தனியார் கால்டாக்சிகளை எதிர்கொள்ள அரசு சார்பில் 'Sahkar Taxi' அறிமுகம்!
பல அடுக்கு விலை முறை தொடர்பாக ஓலா மற்றும் உபெர் செயலிகள் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகிறது.
'ஷகார் டாக்சி' (Sahkar Taxi) எனும் கூட்டுறவு அடிப்படையிலான கால்டாக்சி செயலியை அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா கூறியுள்ளார்.
மக்களவையில் விவாதத்தில் பங்கேற்று பேசும் போது இந்த தகவலை தெரிவித்த அமீத் ஷா, கூட்டுறவு மூலம் வளம் காணுதல் எனும் பிரதமரின் முழக்கத்திற்கு ஏற்ப இந்த சேவை அமையும் என தெரிவித்தார்.
வரும் மாதங்களில் அறிமுகம் ஆக உள்ள இந்த செயலி, இருசக்கர டாக்சிகள், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர டாக்சிகளை பதிவு செய்யும். இதன் லாபம் டிரைவர்களுக்கே செல்லும் வகையில் இந்த செயலி அமைந்திருக்கும்.

பல அடுக்கு விலை முறை தொடர்பாக ஓலா மற்றும் உபெர் செயலிகள் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் வெளியான எக்ஸ் பதிவு ஒன்று, இரண்டு போன்களில் இரண்டு வித கட்டணம் உபெர் காட்டுவதை சுட்டிக்காட்டியது.
இந்த புகார்களுக்கு மத்தியில் மத்திய அரசு, இந்நிறுவனங்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரு நிறுவனங்களும் இந்த புகாரை மறுத்துள்ளன.
கால்டாக்ஸி செயலிகள், தொழிற்சங்கங்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளன. ஓலா மற்றும் உபெர் வசூலிக்கும் குறைந்த கட்டணத்திற்கு எதிராக, தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் வொர்கர்ஸ் சங்க தொழிலாளர்கள் இந்த மாதம் நோ ஏசி போராட்டத்தை நடத்தினர்.
இதனிடையே, ஷகார் டாக்சி முயற்சியை இந்த சங்கம் வரவேற்றுள்ளது. இடைத்தரகர்களை நீக்கி டிரைவர்களுக்கு இந்த சேவை பலன் தரும் என தெரிவித்துள்ளது.
“இந்த முயற்சியை அரசு வேகமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சுரண்டல் போக்கால் அவதிப்படுகின்றனர். கூட்டுறவு செயலி இதற்கு மாற்றாக அமையும். இதில் தொழிலாளர்கள் நேரடியாக பலன் பெறலாம். இந்த கூட்டுறவு செயலியை வடிவமைப்பதில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு தேவை,” என சங்கத்தின் தலைவர் ஷேக் சலாவூதின் கூறியுள்ளார்.
அரசு இத்தகைய முயற்சியை அறிவிப்பு இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2022ல், தேசிய சுற்றுலா மற்றும் போக்குவரத்து கூட்டமைப்பு, ஓலா மற்றும் உபெர் போன்ற ஷகார் டாக்சியை அறிவித்தது.
அடுத்த சில ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்தாலும், அதன் பிறகு, எந்த தகவலும் இந்த திட்டம் தொடர்பாக வெளியாகவில்லை.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan