ஆறு வருடங்களில் 80 டேகேர் செண்டர்களை உருவாக்கி அபார வளர்சியடைந்த ப்ரியா கிருஷ்ணன்
KLAY மற்றும் தி லிட்டில் கம்பெனி என இரண்டு ப்ராண்டின் கீழ் இயங்குகிறது ப்ரியா கிருஷ்ணனின் டேகேர்...
நகர்புறத்தில் வசிக்கும் பெரும்பாலான தம்பதிகள் தனிக்குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர். இதனால் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் அறிவுப்பூர்வமாகவும் உடலளவிலும் சுறுசுறுப்பாக இயங்கவும் டேகேர் அமைப்புகளை நம்பியே உள்ளனர். அவ்வாறு செயல்படும் விதத்தில் தனது முதல் டேகேர் மையத்தை 2011-ம் ஆண்டு பெங்களூருவில் நிறுவினார் ப்ரியா கிருஷ்ணன்.
இன்று க்ளே ஸ்கூல்ஸ் (KLAY Schools) மற்றும் 'தி லிட்டில் கம்பெனி' ஆகியவற்றின் பேரண்ட் நிறுவனமான 'ஃபவுண்டிங் இயர்ஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ்' இந்தியா முழுவதும் ஏழு நகரங்களில் 80 மையங்களில் செயல்பட்டு வருகிறது.
43 வயதான ப்ரியா, ஆண்டெர்சன் கன்சல்டிங் நிறுவனத்தில் தனது வாழ்க்கைப் பாதையைத் துவங்கினார். அதன் பிறகு Bangalore Labs and MphasiS நிறுவனத்தில் முதலில் இந்தியாவிலும் பின்னர் சிங்கப்பூர், நியூயார்க், லண்டன் ஆகிய பகுதிகளிலும் பணியாற்றினார். இவருக்கு இரண்டு மகன்கள். அவர்களுக்காக தரமான சைல்ட்கேரை கண்டறிவதில் மிகுந்த சிரமத்தை அனுபவித்தார். பணிக்குச் செல்லும் பெண்கள் மன அழுத்தம் மற்றும் குற்ற உணர்வின்றி தங்களது குழந்தைகளை விட்டுச் செல்ல உதவுகின்ற ஒரு தரமான டேகேர் செயினை துவங்க விரும்பினார்.
ப்ரியா கூறுகையில், “எங்களது முதல் மையத்தை துவங்குகையில் வடநாடுகளில் இருப்பதுபோல உயர்தரமான குழந்தை பராமரிப்பு அமைப்பை உருவாக்கி சமூகத்தை ஒன்றிணைக்க விரும்பினோம். இப்படிப்பட்ட மையங்கள் இந்தியாவில் இல்லை. பெற்றோர் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பெற்றோர் மற்றும் வெளிநாட்டு சமூகத்தினருக்காக இப்படிப்பட்ட மையங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம்.
"உலகத்தரம் வாய்ந்த உயர்தர குழந்தை பராமரிப்பு சேவை உள்ளூர் சமூகத்தினருக்கும் தேவைப்படுகிறது என்பதை இந்த ஆரம்ப கட்டத்தில் உணர்ந்தோம்.”
முக்கிய நோக்கத்துடன் ஒன்றிய வளர்ச்சி
பல பகுதிகளில் விரிவடையத்துவங்கியபோது KLAY என்கிற ப்ராண்டின் தரம் மற்றும் செயல்பாடுகள் நிலையாக இருப்பதை உறுதிசெய்ய விரும்பினர். இதனால் எந்த நகரத்தில் வசிக்கும் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான சூழல் அமையும். இதற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரேமாதிரியாக பின்பற்றக்கூடிய பயிற்சி மாட்யூல்களை அமைப்பதும் தலைமைப்பொறுப்பில் இருக்கும் குழுக்கள் ஒற்றை நோக்கத்திற்காக செயல்படுவதை உறுதிசெய்தார்.
ப்ரியா கூறுகையில்,
சமீபத்தில் WeCare நிறுவனத்தை வாங்கியதால் எங்களது சமூகமும் கார்ப்பரேட் இணைப்புகளும் மேலும் சிறப்பாக வலுவடைந்துள்ளது. துவங்கி ஐந்து வருடங்களான நிலையில் ஒவ்வொரு வருடமும் எங்களது வருவாய் இரட்டிப்பாகி வருகிறது. எங்களது ஒட்டுமொத்த CAGR 182 சதவீதம். எங்களது மையங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வருடமும் இரட்டிப்பாகியுள்ளது.
KLAY, B2C வணிக மாதிரியை பின்பற்றுகிறது. தி லிட்டில் கம்பெனி (KLAY குழுவால் 2014-ம் ஆண்டு பெறப்பட்டது) B2B வணிக மாதிரியை பின்பற்றுகிறது. B2B மாதிரி இரண்டு விதங்களில் செயல்படுகிறது – ஆன்சைட் மற்றும் ஆஃப்சைட் மாடல். ஆன்சைட் மாடலில் கார்ப்பரேட் க்ளையண்டின் அலுவலக வளாகத்திற்குள் மையம் அமைக்கப்படும். க்ளையண்டின் அலுவலக வளாகத்திற்குள் இடம் இல்லாத நிலையில் அருகிலிருக்கும் மற்ற கார்ப்பரேட் க்ளையண்ட்டுகளுக்கும் சேர்த்து அவற்றிற்கு அருகாமையில் ஒரு ஆஃப்சைட் மையம் அமைக்கப்படும்.
தற்போது வரை KLAY மற்றும் தி லிட்டில் கம்பெனி இந்தியாவில் 7 நகரங்களில் 80 மையங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஏர்டெல், யூனிலிவர், ஜான்சன் & ஜான்சன், ப்ராக்டர் & கேம்பிள், லாரியல், இன்ஃபோசிஸ் போன்றோர் இவர்களது கார்ப்பரேட் க்ளையண்டுகள்.
வணிக செயல்பாடு
”அனைத்து அன்றாட நடவடிக்கைகளிலும் நான் ஈடுபட விரும்புகிறேன். குழுவில் உள்ள அனைவரும் ஒற்றை நோக்கத்துடன் ஒன்றி இருத்தல், நிலையான நிறுவன கலாச்சாரத்தை பராமரித்தல், முக்கியமாக எந்த ஒரு பெற்றோருக்கு ஏற்படும் பிரச்சனைக்கும் ஆசிரியர், மையத்தின் இயக்குனர், பிராந்தியத் தலைவர் ஆகியோரும் நானும் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என அனைத்திலும் ஈடுபட விரும்புகிறேன்.
பெற்றோர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இதுவே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சவாலாக அமையும் விஷயமாகும். இந்த நெருக்கமான உணர்வே மற்ற ஃப்ரான்சைஸ் யூனிட்களுடன் KLAY-வை வேறுபடுத்திக் காட்டுகிறது.
இன்று KLAY குழுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். பூனே சந்தையில் புதிதாக மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். வருகிற ஆண்டில் மையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளார் ப்ரியா. மேலும் துபாய் மற்றும் சிங்கப்பூர் பகுதிகளில் விரிவடையவும் திட்டமிடுகிறார்.
முதலில் VBHC-ன் சீட் நிதியில் இயங்கியது KLAY. கேய்சன் ப்ரைவேட் ஈக்விட்டியிடமிருந்து (Kaizen Private Equity) 2013-ம் ஆண்டு 6 மில்லியன் டாலர் சீரிஸ் A நிதியை குழுவினர் உயர்த்தினர். கடந்த ஆண்டு பீபல் கேப்பிடல் (Peepul Capital) மூலம் 16 மில்லியன் டாலர் சீரிஸ் B நிதியை உயர்த்தியது.
ப்ரீ-ஸ்கூல் சந்தை மதிப்பு 2017-18-ம் ஆண்டில் CAGR 20 சதவீதத்துடன் வளர்ச்சியடைந்து 16,500 கோடி ரூபாயை எட்டும் என்று CRISIL ஆய்வு மதிப்பிடுகிறது. இது 2013-14-ம் ஆண்டில் 8,000 கோடி ரூபாயாக இருந்தது. KLAY மற்றும் துறையில் செயல்பட்டு வரும் பிற முன்னணி நிறுவங்களான கிட் சீ (Kidzee), யூரோகிட்ஸ் மற்றும் ஷெம்ராக் போன்றோருக்கு முறைப்படுத்தப்படாத ப்ரீஸ்கூல் / டேகேர் பிரிவில் நுழைவதே மிகப்பெரிய சவாலாகும்
ஒட்டுமொத்த பாதுகாப்பு
இந்தத் துறையில் பாதுகாப்புதான் முக்கிய அம்சம் என்பதால் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிப்பது, முறையான உள்கட்டமைப்பு, தொடர் கண்காணிப்பு ஆகிய மூன்று விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ப்ரியா. ”பொதுவாக இந்தச் சந்தையில் செயல்படும் மற்ற நிறுவனங்களில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களிலும் ஒரே குழுவே ஈடுபடுத்தப்படும். நாங்கள் அவ்வாறின்றி ஒவ்வொரு குறிப்பிட்ட அம்சத்திற்கும் ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கியுள்ளோம்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான வகுப்பறை மற்றும் பொது இடங்கள், பெற்றோர்களுக்காக சிசிடிவி லைவ் ஸ்ட்ரீமிங் அம்சம் என பாதுகாப்பு சார்ந்த அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் செயல்படுவதே எங்களுடைய நோக்கம்.” என்றார் ப்ரியா.
ப்ரியாவின் கணவரான சஞ்சய் கிருஷ்ணாவும் ஒரு தொழில்முனைவர். இதனால் பெற்றோர்களின் பணி குறித்தும் அது சார்ந்த பயணங்களின் தேவைகளையும் அவர்களது குழந்தைகள் புரிந்துகொண்டனர். எனினும் தன்னால் இயன்றவரை குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுகிறார் ப்ரியா.
ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்