முன்னாள் டெக்கீ டு ஆடைகள் பிராண்ட் நிறுவனர் - வீட்டிலிருந்து தொடங்கிய ரூ.200 கோடி சாம்ராஜ்யம்..!
சாப்ட்வேர் இன்சினியராக பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்த நிதி யாதவ், ஃபேஷன் துறையிலிருந்த அவரது ஆர்வத்தை கண்டறிந்து, இன்று ரூ. 200 கோடி மதிப்பிலான AKS Clothing என்ற ஃபேஷன் பிராண்ட்டை உருவாக்கி உள்ளார்.
"நீங்கள் கடைசியாக எப்போது அலுவலகத்திற்குச் செல்ல விரும்பினீர்கள்?" என்ற கேள்விக்கு உங்களது பதில் என்ன? நிதி யாதவ்வின் பதில் "ஒரு போதும் இல்லை..."
மனதிற்கு பிடித்த பணியை மேற்கொள்ளும் முயற்சியில், ஃபேஷன் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை கண்டறிந்து, இன்று ரூ. 200 கோடி மதிப்பிலான ஃபேஷன் பிராண்ட்டை உருவாக்கி உள்ளார் நிதி யாதவ்.
2006ம் ஆண்டில் ஒரு நாள் நிதி யாதவ், மெரில் ஸ்ட்ரீப்பின் பிளாக்பஸ்டர் "தி டெவில் வியர்ஸ் பிராடா" திரைப்படத்தை கண்டு, ஃபேஷன் துறையில் பணியாற்றும் விருப்பத்தை பெற்றதுடன், அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது. இந்தூரில் பிறந்து வளர்ந்த நிதி, கணினி அறிவியல் பட்டதாரி.

நிதி யாதவ்
நிதி வாழ்க்கையின் திருப்புமுனை
உண்மையில் வாழ்க்கையில் அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொள்வதற்கு முன்பு ஒன்றரை ஆண்டுகள் ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டில் பணிபுரிந்தார். நிறுவனத்தின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நிதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. அந்த கேள்வி,
"நீங்கள் கடைசியாக எப்போது அலுவலகத்திற்குச் செல்ல விரும்பினீர்கள்?" என்பது அதற்கு அவர் அளித்த நேர்மையான பதில், "ஒருபோதும் இல்லை." இதுவே நிறைய மாற்றங்களுக்கு வழிவகுத்தது அந்த தருணம்.
இதைத்தொடர்ந்து, இத்தாலியின் புளோரன்ஸில் உள்ள பாலிமோடா ஃபேஷன் பள்ளியில் ஒரு வருட ஃபேஷன் படிப்பை படித்துள்ளார். படிப்பை முடித்த பின், இத்தாலிய ஃபேஷன் பிராண்டான எமிலியோ புச்சியில் வேலை கிடைத்தது. இருப்பினும், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க எண்ணிய அவர் இந்தியா திரும்பினார்.
2014ம் ஆண்டு மே மாதம், ரூ 3.5 லட்சம் ஆரம்ப மூலதனத்துடன், 18- 35 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மலிவு விலையில் சமகால ஆடைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு AKS எனுக் ப்ராண்டை தொடங்கினார். அப்போது நிதிக்கு வயது 25. ஏழுமாதக் கைக்குழந்தையின் தாயாக இருந்தார்.
கைக்குழந்தையுடன் ஆடைகளுக்கான மூலப்பொருள்களை தேடி பயணம் செய்து, கடினமாக உழைத்து வந்துள்ளார். அதன் பலனாய் இன்று, அவரது பிராண்ட் மிந்த்ரா, ஃபிளிப்கார்ட், நைகா மற்றும் AKS இன் சொந்த இணையதளத்திலும் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்கிறது.
மேலும், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. நாகாலாந்தில் இரண்டு ஆஃப்லைன் கடைகளையும் கொண்டுள்ளது. 2024 நிதியாண்டில் ரூ.500 கோடியை எட்டும் திட்டங்களுடன் இந்த பிராண்டு ரூ.200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஸ்டார்ட் அப்-ன் தொடக்கம்!
நிதியின் தொழில்முனைவு பயணம் குருகிராமிலிருந்து தொடங்கியது. குருகிராமில் உள்ள ஒரு உள்ளூர் ஃபேஷன் பிராண்டில் மூன்று மாதங்கள் பணியாற்றிய பிறகு, அவர் இந்தூருக்குத் திரும்பிச் சென்று திருமணம் செய்து கொண்டார், விரைவில் ஒரு தாயானார். நிதியின் கணவர் சத்பால் யாதவ் அப்போது ஜபாங் என்ற பெண்கள் ஆடைகள் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
"நான் ஒரு ஃபேஷன் டிசைனர் அல்ல, ஆனால் சந்தையில் என்ன விற்கப்படும் என்று எனக்குத் தெரியும். நான் ஸ்டார்ட் அப் பற்றி யோசனையை குடும்பத்தினரிடம் சொன்னபோது முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அவர்கள் எனக்கு ஆதரவளித்தனர். தொழில்முனைவராக தயார்படுத்திக் கொள்ள, நிதி சர்வதேச ஃபேஷன் பிராண்டான ஜாராவில் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்தார். Zara ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கலெக்ஷனை கொண்டு வரும். லிமிடெட் ஸ்டாக் செய்வதால் அவை விரைவாக விற்றுத் தீர்ந்துவிடும். சீசன் முடிவில் ஆஃபரை வழங்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாத இறுதியில் தள்ளுபடியை வழங்குகிறது," என்றார்.
அந்த சமயத்தில் பெண்களுக்கான பாரம்பரிய உடைகளில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக நிதி உணர்ந்தார். எனவே, அவர் AKS ஐ அறிமுகப்படுத்தியபோது, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 15 முதல் 20 புதிய கலெக்ஷனை அறிமுகப்படுத்தினார். அந்த சமயத்தில் எந்த பிராண்டும் அவ்வாறு செய்யவில்லை. இது அவர்களது வாடிக்கையாளர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கு வழிவகுத்தது.
AKS-ஐ தொடங்கிய ஆரம்ப மாதங்களில், அவரும் அவரது கணவரும் ஒவ்வொரு வார இறுதியிலும் குருகிராமிலிருந்து ஜெய்ப்பூருக்கு கைக்குழந்தையுடன் மெட்டீரியல்களை வாங்குவதற்காக பயணம் செய்வார்கள். ஆனால், அங்குள்ள உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்வது அவர்களுக்கு கடினமாக இருந்தது.
"ஒவ்வொரு டிசைனிலும் 25 பீஸ்களைப் பெற விரும்பினோம். ஆனால், உற்பத்தி செலவு அதிகம் என்பதால், 200 பீஸ்களுக்குக் குறைவான எந்த ஆர்டர்களையும் அவர்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிலர் 20-25 பீஸ்களை விற்க முன்வந்தனர். AKS வளர்ச்சி பெற்றவுடன், 300 பீஸ்கள் வரை ஆர்டர் செய்யத் தொடங்கினோம்," என்று யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார் அவர்.

பெண்களுக்கான ஆடை பிராண்ட்டை வளர்க்கும் மற்றும் வளரும் பெண்சமூகம்!
நீங்கள் ஒரு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தின் ஆதரவு இல்லையென்றால் வேலை-வாழ்க்கை சமநிலையினை சமமாக கொண்டு செல்வது கடினமானதாக இருக்கும். அந்த வகையில் நிதியின் கணவர் குழந்தையை கவனித்து கொள்வதில் உதவுவதுடன் AKS இன் செயல்பாடுகளுக்கும் உதவியுள்ளார்.
"ஒவ்வொரு புது டிசைனை தயாரிப்பதற்கும் முன்பும் நான் அதை முயற்சித்து பார்ப்பேன். தயாரிப்பு பட்டியலை தயாரித்தல், வடிவமைத்தல் மற்றும் மூலப்பொருட்களை வாங்குதல் ஆகியவற்றை நாங்களே செய்தோம். எங்களது வீடு தான் எங்களது கிடங்கு," என்று நிதி நினைவு கூர்ந்தார்.
வணிகத்தின் மூன்றாம் ஆண்டில்தான் நிறுவனம் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு அலுவலக இடத்திற்கு மாறியது. இன்று, AKS என்பது குருகிராமில் ஐந்து மாடி வணிகக் கட்டிடத்தில் 52 பேர் கொண்ட குழுவாகும். இது அதன் கூட்டாளிகள் மூலம் 250 தையல்காரர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டுள்ளது.
மேலும், சத்பால் இறுதியாக AKS இல் முழுநேர இணை நிறுவனராக இணைந்துள்ளார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஏகேஎஸ் நோக்கமாக கொண்டுள்ளது. ஏகேஎஸ் அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50 சதவீத நிறுவனங்களை பெண் தொழில்முனைவோர் நடத்துகின்றனர்.
குடும்ப வாழ்க்கைக்கு பிறகு ஒரு பெண்ணின் தொழில் வாழ்க்கை தேக்கமடைகிறது என்ற எண்ணம் பரவலாக இருந்தாலும், நிதி இதற்கு நேர்மாறாக நம்புகிறார். கடந்த ஆண்டு, இந்திய பெண்கள் மாநாடு மற்றும் பெண்கள் தலைமைத்துவத்தால் நிதிக்கு, சிறந்த ஆடை பிராண்ட் ஸ்டார்ட்அப்பிற்கான 'இளம் பெண் தொழில்முனைவோர்' விருது வழங்கப்பட்டது.
"நான் எப்போதும் வேலைவாய்ப்பை உருவாக்கி சமூகத்திற்கு பங்களிக்க விரும்பினேன். AKS-ன் ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் அதன் சப்ளையர்களில் சுமார் 60 சதவீதம் பேர் பெண்கள். உங்கள் குழந்தைகள் பெருமையாக எண்ணக்கூடிய ஒரு தாயைப் பெற தகுதியானவர் என்பதால் நீங்கள் அதற்காக முயற்சியுங்கள். வணிக இலக்குகளை அடைவது அல்லது அதிக வளர்ச்சியை அடைவது மட்டுமல்ல. உள் மகிழ்ச்சியும் திருப்தியும்தான் எனக்கு வெற்றியின் மிகப்பெரிய கூறுகள். ஏகேஎஸ் என்னுடைய இரண்டாவது குழந்தை," என்று உணர்வுபூர்வமாக கூறிமுடித்தார் நிதி.

குப்பைப் பைகளில் இருந்து பல சைஸில் ‘உடற்பயிற்சி ஆடைகள்’ உருவாக்கும் தோழிகள்!