அடித்தட்டு மக்களை திருமண பந்தத்தில் இணைக்கும் புதிய தமிழ் ஆப் ‘ஜோடி’ பாரத் மேட்ரிமோனி அறிமுகம்!
சென்னையை தலைமையாகக் கொண்டு செயல்படும் 'பாரத் மேட்ரிமோனி’ நிறுவனம் திருமணம் தொடர்பான பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மொழிவாரியாக, சாதி வாரியாக வரன்களை தேடுவதற்கு பாரத் மேட்ரிமோனி-யின் ஆப் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக ’ஜோடி’ என்னும் புதிய செயலியை பாரத் மேட்ரிமோனி அறிமுகம் செய்திருக்கிறது.
மொபைல் என்பது ஆங்கிலம் பேசுபவர்களுகளுக்கானதாக இருந்தது. ஆனால், டிஜிட்டல் வேகம் காரணமாக அனைவருக்கும் மொபைல் சென்றடைந்திருக்கிறது. ஆங்கிலம் பேசாத பலரும் மொபைல் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களுகான செயலியான ’ஜோடி’-யை (Jodii) மேட்ரிமோனியின் தலைவர் முருகவேல் ஜானகிராமன் அறிமுகம் செய்தார்.
இதுவரை சாதாரண மக்களுக்கான திருமண சேவை என்னும் பிரிவை யாரும் தொடங்கவில்லை. அவர்களுக்காக எளிய தமிழலில் இந்தத் தளம் இருக்கும் என முருகவேல் தெரிவித்தார். தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், விற்பனை பிரதிநிதிகள், டெலிவரி நபர்கள், டெலிகாலர்கள், சூப்பர்வைஸர்கள் என அடித்தட்டு மக்களின் இணையை தேடுவதில் ஜோடி முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தார்.
அரசாங்க ஆவணங்களை அப்லோடு செய்வதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் ப்ரோபைலை வெரிபை செய்துகொள்ள முடியும். வழக்கம் போல பெயர், மதம், தொழில், வருமானம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்வதன் மூலம் தங்களுக்கு ஏற்ற இணையை தேர்ந்தெடுக்க முடியும்.
இதில் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும், நடுத்தர மக்கள் என்பதால் கட்டணமும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக முருகவேல் தெரிவித்தார்.
சிறுநகரங்கள்தான் எங்களுடைய இலக்கு. தமிழ்நாட்டில் 8.5 கோடி நபர்கள் உள்ளனர். இதில் 5.3 கோடி நபர்கள் எதாவது இரு வகையிலான ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். மொபைல் போன்களின் விலை குறைந்திருப்பது, டேட்டா விலை குறைந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறு நகரங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு உயர்ந்திருக்கிறது. அதனால், அவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த செயலியினை வடிவமைத்திருக்கிறோம்.
“மூன்று மாதத்துக்கு ரூ.900 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆறு மாதத்துக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். கட்டண வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வரனின் தொலைபேசி மற்றும் ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடியும்,” என கூறினார்.
தற்போது இந்த செயலி கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கிறது. தமிழில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து மற்ற மொழிகளில் இதேபோன்ற செயலியை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது பாரத் மேட்ரிமோனி.