'250 மில்லியன் டாலர் லஞ்சம்' - கௌதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு, பிடி வாரண்ட்!
2020-2024 வரையிலான காலக்கட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிலிருந்து முதலீடுகளைப் பெற்றதாக அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
நடந்தது என்ன?
2020-முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் இதனை மறைத்து அமெரிக்காவிலிருந்து இந்தத் திட்டத்திற்காக பில்லியன் டாலர்கள் கணக்கில் முதலீடுகளைப் பெற்றதாகவும் இது பெடரல் சட்டங்களுக்குப் புறம்பானது என்றும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகளுடன் சில தொடர்புகளை உள்ளடக்கியிருந்தால் வெளிநாட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர அமெரிக்க சட்டம் அனுமதிக்கிறது. இது சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்காகும்.
நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் ப்ரியன் பீஸ் ஒரு அறிக்கையில் இது தொடர்பாகக் கூறும்போது,
பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் 2020-2024 காலக்கட்டத்தில் இந்த லஞ்சத்தின் மூலம் அதானி 2021, 2022ம் ஆண்டுகளில் தமிழ்நாடு, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், சத்திஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 பில்லியன் டாலர்கள் லாபம் தரக்கூடிய இத்தகைய ஒப்பந்தங்களுக்காக லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிலிருந்து முதலீடு திரட்டியது முறைகேடு என்பதுதான் வழக்கின் சாராம்சம்.
இந்த ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்ததாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை நியூயார் மாகாணத்தின் துணை அட்டார்னி ஜெனரல் லிசா மில்லர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கவுதம் அதானி, சாகர் அதானி தவிர ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேர் பெயர்களும் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன முன்னாள் சி.இ.ஓ. விநீத் ஜெயின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
CDPQ என்னும் கனடா நாட்டின் பெரிய ஓய்வூதிய நிதியத்தின் மூன்று முன்னாள் பணியாளர்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர், இது தொடர்பான மின்னஞ்சல்களை அழித்து அமெரிக்க அரசுக்குத் தவறான தகவலை ஒப்புக் கொண்டு லஞ்சம் பற்றிய விசாரணையைத் தடுக்கப்பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த CDPQ உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது, என்பதோடு அதானி நிறுவனப் பங்குதாரர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் அறிக்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அதானி குழுமம் இப்போது அமெரிக்க விசாரணையிடம் சிக்கியுள்ளது.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய கௌதம் அதானி, 1988 ஆம் ஆண்டு ஒரு சரக்கு வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், இப்போதோ விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள், மின் உற்பத்தி, எரிசக்தி பரிமாற்றம் மற்றும் சுரங்க நிறுவனங்கள் என்று ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த மார்ச் 17,2023-லேயே அமெரிக்க எஃப்.பி.ஐ. சாகர் அதானி மீது ஒரு தேடுதல் வாரண்ட் மூலம் ரெய்டு செய்து சிலபல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்தனர் என்று நீதிமன்ற ஆவணம் தெரிவிக்கின்றது. கோர்ட் ஆவணங்களின்படி,
சில சதிகாரர்கள், கவுதம் அதானியை ‘நம்பர் 1’, ’பெரிய மனிதர்’ என்று ரகசிய பரிபாஷையில் குறிப்பிட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அதே நேரத்தில் அவரது மருமகன் செல்போன் மூலம் லஞ்சம் பற்றிய விவரங்களைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
மார்ச் 18,2023 அன்று கிராண்ட் ஜூரி சாகர் அதானிக்கு அனுப்பிய நீதிமன்ற அழைப்பாணை மற்றும் சர்ச் வாரண்ட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் புகைப்படம் எடுத்து கவுதம் அதானி மின்னஞ்சல் செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம், அதானி மற்றும் சாகர் அதானி, சிரில் கபேன்ஸ் உள்ளிட்ட அதானி கிரீன் மற்றும் அஸூர் பவர் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிறருக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகளையும் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புரூக்ளினில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் திறக்கப்பட்ட இந்தப் புகாரில் மேலும் 5 பேர் மீது அயல்நாட்டு ஊழல் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.