ரூம் பாய் டு தொழில் முனைவர்: ஐடி நிறுவனம் தொடங்கி 2 கோடி வருவாய் ஈட்டும் ‘பேக்பென்ச்சர்’
+12வில் பெயில் ஆனால், மீண்டும் பரிட்சை எழுதி பாஸ் ஆனவர்கள் திறமையில்லாதவர்கள், மீண்டும் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியாது என்று நினைப்பவர்கள் மத்தியில், சொந்த நிறுவனம் தொடங்கி தன்னைப் போன்று இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார்.
சில நேர்காணல்கள் சம்பந்தப்பட்ட தொழில் காரணமாக சுவாரஸ்யமாக இருக்கும். சில சந்திப்புகளோ அவர் எப்படி தொழில்முனைவுக்கு வந்தார் என்பதே சுவாரசியக் கதையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதையை பின்னால் வைத்திருப்பவர் தான் மார்கண்டன் மகாராஜன்.
என்னும் நிறுவனத்தை நிறுவி சிஇஒ ஆக நடத்திவருகிறார். இந்த நிறுவனம் வெப் டிசைனிங் மற்றும் ஆப் டிசைனிங் நிறுவனம் ஆகும்.
மதுரை உசிலம்பட்டிக்கு அருகே வளர்ந்த மார்கண்டன், தற்போது சென்னை மற்றும் கோவையில் அலுவலகம் நடத்தி வருகிறார். 28 ஊழியர்கள் வேலை செய்யும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. இந்தியாவில் முக்கியமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு உள்ளனர்.

மார்கண்டன் மகாராஜன்
தான் எப்படி தொழில்முனைவுக்கு வந்தார் என்பது குறித்து மார்கண்டன் பகிர்ந்து கொண்டார்.
மதுரை அருகே பிறந்தேன், விவசாயக் குடும்பம். அனைவரையும்போல இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசை. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உதவியுடன் கூடிய பெரும்பள்ளியில் படித்தேன். பத்தாவது வரை தமிழ் வழிக்கல்வியில்தான் படித்தேன். ஆனால், கல்லூரிக்கு ஆங்கிலம் தேவை என்பதால் 11வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு மாறினேன்.
அங்கு என்னை மாற்றிக்கொள்ள கடினமாக இருந்தது. இருந்தாலும் படித்தேன். 12-ம் வகுப்பில் கெமிஸ்ட்ரியில் நான் பெயில். அதற்காக நான் நன்றாக படிக்க மாட்டேன் என கருத வேண்டாம் கணிதத்தில் சென்டம். எங்களுடைய கெமிஸ்ட்ரி ஆசிரியர் நன்றாக சொல்லிக்கொடுப்பவர், கண்டிப்பானவர். ஆனால், எங்களுக்கும் சில ஆண்டுகள் முந்தைய பேட்ச் மாணவர்களால் அவரது கண்டிப்பு தாங்க முடியாமல், பொது இடத்தில் சேறு பூசி அவரை அசிங்கப்படுத்திவிட்டார்கள்.
அப்போது முதல் அவர் வருவார், பாடம் எடுப்பார். மற்ற எந்தவிஷயங்களை அவர் கண்டுக்கொள்ள மாட்டார். இதனால் இந்தப் பாடத்தில் பலருக்கும் பெரிய ஆர்வம் இல்லை. இறுதியாக நான் பெயில். இந்த பெயில் எனக்கு பல காலம் மனச் சுமையாக இருந்தது. இதுதான் நான் நிறுவனம் தொடங்குவதற்கும் காரணமாக இருந்தது.
வீட்டில் அப்பா உறுதுணையாக இருந்தார். +12 முடிவுகள் வந்த உடனே மறுதேர்வு எழுதி பாஸ் செய்யலாம் என அப்பா கூறினார். அதனால் ரீ-எக்சாமுக்கு படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், நான் மீண்டும் பெயில். என்னுடன் படித்த மாணவர்கள் எல்லாம் கல்லூரிக்கு சென்றுவிட்டார்கள். விவசாயக் குடும்பம் என்பதால் நானும் மாடுதான் மேய்க்க வேண்டும் என நினைத்துகொண்டேன். ஆனால் அப்பா மனம் தளராது என்னை மீண்டும் படிக்கச் சொன்னார். ஒர் ஆண்டு எனக்கு வீண், பட் அடுத்த ஆண்டு பரிட்சை எழுதி பாஸ் ஆகிவிட்டேன்.
இன்ஜினீயரிங் படிக்கலாம் என கல்லூரிகளுக்குச் சென்றால் பிரேக் ஆகிவிட்டதால் சில கல்லூரிகளில் எனக்கு சீட் கொடுக்கவில்லை. சில கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக இருந்தது. என்னுடன் படித்தவர்கள்தான் எனக்கு சீனியர்கள் என்பதால் பிஎஸ்இ கம்யூட்டர் சயின்ஸ் படித்தால் கூட ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று கூறியதால் மதுரையில் சென்று பிஎஸ்இ சேர்ந்தேன்.
வீட்டில் இருந்து மதுரையில் சென்றுவருவதால் செலவு மட்டுமல்லாமல் நேரமும் வீணானது. இதனால் மதுரையில் அரசு ஹாஸ்டலில் தங்கி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
”அருகில் இருக்கும் ஓட்டலில் ரூம் பாயாக வேலை செய்தேன். காலையில் மூன்று மணிநேரமும் மாலையில் நான்கு மணி நேரத்துக்கு மேலும் வேலை செய்தேன். இந்த வருமானத்தை வைத்தே அடுத்த இரு ஆண்டுகளில் என்னுடைய செலவு மற்றும் கல்லூரி கட்டணத்தை பார்த்துக்கொண்டேன்.”
அடுத்தடுத்த சவால்கள்
நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது என்னுடைய நண்பர்கள் படித்துமுடித்து வேலைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் பேசும்போது பிஎஸ்இ மட்டுமே படித்தால் போதாது மதிப்பு இருக்காது. அதனால் பிஜி படிக்குமாறு கூறினார்கள்.
அதனால், கோவை காருண்யாவில் எம்சிஏ சேர்ந்தேன். இங்கு ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டும் என்பதால் பகுதி நேர வேலைக்குச் செல்ல முடியவில்லை கட்டணம் செலுத்துவது கூட கடினமாகதான் இருந்தது. ஒரு செமஸ்டர் கட்டணத்தை என்னுடைய புரபெசர்தான் எனக்காகச் செலுத்தினார்.
எம்சிஏ முடிக்கும் நேரம் வந்தது. அப்போது கேம்பஸ் தேர்வு நடந்தது. நம்முடைய பிரச்சினை எல்லாமல் முடியும் நேரம் வந்துவிட்டது என நினைத்தேன். ஆனால்,
”அப்போதும் ஒரு ட்விஸ்ட். எம்.என்.சி. நிறுவனங்களில் யாரெல்லாமல் பங்கேற்க முடியும் என்னும் விதிமுறையை புரபெசர் காண்பித்தார். அதில், முதலாவது விதியே எந்த விதமான அரியரும் இருக்கக் கூடாது என்பதுதான். டெக்னிக்கலாக நான் பலமாக இருந்தாலும் 12-ம் வகுப்பில் பெயில் ஆனதால் எந்தவிதமான எம்.என்.சியிலும் என்னால் தேர்வாக முடியவில்லை.”
திறமை இருந்தும் வேலை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்தேன். இங்கு நண்பர்கள் உதவியுடன் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ரூ.3000 மட்டுமே ஆரம்பச் சம்பளம. அதன் பிறகு, படிப்படியாக சம்பள உயர்வு கிடைத்தது.

நான் வேலையில் சில ஆண்டுகள் இருந்ததால் அரியர் பிரச்சினை மறைந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலையை ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் கற்றுக்கொண்டேன். நிர்வாகத்தை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கற்றுக்கொண்டேன். அங்கு ஐந்தாண்டுகள் பணியில் இருந்தேன்.
நாம் +12வில் பெயில் ஆகி மீண்டும் எழுதி பாஸ் செய்து, எப்படியோ இன்ஃபோசிஸ் நிறுவனத்துகுள் வந்துவிட்டோம். பலரும் திறமை இருந்தும் இதுபோன்ற காரணங்களால் வேலை இல்லாமல் இருப்பார்களே அவர்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள் என திடீரென ஒரு நாள் எனக்குத் தோன்றியது. அந்த நொடி வரை எனக்கு நிறுவனம் தொடங்கவேண்டும் என்னும் எண்ணமே கிடையாது. அடுத்த நாள் வேலையை விட்டுவிடேன்.
ஆனால், பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு. நல்ல வேலையை விட்டு ஏன் வெளியேறவேண்டும் என கண்டனங்கள். அதைப்பற்றி யோசிக்காமல் 2018-ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டேன்.
பெயில் ஆனாலும் வாழ்க்கையில் முன்னேறலாம்
நிறுவனங்களுக்குத் தேவையான வெப்சைட் மற்றும் செயலிகளை டிசைன் செய்யும் வேலையை தொடங்கினோம். ஆரம்பத்தில் நானே நேரடியாக சந்தித்து வாடிக்கையாளர்களை பிடித்தேன். அதனைத் தொடர்ந்து எங்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்தார்கள். மேலும், என்னை போல அரியர் அல்லது பிரேக் இருப்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
‘பேக் பென்ச்சர்ஸ்’ (Back Benchers) என்றாலே அலட்சியமானவர்கள் என்னும் பிம்பம்தான் நம் சமூகத்தில் இருக்கிறது. ஆனால், அவர்களுக்குள் பல திறமைகள் உள்ளன, நாங்கள் அதுபோன்றவர்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்தோம். இப்போதைக்கு 28 நபர்கள் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு தங்கும் இடத்தை வழங்கி வருகிறோம்.

Shrewd Business Solutions-ல் இப்போது 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான வெப் மற்றும் ஆப் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். வெளிநாடுகளிலும் கவனம் செலுத்துகிறோம்.
கடந்த நிதி ஆண்டில் ரூ. 2 கோடி என்னும் வருமானத்தை அடைந்தோம். பிஸினஸ் டெவலப்மெண்ட் மேனேஜர் என்பவர்களே எங்கள் நிறுவனத்தில் கிடையாது. எங்கள் வாடிக்கையாளர்கள்தான் புதிய வாடிக்கையாளர்களை கொண்டுவருகிறார்கள் என மார்கண்டன் கூறினார்.
Shrewd Business Solutions நிறுவனத்துக்கு ’சிறந்த ஐடி நிறுவனம்’ , ‘சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்’ என பல விருதுகளும் கிடைத்துள்ளது.
Shrewd என்று ஏன் பெயர் வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, அனைத்து ஒரு சூழலைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் ஆற்றல் என்பதே அதன் அர்த்தம் எனக் கூறினார் மார்கண்டன்.
உண்மைதான்... Shrewd ஆக இருக்கும் பேக் பென்ச்சர்களும் சாதிக்கமுடியும் என்பதை மார்கண்டன் மகாராஜன் உணர்த்தியுள்ளார்.