Women's Day Special | ஓடிடியில் பார்க்க வேண்டிய 10 படங்கள்!
சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் இவ்வேளையில், கவனம் ஈர்க்கும் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தியும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தும் உருவாகி, ஓடிடியில் காணக் கிடைக்கும் சமீபத்திய 10 படைப்புகளின் தொகுப்பு இது.
வலுவான பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தியும், பெண்களின் சமகால பிரச்சினைகளை அழுத்தமாக பேசியும் சமீப காலமாக இந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நல்ல படைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, தென்னிந்தியாவில் அத்தகைய படங்கள் வரிசைகட்டுவதுடன் வரவேற்பையும் பெற்றுள்ளன. மிகக் குறிப்பாக, மலையாள சினிமாவில் இந்தப் போக்கு அதிகமாகவே இருப்பதை அறிய முடிகிறது. அந்த வகையில் தற்போது ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கக் கூடிய 10 படங்கள் இங்கே...
Jaya Jaya Jaya Jaya Hey | Malayalam | 2022 | Disney+ Hotstar
2022-ல் அதிகம் கொண்டாடப்பட படங்களில் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’-க்கு முக்கிய இடம் உண்டு. நாட்டில் மலிந்து கிடக்கும் குடும்ப வன்முறைப் பிரச்னையை நையாண்டி நகைச்சுவையுடன் அணுகிய இந்தப் படம், குடும்பத்திலும் சமூகத்திலும் நிலவும் ஆணாதிக்கப் போக்கை ஜெயா என்னும் கதாபாத்திரம் மூலம் அடித்து நொறுக்கியிருக்கும்.
இந்தப் படத்தில் வரும் ஜெயா போல் எத்தனைப் பெண்களால் குடும்ப வன்முறைக்குத் தீர்வாக, முள்ளை முள்ளால் எடுக்கும் உத்தியை நிஜ வாழ்வில் எடுக்க முடியும் என்பது தெரியாது. ஆனால், ஆணாதிக்க மனோபாவம் கொண்டு குடும்ப வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஒருவித அச்சுறுத்தலையும், அதில் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைரியத்தையும் நல்கிய விதத்திலும் இப்படம் கவனம் பெறுகிறது.
Maja Ma | Hindi | 2022 | Amazon Prime Video
தன்பால் ஈர்ப்பாளர்களின் மனப் போராட்டத்தை ஒரு தாயின் கதாபாத்திரம் வழியில் வடித்திருக்கும் அற்புதமான படைப்பு ‘மஜா மா’. குடும்ப அமைப்புமும் சமூகமும் தரும் அழுத்தம், குடும்ப கெளரவம் என்ற என்ற டெம்ப்ளேட் பிரச்சினையால் தன்பால் ஈர்ப்பாளர் ஒருவர், ஒரு பெண்ணாக - தாயாக எதிர்கொள்ளும் அகப் போராட்டாமும், புறப் போராட்டமும் மாதுரி தீட்சித் கதாபாத்திரம் வழியே மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
‘நீ என்னை மனிதத் தன்மையுடன் பார்க்காமல் கடவுளாக்கி இருக்கிறாய்’ என்று தன் மகனிடம் மாதிரி பேசும் வசனம், பெண்களை கடவுளுடன் ஒப்பிட்டு, இன்னொரு புறம் நசுக்கி வைக்கும் முரண்பட்ட சமூகத்தைக் குத்திக் காட்டும். லெஸ்பியன் குறித்து காட்சிகளாலும் வசனங்களாலும் இப்படம் பொது சமூகத்துக்குப் புரியும்படி நறுக்கென பேசியிருப்பதும் சிறப்பு. உதாரணத்துக்கு,
‘தன்பாலீர்ப்பு என்பது ஒருவர் மீதான அன்பின் நிமித்தமே தவிர, பார்ப்பவர் எல்லாருடனும் உறவு கொள்வதல்ல’ என்ற நேரடித் தெறிப்புகள் அதிசிறப்பு.
Ammu | Telugu | 2022 | Amazon Prime Video
அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனைக்கு தெலுங்கில் இருந்து கொடுக்கப்பட்ட பலத்த ‘அடி’தான் ‘அம்மு’ திரைப்படம். இனிப்பாகச் சொல்லும் மண வாழ்க்கையில், ‘அம்மு’ ஐஸ்வர்யா லக்ஷ்மியின் வாழ்க்கை, கொடுமைகளால் சிதைக்கப்படுகிறது. அதிலிருந்து மீள்வதுதான் கதை. ஆனால், மீளும் விதம்தான் இங்கே முக்கியம்.
குடும்ப வன்முறை என்பதும் இந்தியப் பாரம்பரியம் என்று விமர்சிக்கும் விதமாக ஒரு காட்சியும் வசனமும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பது முத்தாய்ப்பு. கணவனின் வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாத அம்மு கதாபாத்திரம் தன் அம்மாவிடம் முறையிடும். அப்போது அந்த அம்மா சொல்வார்: “உன் அப்பாவிடம் நான் அடி வாங்கிட்டு இருந்தப்ப, என் அம்மாவிடம் போய் நின்னேன். அப்போ, என் அம்மா சொன்னதை இப்போ உனக்கு நான் சொல்றேன்... ஆண்கள் தங்கள் மனைவியை அடிப்பார்கள். அப்படி அடி வாங்கும் முதல் பெண்ணும் நீயில்லை, கடைசி பெண்ணும் நீயில்லை."
Qala | Hindi | 2022 | Netflix
இந்திய சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் எப்போதும் நிகழ்த்துப்பட்டு வருவதை உளவியல் - த்ரில்லர் பாணியில் படைக்கப்பட்ட திரை விருந்துதான் ‘கலா’. பெண்களின் சிந்தனைக்குள்ளும் புகுத்தப்பட்ட ஆணாதிக்கத்தையும் வலுவாகப் பதிவு செய்து, நம் சமுகத்தைப் பிரதிபலித்த விதமும் சிறப்பு.
தன் முன்னேற்றத்துக்கு எதிரான எல்லா முட்டுக்கடைகளையும் தகர்த்துக் கொண்டு, தன் தகுதிக்கு ஏற்ற இடத்தை அடையை எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்த பெண்ணின் கதையை பெண்ணிய உளவியலுடன் முரண்களையும் பேசும் இந்தப் படைப்பு, நிச்சயம் நல்ல சினிமா அனுபவத்தையும் தரும்.
Kumari | Malayalam | 2022 | Netflix
தொன்மமும் ஃபேன்டசியும் கலந்த புத்தம் புது திரை அனுபவம் தரும் படம் ‘குமாரி’. குமாரியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் மிரட்டியிருப்பார். பழங்குடிகளின் தெய்வம், தம்புரானின் அராஜகம், பழிவாங்கல், ஒடுக்கப்படும் பெண்கள், மீண்டெழுந்து கெத்தாக இருத்தல் என கோர்வையாக பல விஷயங்களை அழுத்தமாக அடுக்கும் இந்தப் படைப்பு, அக்கால கேரள மண்ணை மட்டுமின்றி இந்தியச் சமூக அரசியலையும் அட்டகாசமாக பதிவு செய்திருக்கும்.
தன்னையும் தன் குழந்தையையும் தற்காத்துக்கொள்ள ஒரு பெண் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதையும், ஆணாதிக்க சமூகத்தை அணுகும் நுட்பத்தையும் காட்டியிருக்கும் விதம் மிரட்டலானவை. தீவிர சினிமா ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத படைப்பும் கூட.
The Great Indian Kitchen | Tamil | 2023 | ZEE5
2021-ல் மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. ஐஸ்வர்யா ராஜேஷின் கவனிக்கத்தக்க படங்களில் இதுவும் ஒன்று. தமிழ்ச் சூழலிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட சினிமாதான் என்றாலும், தமிழிலும் அசலுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அடர்த்தியான திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
வீட்டுக் கிச்சனில் எந்திரத்தனமாக இயக்கும் பெண் ஒருவர் அவேசத்துடன் வெகுண்டெழும் கதையை நம் சூழலுக்கு ஏற்பவும் சிற்சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். மனைவியின் தினசரி வாழ்க்கையைப் பற்றியும், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் கண்டுகொள்ளாத கணவர் இரவில்‘லைட் ஆஃப் பண்லாமா?’ என்றதும், ஐஸ்வர்யா ராஜேஷ் தன் விருப்பம் சூழல் ஆகட்டும், ‘வீட்ல அம்மா தான் வேலைக்கு போறாங்க... அப்போ அவங்க தானே குடும்ப தலைவர்’ போன்ற வசனங்கள் ஆகட்டும். படம் முழுக்க தெறிப்புகள் ஏராளம். இந்திய குடும்பங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கும் இப்படைப்பு ஒவ்வொருவரும் காண வேண்டிய ஒன்று.
Anel Meley Pani Thuli | Tamil | 2022 | Sony LIV
தனக்கு பாலியல் வன்கொடுமை செய்த அடையாளம் தெரியாத நபர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத்தர போராடும் பெண்ணின் கதைதான் ‘அனல் மேலே பனித்துளி’. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் உடல் - மன பாதிப்புகளைக் கச்சிதமாக பதிவு செய்திருக்கும் இப்படம் கையாண்ட திரைமொழியும் சிறப்பு.
பாலியல் குற்றவாளிகள் பற்றியும், அதுசார்ந்த அதிகாரத் திமிரையும் காட்சிகள் - வசனங்களின் ஊடாக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தையும் தவறவிட வேண்டாம். ஆன்ட்ரியாவின் அட்டகாச நடிப்பு இந்தப் படத்துக்குப் பெரும் பலம்.
Archana 31 Not Out | Malayalam | 2022 | Prime Video
ஐஸ்வர்யா லக்ஷ்மியின் மற்றொரு படம். குடும்ப பொருளாதாரத்தை தனியாளாக நின்று, தனது திருமண ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் அர்ச்சனாவுக்கு ஏற்படும் சிக்கல்களும், அதைத் தீர்க்கப் போராடுவதும்தான் திரைக்கதை. 30 வயதை நெருங்கும் திருமணமாகாத ஒரு பெண்ணை சமூகம் அணுகும் விதத்தையும் அப்பட்டமாக காட்டுகிறது இப்படம்.
‘என் திருமணத்தை ஜோசியரோ அல்லது ப்ரோக்கரோ முடிவு பண்ண முடியாது’ என்று போன்ற தெறிக்கும் வசனங்கள் சிறப்பு. நடுத்தர வர்க்க உழைக்கும் பெண் ஒருவரின் தனியொரு திருமணப் போராட்டத்தை திரைக்கதையாகிய விதத்திலும் ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ சிறப்பு.
Sivaranjiniyum Innum Sila Pengalum | Tamil | SonyLIV
எண்பதுகளில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களை மூன்று பெண்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் ஆந்தாலஜி வகை படமான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானப் படைப்பு.
நம்மைச் சுற்றி நடப்பதை நாமே அருகில் இருந்து பார்ப்பதுபோல் மூன்று பெண்களின் வாழ்க்கையை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பை இந்தப் படைப்பு தரும். அத்துடன், நம் வாழ்க்கையில் கடந்த, கடந்துகொண்டிருக்கும் பெண்களையும் இப்படம் நினைவூட்டும். காட்சிகளின் ஊடாக கருத்தைப் பதிய வைக்கும் திரைமொழியும் கொண்டாடடத்தக்கது.
Natchathiram Nagargirathu | Tamil | 2022 | Netflix
இயக்குநர் பா.ரஞ்சித்தின் புதுவித கதைச் சொல்லல் முறையுடன் வெளிவந்த படைப்பு ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலும் காதல் சார்ந்த அரசியலையும் பேசிய வகையில் கவனம் ஈர்க்கும் இந்தப் படம் பாலின பேதங்கள், சாதி - மத பாகுபாடுகள், தன்பால் ஈர்ப்பாளர்களின் அகம் என பலவற்றையும் காதல் உணர்வின் வழியே சுட்டிக் காட்டியது.
படத்தின் நீளம் தொடங்கி ஆவணப் பட பாணி வரை பல குறைபாடுகளை விமர்சனமாக முன்வைத்தாலும், ‘ரெனே’ கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும், அதைத் திரையில் கொண்டு வந்த விதமும், அது பற்றிய விவாதங்கள் தூண்டப்பட்டதன் வழியே சமகால பெண்களின் அணுகுமுறைகள் அலசப்பட்டது இப்படத்தின் வெற்றி. ஆணவக் கொலை பற்றியும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இப்படம்.