Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு?

'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு?

Friday June 08, 2018 , 4 min Read

சிறிதோ பெரிதோ ஒரு நிறுவனம் அல்லது தொழில் என்று எடுத்துக் கொண்டால் 'பிராண்ட்' என்பது மிகவும் முக்கியமானது. வெற்றியின் மந்திரமாகக் கருதப்படும் 'பிராண்ட்' மீது கவனம் செலுத்துவது அவசியம்.

வெற்றியை சாத்தியமாக்கவது, கிடைத்த வெற்றியைத் தக்கவைப்பது, தோல்விக்கு இட்டுச் செல்வது, வீழ்ச்சிக்கு வழிவகுப்பது என சாதக - பாதகங்களில் 'பிராண்ட்'டின் பங்கு நிச்சயமாக இருக்கும்.

ஒவ்வொரு தொழில்முனைவர்களும் அறிந்து வைத்துக்கொண்டு கையாள வேண்டிய பிராண்ட்டின் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ள ரஜினி நடித்து ரஞ்சித் இயக்கி வெளிவந்துள்ள 'காலா' திரைப்படம் மிக எளிய உதாரணம்.

image


ரஜினி எனும் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரே ஒரு பிராண்ட்தான். சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத எந்த சாகசத்தையும் திரையில் இவர் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்; விசிலடிப்பார்கள்; கொண்டாடுவார்கள். ஏனெனில், ரஜினி கட்டமைத்துக்கொண்ட, ரஜினியிடம் இயக்குநர்கள் கட்டமைத்த 'பிராண்ட்' அப்படிப்பட்டது.

அத்துடன், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தெரிந்தோ தெரியாமலோ மக்களுக்கான போராடும் கதாநாயக 'பிராண்ட்' தொற்றிக் கொண்டதும் ரஜினியிடம்தான். இதனால்தான், பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் எதிர்பார்ப்பையும் எகிறவைத்துக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக சமீபத்தில்தான் தாம் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து, அதற்கான வேலைகளில் அதிகாரபூர்வமாகவும் மக்கள் நம்பும்படியாகவும் இறங்கினார் ரஜினி. அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின் வெளியாகும் முதல் படம் என்பதாலேயே 'காலா' மீது பலதரப்பட்டவர்களின் கவனம் திரும்பியது.

ஒரு பொருளின் மீதுள்ள நம்பிக்கைதான் 'பிராண்ட்'. தனி மனிதர்களுக்கு அடையாளம் என்றும் அதைப் புரிந்துகொள்ளலாம். பல ஆண்டுகளாக தன் திரைத்துறை மூலமும், நிஜ வாழ்க்கை மூலமும் கட்டமைத்த பிராண்டை, சிறுக சிறுக தானே வலுவிழக்கச் செய்தார் ரஜினி. 

'புலி வருகிறது' கதையாக அரசியல் பிரவேசத்துக்கு காலம் தாழ்த்தியது அவர் மீதான சலிப்பையும் அலுப்பையும் மக்களிடையே ஏற்படுத்தியது. எனினும், ரஜினி எனும் பிராண்ட் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்துவிடவில்லை.

அதன்பின் 'ஆன்மிக அரசியல்'தான் தன் நோக்கம் என்று ரஜினி அறிவித்து தன் பிராண்டுக்கு மீண்டும் ஒருமுறை பெரும்பாலான மக்களிடையே சூடுவைத்துக்கொண்டார் ரஜினி. அதன் தொடர்ச்சியாக, நிஜ ரஜினிக்கும் நிழல் ரஜினிக்கும் உள்ள முரண்களை 'காலா' ட்ரெய்லரும், தூத்துக்குடி போராட்டம் குறித்த ரஜினியின் நிலைப்பாடும் தவிடுபொடியாக்கியது.

இந்தச் சூழலில் வெளியாகியிருக்கும் 'காலா'வுக்கு ரஜினி எனும் பிராண்ட் உறுதுணைபுரிந்ததா? என்ற கேள்விக்கான விடையை 'காலா' படத்தில் தேடிப் பார்த்தால்..?

பணமும் அரசியலும் உள்ளடக்கிய அதிகாரத்துக்கும், உடம்பை ஒன்றையே ஆயுதமாகக் கொண்ட ஒடுக்கப்பட்டோருக்கும் இடையிலான நிலப் போராட்டம்தான் 'காலா'வின் மையம். 'தாராவி' குடிசைப் பகுதிதான் நிலம். அதிகாரத்துடன் வலம் வருபவர் நானா; ஒடுக்கப்பட்டோரின் தலைவராக போராடுபவர் ரஜினி. இவர்களுடன் ராமன் - ராவணன் ஒப்பீட்டோடு நகர்கிறது திரைக்கதை. ராவணன் வீழ்த்தப்படுவதுதான் ராமாயணத்தின் க்ளைமாக்ஸ் ஆகக் கருதலாம்; ஆனால், காலா எனும் நவீன ராவணக் காவியத்தில், அந்த வீழ்ச்சியின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

நிஜத்தில் இலங்கைத் தமிழர்கள் நிலத்துக்காக சந்தித்து மடிந்த போர் தொடங்கி, நிழலில் நிலப் போராட்டத்தை மையப்படுத்திய எத்தனையோ படங்கள் வரை திரைக்கதை பரிச்சயமான ஒன்றாக இருந்தாலும், 'காலா' பேசும் அரசியலும், காட்சி அமைப்புகளும் தனித்துவமானது.

உரிமைப் போராட்டம் குறித்து ரஜினி பேசும் வசனங்கள் தெறிக்கவிடும் ரகம்தான். ஆனால், பேசுபவரின் பின்னணி ஏற்கெனவே நிஜத்தில் எக்ஸ்போஸ் ஆகிவிட்டது. திரையில் போராட்டத்தின் வீரியத்தைச் சொல்லும் காட்சிகளின்போது, 'எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்' என்ற ரஜினியின் ஸ்டேட்மென்ட் நினைவுக்கு வராமலில்லை. எனவே, காலா எனும் கரிகாலனில் ரஜினியைப் பொருத்திப் பார்க்கும்போது அது 'உண்மையான பொய்' ஆகிறது.

எனினும், தன் நடிப்பாற்றலாலும், ஈடுபாட்டாலும் திரையில் காலா எனும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ரஜினி. அவரது நிஜ முகம் மீது பெரிதாக நாட்டம் கொள்ளாத ரசிக மக்களுக்கு நிச்சயம் 'காலா' பேரனுபவம் தரும்.

இந்நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். தன் பிராண்டின் மதிப்பைக் குறைத்துக்கொண்டதன் பலனாகவே 'காலா' படத்துக்கான முன்பதிவு மந்தமானது கண்கூடு.

சரி, குறைந்துபோன பிராண்டின் மதிப்பை எப்படிக் கூட்டுவது?

இதற்கான ஒரே விடை: தரம்.

எந்த ஒரு தொழில் படைப்புகளும், கலைப் படைப்புகளும் தரமாக இருந்தால், பிராண்ட் மதிப்பு வீழ்ச்சியைத் தாண்டி முன்னுக்கு வர வாய்ப்புண்டு.

அது மட்டுமல்ல; ஒரு பிராண்டை கட்டமைக்க பின்னணியில் இருக்கும் நபர்களின் மீதான நம்பிக்கையும் மேலும் ஒரு காரணம். அப்படி ஒரு காரணம்தான் இயக்குநர் ரஞ்சித்.

ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கு ஆதரவான அரசியலையும் தன் திரைப்படைப்புகள் மூலம் சொல்ல முனைந்து வரும் இயக்குநர் ரஞ்சித் 'மெட்ராஸ்' படம் மூலம் தன் அடையாளத்தை அழுத்தமாக நிறுவினார். இதையும் பிராண்டாக எடுத்துக் கொள்வோம்.

நிஜ ரஜினியின் முகம் தெரியாத சூழலில், ரஞ்சித்துடன் அவர் நடித்து வெளிவந்த 'கபாலி'தான் பிராண்ட் மதிப்பு வெற்றியின் முன்னுதாரணம். ஆம், ரஜினி எனும் பிராண்டும், ரஞ்சித்தின் அடையாளமும் ஒன்று சேர்த்து மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஒரு டீசர் மட்டுமே வெளியாகி, உலகம் முழுக்க கவனம் ஈர்த்தது 'கபாலி'. ஆனால், பல டீசர்கள், சற்றே பெரிய ட்ரெய்லர், கவனிக்கத்தக்க இசை வெளியீட்டு விழா என பல்வேறு வழிகளில் ப்ரோமோஷன் செய்த பின்னும் ரஜினி எனும் பிராண்ட் மதிப்பின் இறக்கத்தால் ஆரம்பக்கட்ட சரிவை சந்தித்தது 'காலா'.

அந்தச் சரிவை ஈடுகட்டுவது ரஞ்சித்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உருவானது. ஆம், 'இது ரஞ்சித் படம்' என்ற பேச்சு வலுவானது. அவரது பிராண்ட் இங்கே மிகப் பெரிய ரோலை செய்து வருகிறது.

பட உதவி: டெக்கன் கிரானிக்கல்

பட உதவி: டெக்கன் கிரானிக்கல்


ரஜினி படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கும், தீவிர சினிமா ஆர்வலர்களுக்கும் ஒருவித நிறைவை கொடுக்கும்படியாக 'காலா'வை செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். அதேபோல், காலா பேசும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலை முன்னிருத்தியே விவாதம் வலுபெறத் தொடங்கியிருக்கிறது. அதுவும் 'காலா'வுக்கு இப்போது கூடுதல் பலம்.

நெக்ழ்ச்சியூட்டும் ரொமான்ஸ் காட்சிகள், ரசிகர்களின் விசிலுக்கான மாஸ் - அதிரடிக் காட்சிகள், அரசுகளின் அபத்தங்கள் மீதான கலாய்ப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுப்பப்படும் குரல்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள், முதன்மைக் கதாபாத்திரங்கள் மற்றும் உறுதுணைக் கதாபாத்திரங்களின் நடிப்புத் திறன், ரஜினி ரசிகர்களையும், தன் திரைத் திறமையையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அந்தக் க்ளைமாக்ஸ் உத்தி... 'காலா'வுக்கு ப்ளஸ்கள் பலவற்றை சேர்த்திருக்கிறார் ரஞ்சித்.

சமகால அரசியல் நிகழ்வுகளால் ரஜினி எனும் பிராண்டால் பின்னடைவு ஏற்பட்டாலும், அந்த பிராண்ட்டை வைத்து உருவாக்கப்பட்ட படைப்பில் ரஞ்சித் எனும் திரை ஆளுமையின் ஆதிக்கம் மிகுந்திருப்பதே 'காலா'வை ஓரளவு நிமிர்த்தியிருக்கிறது என்று சொல்லலாம்.

'சினிமா வேறு; அரசியல் வேறு' என்பது ரஜினியின் நிலைப்பாடு.

'சினிமாதான் எனக்கு அரசியல்' என்பது ரஞ்சித்தின் தீர்க்கமான முடிவு.

'சினிமாவோ அரசியலோ அணுகுமுறைகளில் இருந்து நமக்குத் தேவையானதைப் புரிந்துக் கொண்டு நமக்குத் தேவையான இடங்களில் செயல்படுவோம்' என்பது நம் நிலைப்பாடாக இருக்கட்டும்.