மகா கும்பமேளா பக்தர்கள் தங்கி, தூங்க அட்டைப்பெட்டி படுக்கைகளை அளித்த அமேசான்!
மகா கும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் முக்கிய பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக, தங்களது அட்டைப் பெட்டிகளைக் கொண்டு, அழகிய படுக்கை வசதியைச் செய்து கொடுத்துள்ள அமேசானின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மீக கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகை வந்தவண்ணம் உள்ளனர்.
இன்றைய காலை நிலவரப்படி, சுமார் 62 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வசந்த் பஞ்சமி புனித நீராடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கும்பமேளாவிற்காக வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்காக ஏற்கனவே அரசு பல்வேறு வசதிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அமேசான் நிறுவனமும் தன்னுடைய பங்களிப்பாக, தனது அட்டைப் பெட்டிகளைக் கொண்டு படுக்கை வசதிகளைச் செய்து கொடுத்து அசத்தியுள்ளது.
டிப்பன் சே பத்கர்
‘டிப்பன் சே பத்கர்’ (Dibbon Se Badhkar) என்ற பெயரில் இந்த புதுமையான முயற்சியை கும்பமேளாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் இந்தியா. அமேசான் என அச்சிடப்பட்ட தனது டெலிவரி பெட்டிகளைக் கொண்டு வசதியான பெட்டி படுக்கைகளை அது உருவாக்கியுள்ளது.
மகா கும்பமேளா ஒருங்கிணைப்பாளர்களுடன் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது அமேசான். இதன்மூலம், சிறிய மற்றும் சுலபமான யோசனைகள் எப்படியான சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன், மற்றவர்களுக்கு உபயோகமானதாக மாற்றமுடியும் என்பதைச் செய்து காட்டி இருக்கிறது அமேசான்.
1,000 அட்டைப் படுக்கைகள்
மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட இந்த சிறப்பு படுக்கைகளை அமேசான் கும்பமேளாவிற்காக வழங்கியுள்ளது. இந்த டெலிவரி அட்டை பெட்டிகள் ஏற்கனவே அமேசானில் பயன் படுத்தப்பட்டவைகள் ஆகும். அவற்றை மீண்டும் சேகரித்து, உரிய முறையில் சுத்திகரித்து, சரியான முறையில் படுக்கைகளாக உருவாக்கியுள்ளது அமேசான்.
நல்ல தரமான நீடித்த உழைப்பு கொண்ட தங்களது அட்டைப் பெட்டி படுக்கைகள், பக்தர்களுக்கு நிச்சயம் நல்லதொரு ஓய்வைத் தருவதாக இருக்கும் என அமேசான் நம்பிக்கையுடன் கூறுகிறது.
“அன்புடனும், அரவணைப்புடனும் வசதிகளை வழங்குவது என்பது, நாங்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் ஒரு பெரிய பகுதியாகும். எங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைவதற்கும், எங்கள் சேவைகளை இதுவரை பயன்படுத்தாதவர்களுக்கு அமேசானை அறிமுகப்படுத்துவதற்கும் மஹா கும்பம் ஒரு வகையான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், மிக முக்கியமாக, திருவிழாவில் கலந்துகொள்ளும் மக்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் #DeliverTheLove செய்ய விரும்பினோம்.“
“எங்களின் மிகவும் அடையாளம் காணக்கூடிய அமேசான் பாக்ஸைப் பயன்படுத்துவதை விட அதைச் செய்வதற்கான சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. இந்த முன்முயற்சியானது பக்தர்கள் மற்றும் மக்கள் பணியாளர்கள் தரையில் உறங்குவதற்கு வசதியான நல்லதொரு மாற்றாக உள்ளது,” என தங்களது இந்த புதுமையான படுக்கைகள் குறித்து அமேசான் இந்தியாவின் CMO, பிரக்யா ஷர்மா கூறுகிறார்.
கும்பமேளாவில் இந்த அமேசான் அட்டைப் பெட்டி படுக்கைகளை, பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்வதுடன், பலர் சமூகவலைதளப் பக்கங்களில் அதனை புகைப்படங்களாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
அமேசானுக்கு நன்றி
தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிக்கும் மையங்கள், தன்னார்வ நிலையங்கள் மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களில் தற்போது இந்தப் படுக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உறுதியான, இலகுரக மற்றும் வரிசைப்படுத்த எளிதான இந்த படுக்கைகள் நிச்சயம் இதுபோன்று மக்கள் கூடும் இடங்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது என்பது பலருக்கு வாழ்நாள் கனவாக உள்ளது. அப்படிப்பட்டவர்கள் நிம்மதியாக தங்களது இந்த புனித பயணத்தை மேற்கொள்வதற்கு வசதியாக அமேசான் இந்தப் படுக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசானின் இந்த பாக்ஸ் படுக்கைகள், பக்தர்களுக்கு மட்டுமின்றி, மக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் ஓய்வெடுக்க வசதியானதாக இருக்கிறது.
“இங்கே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் இருப்பதால், அனைவருக்கும் சரியான உறங்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது அல்லது வழங்குவது கடினம். முன்கூட்டியே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களைத் தாண்டி, மற்றவர்கள் பெரும்பாலும் தரையில் எதையாவது விரித்து, அதில் தூங்குவதைத்தான் இதுநாள் வரை மக்கள் செய்து வந்தனர். ஆனால், இரவில் குளிர் அதிகமாக இருக்கும்போது, அவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் இதில் அதிகம்.
“அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக, அமேசானின் இந்த புத்திசாலித்தனமான முயற்சி அமைந்துள்ளது. நிச்சயம் இதற்காக அமேசானிற்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அமேசானின் இந்த அட்டைப்பெட்டி படுக்கைகள் மூலம், கணிசமான எண்ணிக்கையிலான யாத்ரிகர்கள் மகா கும்பத்தில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளனர்,” என மஹா கும்பமேளா ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் கூறுகிறார்.
45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் சுமார் 30 ஆயிரம் மணிநேரம் நிம்மதியாக உறக்கத்தை மேற்கொள்ள இந்த அட்டைப்பெட்டி படுக்கைகள் உதவியாக இருக்கும், என அமேசான் கூறுகிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
இந்த கும்பமேளா கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு, மீண்டும் இந்த அட்டைப்பெட்டி படுக்கைகளை என்ன செய்வது என்பது குறித்தும் இப்போதே தெளிவாக அறிவித்து விட்டது அமேசான்.
கொண்டாட்டங்கள் முடிந்ததும் இந்த படுக்கைகளை அப்படியே குப்பையில் போடாமல், பயன்படுத்தாத படுக்கைகளை மீண்டும் தாங்களே எடுத்துக் கொள்வதாகவும், பயன்படுத்தபட்ட படுக்கைகளை தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாகவும், அமேசான் தெரிவித்துள்ளது.