந்திய விளையாட்டாக லூடோகிங் திகழ்கிறது.
உலகம் முழுவதும் 50 மில்லியன் தீவிர தினசரி பயனாளிகளைக் கொண்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் அனு மீனா
ராஜஸ்தானில் வளர்ந்த போது, ஐஐடி தில்லி பட்டதாரியான அனு மீனா, விவசாயியான தனது தாத்தா, விளைச்சலை விற்பனை செய்ய கஷ்டப்படுவதை அருகில் இருந்து பார்த்திருக்கிறார்.
அதனால் தான், அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்த பிறகு, இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தார். இதுவே 2017ல் அக்ரோவேவ் துவக்கக் காரணமாக அமைந்தது.
குருகிராமை சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், ஆய்வு, தொழில்நுட்பம் அடிப்படையில் விவசாய சப்ளை செயினை சீராக்குகிறது. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்க மற்றும் விநியோகை அமைப்பை பெற உதவி வருகிறது.
இதுவரை, Agrowave ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 35,000 பேரை தனது செயல்பாட்டில் ஏற்றுக்கொண்டுள்ளது.
சிறிய நகரங்களில் பால் புரட்சி
ஐ.ஐ.எம் பட்டதாரியான மனிஷ் பியூஷ் 14 நாடுகளில் பணியாற்றியவர், 2017ல் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்த போது, சிறிய நகரங்கள் வர்த்தகங்களின் கவனம் பெறாமல் இருப்பதை உணர்ந்தார்.
அப்போது மும்பையில் டாடா மோட்டார்சில் பொது மேலாளராக இருந்தவர் மொமண்டம் ஜார்கண்ட் எனும் வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தான் திரும்பு முனையாக அமைந்தது.
பழங்குடி மக்களை பார்த்தவர், இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் சில நாட்கள் தான், ஆனால் ஜார்கண்ட் எப்போதும் மாறாமல் இருக்கும் என்று உணர்ந்தார். இதை அடுத்து தனது சிறு வயது நண்பர் ஆதித்ய குமாரை சந்தித்துப்பேசினார்.
ஆதித்யாவும், உயர் கல்விக்காக சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றவர். அவரிடம், தாயகம் திரும்பி சொந்தமாக தொழில் துவங்க விருப்பம் உள்ளதா என மனிஷ் கேட்டார். இருவரும் வேலையை விட்டு விலை, சொந்தத் தொழில் துவங்கினர்.
தொழில்நுட்பம் தான் தங்கள் வர்த்தகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என நினைத்தவர்கள், கோடிங் கற்றுக்கொண்டு மென்பொருள்களை உருவாக்கி விற்பனை செய்தனர். அப்போது தான், பால் பதப்படுத்தும் நிறுவனத்திற்கான மென்பொருளை உருவாக்கும் வாய்ப்பை பெற்றனர்.
இந்த பணியின் போது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பாலின் மோசமான தரம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் பால் விற்பனையில் ஈடுபடத் தீர்மானித்தனர்.
கறவை மாடுகளை வாங்கி வளர்த்து வர்த்தகத்தை புரிந்து கொண்டவர்கள், 2019ல் பால் சந்தா Puresh Daily Foods அறிமுகம் செய்தனர்.
இந்த நிறுவனம் இயற்கையான பால் மற்றும் ரசாயனம் இல்லாத பால் பொருட்களை விற்பனை செய்கிறது. பாட்னாவிலும் நுழைய உள்ளது.
ஜிதேந்திர செளக்சி
தற்செயலான தொழில்முனைவோர் என தன்னை வர்ணித்துக்கொள்ளும் ஜிதேந்திர செளக்சி, உடல் தகுதியில் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவுவதற்கான ஸ்டார்ட் அப்பை துவக்கி நடத்தி வருகிறார்.
“சிறு வயதில் நானும் பருமனாக இருந்து, அதற்காக கேலி செய்யப் பட்டிருக்கிறேன்’ என்று கூறும் ஜிதேந்திரா, பலரும் தன்னிடம் உடல் தகுதி ஆலோசனை கேட்கத்துவங்கியதை அடுத்து, வாட்ஸ் அப் குழு ஒன்றை துவக்கினார். மேலும் பலர் ஆர்வம் காட்டவே இந்த குழு வளர்ச்சி அடைந்தது."
இந்த கட்டத்தில் தான், உடல் தகுதி ஆர்வத்தை வர்த்தகமாக மாற்றத் தீர்மானித்தார். 2016ல் அவர், ஆன்லைன் பிட்னஸ் ஸ்டார்ட் அப் Fittr நிறுவனத்தைத் துவக்கினார்.
முதலில் சிறிய கட்டணத்தில் துவங்கிய நிறுவனம், இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிமியம் மாதிரியை அறிமுகம் செய்தது.
“2016ல் துவங்கிய பயணத்தின் இயற்கையான முன்னேற்றமாக எங்கள் உடல்தகுதி செயலி அமைகிறது. ஆரோக்கியம் மற்றும் உடல்தகுதியை ஜனநாயகமயமாக்க விரும்புகிறோம். தீர்வுகளையும் சாதனங்களையும் மக்கள் கைகளில் வழங்குவது தான் இதற்கான சிறந்த வழி. இதை தான் Fittr செய்கிறது,” என்கிறார் ஜிதேந்திரா.
கிராம பயணம் உருவாக்கிய ஸ்டார்ட் அப் Vernacular.ai
இந்தியாவில் நிறுவனங்கள் சேவைகள் மற்றும் தயாரிப்பு தொடர்பாக அனுப்பி வைக்கும் தகவல்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆங்கிலம் பேசாதவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகிறது.
சவுரப் குப்தா மற்றும் அக்ஷய் தேஷ்ராஜ் துவக்கிய பெங்களூருவைச்சேர்ந்த Vernacular.ai ஸ்டார்ட் அப் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் இதை மாற்ற முயல்கிறது. ஐஐடி ரூர்கேலாவில் பட்டம் பெற்ற பிறகு பெங்களூரு வந்த சவுரப் மற்றும் அக்ஷய் அடுத்த பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் துவக்க விரும்பினர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பெங்களூருவைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லத்துவங்கினர். இது போன்ற ஒரு பயணத்தில், கனகபுரா எனும் கிராமத்தில் ஒரு விவசாயியை சவுரப் சந்தித்தார். அந்த விவசாயிக்கு நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை இருந்தது.
“வங்கியிடம் இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் வருகிறது. எண்களை வைத்து அது வங்கியில் இருந்து வருவது தெரிந்தாலும், ஆங்கிலம் தெரியாததால் செய்தியை படிக்க முடியாது,” என அந்த விவசாயி கூறினார்.
இந்த தருணத்தில் தான் அடுத்த கட்ட இணைய பயனாளிகள் குரல் சார்ந்து அமைவார்கள் என்று சவுரப் தெரிந்து கொண்டார். இதன் பயனாக, பல மாதங்கள் முயன்று Vernacular.ai நிறுவனத்தைத் துவக்கினர்.
இந்த ஸ்டார்ட் அப், செயற்கை நுண்ணறிவு சார்ந்த குரல் வழி உதவியாளர் VIVA மூலம் வாடிக்கையாளர் உறவை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவுகிறது.
ஐஐடி பட்டதாரிகளின் இரண்டாவது இன்னிங்ஸ்
கல்வி நுட்ப நிறுவனமான வேதாந்துவின் விதை பஞ்சாபின் சிறிய கிராமத்தில் விதைக்கப்பட்டது. ஐஐடி இளம் பட்டதாரிகளான வம்சி கிருஷ்ணா, புல்கித் ஜெயின் மற்றும் ஆன்ந்த பிரகாஷ், கல்வியில் இருந்த இடைவெளியை போக்க விரும்பினர்.
2006ல் அவர்கள் லக்ஷயா எனும் நிறுவனத்தைத் துவக்கினர். 2012ல் இந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்த சேவை மூலம் பல மாணவர்கள் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து நிறுவனர்கள் 2014ல் வேதாந்து நிறுவனத்தைத் துவக்கினர்.
இன்று, இந்தியாவில் இணைய கல்வியை முதலில் அறிமுகம் செய்த நிறுவனம் என வேதாந்து பெருமை கொள்கிறது. மாணவர்களுக்கான இணைய பயிற்சியில் முன்னணியில் விளங்குகிறது.
ராகுல் கார்கின் ‘Alibaba 2.0’ திட்டம்
ஐஐடி கான்பூர் பட்டதாரியான ராகுல் கார்க், கூகுளில் விளம்பர பரிமாற்ற வலைப்பின்னலான AdX - ல் பணியாற்றிக்கொண்டிருந்த போது 2014ல் தொழில்முனைவில் ஈடுபடத் தீர்மானித்தார். விளம்பரத் துறை அனுபவத்துடன், “Alibaba 2.0” திட்டத்துடன் 2015ல் மோக்லிக்ஸ் நிறுவனத்தைத் துவக்கினார்.
வர்த்தக நிறுவனங்கள் அளவிலான தொழிற்சாலை பொருட்கள் கொள்முதலுக்கான சேவையை நிறுவனம் வழங்கியது. நிறுவனத்தின் இரண்டாவது முதலீட்டாளராக தொழிலதிபர் ரத்தன் டாடா அமைந்துள்ளார்.
பல்வேறு சுற்று நிதிகளை திரட்டிய நிறுவனம் 2018ல் 120 மடங்கு வருவாய் வளர்ச்சியை பெற்றது. 2019 மார்ச்சில் பிளிப்கார்ட் சி.இ.ஓ கல்யான் கிருஷ்ணமூர்த்தி தனிப்பட்ட முறையில் இதில் முதலீடு செய்தார்.
நிதி நுட்ப நிறுவனம்
நிதித்துறையில் சிந்தனை போக்கை மாற்ற வேண்டும் எனும் உணர்வுடன், ஐஐடி பட்டதாரியான லலித் கேசரி தொழில்முனைவில் ஈடுபட்டார். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் 2016ல் பணியை விட்டு விலகினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை இதற்கான உந்துசக்தியாக அமைந்தது.
ஃபிளிப்கார்ட் சகாக்கள் நீரஜ் சிங் மற்றும் இஷான் பன்சல் ஆகியோருடன் இணைந்து கேசரி, நிதி சேவை தீர்வுகளை உருவாக்கத்துவங்கினார். அவர்கள் இளைஞர்களுக்கான சேமிப்பு சேவையைத் துவக்க நினைத்தனர்.
இந்த கட்டத்தில் தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. பரிவர்த்தனைகள் டிஜிட்டல்மயமாகின. இதையடுத்து நிறுவனர்கள், Groww சேவையை துவக்கினர். 2016ல் நிறுவனம் துவங்கிய நிலையில், செயலி மற்றும் இணையதளம் சார்ந்த முதலீடு சேவையை துவங்கியது. தற்போது Groww 800 இந்திய நகரங்களில் சேவை அளித்து வருகிறது.
இணைய விற்பனை
எப்.எம்.சி.ஜி அல்லாத துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கல்லூரி நண்பர்கள், ஜஸ்மீத், மகிமா கவுல் மற்றும் வினீத் ஜெயின் CoutLoot நிறுவனத்தைத் துவக்கினர்.
ஜஸ்மீத் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் பிராண்ட் மேனேஜராக இருந்தார். அப்போது அவர் நுகர்வோர் துறையை நெருங்கி கவனித்தார். எப்.எம்.சி.ஜி அல்லாத துறை ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதையும் உணர்ந்தார்.
இந்தத் துறையில் உள்ள முக்கியப் பிரச்சனையாக, ஆன்லைனில் விற்பனை செய்ய இந்திய விற்பனையாளர்கள் போதிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தனர். விற்பனையாளர்கள் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது என்றும் அறிந்திருக்கவில்லை.
இதையடுத்து, 2016ல் CoutLoot இணையதளத்தைத் துவக்கினர். 2017, விற்பனையாளர்கள் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான சேவை அறிமுகம் ஆனது. வர்த்தகர்கள் முதல் முறையாக ஆன்லைனில் விற்பனை செய்ய இந்நிறுவனம் உதவுகிறது. அவர்களுக்கு தேவையான லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஆதரவு அளிக்கப்படுகிறது.
வீடுகளில் சூரிய மின்சக்தி
சகோதரர்கள் அமோல் மற்றும் அமோத் ஆனந்த் 2018ல் லூம் சோலார் நிறுவனத்தைத் துவக்கினர். பாரீதாபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப், இல்லங்களில் மோனோ சோலார் பேனல்களை அமைக்க உதவுகிறது.
சூரிய மின்சக்தி பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை உணர்ந்து, அதை போக்கும் வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
“நாங்கள் எப்போதுமே சொந்தமாக ஏதேனும் செய்ய விரும்பினோம். அந்த எண்ணத்துடன் லூம் சோலார் பொருந்துகிறது,” என்கிறார் அமோல்.
துவக்கத்தில் வாடிக்கையாளர்களை சம்மதிக்க வைப்பது சவாலாக இருந்தது. இதனால் மாரிக்கெட்டிங்கில் புதுமை தேவைப்பட்டது மற்றும் துவக்கத்தில் நிறுவனத்தை வலுவாக உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம் என்கிறார் அவர்.
“சோனால் பேனல்கள் தொடர்பான உள்ளடக்கத்தை யூடியூப்பில் உருவாக்கினோம்,” என்றும் சொல்கிறார். நிறுவனம் இப்போது 100 ஊழியர்கள் கொண்டதாக வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ராசி வர்ஷனி | தமிழில்- சைபர்சிம்மன்