Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இரு கைகள் இல்லை; தன்னம்பிக்‘கை’ ஆக இருந்த பாட்டி - வித்யாஸ்ரீயின் இன்ஸ்பிரேஷன் கதை!

இரண்டு கைகள் இல்லாமல் பிறந்ததால் வளர்க்க இயலாத பெற்றொர்களிடமிருந்து தூக்கி வந்து வளர்த்த பாட்டி, வித்யாஸ்ரீயை படிக்கவைத்து இன்று பி.எட் முடித்து டீச்சர் பணிக்காக காத்திருக்கிறார்.

இரு கைகள் இல்லை; தன்னம்பிக்‘கை’ ஆக இருந்த பாட்டி - வித்யாஸ்ரீயின் இன்ஸ்பிரேஷன் கதை!

Wednesday November 02, 2022 , 5 min Read

"பிறந்து உடனே அம்மாவும் அப்பாவும் வெறுத்து விட்டார்கள்...! ஆமாம் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தால்...? அந்த குழந்தையை பாட்டி வீரம்மாள், தாத்தா ராமரும் தூக்கிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூரில் கொண்டுவந்து வளர்த்தனர்.

தாத்தா ராமர் விவசாயக்கூலி. பாட்டி யாராவது கூப்பிட்டால் விவசாய வேலைக்கு போவார். இப்போது வரை பாட்டிக்கு என் மேலே ஒரு பெரிய நம்பிக்கை. எப்படியாவது நான் வாழ்ந்து விடுவேன் என்று.. என்கிறார் கைகள் இல்லாது வளர்ந்த வித்யாஸ்ரீ.

Vidyashree with grand parents

தாத்தா, பாட்டி உடன் வித்யாஸ்ரீ

இரு கைகள் இல்லா தன்னம்பிக்கைப் பெண்

இரண்டு கைகள் இருந்தும் சில நேரம் பலர் சோம்பேறிகளாகவே இருந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பெற்றோர்களே கைவிட்டும் இன்றளவும் பிறப்பிலிருந்து இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருபவர் தான் வித்யாஸ்ரீ.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமம் தான் வித்தியாஸ்ரீயின் சொந்த ஊர். அப்பா அண்ணாமலை வயது 65 விவசாயக் கூலி கரும்பு வெட்டும் வேலை, அம்மா பழனியம்மாள் வயது 53. வித்யாஸ்ரீயுடன் பிறந்தவர்கள் அவரோடு சேர்த்து 5 பேர். வித்யஸ்ரீ தான் மூத்தவர். மூன்று தங்கைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது கடைசி தங்கைக்கும் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.

30 வயதாகும் வித்யாஸ்ரீ எம் ஏ ஆங்கிலம் படித்துள்ளார் அது மட்டும் அல்லாமல் பி எட் முடித்துள்ளார்.

வித்யாஸ்ரீக்கு ஐந்து வயது இருக்கும் போது பாட்டி வீரம்மாள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கச் சென்றுள்ளார். இரண்டு கைகளும் இல்லை என்று தெரிந்தவுடன் பள்ளிக்கூடத்தில் வித்தியாஸ்ரீயை சேர்ப்பதற்கு மறுத்துவிட்டார் தலைமை ஆசிரியர்.

விடாமல் பாட்டி வீரம்மாள் அரசுப் பள்ளிக்கூடம் எங்களுக்கானது எங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளையை சேர்க்காமல் இங்கு இருந்து போகவே மாட்டேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.

"கைகள் இல்லாமல் எப்படி எழுதுவார்? புத்தகத்தைப் பிரித்து எப்படி படிப்பார்? என்று கேள்வி கேட்ட தலைமையாசிரியருக்கு, பதிலடி கொடுத்த பாட்டி, "என் பேத்திக்கு கைகளாக நான் இருக்கிறேன்..." என்று உறுதியாக இருந்து வித்யாஸ்ரீயை பள்ளியில் சேர்த்துள்ளார் பாட்டி வீரம்மாள்.

அப்போது சதீஷ்குமார் என்கிற ஒரு ஆசிரியர் வித்தியாஸ்ரீயை பள்ளியில் சேர்ப்பதற்கு பெருமளவு உதவியாக இருந்து பள்ளியில் சேர்த்துள்ளார்.

எப்படி புத்தகத்தை படிப்பாய் எப்படி எழுத்துக்களை எழுதுவாய் என்று அந்த தலைமை ஆசிரியர் கேட்ட அந்த கேள்வி, அவருக்குள் கல்வி மீது ஒரு வெறியை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார் வித்யாஸ்ரீ.

Vidyashree writing

கால்களை கைகளாக்கிய வித்யாஸ்ரீ

தன் கால்களையே கைகளாக மாற்றிக் கொண்டு எழுதுவதற்கும், படிப்பதற்கும் அதை பயன்படுத்தத் தொடங்கினார் வித்தியாஸ்ரீ. பிற்காலத்தில் தன்னுடைய அனைத்து தேவைகளுக்கும் கால்களையே பயன்படுத்தத் தொடங்கினார்.

இப்போது உள்ள கணினி யுகத்தில் செல்போன் பயன்பாட்டிற்கும் கூட தன் கால்களை தான் பயன்படுத்தி வருகிறார் வித்யாஸ்ரீ. அந்த செல்போனில் நம்பர் லாக் கூட போட்டு வைத்திருக்கிறார் அதையும் கூட தன் கால் விரல்களாலே ஓபன் செய்கிறார். தன் வாழ்வில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவரே விளக்குகிறார்.

அம்மா, அப்பா கைகள் இல்லாமல் பிறந்த குழந்தை என்று மனம் வெறுத்துப் போக பாட்டி வீரம்மாளும், தாத்தா ராமரும் என்னை வளர்க்கத் தொடங்கினார்கள். சிறுவயதிலேயே என்னை குளிப்பாட்டவும், உடை மாற்றவும், பெரும் உதவியாக இருந்த பாட்டி பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லுவது பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருவது என அனைத்து வேலைகளையும் எனக்காகவே செய்தார்.

பாட்டிக்கு தன் வாழ்நாளில் தனக்காக ஒரு வேலை இருக்கிறது என்று சொன்னால் அது என்னை வளர்க்கும் வேலை தான் என்று என்னை வளர்த்து வந்தவர் தான் பாட்டி வீரம்மாள்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அதன் பிறகு, பத்தாம் வகுப்பு வரை எங்கள் சொந்த ஊரான ஆற்காடு அரசுப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 500க்கு 329 மதிப்பெண் எடுத்தேன்.

அடுத்து, 12ஆம் வகுப்பு திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் டேனிஷ் மிஷின் பள்ளியில் படித்து அப்போது 1200 மதிப்பெண்ணுக்கு 744 மதிப்பெண் எடுத்தேன். ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் போது எனக்கு எதுவும் தெரியவில்லை.

அதன் பிறகு, பள்ளிக்கூடம் செல்லும் போதும், கல்லூரிக்கு செல்லும் போது தான் கைகள் இல்லாதது மிகப்பெரிய கவலையாக எனக்கு இருந்தது. என்னோடு படித்த மாணவர்கள் எனக்கு உதவியாகவே இருந்தார்கள் என்று சொல்லலாம். ஒருவர் கூட என்னை ஏளனமாக பார்த்தது கிடையாது.

என்னை அழைத்துச் செல்வதாக இருக்கட்டும் பள்ளியில் ஏதாவது தேவை என்றால் எடுத்துக் கொடுப்பதாக இருக்கட்டும் எல்லோரும் எனக்கு உதவியாக இருந்தார்கள். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி தேர்வுகள் ஆகிய அனைத்து தேர்வுகளும் நான் என் சொந்த கால்களால் தான் எழுதினேன்.

மற்ற மாணவர்களை விட எனக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி தருவார்கள் தனி அறையில் தான் தேர்வு எழுதுவேன். படிப்பதாக இருந்தாலும் கூட புத்தகத்தை கால்களால் பிரித்து தான் படிப்பேன் இப்போது வரை நான் வெளியூர் செல்வதாக இருந்தால் கூட யாருடைய துணையும் இல்லாமல் நான் மட்டுமே பேருந்தில் வெளியூருக்கு பயணம் செய்வேன்.

Paati

ஆசிரியர் ஆகும் கனவு

”ஒரு பள்ளியின் ஆசிரியராக ஆக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். அதற்காக இப்போது வரை தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்கிறார்.

இந்த நிலையில் தான் ஒரு திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சென்று ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தேன். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வேலை கிடைப்பதற்கு முன் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற என் மஞுவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கருணையோடு படித்து எனக்கு "வாழ்ந்து காட்டுவோம்" திட்டத்தில் "தொழிற்சார் சமூக வல்லுனர்" பணியை வழங்கினார்.

இது தற்காலிக பணிதான், ஆனால், என்னாலும் வேலை செய்ய முடியும் என நம்பி அந்தப் பணியை எனக்கு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மோகன். இருந்தாலும் என் லட்சியம் ஆசிரியராவது தான் தொடர்ந்து அதற்காக படித்து வருகிறேன்.

எனக்கு கவலை எல்லாம் யாராவது ஏதாவது கேட்டால் அவர்களுக்கு என் கைகளால் எடுத்து கொடுக்க முடியவில்லை என்பதுதான் அப்போது தான் எனக்கு கைகள் இல்லை என்று எனக்கு தெரியும். அதுவரை நான் அதை உணர்ந்ததே கிடையாது.

நான் திருக்கோவிலூரில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ படிக்க சேர்ந்த போது அந்த கல்லூரி நிர்வாகம் என் நிலையைக் கண்டு எனக்கு கட்டணம் எதுவும் வாங்காமலே படிக்க வைத்தார்கள். அதன் பிறகு, எம்.எ படித்தேன், பின்னர், பிஎட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இப்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறேன்.

”நான் சம்பாதித்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் என் இலக்கு. இப்போது கிடைக்கிற அந்த வருமானம் என் குடும்பச் செலவுக்காகவே பயன்படுத்தி வருகிறேன் எனக்கென்று எந்த செலவும் பெரிதாக கிடையாது.”

”எனக்கு கைகள் இல்லையே என்று நான் ஒருபோதும் நினைத்தது கூட கிடையாது. என் லட்சியம் எல்லாம் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும், குடும்பத்திற்குத் தேவையான அளவு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்,” என்கிறார் வித்யாஸ்ரீ.

நான் வேலை செய்யும் இடத்தில் கூட என்னோடு பணியாற்றுகிறவர்கள் என்னை கவனமாக பார்த்துக் கொள்வார்கள். நான் ஒரு போதும் வேலையில் சமரசமாகிக் கொள்வதே கிடையாது.

Disabled Vidya

நான் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எனக்கு கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலைதான். கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்வது, அவர்களுக்கு என்ன தொழில் தெரியுமோ அதற்கான பயிற்சி வழங்குவதற்கு பரிந்துரை செய்வது, இதுதான் வேலை. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் முழுமனதோடு இப்போது வரை செய்து வருகிறேன் என்கிறார் வித்யாஸ்ரீ.

மேலும், தன் வாழ்நாளில் தான் இதுவரை உயிரோடு இருப்பதும் நம்பிக்கையோடு வாழ்வதற்கும் முக்கியக் காரணம் தன்னுடைய பாட்டி வீரம்மாளும், தாத்தா ராமரும் தான். என்னை மட்டும் அல்ல மற்றவர்களை கூட அவர்கள் என்னைப் பார்ப்பது போலத் தான் பார்ப்பார்கள். என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை விட என் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை தான் பெரிது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை சந்தித்தேன் எனக்காக பிரத்தியேகமாக எந்த கருவியும் அங்கே இல்லை. வண்டி ஓட்ட முடியாது கைகள் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாத உபகரணங்களே இருந்ததனால் அவர் எனக்கு பெற்று தருவதில் ஆர்வமாக இருந்தாலும் கூட உபயோகப்படும் படியாக எந்த உபகரணமும் அங்கே இல்லை.

நானும் பெருந்தன்மையோடு அவரிடம் நன்றி கூறிவிட்டு வெளியேறி விட்டேன். இருந்தாலும் நான் சந்தித்தித்த நல்ல மனிதர்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் ஒருவர்.

"வாழ்க்கை ஒரு போர்க்களம்

வாழ்ந்து தான் பார்க்கனும்; போர்க்களம் மாறலாம்; போர்கள் தான் மாறுமா..." என்கிற வரிகளோடு தான் இப்போதும் வாழ்ந்து வருகிறேன், என முடிக்கிறார் வித்யாஸ்ரீ.

கட்டுரை: ஜோதி நரசிம்மன்