கொரோனா லாக்டவுனில் மாற்றி யோசித்து வெற்றி கண்ட தொழில் முனைவோர்கள்!
கொரோனா ஊரடங்கால் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தது, பல தொழில்கள் முடங்கியது ஊரறிந்த விசயம் தான். ஆனால் மாற்றி யோசித்தால் எப்படியாக இக்கட்டான சூழலிலும் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தங்களது செயல்களினால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் சில தொழில்முனைவோர்கள்.
கொரோனா எனும் கொடூர அரக்கனின் ஆட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் முடியப் போகிறது. நாளுக்கு நாள் இதன் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, தொழில் முடக்கம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக பிரச்சினைகளை சந்தித்தனர்.
ஆனால் அந்த இக்கட்டான சூழலில் முடங்கிப் போய் வீட்டில் அப்படியே இருந்து விடாமல், வித்தியாசமான தங்களது யோசனைகளால் லட்சம் லட்சமாக சம்பாதித்தவர்கள் ஏராளம். நம்மால் எந்த ஒரு காரியம் செய்ய முடியவில்லை எனக் கூறுகிறோமோ, அதனை உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செய்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் என்ற தத்துவத்திற்கு உதாரணமானவர்கள் இவர்கள்.
பல வருடங்களாக தாங்கள் செய்து வந்த தொழிலில் காலத்திற்குத் தகுந்தமாதிரி சில புதுமைகளைச் செய்து ஊரடங்கிலும் தங்களது தொழில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டனர் சிலர். இன்னும் ஒரு சிலரோ இதுவரை தாங்கள் செய்து வந்த தொழிலையே விட்டு விட்டு, புதிதாகத் தொழில் தொடங்கி அதில் வென்றும் காட்டியுள்ளனர்.
இதோ அப்படியான சில வெற்றியாளர்களைப் பற்றிய தொகுப்பு தான். நிச்சயம் இதைப் படிக்கும் போது, ‘தொழிலில் நஷ்டம், இனி என்ன செய்யப் போகிறோம்.. கொரோனா இப்படி தொழிலை முடக்கிப் போட்டு விட்டதே’ என விரக்தியில் இருப்பவர்களுக்கு, இந்த வெற்றியாளர்கள் கடந்து வந்த பாதை தன்னம்பிக்கை டானிக்கைத் தரும் என நம்பலாம்.
40 நாளில் ரூ. 6 லட்சம் வருமானம்
‘சோஷியல் ஈகிள்’ எனும் டிஜிட்டல் மார்க்கெடிங் நிறுவனத்தை சென்னையில் நடத்திவருபவர் தரணீதரன். 2015ம் ஆண்டு ஒரு ப்ளாட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 16 முழு ஊழியர்கள், 32 ஃப்ரீலான்சர்களுடன் ‘ரகுலா டெக்’ பார்கில் கடந்த ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது.
பெரிய க்ளையன்ட்ஸ், நல்ல டீம் என எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் கொரோனா ஊரடங்கு வந்தது. மற்ற தொழில்களைப் போலவே இவரது தொழிலும் பாதித்தது. ஊழியர்களுக்கு சம்பளம், கட்டிட வாடகை என திணறிப் போனார் தரணீ. அப்போது தான் காலத்திற்கு தகுந்தபடி மாற்றி யோசித்தார்.
‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’, ’சோஷியல் மீடியா மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி?’ என்று பல தலைப்புகளில் கோர்ஸ் ரெடி செய்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். தன் நண்பர்கள் வட்டம், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாவில் ஒரு சிறிய விளம்பரமாக இதைப் பற்றி வெளியிட்டார். மக்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவே தற்போது அதனையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் இலவசமாகவும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கட்டணங்களை உயர்த்தியும் இந்த வெபினார்களை அவர் எடுத்தார். இதனால் ஜீரோ முதலீட்டில் 40 நாட்களிலேயே ரு.6 லட்சம் வருமானம் அவருக்குக் கிடைத்தது. இப்போது இதனையே இன்னும் விரிவுப் படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார் தரணீ.
அந்த இன்ஸ்பிரேஷன் கதையை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்
காலத்துக்கேற்ப தொழிலை மாற்று
தொழில்முனைவரான முகேஷ் கன்னா, சென்னையில் குடியேறி, Edu2020, Travel2020 என்ற இரு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவர். கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊரடங்கால் மூடப்பட்டுவிட, இவரது edu2020 பாதிக்கப்பட்டது. கூடவே விமான ரத்து மற்றும் சுற்றுலா தளங்கள் மூடப்பட, Travel2020யும் பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கியது.
அப்போது தான், ‘சரி பிரச்சினை வந்து விட்டது. அதனை எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என யோசித்தார் முகேஷ். ஏற்கனவே தனக்கு வாடிக்கையாளர்களாக இருந்தவர்களைக் கொண்டே புதிய தொழில் தொடங்குவது என முடிவெடுத்தார். கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என அரசே சொல்லி விட்ட நிலையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழிலைத் தொடங்குவது தான் புத்திசாலித்தனம் என தெரிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் தொடக்கத்தில் 1 லட்ச ரூபாய் முதலீட்டில் திருப்பூர் காட்டன் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுடன் சேர்ந்து மாஸ்க் தயாரிக்கும் வேலையில் இறங்கினார். பின்னர் அதனை ‘2020Shoppers.com' என்ற தளத்தின் மூலம் விற்கத் தொடங்கினார். 10 நாட்களில் 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மேலும் மாஸ்க் தேவைக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கவே இனி இதுவே தனது புதிய தொழில் என முடிவெடுத்தார் முகேஷ்.
பின்னர் படிப்படியாக மாஸ்க்குகளோடு, சானிடைசர், தெர்மாமீட்டர், கபசுர குடிநீர் மற்றும் கையுறைகளையும் விற்கத் தொடங்கினார். இந்த ஆன்லைன் தளத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னெடுத்துச் சென்று தேவைக்கு ஏற்ப பொருட்களின் தயாரிப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டு, அதனை செயல்படுத்தியும் வருகிறார்.
ஆன்லைன் தளம் தொடங்கி விற்பனையில் வளர்ச்சி கண்ட இவரின் கதை இதோ
இருவேறு தொழில்கள்
நாகர்கோயிலைச் சேர்ந்த போட்டோகிராபர் ராஜேஷ். சிறுவயதில் இருந்தே போட்டோகிராபி மீது ஏற்பட்ட ஆர்வத்தால், படித்த படிப்பு வேறாக இருந்தபோதும், தனது தொழிலாக அதனை மாற்றிக் கொண்டவர். வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் தான் முகூர்த்தங்கள் அதிகமாக இருக்கும். எனவே அப்போது தான் அவரது தொழிலிலும் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
ஆனால் இந்த ஆண்டோ சரியாக அந்தச் சமயங்களில் ஊரடங்கு அமலாகி விட, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வருமானமே இல்லாவிட்டாலும் சம்பளம் தர வேண்டிய நிலை ராஜேஷுக்கு ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு இனி ஒரு தொழிலை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் நல்லதல்ல என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஆன்லைனில் மீன் விற்பனையை தொடங்கினார் ராஜேஷ். மீன் உணவை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் மக்களைக் கொண்ட ஊர் என்பதால் விரைவாக அந்த வியாபாரம் சூடு பிடித்தது. ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கிய மக்களுக்கு, நல்ல தரமான மீன்கள் வீடு தேடிச் சென்று தந்தார். மக்களிடம் கிடைத்த ஆதரவால் ஆன்லைன் மட்டுமின்றி தற்போது நேரடி விற்பனைக் கடையாகவும் விரிவு படுத்தியிருக்கிறார்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மீன் வியாபாரத்தோடு மீண்டும் போட்டோகிராபியையும் வெற்றிகரமாகச் செய்து வருகிறார் ராஜேஷ்.
ஒரு கையில் மீன், மறு கையில் கேமரா என வெற்றி நடை போடும் ராஜேஷ்-ன் கடை இது
மீனவரின் மகன் தொடங்கிய பேமண்ட் சேவை ஆப்
ராமேஸ்வரத்தில் உள்ள தாமரைக்குளம் என்கிற சிறிய கிராமத்தில் உள்ள மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மோகன். 2010ம் ஆண்டு வெப் டெவலப்மெண்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியவர், நல்ல வருவாயோடு அதனை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
2018ம் ஆண்டு மோகன் தனது சேமிப்பில் இருந்து சில லட்சங்களைக் கொண்டு Foloosi உருவாக்கும் பணியைத் தொடங்கினார். ஓராண்டு செலவிட்டு பேமெண்ட் கேட்வே பிராடக்ட் உருவாக்கினார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் மாதமே 10,000 திர்ஹாம் அளவிற்கு பரிவர்த்தனைகள் நடந்தன. ஓராண்டில் 15 மில்லியன் திர்ஹாமைக் கடந்தது. ஆனால் தமிழ் மக்களும் பயன்பெறும் வகையில் தொழில் தொடங்க நினைத்தவர், Foloosi-யில் இருந்து விலகி, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் IppoPay என்கிற பேமெண்ட் அக்ரிகேட்டர் சேவையைத் தொடங்கினார்.
ஊரடங்கால் பெரும்பான்மையானோர் ஆன்லைன் மூலமே பேமண்ட்களை செய்தனர். பேமண்ட் கேட்வே சேவையை வழங்கும் ஆப்’கள் பெரும்பாலும் பெங்களூரு, மும்பை, குருகிராம் போன்ற நகரங்களைச் சேர்ந்தவைகளாகவே இருந்ததை மோகன் கவனித்தார். தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவையளிக்க விரும்பி, லாக்டவுன் சமயத்தில் IppoPay என்கிற பேமெண்ட் அக்ரிகேட்டர் சேவையைத் தொடங்கினார்.
தொடங்கிய இரண்டே மாதத்தில் இந்தத் தளம் 1 கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகளைச் செய்து பிரமிக்க வைத்தது. இது மாதந்தோறும் 40 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களுக்காக ஆப் தொடங்கிய மோகனின் முழுக்கதையை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்
சாதாரண குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் முடித்துவிட்டு பல முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி கிடைத்தும், அதை ஏற்காமல், குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் கால் பதித்தவர் கோவையைச் சேர்ந்த சரவணன் தியாகராஜன்.
படித்து முடித்ததும் தனது கல்லூரியிலேயே வேலை கிடைத்தது. தன் கல்லூரிக்கு அட்மிஷன் நேரத்தில் ஆட்ஸ் ரன் செய்து வெறும் 50,000 ருபாய் செலவில் 12 மாணவர்களை (48 லட்சம் மதிப்புள்ள பிசினஸ்) கொண்டு வந்துள்ளார் இவர். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அடுத்த வருடத்திலேயே ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் டிஜிட்டல் மார்க்கெடிங் மேனேஜராக சரவணனுக்கு வேலை கிடைத்தது. தனது துறையில் அனுபவங்களைச் சம்பாதித்துக் கொண்டவர், 2018ல் 'Yardstick Digital Solutions' என்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை தொடங்கினார்.
சுயநிதியில் நிறுவனம் தொடங்கி 2 மாதத்திலேயே நல்ல வாடிக்கையாளர்களை பெறத் தொடங்கினார்கள். ஆனால் இடையிலேயே கொரோனா ஊரடங்கு வர, ஆன்லைனில் டிஜிட்டல் மார்கெடிங் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம் எனத் தீர்மானித்தார். சரவணனின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
40 நாட்களில் 1000+ மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் மூலம் அவருக்கு 5.50 லட்ச ரூபாய் வருமானமும் கிடைத்தது.
சரவணனுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கைக்கொடுத்தது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்
புது முயற்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்துத் தரும் தொழில் செய்து வருபவர் ஹக்கீம். ஊரடங்கு காலத்தில் பிரமாண்டமாக திருமணங்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், இவரது தொழிலும் பாதித்தது. அரசின் கட்டுப்பாடுகளால் வீடுகளுக்குள்ளேயே பல திருமணங்கள் நடைபெற்றன.
தங்களது வீட்டு சுபநிகழ்வுகளை அலங்கார மேடைகள் இல்லாமல் நடத்துகிறோமே என்ற அதிருப்தியில் மக்கள் இருப்பதை தனது வாடிக்கையாளர்கள் மூலம் தெரிந்து கொண்டார் ஹக்கீம். எனவே, தனது கனரக வாகனத்தில் மணவறை வடிவமைத்தும், மணமக்கள் இல்லத்தருகே மண்டபம் போல் செட் அமைத்து கொடுத்தார்.
வருபவர்களுக்கு வரவேற்பு அறையிலேயே உடல்வெப்பம் அளக்கும் பரிசோதனைச் செய்தும், சானிடைசர் மாஸ்க் போன்றவை அளித்தும், பாதுகாப்பான முறையில் அதே சமயம் ஒரு பெரிய மண்டபத்தில் நடத்தப்பட்ட சுபகாரியம் போல் பிரமாண்டமாக நிகழ்ச்சிகளை நடத்திட ஒரு சிலருக்கு ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.
வெளியில் சென்று அலைய வேண்டிய தேவை இல்லாமல், வீட்டிலேயே மண்டபத்தில் நடப்பது போன்ற திருமணம் நடைபெற்றதால் அவரது வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தனர். தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, ஊரடங்கு நேரத்திலும் தனது தொழில் தடை படாமல் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார் ஹக்கீம்.
தொழில்முனைவோராக மாறிய தோழிகள்
கோவையைச் சேர்ந்த தோழிகள் திவ்யாவும், தருணிகாவும். பேஷன் டெக்னாலஜி மாணவிகளான இவர்கள், ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் அடைபட்டு, செல்போனிலும், டிவியிலும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தங்களுக்குக் கிடைத்த ஓய்வை பயனுள்ள வகையில், அதே சமயம் தங்களது படிப்பிற்கும் உதவிடும் வகையில் செலவிட நினைத்தனர்.
அதன்படி, பெற்றோரிடம் இருந்து சிறு தொகையைப் பெற்று திருப்பூரில் இருந்து கொஞ்சம் ஆடைகளை வாங்கினர். பின்னர் அவற்றில் தங்களது கற்பனைத்திறனைப் புகுத்தி புதுமையாக வடிவமைத்தனர். தாங்கள் உருவாக்கிய 25 விதமான ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்தனர். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா என சமூகவலைதளங்களை தங்கள் வியாபாரத்திற்கு விளம்பரத் தளங்களாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தத் தோழிகளின் ஆடை வடிவமைப்பிற்கு உள்ளூரில் மட்டுமல்லாது மும்பை, அகமதாபாத், டெல்லி என வெளிமாநிலங்களில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் கடந்த ஆறு மாதத்தில் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளனர். விரைவில் தங்களது தொழிலை விரிவுப் படுத்தும் முயற்சிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தோழிகள் இப்போது தொழில் முனைவோராக வலம் வருகின்றனர்.
மாற்றி யோசித்தால் வெற்றி
கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் திருமண மண்டபமான பி.டி.பிள்ளை மண்டபம். ஐம்பதாவது ஆண்டை வெற்றிகரமாகக் கொண்டாட வேண்டிய சூழலில், ஊரடங்கு குறிக்கிட மண்டபம் வெறிச்சோடியது. எனவே காலத்திற்கு ஏற்ப மாற்றி யோசித்தனர் மண்டப உரிமையாளர்கள். திருமணம் நடைபெறாவிட்டாலும், திருமண நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராக மாறுவது என முடிவெடுத்தனர்.
அதாவது, மண்டப வாடகை, செயற்கைப் பூக்களுடன் கூடிய மேடை அலங்காரம், 9 வகைக் கூட்டு, இரண்டு பாயசம், போளியுடன் 50 பேருக்கு சுவையான சைவ மதிய விருந்து, வெல்கம் ட்ரிங்க், நாதஸ்வர மேளம், மணமக்கள் மாலை, மணப்பெண்ணுக்காக ஒரு பந்து மல்லிப்பூ, மேக்கப் கலைஞரின் மூலம் மணமகள் அலங்காரம், வீடியோ, புகைப்பட ஆல்பம், விழாவுக்கு வரும் 50 பேருக்கும் முகக்கவசம், சானிடைசர், மண்டபத்தின் முகப்பில் வாழைமரம், ஆர்ச் இத்தனையையும் ஒன்றே முக்கால் லட்ச ரூபாயில் செய்து தருவதாக அறிவித்தது இந்த மண்டப நிர்வாகம்.
சமூக வலைதளத்தில் இந்த அறிவிப்பு வைரலாக, ஒரே நாளில் இருபதுக்கும் அதிகமானோர் அழைத்து ஆர்டர் செய்துள்ளனர். இதனால் தங்களது மண்டபத்தில் 50வது ஆண்டை வித்தியாசமாக வியாபாரம் செய்து கொண்டாடி வருகின்றனர் இந்த மண்டபத்தின் உரிமையாளர்கள்.
பொழுதுபோக்கு மூலம் புதிய தொழில்
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கு சமயத்திலும் கூட, 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, 30 பெண்களுக்கு இலவச தொழில்முனைவோர் பயிற்சியும் அளித்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம். டெரகோட்டா நகைகள் களிமண்ணை குழைத்து பக்குவமாக்கி, தேவைக்கு ஏற்றபடி நகைகளாக வடிவமைப்பது தான் டெரகோட்டா எனும் சுடுமண் நகைகள். தங்கம் வெள்ளி நகைகளுக்கு மாற்றாக மார்டன் அணிகலன்களாக இவைகள் பிரபலமடைந்து வருகின்றன.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்மிர்தி. பேஷன் டெக்னாலஜி 2ம் ஆண்டு படித்து வரும் இவரது சிறுவயது முதலே ஓவியம் கலைப்பொருட்கள் மீதான ஆர்வம் அதிகம். டெரகோட்டா அணிகலன்கள் மீதான ஈர்ப்பினால் அவற்றை தாமாகவே வடிவமைக்கத் தொடங்கினார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள நினைத்த ஸ்மிர்தி பகலில் டெரகோட்டா நகை வடிவமைப்பிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆன்லைன் வகுப்புகளிலும் கவனம் செலுத்தினார். அதன்பலனாக ஒரு சில மாதங்களிலேயே 2 லட்சம் ரூபாய் வரை வருமானமும் ஈட்டினார்.
கூடவே 30 பெண்களுக்கு இலவசமாக டெரகொட்டா நகை தயாரிப்பு பயிற்சியும் வழங்கி அவர்களையும் தொழில்முனைவோர்களாகவும் மாற்றியுள்ளார் ஸ்மிருதி.
மனமிருந்தால் மார்க்கமுண்டு மக்களே..!