ரூ.515 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் கோத்ரெஜ் உற்பத்தி ஆலை - 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள ரூ.515 கோடி மதிப்பிலான கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவன ஆலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள ரூ.515 கோடி மதிப்பிலான கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவன ஆலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த ஆலை அமைப்பதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு, கோத்ரெஜ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. 2014ல் இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை நிறுவனம் நடத்தியது.
அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.515 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆலை பல்வேறு பிரிவுகளில் 1,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது.

நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க மேற்கொண்டுள்ள அதிகபட்ச ஒற்றை முதலீடாக இது அமைகிறது.
27 ஏக்கரில் அமைந்துள்ள ஆலை 13 மாதங்களில் உருவாகியுள்ளது.
இந்த ஆலையை, கோத்ரெஜ் தொழில் குழும தலைவர் நடீர் கோத்ரெஜ், கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவன சி.இ.ஓ., சுதீர் சிதாபதி முன்னிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் உற்பத்தி முறையை துவக்கி வைக்க, அதிகாரப்பூர்வமாக உற்பத்தி துவங்கியது. இதன் தொடர்ச்சியாக முதல் சிந்தால் சோப் வெளி வந்தது.
“தமிழ்நாடு வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்கு முக்கிய சந்தையாக இருப்பதாகவும் பல நிறுவனங்கள் இங்கு ஆலை அமைத்துள்ளன. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் விரும்பி நாடும் இடமாக இருக்கிறது. 2030 ஒரு லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்,” என நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தங்கள் ஆலைக்கான இடமாக தமிழ்நாட்டை தேர்வு செய்ததன் மூலம் கோத்ரெஜ், மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பதோடு, புதுமையாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை அளிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நம்முடைய ஈடுபாட்டையும் வலுவாக்குவதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட் திறன் கொண்ட ஆலை தமிழ்நாட்டின் மேம்பட்ட உற்பத்தி முயற்சிக்கு ஏற்ப அமைவதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இந்த ஆலை 50 சதவீத பெண்கள், 5 சதவீத மாற்று பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அமரித்துக்கொள்ள இருப்பது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மாநில அரசின் கொள்கைக்கு ஏற்ப இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
“அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான சூழலை உருவாக்குவதில் நிறுவன ஈடுபாடு பெருமிதம் அளிப்பதாக,“ நடீர் கோத்ரெஜ் தெரிவித்தார்.
இந்த ஆலை, நிறுவன உற்பத்தித் திறனில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான அடையாளமாக இருப்பதாகவும், ஒரே கூடையின் கீழ் ஒருங்கிணைந்த முதல் முழுமையான ஆலையாக இருப்பதாக சுதீர் சீதாபதி கூறினார்.
Edited by Induja Raghunathan