உள்ளூர் விற்பனை மற்றும் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முன்னோடியாய் திகழும் 'டெலிவர்'
டெலிவர் (Delyver) நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. தொடங்கி ஐந்து வருடங்களுக்குள் அதிசயத்தக்க அளவில் உள்ளூரின் அடிப்படைத் தேவையாகி விட்டது. உள்ளூரில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் (ஹைபர்லோக்கல் – hyperlocal) நிறுவனம் இது.(சமீபத்தில் பிக்பாஸ்கெட் இதை எடுத்துக் கொண்டது) இரண்டு அடுக்கு மாடி கொண்ட இதன் தலைமை அலுவலகத்தில் ஒரு சில ஏ4 சைஸ் போஸ்டர்களைத் தவிர வேறு அலங்காரம் எதுவும் இல்லை. புதிய சந்தைப்படுத்தலிலும் வர்த்தக மாதிரியிலும் இந்தியாவில் ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது டெலிவர். வீட்டு சமையல் போலவே சமைத்த உணவுப் பொருட்களை தேவைப்படுவோருக்கு வீடுகளில் கொண்டு சேர்க்கும் முதல் உள்ளூர் வர்த்தக நிறுவனம் இந்தியாவில் இதுதான். குறைந்த பட்சம் இவ்வளவு ஆர்டர் செய்தால்தான் டெலிவரி என்ற விதிமுறை வைக்காத முதல் நிறுவனமும் இதுதான்.

அப்சல் சாலு, புரபுல் தாக்கரே, ரிபு வர்கீஸ் ஆகிய மூவரும்தான் டெலிவரின் நிறுவனர்கள். தங்களை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாத தன்னடக்கம் மிக்கவர்கள். உள்ளூர் வர்த்தகம் (hyperlocal), உணவுத் தொழில் நுட்பம், ஆர்டர் செய்பவர்களுக்கு உணவுப் பொருள் விநியோகம், இலவச சரக்கு டெலிவரி, புதிய சந்தை மாதிரி எனப் பல்வேறு பிரிவுகளிலும் இன்றைக்கு நிலவும் பல புதுமைகளை முதல் முதலில் அறிமுகப்படுத்தியது டெலிவர்தான். அந்தக் காலத்தில் இந்தச் சேவைகளின் பெயர் கூடப் பலருக்குத் தெரியாது.
ஹைபர்லோக்கல் என்றால் என்ன?
“உள்ளூரில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள் அல்லது கடைகளிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்து உள்ளூர்வாசிகளுக்கு அவர்களது வீட்டிலேயே கொண்டு டெலிவரி செய்வது என்ற அர்த்தத்தில்தான் ஹைபர் லோக்கல் என்ற வார்த்தையை ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்” என்று சிரித்தபடி சொல்கிறார் பிரபுல். “டெலிவர் உண்மையில் என்ன பணி செய்கிறது என்பதை முதலீட்டாளர்களுக்கு விளக்க போராட வேண்டியிருந்தது. ஒருசில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்தச் சொல்லின் பயன்பாட்டையும் தெரிந்து கொண்டோம். கடைசியாக நாங்கள் செய்யும் இந்த வகையான வர்த்தகத்திற்கு ஹைபர்லோக்கல் என்ற வார்த்தை குறிச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கண்டறிந்தோம்” என விளக்குகிறார் பிரபுல்.
(பொறுப்புத்துறப்பு: பிரபுல் தான்தான் அந்த வார்த்தையையும் அதன் பயன்பாட்டையும் கண்டறிந்ததாக உரிமை கொண்டாடவில்லை. அவரும் அவரது குழுவினரும் வர்த்தகப் பயன்பாட்டில் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தற்செயலாக அவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார். பெரும்பாலும் இந்தக் கருத்தாக்கத்தை ஒட்டி இருந்ததாகக் கூறுகிறார் அவ்வளவுதான்.)
டெலிவர் குழு இப்படி நிறைய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது. உணவுத் தொழில் நுட்பத் துறை சார்ந்து புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான கண்டுபிடிப்புகளையும் அது சாதித்திருக்கிறது.
“எங்களுக்கு முன்னோடிகள் அல்லது வழிகாட்டிகள் யாருமில்லை. நாங்கள்தான் ஒவ்வொன்றையும் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உதாரணமாக 2011ல் உணவுப் பொருட்களை பாதுகாப்பாகவும் சூடாகவும் வைத்திருக்கத் தேவையான பேக்கேஜிங் கன்டெயினர்களோ அல்லது பைகளோ இல்லை. பிறகு மூவரும் அமர்ந்து பேசி ஆலோசித்து, நாங்களே கன்டெயினர்களுக்கான வடிவமைப்பை உருவாக்கினோம். அதற்கான உற்பத்தியாளரை அமர்த்தினோம். இப்போது அந்த உற்பத்தியாளர் எங்கள் போட்டி நிறுவன உணவுப் பொருட்களுக்கும் கன்டெயினர்கள் தயாரித்துக் கொடுக்கிறார்”
என்று பெருமையும் வேண்டாவெறுப்பும் கலந்த ஒரு தொனியில் சொல்கிறார் அப்சல்.
தொடங்கியது
லக்னோ ஐஐஎம்மில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து 2010ல் டெலிவரை தொடங்கினர். ஆறுவருடம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்துச் சேர்த்த வருமானத்தைத்தான் அவர்கள் ஆரம்ப முதலீடாகப் போட்டனர். முதலில் தங்களது ரெஸ்டாரன்ட் சேவையை பெங்களூருவின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டில்தான் ஆரம்பித்தனர். பிறகு அது அக்கம்பக்கமாக விரிவடைந்தது.
“ஆரம்பத்தில் ரெஸ்டாரன்ட்டுகளைத் தொடர்பு கொண்டு, எங்களுக்காக நீங்கள் ஹோம் டெலிவரி செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டோம். எங்கள் இணையதளத்தில் பட்டியிலிடுவதற்கென்று நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. கமிஷன் அடிப்படையில்தான் எங்களுக்கு கட்டணம் (நாங்கள் கொடுக்கும் ஆர்டர்களுக்குத் தகுந்தபடி கமிஷன்). இந்த ஏற்பாட்டை பல ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சிக்கல் இல்லாத ஏற்பாடாகக் கருதினர். எங்களோடு கைகோர்த்தனர்” என்கிறார் அப்சல்.
நுகர்வோரிடம் ஆர்டர் வாங்குவதற்கு அவர்களைக் கன்வின்ஸ் செய்வது ஒரு வித்தியாசமான விளையாட்டாக இருந்தது. பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் டெலிவரி என்பது புதிதாக இருந்தது. டெலிவரின் சேவை நம்பகமானதுதான் என நிரூபித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியிருந்தது.
“டெலிவர் ஆரம்பத்தில் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்கு பிட்நோட்டீஸ் போன்ற சிறு அளவிலான விளம்பரங்களைத்தான் செய்து வந்தது. பின்னர் ஒரு புத்தகம் ஒன்றை உருவாக்கியது. அதில் டெலிவரின் அனைத்து வர்த்தகம், (ரெஸ்டாரன்ட், பூ வியாபாரிகள், பேக்கரிகள், பலசரக்குக் கடைகள், இறைச்சி மற்றும் மீன்கடைகள் உள்ளிட்ட) சேவைகள் மற்றும் வீட்டு சமையல் நிபுணரை ஏற்பாடு செய்வது போன்றவை குறித்த விபரங்களைப் பட்டியலிட்டது” என்கிறார் பிரபுல். ஆனால்,
“எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்கள் எங்களின் சேவையைப் பாராட்டி பிறருக்குச் சொன்னதன் மூலம் வந்த விளம்பரம்தான் முக்கியமானது. அதன் மூலம்தான் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்தன” என்கிறார் அவர்.
தகவல் தொழில் நுட்ப சவால்கள்
அக்கறையுடன் வேலை பாரக்கும் இந்த டீமில் உள்ளவர்களின் பொறியியல் பின்னணி, தகவல் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு உதவி செய்தது. எனினும் சரியான தொழில் நுட்பத்தைப் பெறப் போராடத்தான் வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக ஆன்ராய்டு வந்தது என்று சிரிக்கிறார் ப்ரபுல். அப்படியும் வாடிக்கையாளருக்குத் தேவையான செயலியையும் இணைய தளத்தையும் பெறுவதில் டெலிவர் தாமதம்தான். ஆரம்பத்தில் சென்று சேர்வோருக்கான பேக் எண்ட் தொழில்நுட்பத்தில்தான் கவனம் குவித்தோம் என்று விளக்குகிறார் ரிபு. ரெஸ்டாரண்ட்டுகள் மற்றும் ஸ்டோர்கள் அணுகவும் ஆர்டர்களை உரிய நேரத்தில் பிரின்ட் அவுட் எடுக்கவும் வசதியாக செயலிகளையும் மற்ற மென்பொருள்களையும் டெலிவர் உருவாக்கியது. விநியோகப் பணியாளர்கள் (delivery boys) ஆர்டர்களைப் பின்தொடரத் தேவையான செயலிகளையும் ஜிபிஆர்எஸ் பிரின்டர் தொழில்நுட்பங்களையும் கூட உருவாக்கியது. இப்போது எங்கள் வர்த்தகத்தில் 60லிருந்து 70 சதவீதம் வரையில் செல்போன் செயலிகள் மூலம்தான் நடக்கிறது என்கிறார் ரிபு.
டெலிவர் டீம்
“டெலிவர் தனது பணியாளர் மீது முழுமையான கவனம் செலுத்துகிறது. எங்கள் ஆரம்பக் குழு இப்போது வரையில் பெரும்பாலும் கலையாமல்தான் இருக்கிறது.” என்கிறார் ப்ரபுல்.
எங்கள் ஆரம்ப காலப் பணியாளர்களில் பலர் நிறுவனத்துடன் சேர்ந்து தாங்களும் வளர்ச்சியடைந்துள்ளனர். எங்கள் முதல் கால்சென்ட்டர் பணியாளர் இப்போது நகரத்தின் ஆப்பரேஷன் ஹெட்டாக வளர்ந்துள்ளார்.
மூன்று பேருடன் ஆரம்பித்த நிறுவனம் இப்போது (விநியோகப் பணியாளர்களையும் சேர்த்து) 300 பேருக்கும் மேல் வளர்ந்துள்ளது. சமீபத்தில் விநியோகப் பணியாளர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது டெலிவர். இதன் மூலம் அவர்களை முதலாளிகளாக வளர்த்துள்ளது.

நிதி
டெலிவரின் நிறுவனர்கள் தங்கள் சேமிப்பில் இருந்து கொடுத்த 30 லட்ச ரூபாய் மூலதனத்துடன்தான் ஆரம்பித்தது. இரண்டு வருடம் கழித்து 2012ல் இன்னும் இரண்டு சக தொழிலதிபர்கள் மீனா மற்றும் கிருஷ்ணன் கணேசிடமிருந்து ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் முதலீட்டைப் பெற்றது. அப்போது எங்கள் தொழிலை பெங்களூர் முழுவதும் விரிவு படுத்த அந்தப் பணம் போதுமானதாக இருக்கும் என்றுதான் அப்பாவித்தனமாக நினைத்தோம். ஆனால் எங்களைச் சுற்றியிருந்த ஒரு நான்கு பகுதிக்கு மட்டும்தான் தொழிலைக் கொண்டு செல்ல முடிந்தது என்கிறார் அப்சல் ஒரு வறண்ட புன்னகையோடு. கடைசியாக 2014ல் ஏஞ்சல்ஸ் கேப்பிட்டல் மற்றும் ஒருசில தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 10 லட்சம் டாலரை டெலிவர் முதலீடாகப் பெற்றது. இந்த முதலீட்டுக் குவியல் பெங்களூரு முழுவதும் நிறுவனத்தை விரிவு படுத்தவும் ஒரு நல்ல இணையதளம் மற்றும் செயலி போன்ற அத்தியாவசியமான தொழில்நுட்பத்தை கட்டமைக்கவும் உதவியது.
எதிர்காலத் திட்டம்
இந்த ஆண்டு ஜூனில் இணைய வழி பலசரக்குக் கடையான பிக்பாஸ்கெட், பணம் மற்றும் பங்கு ஒப்பந்த அடிப்படையில் டெலிவரை வாங்கியிருக்கிறது. பிக்பாஸ்கெட் தனது கடை கோடி டெலிவரியையும் சரியாக செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக டெலிவரை கையகப்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்து விடுவோம் என்ற டெலிவரின் திறமை, ஹைப்பர் லோக்கல் டெலிவரியில் உள்ள அனுபவம் ஆகியவற்றை வளர்ப்பது பிக்பாஸ்கெட்டின் திட்டம். “இணையவழி வர்த்தகத்திலும் ஹைபர்லோக்கல் பக்கத்திலும் பிக்பாஸ்கெட் அழுத்தமாகக் காலூன்றுவதற்கு இது உதவியிருக்கிறது” என்கிறார் அப்சல். இப்போது பிக்பாஸ்கெட்டும் டெலிவரும் சேர்ந்து இந்தியா முழுவதும் எட்டு நகரங்களில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வேலையில் இறங்கியுள்ளன.
சாவியை கொடுத்தாயிற்று
எனவே இந்த அனுபவங்களின் பயனை வைத்துக் கொண்டு, ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர்கள் வித்தியாசமாக என்ன செய்வார்கள்? என்று கேட்கிறார் அப்சல்.
இதைப் பற்றி எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. ஏனெனில் டெலிவரை ஆரம்பித்ததில் இருந்து அது எங்கள் அனைவருக்கும் ஒரு பெரும் அனுபவக் கல்வியைத் தந்துள்ளது. தேவையான அனைத்தும் சாத்தியமாகும் பட்சத்தில், உரிய நேரத்தில் இந்தத் துறையில் வித்தியாசமாக நுழைய வேண்டும். நாங்கள் வளைவின் மேலே நின்று கொண்டிருந்தோம். முதல் நான்கு வருடங்களுக்கு வர்த்தகத்தைக் கணக்கிட முடியவில்லை. இந்த இடத்தில் விரைவான வளர்ச்சியும் ஒரு நல்ல டீமும் அவசியம் என நினைத்தேன். இவை இரண்டுக்குமே நிறையப் பணம் வேண்டும்.
“இந்த ஐந்து வருடங்களில் எங்கள் பங்குதாரர்கள், பணியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நன்கு கவனித்துக் கொள்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்கிறார் ப்ரபுல்
இந்தியாவில் ஹைப்பர்லோக்கல் வர்த்தகத்தின் எதிர்காலம்
பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பல சமீபகாலமாக இந்தத் துறையில் நுழைவதைப் பார்க்க முடிகிறது. சந்தை நன்கு வளர்ந்திருக்கிறது. ஆனால் போட்டி காரணமாக உருவாகும் நெருக்கடி மற்றும் பணத் தேவை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வேலையை மட்டும் சரியாகப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் நிலைத்து நிற்க முடியும் என்று நம்புகிறோம். ஐந்து வருடப் போராட்டத்திற்குப் பின்னரும் முன்னோடியாக இருந்து டெலிவர் உருவாக்கியிருக்கும் புதிய மாதிரி, மேலும் மேம்படும் என்பதில் அவர்கள் மூவருமே அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். இதை ப்ரபுல் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, அவரது மின்னும் கண்களில் அந்த நம்பிக்கையைப் பார்க்க முடிந்தது.
பிக்பாஸ்கெட் கையகப்படுத்தியதற்குப் பிறகு டெலிவர் பிராண்டின் எதிர்காலம் குறித்துத் தெளிவாக எதுவும் தெரியவில்லை. டெலிவர் என்ற பதிவுடன் காணப்படும் இரு சக்கர வாகனங்களைப் போல, எதிர்காலத்தை நோக்கிய அதன் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும்.