'நியாயமான கட்டணம் வாங்கி இந்தியாவின் No. 1 சேவை ஆக்குவோம்' - Namma Yatri உடன் உறுதிமொழி ஏற்ற தமிழக ஆட்டோ/டாக்ஸி ஓட்டுநர்கள்!
ஆவின் பாணியில் திறந்த மாடலில் செயல்பட்டு வரும் 'நம்ம யாத்ரி' சேவையை, வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான விலை நிர்ணயம் போன்ற விசயங்களில் இந்தியாவிலேயே நம்பர் 1 ஆக மாற்றுவதாக தமிழ்நாடு ஆட்டோ/டாக்ஸி ஓட்டுநர்கள் உறுதியளித்துள்ளனர்.
பிப்ரவரி 1 சென்னையில் ஓலா மற்றும் உபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் இந்த ரைடு-ஹெய்லிங் சேவைகளை மட்டுமே நம்பி இருக்கும் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
ஓலா மற்றும் உபர் நிறுவனங்களின், 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான உயர் கமிஷன்கள் தங்கள் வருவாயைக் கணிசமாகக் குறைப்பதாகவும், அதைக் கண்டித்தும், அதற்கு நல்லதொரு நிரந்தரத் தீர்வு கோரியும் இந்த ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தையும், வாடிக்கையாளர் சேவையை நியாயமான விலையில் உறுதி செய்து வருவதாகவும் மற்றொரு ரை-ஹெய்லிங் ஆப் 'நம்ம யாத்ரி' (NammaYatri) தெரிவித்துள்ளது.
சென்னையில் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
“இந்தியாவின் நம்பர் 1 ரைட்-ஹெய்லிங் ஆப் ஆக நம்ம யாத்ரியை மாற்ற, தமிழகத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் உறுதி பூண்டனர்.“
ஓட்டுநர்களே பொறுப்பு
ஆவின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நம்ம யாத்ரி மாடலில், ஓட்டுநர்களே சேவையின் தரம், நம்பகத்தன்மை, மற்றும் நியாயமான கட்டணம் ஆகியவற்றிற்குப் பொறுப்பு வகிக்கின்றனர்.
சென்னையில் நடந்த இந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு ஓட்டுநர் சங்கங்களின் தலைவர்கள், “நம்ம பணி, வாடிக்கையாளர் திருப்தி” என்ற அடிப்படை கொள்கையை “அறம் செய்ய விரும்பு” என்ற ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தொழில்முறை, நம்பகத்தன்மை மற்றும் நியாயமான விலையை நிலைநிறுத்துவதற்காக, நம்ம யாத்ரியுடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
மக்கள்; நம்ம யாத்ரிக்கு மாறும்போது, ஓட்டுநர்களுக்கு முழுமையான வருவாயையும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தையும் உறுதி செய்கிறது, என நம்ம யாத்ரி தெரிவித்துள்ளது.
அதோடு, மற்ற செயலிகள் அதிக கமிஷன் பிடித்துக்கொள்ளும் நிலையில், நம்ம யாத்ரி வாழ்நாள் முழுவதும் (Lifetime) சரியான கட்டண உறுதியுடன் (Fair Price Guarantee) மற்றும் 0% கமிஷன் (Zero Commission) மூலம் செயல்பட உறுதி அளிப்பதாகவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நம்பகமான ஆப்
நம்ம யாத்ரி பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும், ஓட்டுநர்களுக்கு நியாயமான வருவாயையும் வழங்கும் திறந்த மாடலில் செயல்படுகிறது. நம்பகமான 4.8+ App Rating உடன், அரசு ஆதரவு பெற்ற ONDC வலையமைப்பில் செயல்பட்டு, நகரப் போக்குவரத்திற்கான சேவை முதன்மை கொள்கையை உறுதி செய்கிறது. நம்ம யாத்ரி மற்றும் அதன் தொடர்புடைய செயலிகள் இந்தியாவில் 7.7 கோடி பயணங்களை சாத்தியமாக்கி, ஓட்டுநர்கள் மொத்தம் ரூ.1,240 கோடி வருவாய் பெற உதவியுள்ளது. மகிழ்ச்சியான ஓட்டுநர்கள், மகிழ்ச்சியான சேவையை வழங்குகிறார்கள்!
இந்த முயற்சி மக்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்க, அரசு உடன் இணைந்து செயல்படும். ஓட்டுநர் சங்கங்கள், அரசுத் துறைகள், மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, பயணிகள் பாதுகாப்பாகவும், சீராகவும் பயணிக்க உதவும். அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால், நம்ம யாத்ரி தமிழ்நாட்டில் நீடித்த, பயணிகள் நேசிக்கும் ஒரு போக்குவரத்து அமைப்பாக உருவாகும், என நம்ம யாத்ரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
நம்ம யாத்ரி
பெங்களூருவில் 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆட்டோ அக்ரிகேட்டர் நிறுவனமான ‘நம்ம யாத்ரி’ வேகமான வளர்ச்சியை அடைந்த பிரபலமான ஸ்டார்ட்-அப் ஆகும். அந்நிறுவனம் கடந்த ஆண்டு சென்னையில் தனது சேவையைத் தொடங்கியது. நம்ம யாத்ரி மற்றும் ஓஎன்டிசி ஆகியவை இணைந்து இந்த செயலியை அறிமுகம் செய்தது.
இந்த ஆப்பிற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததற்கு முக்கியக் காரணம் அதன் வெளிப்படையான திட்டங்கள் ஆகும். நம்ம யாத்ரி செயலியில் இணையும் ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்கள் ஓட்டும் சவாரியில் என்ன கட்டணம் வருகிறதோ, அந்த கட்டணம் முழுவதையும் அவர்களே பெற்றுக் கொள்ளும் வகையில் நம்ம யாத்ரி சந்தா அடிப்படையில் அவர்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறது.
அதாவது, மற்ற ரைடு -ஹெய்லிங் ஆப்'களைப் போல், ஒவ்வொரு சவாரிக்கும் நம்ம யாத்ரி கமிஷன் வாங்குவதில்லை. அதற்கு பதில் ஒரு நாள், ஒரு மாதம் என சந்தா அடிப்படையிலான திட்டங்களை அது பயன்படுத்தி வருகிறது. மேலும், ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானத்தில் கமிஷன் பிடிக்கப்படாமல் முழுத்தொகையும் அவர்களுக்கே கிடைக்கிறது.
பெருமிதம்
அதுமட்டுமின்றி, நம்ம யாத்ரி ஆப்’ல் ஒரு புக்கிங் வரும்போது ஆட்டோ ஓட்டுனர்களே தங்களுக்கு நியாயமான கட்டணத்தை, தூரம், நேரம், டிராபிக்குக்கு ஏற்றார்போல் நிர்ணயிக்கும் வசதியும் இதில் இருக்கிறது. நம்ம யாத்ரி வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் கொடுப்பதில்லை, அதேபோல, ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுப்பதில்லை.
ட்ராபிக் அல்லது தேவை அதிகமாக இருக்கும் சூழலில் வாடிக்கையாளர்கள் கூடுதல் டிப்ஸ் வழங்குவதற்கு ஏதுவாக டெக்னாலஜி வடிமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, சுமார் 5 கோடி சவாரிகள் மூலம் நம்ம யாத்ரி ஓட்டுநர்கள் சுமார் 900 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளதாக நம்ம யாத்ரி பெருமையுடன் கூறுகிறது.
நாளை முதல் சென்னையில் ஓலா, உபர் காலவரையற்ற வேலை நிறுத்தம் - ஓட்டுனர்களின் கோரிக்கைகள் என்ன?