Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரத்தன் டாடாவிடம் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற 27 வயது பொறியாளரின் சிலிர்க்க வைக்கும் அனுபவம்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ரத்தன் டாடா அலுவலகத்தில் பணியாற்றும், ஷாந்தனு, ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக இது அமைகிறது என்கிறார்.

ரத்தன் டாடாவிடம் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற 27 வயது பொறியாளரின் சிலிர்க்க வைக்கும் அனுபவம்!

Monday October 28, 2019 , 6 min Read

எந்த ஒரு ஐவி லீக் பட்டதாரியும் தனக்குக் கிடைக்காதா என ஏங்கக்கூடிய வேலை வாய்ப்பு, 27 வயதான ஷாந்தனு நாயுடுவுக்கு கிடைத்திருக்கிறது. ரத்தன் டாடா அலுவலகத்தில், பொறாமை கொள்ளக்கூடிய செயல்தன்மை கொண்ட பதவி வகிக்கும் இவருக்கு, இந்த பொறுப்பு எதிர்பாராத வகையில் அமைந்தது.


வர்த்தக முன்னோடி, முதலீட்டாளர், கொடைவள்ளல் மற்றும் டாடா குழுமத்தின் கவுரவ தலைவர் உள்ளிட்ட சிறப்புகளை கொண்ட ரத்தன் டாடாவிடம், ஷாந்தனு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ரத்தன் டாடாவுக்கு ஸ்டார்ட் அப் முதலீட்டில் ஆலோசனை வழங்குவது மற்றும் செயலாக்க உதவி வழங்குவது ஆகியவை அவரது பணியாக இருக்கிறது.


இளம் தலைமுறையைச்சேர்ந்த ஒருவருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? ஷாந்தனு, கார்னல் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பெற்றிருந்தாலும், நடைமுறையில் பார்த்தால் அவர் ரத்தன் டாடா வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் எனலாம்.

”திரு.டாடாவிடம் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய கவுரவம் மற்றும் வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாகும். தினமும், ஒவ்வொரு நிமிடமும் கற்றலாக இது அமைகிறது,” என்று தொலைபேசி உரையாடலில் ஷாந்தனு கூறினார்.
டாடாவுடன்

ரத்தன் டாடாவுடன் ஷாந்தனு

எல்லோரும் அறிந்தது போல, 81 வயதான ரத்தன் டாடா, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் மீது ஆழமான ஈடுபாடு கொண்டவர். தனிப்பட்ட முறையில் மற்றும் அதிகாரப்பூர்வமாக அவர் பத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார்.


2016 ஜூன் மாதம், ரத்தன் டாட்டாவின் தனிப்பட்ட முதலீடு நிறுவனமான ஆர்.என்.டி அசோசியேட்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் ஆபிஸ் ஆப் தி ரீஜெண்ட்ஸ், (யுசி இன்வெஸ்ட்மண்ட்ஸ்), ஒன்றாக இணைந்து, இந்தியாவில் யுசி-ஆர்.என்.டி பன்ட்ஸ் மூலம், ஸ்டார்ட் அப்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் முதலீடு செய்ய தீர்மானித்தது. அதே நேரத்தில் ஆர்.என்.டி அசோசியேட்ஸ் இந்திய தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் சூழலை ஆதரிக்கும் வகையில் பல்வேறு முதலீடுகளை செய்தது.


டாடாவின் பெரும்பாலான முதலீடுகளுக்கான தொகை வெளிப்படையாக சொல்லப் படாவிட்டாலும் கூட, ரத்தன் டாடாவின் ஆதரவை பெற்ற ஸ்டார்ட் அப்கள், நிதி உதவி தவிர்த்த காரணங்களுக்காகவும் உற்சாகம் கொள்கின்றன. ஓலாவில் முதலீடு செய்வதாக ரத்தன் டாடா அறிவித்த பிறகு,

“நம் காலத்தின் பெரிதும் மதிக்கப்படும் வர்த்தகத் தலைவரிடம் இருந்து கிடைத்துள்ள மிகப்பெரிய ஆதரவு மற்றும் இந்தியாவில் போக்குவரத்து எதிர்காலத்தின் மீதான ஓலாவின் ஈடுப்பாட்டின் பிரதிபலிப்பு,” என்று அதன் சி.இ.ஓ பவிஷ் அகர்வால் கூறியிருந்தார்.
டாடா

பொது நிகழ்ச்சி ஒன்றில் ரத்தன் டாடாவுடன் ...

ரத்தன் டாடாவுடனான உறவில் எந்த தலைமுறை சிக்கலையும் ஷாந்தனு எதிர்கொள்ளவில்லை என்பதில் வியப்பில்லை. “ஏனெனில் தொழில்நுப்டம் அல்லது மற்ற விஷயங்களில் அவர் நவீன போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார். உங்களிடம் காண்பிக்க என்னிடம் புதிய விஷயம் இருக்கிறது என சொல்ல குறைவான வாய்ப்பே உள்ளது,” என்று கூறும் ஷாந்தனு,

“புத்தாயிரமாண்டு தலைமுறையின் புரிதலை நான் வழங்குகிறேன். அதை அவர் அங்கீகரிக்கிறார் என்றாலும், ஒரு சிறந்த வர்த்தக மனிதர், நேர்த்தியான மனிதர் மற்றும் பரிவுள்ள தனிமனிதர் எப்படி இருப்பார் மற்றும் எப்படி நடந்து கொள்வார் என்பதை தான் இந்த உறவில் நான் பார்க்கிறேன்,” என்று மேலும் கூறுகிறார்.

கருணை செயல்

ரத்தன் டாடா செயல்படும் விதத்திற்கு, ஷாந்தனு அவரது அலவலகத்திற்கு பணியாற்ற வந்த பின்னணி கதை சிறந்த உதாரணமாக அமைகிறது.


2014ல், ஷாந்தனு புனேவில் டாடா எல்க்சியில் ஆட்டோமொபைல் வடிவமைப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இரவு நேரத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது, வேகமாகச்சென்ற வாகனத்தில் அடிபட்டு இறந்த நாயின் சடலத்தை பார்த்தார். இது அவரை வேதனையில் ஆழ்த்தியது. தெருநாய்கள் உயிரை காப்பது பற்றி யோசித்தார். “நாய்கள் விபத்துக்குள்ளாவதை பார்த்திருந்தவர்களுடன் பேசினேன். இது பார்ப்பது தொடர்பான பிரச்சனை மட்டும் அல்ல: தனக்கு ஆபத்தில்லாத வகையில் எந்த பக்கம் செல்வது என டிரைவர் தீர்மானிக்க அவகாசம் உள்ள அளவுக்கு பார்ப்பதற்கான நேரம் தேவை.

நான் ஆட்டோமொபை பொறியாளர் என்பதால், இரவில் மின்விளக்குகள் இல்லாத நிலையிலும், நாய்களை நன்றாக பார்க்க செய்யக்கூடிய வகையில் காலர்களை உருவாக்கும் எண்ணம் உண்டானது,” என்கிறார் ஷாந்தனு.  
டாடா

மோடோபாஸ் குழு

பல்வேறு சோதனை முயற்சிகளுக்குப்பிறகு, ஷாந்தனுவும், நண்பர்களும் சேகரித்திருந்த பயன்படுத்திய ஜீன்ஸ் துணி கொண்டு, நன்றாக வெளிச்சம் தெரியக்கூடிய தொழிற்சாலை தரம் கொண்ட பொருளால் ஆன, ஒளிர்வு சாதனப் பட்டையை உருவாக்கினார்.

“எனக்கு அப்போது 23 வயது. இதை பெரிய அளவில் கொண்டு செல்ல எங்களிடம் நிதி இல்லை,” என்கிறார் அவர். ஆனால் அவரது முயற்சியால் உருவான மோடோபாஸ் (Motopaws) கவனிக்கப்படாமல் இல்லை.


இரவில் நாய்களை விபத்தில் இருந்து காப்பதற்கான ஒளிரும் தன்மை கொண்ட பட்டை, புதுமையான யோசனையாக அமைந்தது. இது நாய்களை காப்பாற்றுவதாகவும் அமைந்தது.

இந்த முயற்சி பற்றி டாடா குழுமச் செய்தி மடலில் எழுதப்பட்டு, ரத்தன் டாடா கவனத்தையும் ஈர்த்தது.
டாடா

ரத்தன் டாடாவுடன் மோடாபாஸ் குழு

“இந்த திட்டம் பற்றி ரத்தன் டாடாவுக்கு எழுதுமாறு கூறினர். நானும் எழுதினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இது புரிந்து கொள்ளக்கூடியதே. அதவாது அவர் ரத்தன் டாடா. ஆனால் என் தந்தை நம்பிக்கையுடன் இருந்தார்” என்கிறார் ஷாந்தனு. ஒரு நாள் மும்பை அலுவலகத்தில் சந்திக்குமாறு ரத்தன் டாடாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

 “திரு.டாடாவுக்கு நாய்கள் மீது அன்பு அதிகம் என்பதால், எங்கள் முயற்சி மீது ஆர்வம் கொண்டு, எங்களுக்கு என்ன உதவி தேவை என்று கேட்டார். நான் எந்த உதவியும் தேவையில்லை என்று கூறினேன். ஆனால் நாங்கள் மாணவர்கள் என்பதால், எங்கள் முயற்சியில் ஒரு தொகையை அவர் முதலீடு செய்தார்” என்கிறார் ஷாந்தனு.

அன்பு வழி

Motopawsக்கு, ரத்தன் டாடா தனது கையில் இருந்து நேரடியாக நிதி உதவி செய்தார். இந்த நிதி உதவி மூலம், மோடாபாஸ் இந்தியாவின் 11 நகரங்களுக்கு விரிவாகியுள்ளது.

“அண்மையில் நேபாளம் மற்றும் மலேசியாவில் இருந்து வேண்டுகோள் வந்திருக்கிறது. நேபாளத்தில் ஏற்கனவே அனைத்து பெண்கள் குழு கொண்டுள்ளோம். தெருவில் திரியும் போது பாதிக்கப்படக்கூடிய பசு மாடு போன்ற பெரிய விலங்குகள் பற்றியும் யோசித்து வருகிறோம்,” என்கிறார் அவர்.

மேலும், Motopaws தற்போது விலங்குகளுக்கான முதலுதவி அளிப்பது தொடர்பான தனது தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இது மாதம் 500 முதல் 1,5000 பட்டைகள் தயாரிக்கிறது. இதன் வடிவமைப்பு, தண்ணீர் மற்றும் பூஞ்சை புகாத வகையில் அண்மையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.


விலங்கின ஆர்வலர்களிடம் இருந்து வரும் கருத்துகள் அடிப்படையில் மோடோபாஸ் வடிவமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. 11 நகரங்களிலும் அது தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. "மோடோபாஸ் தன்னார்வலராக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பலரும் இதில் இணைய விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் ஷாந்தனு.


இந்த தொடர்பிற்கு பிறகு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நாடி ரத்தன் டாடாவை, ஷாந்தனு தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தார்.

“என் குடும்பத்தில் டாடா குழுமத்தில் பணியாற்றும் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்தவன் நான். பெரும்பாலும் பொறியாளர், டெக்னிஷியன்களாக பணியாற்றி வந்துள்ளனர். அதித தார்மீக பொறுப்பு மற்றும் வர்த்தக பொறுப்பு கொண்ட குழுமத்தில் பணியாற்றும் பெருமிதம் இருந்தது. டாடா அறக்கட்டளை போன்ற சமூக தாக்கம் கொண்ட அமைப்பில் பணியாற்ற வேண்டும் என எப்போதும் விரும்பினேன்,” என்கிறார் ஷாந்தனு.
டாடா

முதல் சந்திப்பில்

“எங்களுக்கு முதலீடு அளித்த பிறகு, அவருடன் தொடர்பில் இருந்தேன். அவருடன் பல விஷயங்கள் பற்றி பேசுவேன். எங்கள் நட்பு வளர்ந்தது. ஒரு நாள் கார்னல் பல்கலைக்கு எம்பிஏ படிக்கச்செல்வது பற்றி கூறினேன். படிப்பை முடித்து இந்தியா திரும்பியதும், டாடா அறக்கட்டளையில் பணியாற்றும் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன்”.

வாழ்க்கை பாடங்கள்

கார்னல் பல்கலையில் இரண்டாவது ஆண்டில், தொழில்முனைவு, முதலீடு, ஸார்ட் அப், புதிய வர்த்தக எண்ணத்தை எப்படி முன்வைப்பது, வென்ச்சர் முதலீட்டாளர்களை சந்திக்கும் வழி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.  

"உங்களுக்கு தொழில்முனைவு பயணத்தை முழுமையாக புரிய வைக்கும் வகையில் பலவகையான அடிப்படை தொழில்முனைவுத் திட்டங்கள் மற்றும் பல்வேறு இன்குபேட்டர்களை கார்னல் கொண்டிருந்தது. மும்பையில் கால்நடை மருத்துவமனை அமைக்கும் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான திட்டத்தில் டாடா அறக்கட்டளை மற்றும் கார்னல் பல்கலையில் பயிற்சி அனுபவம் முடித்தேன். படிப்பை முடிப்பதற்கு முன்பே, அதில் ஈடுபடத்துவங்கியிருந்தேன். எல்லாம் சரியாக அமைந்தது. இந்தியா திரும்பிய போது, நான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த தொழில்முனைவு உலகிலும் அனுபவம் இருந்தது,” என்கிறார் அவர்.


ஆக ஷாந்தனு இந்தியா திரும்பியதும், இந்த கால்நடை திட்டத்திலேயே பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

“ஆனால் ரத்தன் டாடா வேறு விதமான திட்டம் வைத்திருந்தார். அவர் தனது அலுவலகத்தில் சேருமாறு கூறினார். 2018ல் இது நிகழ்ந்தது. அதன் பிறகு அவரது அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன்,” என்கிறார் ஷாந்தனு.

அவரைப் பொருத்தவரை இது தீவிர பயிற்சியாக அமைந்தது. ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரது தூய்மை மிக்க ஆளுமை வியக்க வைப்பதாக கூறுகிறார்.


“தூய்மைமிக்க தன்மை மிகவும் முக்கியமானது. சாதனையாளர்கள் பலர், ஊக்கம், ஆர்வம் மற்றும் நோக்கத்தை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் முனைகளை பழுதாக்காமல், மென்மையாக மெருகேற்றுவதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விஷயங்களை அவர் நேரடையாக கற்றுத்தருகிறார். சில நேரங்களில் அவரது செயல்களில் இருந்து தெரிய வருகிறது. இது விலைமதிப்பில்லாதது. நேர்த்தியான தன்மை, நுட்பம், அலசல் சிந்தனை ஆகியவற்றை அவர் கொண்டு வருவதால் தொடர்ந்து அவரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் அவர்.


ரத்தன் டாடாவிடம் இருந்து தான் கற்றவற்றை எதிர்காலத்தில் பட்டியல் போட விரும்பும் ஷாந்தனு அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ர்ந்து கொள்கிறார்.

“டாடாவின் மனது மிகவும் கூர்மையானது. அவர் எப்படி முடிவுகளை எடுக்கிறார் என்பதே ஒரு கல்வியாகும். அவரது நகைச்சுவை ஆற்றல் மற்றும் மனித பண்பு மிகவும் முக்கியமானவை. நான் இது, நீங்கள் இது என கூறும் எல்லை இல்லாததால், அவரிடம் பணியாற்றும் உணர்வே உங்களுக்கு ஏற்படாது. என்னை ஒரு போதும் அச்சம் கொள்ளவோ, தயக்கம் கொள்ளவோ அல்லது எதையேனும் கற்பதற்கு அஞ்சவோ செய்யவேயில்லை. இந்த விஷயங்களில் அவர் எப்போதும் ஊக்கம் அளிக்கிறார். என்னை மட்டும் அல்ல, அவர் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தான்” என்கிறார் ஷாந்தனு.


இந்தத் தன்மை, அவர்கள் உறவு மற்றும் பிணைப்பு மூலம், பொதுவான நோக்கம் வளர்கிறது. “இது பல ஆண்டுகளின் விளைவு. அவருடன் பணியாற்றுவது எத்தனை எளிதானது என்பதை பார்க்கும் போது, அவருடன் பணியாற்றுபவர்கள் ஒருவிதத்தில் அவருக்கு நண்பர்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் ஷாந்தனு.

மிகவும் நாடப்படும் பணியை பெற ஒருவர் தன் மனம் விரும்பிய வகையில் செயல்பட்டால் போதும் என்பதை யார் தான் நம்பியிருப்பார்கள்!


ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: சைபர்சிம்மன்