Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்கள் கோவையில் தொடங்கிய ‘பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோஸ்’

சினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்கள் கோவையில் தொடங்கிய   ‘பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோஸ்’

Monday October 10, 2016 , 5 min Read

இன்டர்நெட் யுகத்தில் ரசிக்க நொடிக்கு நொடி புது விஷயங்கள், புதிய நடிகர்கள் காணக்கிடைத்தாலும், இந்திய ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தையும் தனக்கென தனி வழியையும் ஸ்டைலையும் உருவாக்கிய ஒரே மாஸ் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய எளிமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ரஜினியின் கபாலி திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கபாலி திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டிற்கு முன்னரே சூப்பர்ஸ்டாருக்கு அவருடைய ரசிகர்கள் சமர்ப்பித்துள்ள கபாலி அனிமேஷன் டீசர் ‘தலைவர்’ யூடியூப்பில் லைக்ஸ்ஐ அள்ளுகிறது. இந்த அனிமேஷன் டீசரை உருவாக்கிய கோவையைச் சேர்ந்த 'பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோவின்' (Bigwig Animation studios) நிறுவனர் தீபக் ஸ்ரீஹரியை நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி, அதன் விவரங்கள்:

தலைவர்னாலே மாஸ் தான் சிறு வயது முதலே ரஜினியின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான், அவருடைய படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி பார்த்துவிடுவேன் அந்த அளவிற்கு நான் அவருடைய தீவிர ரசிகன் என்று அதிரடி அனல் பறக்க நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார் தீபக் ஸ்ரீஹரி. 

இவர் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோவின் நிறுவனர். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோவையில் தான். பொறியியலில் ஐடி பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். அப்போது என்னுடன் பயின்ற விக்ரம் சம்பத்தின் நட்பு கிடைத்தது, நாங்கள் இருவரும் இணைந்து பல்வேறு ப்ராஜெக்ட்டுகளை செய்திருக்கிறோம். அப்படி நாங்கள் செய்த ஒரு அனிமேஷன் ப்ராஜெக்ட் அனைவருக்கும் பிடித்துப் போக எங்களுக்கு மட்டும் அதில் நிறைவு ஏற்படவில்லை. அப்போது விதைக்கப்பட்ட விதை தான் பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோ என்று கல்லூரி நாட்களிலேயே நீண்ட எதிர்கால திட்டத்தை தீட்டியதாகக் கூறுகிறார் அவர்.

எங்களோடு விக்ரம் சம்பத்தின் பால்ய சிநேகிதன் அரவிந்தும் இணைந்து கொண்டார் அவர் இளநிலை கணினி அறிவியல் பயின்றார் நாங்கள் மூன்று பேரும் ஒரே இடத்தில் தங்கி கல்லூரி பயின்றோம். 2011ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மூன்று பேரும் நீண்ட எதிர்கால திட்டமான அனிமேஷன் ஸ்டுடியோவை உருவாக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை தேர்வு செய்து அந்தத் துறையில் அறிவை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தோம். அதன்படி நான் ஒரு நிறுவனத்தை செயல்படுத்துவதற்கான வர்த்தக மேலாண்மை அறிவை என்னுடைய தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னுடைய அப்பா அடிப்படையில் மருத்துவராக இருந்த போதும் அதில் நாட்டமின்றி வியாபாரத்தின் மீது அக்கறை செலுத்தி அதில் வெற்றியும் கண்ட சிறந்த தொழிலதிபர் என்று பெருமைப்படுகிறார் தீபக்.

image


அரவிந்த் லண்டனில் அனிமேஷன் துறையில் பட்டமேற்படிப்பு பயின்றார், மற்றொரு நண்பர் விக்ரம் திரைத்துறை சார்ந்த திரைக்கதை, வசனம் எழுதுவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார் தீபக். மூன்று பேரும் ஒரு அனிமேஷன் நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கான அறிவையும் அதற்குத் தேவையான பணத்தையும் 2 ஆண்டுகள் சேமித்தோம். 2012ம் ஆண்டே நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் இருந்த போதும் அதிகாரப்பூர்வமாக 2014ம் ஆண்டு பிக் விக் அனிமேஷன் ஸ்டுடியோ நிறுவப்பட்டதாகக் கூறும் தீபக், குடும்பத்தினரின் உதவியுடன் ரூ.40 லட்ச முதலீட்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டதாகச் சொல்கிறார். 

கடந்த 6 மாதத்திற்கு முன்பு பிக்விக் நிறுவனத்துடன் ஒரு பங்குதாரர் மற்றும் முதலீட்டாளராக எங்கள் குழுவுடன் விஷ்ணுராம் என்பவரும் இணைந்து கொண்டதாகக் கூறும் தீபக், நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவை விஷ்ணு கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிக்விக் அனிமேஷனின் செயல்பாடுகள்

நாங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக எடுத்துச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்த 2 ஆண்டுகளில் வெற்றி கண்டிருப்போம், ஆனால் எங்களுடைய இலக்கே வேறு என்று கூறும் தீபக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதே எங்கள் குழுவின் ப்ளஸ் பாயின்ட். கிடைத்ததை பிடித்ததாக்கிக் கொள்வதைவிட பிடித்ததை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம், என்கிறார்.

நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் சிறு சிறு ப்ராஜெக்ட்டுகள் மற்றும் அனிமேஷன்களை செய்து கொடுத்திருக்கிறோம், ஆனால் இந்நிறுவனம் தொடங்கிய உடனே நாங்கள் செய்த முதல் வேலை எங்களைப் போன்றே அனிமேஷன் துறையில் பிடித்ததை செய்யும் இளைஞர்களை இந்தியா முழுவதிலும் இருந்துத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகால பயிற்சி அளித்தோம். தற்போது எங்களிடம் கர்நாடகா, கேரளாவை மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட 10 பேர் குழு அனிமேஷன் துறையில் அர்பணிப்போடு பணியாற்றுகின்றனர் என்று பெருமிதம் அடைகிறார் தீபக் ஸ்ரீஹரி.

பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோ குழுவினர்

பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோ குழுவினர்


இந்தியாவைப் பொருத்த வரை சர்வதேச அளவில் அனிமேஷன் படம் உருவாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியான விஷயம் இதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்டகாலத்திட்டம் என்று கூறும் தீபக் இதனாலேயே லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கை நாங்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்று பளிச் பதிலளிக்கிறார். ஏனெனில் மற்ற அனிமேஷன் நிறுவனங்கள் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அயல்நாட்டு ப்ராஜெக்ட்டுகள், பொருளாதார வளர்ச்சி என்று தங்களுடைய இலக்கில் இருந்து திசைமாறிவிடுவதாகக் குற்றம்சாட்டுகிறார். அனிமேஷன் துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் குடும்பத்தினரிடமும் எங்கள் முயற்சிக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகக் கூறும் தீபக் எங்கள் மூன்று பேரின் குடும்பமுமே பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருப்பதால் கனவு லட்சியமே எங்களுக்கு பிரதானம், பணம் இரண்டாம் பட்சம் தான் என்று சொல்கிறார்.

ஹாலிவுட் படங்களுக்கான அனிமேஷன் இந்தியாவில் செய்யப்பட்டாலும் இங்கு முழுநேர அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்படுவதில்லை என்று கூறும் தீபக் இந்தக் குறையை போக்கி அனிமேஷன் துறையில் நீங்கா இடம் பிடிப்பதே எங்களின் எதிர்காலத் திட்டம் என்கிறார். அடுத்த 5 ஆண்டிற்குள் எங்கள் குழு உருவாக்கிய முழு நேர அனிமேஷன் திரைப்படம் வெளியிடப்படும் என்று உறுதிபடத் தெரிவிக்கும் அவர், அனிமேஷன் படங்களை உருவாக்க நிச்சயம் கால அவகாசம் தேவை என்கிறார். 

மனித மூளையில் உருவாகும் சித்திரங்களை அனிமேஷன் படங்களாக உருவாக்க தெளிவான சிந்தனை அவசியம் அப்படி செயல்பட்டால் மட்டுமே அனிமேஷன் படங்கள் வெற்றி காண முடியும், அவசர கதியில் உருவாகும் அனிமேஷன் படம் மக்களின் ஆதரவைப் பெறாது என்று இந்தத் துறையில் உள்ள சாதகமான அம்சங்களைக் கூறுகிறார். இதன் காரணமாகவே எங்களுடைய நிறுவனம் கோவையின் புறநகரில் இருந்து செயல்படுகிறது என்கிறார். அனிமேஷன் துறையில் பணியாற்ற மென்பொருள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதோடு தெளிவான மனநிலையில் இருந்தால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். அதனாலேயே நாங்கள் எங்கள் ஊழியர்களிடம் குழப்பமான மனநிலையில் பணியாற்ற வேண்டாம் அதுபோன்ற சமயங்களில் காலார நடந்து சற்று இளைப்பாறிவிட்டு பின்னர் அமைதியான மனநிலையோடு பணியாற்றுங்கள் என்று கூறி வருவதாகச் சொல்கிறார் தீபக். 

எங்களுடைய அலுவலகமும் அதற்கேற்றவாறே கட்டமைக்கப்பட்டுள்ளது கோவையின் புறநகர்ப் பகுதியில் நல்ல சூழ்நிலையில் பிக்விக் ஸ்டுடியோ சொந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். தற்போதும் தலைவர் டீசருக்கான வரவேற்பைக் கண்டு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5 நிறுவனங்கள் எங்களிடம் அனிமேஷன் ப்ராஜெக்ட்டுகளை செய்து தர வலியுறுத்தி வருகின்றன. இந்த ப்ராஜெக்ட்டுகள் ஒரு புறம் செயல்பட்டாலும் எங்களின் கனவான அனிமேஷன் படத்தில் இருந்து நாங்கள் பாதை தவற மாட்டோம் என்ற உறுதியோடு தொடர்கிறார் தீபக்.

'தலைவர்' டீசர் உருவான கதை

அனிமேஷன் படத்திற்கு ஏற்ற கதையை நாங்கள் அவ்வப்போது கலந்து ஆலோசிப்பது உண்டு, அப்படி ஒரு நாள் விவாதித்துக் கொண்டிருந்தபோது பத்மவிபூஷன் விருது பெற்ற தலைவர் ரஜினிக்கு சமர்ப்பணம் செய்யும் ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்க முடிவு செய்தோம். அதையடுத்து ஒரே நாளில் இதற்கான கதையை விக்ரம் சம்பத் உருவாக்கியதாக பெருமையோடு சொல்கிறார் தீபக். பின்னர் கபாலி படத்தில் தலைவர் தோன்றும் ஒரே ஒரு போஸ்டரைக் கொண்டு புதிய மென்பொருளான ப்ளென்ட்ர் ஓபன் சோர்சில் தலைவரின் அனிமேஷன் உருவத்தை உருவாக்கி இசை, பின்னணிக் குரலுடன் இந்த டீசர் தயாரிக்கப்பட்டது என்கிறார்.

“கத்தி, சுத்தி எல்லாம் லோக்கல் ரவுடி வெச்சிருப்பாங்க, இன்டர்நேஷனல் டான் எப்படி இருப்பாங்க தெரியுமா கோட் சூட் போட்டுகிட்டு கையில ரெண்டு கன்n வெச்சிக்கிட்டு இருப்பாங்க, இதெல்லாம் இருந்தாலும் இல்லாட்டியும் தலைவர் டான் டா...” என்று சொல்லும் பின்னணிக் குரலுடன் ஒன்றரை நிமிட தலைவர் டீசர் முடிவிற்கு வருகிறது. 

பார்ப்பதற்கு உண்மை டீசர் போல இருக்கும் இந்த அனிமேஷன் டீசரை சமூக வலைதளங்கள் கொண்டாடுவது எங்களுக்கே பெரும் அதிர்ச்சி என்று கூறும் தீபக், இந்த டீசர் எங்களுக்கே மீண்டும் ஷேர் செய்யப்பட்டது மகிழ்ச்சியின் உச்சகட்டம் என்கிறார். 9 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளி இருக்கும் இந்த டீசரை முதலில் முகநூலில் பகிர்ந்தது நடிகர் பிரேம்ஜி என்று கூறும் தீபக் அவரைத் தொடர்ந்து வெங்கட் பிரபு, வைபவ் உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்தாக மகிழ்கிறார். மேலும் கபாலி படத்தின் எடிட்டரே எங்களின் தலைவர் டீசருக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சிக்கு மணிமகுடம் சூட்டியது” என்று சிலாகிக்கிறார். 

வாழ்நாள் முழுதம் எங்களை மகிழ்விக்கும் உண்மை ஹீரோ ரஜினிக்கு கட்அவுட், பாலாபிஷேகம் போல இந்த அனிமேஷன் டீசரை சூப்பர் ஸ்டாருக்கு சமர்ப்பணம் செய்கிறார் தீபக் ஸ்ரீஹரி. 


இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

இணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்!

கிளாஸ்... மாஸ்..? - எந்த நெருப்பைப் பற்றப் போகிறான் கபாலி?