‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி’ - காலத்தால் மறக்க முடியாத காந்தக் குரல்!
80களில் தன் கம்பீரக் குரலால் மக்களைக் கவர்ந்த, அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயண சுவாமி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.
“ஆகாசவாணி.. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி..” 1980, 90களில் வானொலி ரசிகராக இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் இந்தக் காந்தக் குரலைக் கேட்டு மயங்கியவர்களில் ஒருவராகத்தான் இருப்பீர்கள்.
குரலில் ஒரு கம்பீரம்.. அனைவரையும் குரலாலேயே கட்டிப் போடும் வசீகரம்.. என அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த சரோஜ் நாராயண சுவாமி.
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிபரப்புத்துறையில் பணியாற்றி, பல பெண்கள் ஊடகத்துறையில் கால் பதிக்க காரணமாக இருந்த இவர், தனது 87 வயதில் மும்பையில் இன்று காலமானார். அவரது இந்த இழப்பு வானொலி ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தகங்கள் எப்படி நம் கற்பனைத்திறனை வளர்க்க உதவுமோ, வானொலியும் அது போன்றதுதான். தன் காந்தக் குரலால் ஒரு ஊரையே கட்டிப் போட்டு, ஓரிடத்தில் அமர வைக்கும் திறமை கொண்ட வானொலி செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்தான் இந்த சரோஜ் நாராயண் சுவாமி.
செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி...
பரபரவென குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கும், பெரியவர்கள் அலுவலங்களுக்கும் தயாராகிக் கொண்டிருக்கும் காலை வேலையில், 7.45 மணிக்கு செய்திகள் வாசித்து மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் தான் இவர். எப்படி நடிகர், நடிகைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்கள் ஏராளமோ.. அதேபோல், 80களில் சரோஜ் நாராயண சுவாமி குரலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
“எல்லோரும் உன் குரல் Male voice (ஆண் குரல்) மாதிரி இருக்கே’ன்னு சொல்வாங்க. அவங்களுக்கெல்லாம் என்னுடைய பதில் ஆமா, என் குரல் மேலான வாய்ஸ்தான்!” என ஒரு பேட்டியில் தன் குரலைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் சரோஜ் நாராயண் சுவாமி.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சரோஜ் நாராயணசாமி. ஆனால், பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பையில் தான். திருமணமாகி டெல்லி சென்ற பிறகு, செய்தி வாசிப்பாளராகி புகழ் பெற்றார். இவரது கணவர் பெயர் நாராயண சுவாமி. கணவரின் பெயரையும் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு, சரோஜ் நாராயண சுவாமி ஆனார்.
“பிஏ ஆங்கிலம் படிச்ச எனக்கு தமிழ் வாசிப்பாளர் வேலை. கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் வானொலி அறிவிப்பாளர் என்றாலே அந்தந்த மொழிகளில் புலமைபெற்றவர்களாக இருப்பதுதான் வழக்கம். ஆனால் நான் அதற்கு எதிர்மாறாக ஆங்கிலம் படித்து விட்டு, தமிழ் செய்தி வாசிப்பாளர் ஆனேன். கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரி என்பதில் எப்பவும் எனக்கு பெருமைதான்,” என்கிறார் சரோஜ் நாராயண சுவாமி.
நாராயணசுவாமியை திருமணம் செய்து கொண்டு, டெல்லி சென்றதும் யூகோ வங்கியில் முதலில் பணிபுரிந்தார் சரோஜ். இந்த வங்கி, இந்திய வானொலி மையத்திற்கு அருகில் அமைந்திருந்தது. தினமும் தன் வங்கிப் பணிக்கு சென்று வந்தபோது, சரோஜின் ஆர்வம் வானொலி மீது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இப்போது போல், கடுமையான தேர்வுகள் அப்போது இல்லாததால், 1962ல் வாணி சான்றிதழுடன் தமிழ் செய்திவாசிப்பாளர் ஆனார் சரோஜ்.
“வானொலியைப் பொறுத்தவரை உச்சரிப்பு மிகவும் முக்கியம். தினம் தினம் உச்சரிப்பில் புதிது புதாக கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் மாணவியாக, கற்றுக் கொள்ளவும், என் உச்சரிப்பைத் திருத்திக் கொள்ளவும் நான் தயங்கியதே இல்லை. உச்சரிப்பு மாதிரியே மொழிபெயர்ப்பும் முக்கியம். செய்திகள் எப்பவும் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும். நாம்தான் அதை மொழிபெயர்ப்பு செய்து கொள்ள வேண்டும்.
தினமும் அதிகாலை 5.30 மணிக்கு செய்திகள். ஆனால், 3 மணிக்கே மொழிபெயர்ப்பு வேலை ஆரம்பித்தாக வேண்டும். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அப்போது அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்கு போன் செய்து தெளிவு பெறுவேன்.
“எங்கம்மா குடித்த காவிரி தண்ணீரும், நான் பார்த்த தமிழ் சினிமாக்களும்தான் என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம். பாரதியார் கவிதைகள் அவ்வளவு பிடிக்கும். திரும்பத் திரும்ப அதைப் படிப்பேன்,” என பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சரோஜ்.
அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை இவரையே சாரும். சுமார் 35 ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்த இவர், தமிழ் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, பி.வி.நரசிம்மராவ் உள்பட பிரதமர்களிடம் பேட்டி எடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 2008ல் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பா கலைமாமணி விருது பெற்றார். நான்கு மொழிகளில் புலமை பெற்றவர் சரோஜ்.
“சுகமோ துக்கமோ அது குரல்ல வெளிப்படக் கூடாது. இதுதான் செய்தியாளர்களின் முக்கியமான கடமை,” இதுதான் மற்ற செய்தி வாசிப்பாளர்களுக்கு சரோஜ் கூறிய அறிவுரை.
ஆனால், தான் பேட்டி கண்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணத்தை அறிவித்தபோது, தனது குரலே கொஞ்சம் தழுதழுத்துப் போனதாக சரோஜ் குறிப்பிட்டுள்ளார்.
சரோஜ் நாராயண சுவாமியின் மறைவு ஒரு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னமும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் வந்தாலும், எப்போதும் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி..’ என்பது நம் மனதைவிட்டு அகலாது என்பது நிச்சயம்.