மருத்துவமனை வழிமுறைகளுக்கு வழிகாட்டும் 'மைகோல்'
“19 வருடங்களாக வோக்ஹார்ட் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் உள்நோயாளிகளை அனுமதித்துக்கொள்ள படுக்கைகள் உள்ளன. 7 ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டாவது பெரிய மருத்துவமனை இதுதான். தற்போது ஒரு படுக்கைக்கு கிட்டத்தட்ட 1 லட்சத்து 85 ஆயிரம் டாலர்கள் செலவு ஆகிறது. நம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையே உள்கட்டமைப்பு வசதிகள் வளராததுதான்.” பெங்களுருவில் யுனிடஸ் சீட் பண்ட் நடத்திய, டிகோடிங் மருத்துவ நிகழ்ச்சியில் மெட்வெல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் விஷால் பாலி இப்படிச் சொன்னார். உள்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை பிரச்சனை மருத்துவத் துறையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த சவாலைச் சமாளிக்க உருவானதுதான் "மைகோல்" (myCOL). இந்தியாவில் மருத்துவமனைகளில் உள் நோயாளியாக அட்மிட் ஆவது, ஸ்மார்ட் போன், இணையம் என்று உலாவும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூட ஒரு அச்சுறுத்தும் விஷயமாகத்தான் உள்ளது. இந்தப் புரிதலோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் மைகோல்.
எவ்வளவு நோயாளிகளுக்கு இடமிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் மற்றும் சிறப்புப் பிரிவு மருத்துவர்கள், மருத்துவமனை வாய்ப்புகள் குறித்த தகவல்களில் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு தேவையற்ற பல விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. டெல்லியில் மருத்துவமனையில் நோயாளிகளைச் சேர்ப்பதற்கான வேலையில் மட்டும் ஏராளமான மனித உழைப்பு வீணாகிறது. ஒரு நபர், 31 ஆயிரத்து 500 மடங்கு உழைப்வை ஒரு நாளில் டெல்லியில் வீணாவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிதிக்குழு
இது குறித்து பேராசிரியர் முதித் கபூரும் வைபவ் சிங்கும் ஒரு சில மாதங்களாகவே தீவிரமாகப் பேசி வந்தனர். முதித் கபூர் காலேஜ் பார்க்கில் உள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் படிப்பில் பிஎச்டி பட்டம் பெற்றவர். வைபவ் சிங் முதலீடு நிர்வாகம் மற்றும் ஆலோசனைத் துறையைச் சேர்ந்தவர். இருவரும் தங்களது யோசனை குறித்து மருத்துவமனைகளில் ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இது தவிர ராணுவத்தில் பணியாற்றிய தினேஷ் திவாரி பணியாளர்களை கையாள்வதற்கு அழைக்கப்பட்டார். இதே போல் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்கும் அவர்களைத் தொடர்ந்து தக்கவைக்கவும் ஆர்த்தி குப்தா பொருத்தமானவர் எனக் கருதினார். ஆர்த்தி குப்தா உணவுப் பொருள் தொடர்பான தொழில் ஒன்றை நடத்தி வந்தார்.
பிரச்சனை குறித்த ஆய்வு
டெல்லியில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களிடம் கேள்வித்தாள் முறையில் அவர்களது பிரச்சனைகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில் அவர்கள் பின்வரும் பிரச்சனைகளைச் சந்திப்பது தெரியவந்தது:
- மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் வசதிகள் குறித்து போதிய தகவல் இன்மை அவர்களுக்குப் பாதகமாக உள்ளது. தகவல் திரட்டுவதே பெரும் செலவு பிடிக்கும் வேலையாக உள்ளது. பெரும்பாலும் முழுமையான தகவல் இல்லாமல், சிகிச்சை பற்றி தவறான முடிவு எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
- உள்நோயாளியாக சேர்த்தல்: ஒரு நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கும் போது, அதற்குத் தேவையான தகவல்கள் முறையாக அளிக்கப்படுவதில்லை. இதனால் நோயாளியும் அவரது பராமரிப்பாளரும் தேவையே இல்லாமல் வெறும் சேர்க்கை நடைமுறைகளிலேயே கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரையில் வீணாக்கி வந்தனர்.
- பில் மற்றும் இன்சூரன்ஸ்: நோயாளியை டிஸ்சார்ஜ் செய்யும் போது, போடப்படும் பில்லில் உள்ள விபரங்கள் குறித்து (எந்தெந்தத் தொகை எது எதற்கு என்பது போன்ற விபரங்கள்) முழுமையாக விளக்குவதில்லை. இது அந்த மருத்துவமனை அல்லது பணியாளர்கள் மீது நோயாளிக்கு அவநம்பிக்கை ஏற்பட வழிவகுக்கிறது. டிஸ்சார்ஜின் போது தேவையற்ற தாமதம் மற்றும் மனக்கசப்பு ஏற்படச் செய்கிறது. ஒரு வேளை இன்சூரன்ஸ் பிரச்சனை இருந்தால், அது தொடர்பான நபர்களுடனும் நேரம் செலவாகிறது. அதிலும் குழப்பம் விரக்தி, மன அழுத்தம் ஏற்படுகிறது. பொதுவாக டிஸ்சார்ஜின் போது கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரையில் வீணாகிறது.
- டாக்டர்களின் பிரச்சனை: நோயாளிகளிடம் உள்ள மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் டிஸ்சார்ஜ் ஆனதற்குப் பிறகு உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறித்து ஒழுங்கான தொடர்ச்சி இருக்காது. அதை நோயாளிகள் சரியாகக் கடைப்பிடிக்காமலிருப்பது டாக்டர்கள் சந்திக்கும் பிரச்சனை.
- சராசரி தங்கும் நேரத்தை குறைத்தல் (Reduction in average length of stay -ALOS): வழக்கமான கருத்துக்கு மாறாக, மருத்துவமனைகள் நோயாளிகளை விரைவில் டிஸ்சார்ஜ் செய்யவே விரும்புகின்றன. அதிக நாட்கள் நோயாளிகளை மருத்துவமனையில் வைத்திருக்க விரும்புவதில்லை. ஏனெனில் நோயாளி சேர்ந்தது முதல் 24 மணி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு வருமானம். நோய் தீர்ந்து ஓய்வுப் பகுதியில், நோயாளி மருத்துவமனையில் தங்கிருப்பதால் வரும் வருமானம் குறைவு. எனவே டிஜ்சார்ஜ் செய்யும் நேரத்தைக் கூட 30 நிமிடங்களாகக் குறைத்து விட்டனர். நோயாளிகள் வெளியேற வெளியேற புதிய நோயாளிகளை உள்ளே சேர்க்க முடியும். அதன் மூலம் மருத்துவமனையில் தங்கியிருப்போர் எண்ணிக்கையும் லாபத்தையும் அதிகரிக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகங்கள் கருதுகின்றன.
- நோயாளிகளுக்கு தகவல் பற்றாக்குறை, மற்றும் தவறான தகவல்கள் காரணமாக மருத்துவமனைகளில் காலி உள்ள இடங்களில் முழுமையாக நோயாளிகளை அட்மிட் செய்ய முடியாமல் போகிறது. இந்தியாவில் நோயாளிகளை அட்மிட் செய்ய போதுமான படுக்கை வசதி இல்லை என்றுதான் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக, நல்ல நிர்வாகத் திறமை உடைய மருத்துவமனைகள் தங்களின் படுக்கைகளில் 70 சதவீதம் வரைதான் நிரப்புகின்றன.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், மருத்துவம் மற்றும் சிகிச்சை தொடர்பாக உள்ள பிரச்சனைகளைக் காட்டிலும், நோயாளியைச் சேர்ப்பது தொடர்பான நிர்வாகப் பிரச்சனைதான் அதிகம்.
செயலியின் பயன்பாடு
ஒரு மொபைல் செயலி மூலம் சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஒன்றை வழங்குவதுதான் 'மைகோல்' அல்லது 'சர்க்கிள் ஆப் லைப் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட்டட்' (Circle of Life Healthcare Private Limited) நிறுவனத்தின் நோக்கம். மைகோல் எங்கே வித்தியாசப்படுகிறது எனில், இது முழுக்க முழுக்க இலவச உதவி அளிக்கும் சேவை. மைகோல் மூலம் பதிவு செய்து விட்டால் போதும், உடனடியாக நோயாளிக்கு ஒரு உதவியாளரை மைகோல் நியமித்து விடும். அவர் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் கவனித்துக் கொள்வார்.
இந்தச் செயலியில் உள்ள அம்சங்கள் வருமாறு:
- அனைத்து மருத்துவ வசதிகள் மற்றும் டாக்டர்கள் குறித்த விரிவான தகவல்கள் அளித்தல், மருத்துவமனையில் இடம் கிடைக்காத பிரச்சனைக்குத் தீர்வு காண்பது.
- மருத்துவமனையில் அட்மிட் ஆகும் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியே உடனடி உதவி.
- இன்சூரஸ் தொடர்பான ஒத்துழைப்பு, டிஸ்சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜூக்குப் பிந்தைய உதவிகள்.
- உடல் மற்றும் நோய் குறித்த தகவல்கள் எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றை எங்கும் எப்போதும் எடுத்துச் செல்லும் விதத்தில் வைத்திருத்தல்.
- தொடர்ச்சியான பராமரிப்பு (நினைவூட்டல், வெளிநோயாளியாக மருத்துவரைப் பார்ப்பதற்கான நேரம் பெறுதல், நோய் நிர்வாக மையங்கள் போன்றவற்றைக் கவனித்தல்)
- அட்மிஷன் நடைமுறைகளை துவங்க வசதியாக நுகர்வோருடன் தொடர்பு ஏற்படுத்த உதவி, மூன்றாம் தரப்பு நிர்வாகத்துடன் ஒத்துழைப்பில் உதவி.
- நோயாளி மற்றும் அவரது பராமரிப்பாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருத்தல்… உதவுதல்.
- நோயாளி மற்றம் அவரது பராமரிப்பாளர் குறித்த தகவல்களை டிஜிட்டலைஸ் செய்து வைத்தல்.
- நோயாளியின் குடும்பத்திற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை பரிந்துரைத்தல்.
- நோயாளி டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு அவரது கணக்கில் அவர் சாப்பிட வேண்டிய மருந்துகள் குறித்த நினைவூட்டல்களை பதிவேற்றம் செய்து விடுவது.
- நோயாளி மற்றும் அவரது பராமரிப்பாளருக்கு வசதிக்கேற்றவாறு டிஸ்சார்ஜ் நடவடிக்கையை ஆரம்பிப்பதோடு, திறமையாக டிஸ்சார்ஜ் நேரத்தைக் குறைப்பது (டிஸ்சார்ஜ் வழிமுறைகள் குறித்து உதவியாளருக்கு நன்கு தெரியும்).
வைபவைப் பொருத்தவரையில் மருத்துவமனைகளில் உதவியாளர் சேவைக்கு உரிய மரியாதையைப் பெறுவது ஒரு சவாலான விஷயம். அதேபோல் வாடிக்கையாளரை அதிகரிப்பதற்கு உரிய பொருத்தமான சந்தை வழிமுறைகளைக் கண்டறிவதும் கடினமான விஷயம்தான்.
நோயாளிகளை கவனிக்கும் விஷயத்தில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள், வாடிக்கையாளர் விஷயத்தில் தோல்வி அடைந்து விடுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் 'மைகோல்' போன்ற சேவைகள் அவசியமாகின்றன. இந்தச் சேவைகள் நோயாளிகளுக்கு தகவல் உதவி மட்டும் அளிக்கவில்லை. அவர்களின் ஒட்டுமொத்த மருத்துவமனை அனுபவத்தையே மேம்படுத்துகின்றன.
“பெரிய பிராண்ட்டட் மருத்துவமனைகளைக் காட்டிலும் சிறிய மருத்துவமனைகளில் எங்கள் சேவைக்கான வாய்ப்புக்களைப் பெறுவது எளிது. ஏனெனில் எங்கள் சேவையின் மூலம் அந்த மருத்துவமனைகளில் தங்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, சந்தை அங்கீகாரம் மற்றும் பிரபலமும் அதிகரிக்கும்” என்கிறார் முதித்.
எதிர்காலத் திட்டம்
“மைகோல் ஆரம்பித்த ஒரே வாரத்தில் பார்த்தவர்கள் மற்றும் தரவிரக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 2000. வாடிக்கையாளராக பதிவு செய்து கொண்டவர்கள் 500. இப்போதுதான் ஆரம்பம் என்ற நிலையில், மொபைல் பயன்பாட்டாளர்கள் மத்தியில் எங்கள் தயாரிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்தான் முக்கியமான கவனம் செலுத்துகிறோம். தொழில் நுட்பத்தை முதலில் கைக்கொள்ள முடிகிறவர்கள் அவர்கள்தான்” என்கிறார் வைபவ்.
2016 மார்ச்சில் மைகோல் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலும் பின்னர் 2016 செப்டம்பரில் மும்பை, கொல்கத்தா மற்றும் பூனாவிலும் தனது சேவையை துவக்க திட்டமிட்டுள்ளது. 2016 மார்ச்சில் மருத்துவச் சுற்றுலாவை தொடங்க நினைக்கும் மைகோல், அந்தத் திட்டத்தை முதலில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இணையதள முகவரி: myCOL
ஆக்கம்: Sindhu Kashyap
தமிழில்: Siva TamilSelva