சரியாக செயல்படாத 5% ஊழியர்களை பணியிலிருந்து நீக்க மெட்டா அதிரடி திட்டம்!
கடந்த காலத்தில், சரியாக செயல்படாத ஊழியர்களில் ஒரு சிலர், எதிர்கால பணி மேம்பாடு குறித்து ஊக்கம் கொண்டிருந்தால் மட்டும் தக்க வைக்கப்படுவார்கள், என்று மெட்டா சி.இ.ஓ மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முன்னணி சேவைகளின் தாய் நிறுவனம் மெட்டா, தனது 72,400 ஊழியர்களில், சரியாக செயல்படாதவர்கள் என கருதப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 5 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ப்ளூம்பர்க் செய்தி தளத்தால் முதலில் வெளியிடப்பட்ட மெட்டா நிறுவனத்தின் சுற்றறிக்கை அடிப்படையில் இந்த தகவல் அமைந்துள்ளது.
மெட்டா சி.இ.ஓ மார்க் ஜக்கர்பர்கும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதால், 3,600 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. செயல்திறனை அதிகரித்து, சிறப்பாக செயல்படாதவர்களை வேகமாக வெளியேற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது, என ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
“எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றாதவர்கள் செயல்திறனை ஓராண்டு கால அளவில் தீர்மானித்து நடவடிக்கை எடுப்பது வழக்கம், என ஜக்கர்பர்க் அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தார். எனினும், இந்த சுழற்சியில் இப்போது மிகவும் தீவிரமாக செயல்திறன் சார்ந்த களையெடுப்பை மேற்கொள்ள இருக்கிறோம்,“ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நீக்கப்படும் ஊழியர்கள். (நீக்கப்படும் ஊழியர்களுக்கு தகுந்த ஈடு வழங்கப்படும்) இடத்தில் இந்த ஆண்டு இறுதியில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் பணியாற்றும் மெட்டா ஊழியர்களுக்கு அவர்கள் நிலை குறித்து பிப்ரவரி 10ம் தேதி தகவல் தெரிவிக்கப்படும் மற்றும் சர்வதேச ஊழியர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும், என ’ஏஎப்பி’ செய்தி தெரிவிக்கிறது.
கடந்த காலத்தில், சரியாக செயல்படாத ஊழியர்களில் ஒரு சிலர், எதிர்கால பணி மேம்பாடு குறித்து ஊக்கம் கொண்டிருந்தால் மட்டும் தக்க வைக்கப்படுவார்கள், என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அண்மையில் தி ரோகன் எக்ஸ்பிரியன்ஸ் எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கர்பர்க், தற்போது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சிக்கலான கோடிங் பணிகளை மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ அமைப்புகளால் மேற்கொள்ளச்செய்யும் திட்டத்தில் இருப்பதாக கூறினார்.
இந்த உரையாடலின் போது, 2025 வாக்கில், இடைநிலை மென்பொருள் பொறியாளர்களை ஏஐ கொண்டு பதில் செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார். மைக்ரோசாட்ப், சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இது போன்ற ஆட்குறை திட்டங்களை அறிவித்துள்ளன.
மென்பொருள் பொறியாளர்களை வேலைக்கு எடுப்பதை பெரிய அளவில் குறைத்துக்கொள்ள இருப்பதாக பாட்காஸ்டிங் நிகழ்ச்சி ஒன்றில், சேல்ஸ்போர்ஸ் நிறுவன சி.இ.ஓ மார்க் பெனியாப் கூறியிருந்தார். ஏஜெண்ட்போர்ஸ் எனும் சொந்த நுட்ப ஏஐ மேடை மூலம் இதை செய்ய இருப்பதாக கூறினார்.
“எங்களுடைய பொறியியல் திறன் 30 சதவீதம் மேம்பட்டுள்ளது. எனவே, புதிய மென்பொருள் வல்லுனர்கள் தேவையில்லை. ஏஐ நாம் பணி செய்யும் விதத்தை மாற்றி அமைத்திருக்கிறது,“ என்று அவர் கூறியிருந்தார்.
எனினும், நிறுவனம் விற்பனை பணியாளர்களை ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஏஜெண்ட்போர்ஸ் அறிமுகத்திற்கு பிறகு, அக்டோபர் காலாண்டில் ஐந்து நாட்களில் 200 ஒப்பந்தங்களை நிறுவனம் பெற்றதாக சேல்ஸ்போர்ஸ்ஸ் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டு இது மேலும் அதிகரிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan