Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஏழைகளுக்கு ‘இலவச ஷாப்பிங்’ - ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு உடையளிக்கும் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’

யாராவது தானமாக கொடுக்கும் பொருளை வாங்கும் நபர்களின் மனதிற்குள் எக்காரணம் கொண்டும் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கம் மற்றும் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு...

ஏழைகளுக்கு ‘இலவச ஷாப்பிங்’ - ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு உடையளிக்கும் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’

Thursday July 20, 2023 , 4 min Read

யாராவது தானமாக கொடுக்கும் பொருளை வாங்கும் நபர்களின் மனதிற்குள் எக்காரணம் கொண்டும் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கம் மற்றும் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு...

உணவுக்கு அடுத்தபடியாக மக்கள் அனைவருக்கும் உடை மிகவும் முக்கியமானதாக உள்ளது. கோவையில் அப்படி உடை தேவைப்படும் மக்களுக்காக இருப்பவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ஆடைகளை சேகரித்து, தேவை உள்ளவர்களுக்கு Helping Hearts அமைப்பு விநியோகித்து வருகிறது.

Heart

ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பின் சேவைகள்:

கோவையில் கடந்த 15 ஆண்டுகளாக முதியவர்கள், ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கான காப்பகங்களை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து சாலைகளில் ஆதரவன்றி விடப்படும் முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கேன்சர் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களை தங்களது காப்பகத்திற்கு அழைத்து வந்து பாதுகாத்து வருகின்றனர்.

இதற்காக கோவையில் பூசாரிபாளையம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் 3 காப்பகங்களும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகிலும், வீரர்பட்டி பகுதியில் 2 காப்பகங்களும், மேட்டுப்பாளையத்தில் ஒரு மனநல காப்பகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்திற்கு நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவோரால் தான், பயன்படுத்தப்பட்ட ஆடைகளை, தேவை இருப்போருக்கு விநியோகிக்கும் யோசனையே முதலில் வந்தது. இது இப்போது இவர்கள் பயன்படுத்தப்பட்ட உடைகளை இலவச ஷாப்பிங்காக விநியோகிக்கக் காரணமாக அமைந்துள்ளது.

ஏழைகளுக்கு இலவச ஷாப்பிங்:

காப்பக சேவையைத் தொடர்ந்து கோவையில் ஆடைகள் தேவைப்படும் ஏழை மக்களுக்கு ’இலவச ஷாப்பிங்’ அனுபவத்தை, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் அளித்து வருகின்றனர்.

இதற்கான யோசனை எப்படி வந்தது என ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் கணேஷ் கூறுகையில்,

“யாராவது தானமாக கொடுத்தால் உணவோ, உடையோ கிடைக்கும் என்ற எண்ணம் யாருக்குமே வரக்கூடாது. அதனால் தான் நன்கொடையாளர்கள் நேரடியாக உடைகளை தானமாக கொடுப்பதை தடுக்க நினைத்தோம். அதேசமயம், தேவை இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள உடைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், அதனை தானம் கொடுப்பது போல் அல்லாமல், அவர்களே கடைகளில் எடுத்துக் கொள்வது போல் முடிவெடுத்தோம்,” என்கிறார்.
Dress

இந்த எண்ணத்துடன் 2019ம் ஆண்டு முழுவதும் 53 இடங்களில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளுக்கான இலவச ஷாப்பிங்கை நடத்தியுள்ளனர். இதன் மூலம் 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு ஆடைகளை விநியோகித்துள்ளனர். ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 முதல் 2022 வரை இலவச ஷாப்பிங் முகாமை நடத்த முடியாமல் போனது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 35 கிராமங்களில் இலவச ஷாப்பிங் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிட்டதட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

மேலும், பயன்படுத்தப்பட்ட உடைகள் என்றாலே சரியான அளவில் இருக்காது, பிடித்த நிறத்தில் கிடைக்காது, கிழிந்தோ, கலர் போனதாகவோ இருக்கக்கூடும். இந்த நிலையையும் தன்னார்வ அமைப்பு மாற்றியுள்ளது.

புத்துயிர் பெரும் பழைய உடைகள்:

நல்ல நிலையில் உள்ள வேட்டி, சட்டைகள், டி-சர்டுகள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகளை தன்னார்வலர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்று வருகின்றனர்.

தன்னார்வலர்கள் மூலமாக சேகரிக்கப்படும் ஆடைகள் தரச்சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதற்காக ஒசூரில் உள்ள AUMM என்ற தன்னார்வ அமைப்பு மூலமாக உடைகள் தரம் பிரிக்க அனுப்பிவைக்கப்படுகிறது. அங்கு பயன்படுத்தக்கூடிய உடைகளை அடையாளம் காண்பது, பட்டன், ஜிப், எம்ராய்டரி போன்றவற்றை சரி செய்வது, சலவை மற்றும் அயர்னிங் செய்வது, ஆடைகளை சைஸ் வாரியாக பேக் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

Dress

அங்கிருந்து மீண்டும் பேக் செய்யப்பட்ட ஆடைகள் கோவை சுங்கத்தில் உள்ள ’ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ அமைப்பின் கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து நிறுவனர் கணேஷ் கூறுகையில்,

“பயன்படுத்தப்பட்ட ஆடைகளாகவே இருந்தாலும், ஜவுளிக்கடைகள் அல்லது ஷோரூமில் எப்படி ஆடைகளை வைத்திருப்பார்களோ அப்படியே நாங்களும் தயார் செய்கிறோம். அதனை காட்சிப்படுத்தும் போது கடைகளில் வைப்பதை போலவே அளவு மற்றும் பிரிவு வாரியாக அடுக்கி வைக்கிறோம். இது பயன்படுத்தப்பட்ட ஆடைகளை பெற வரும் மக்களுக்கு மகிழ்ச்சியையும், முழு திருப்தியையும் கொடுக்கிறது,” என்கிறார்.

சுங்கத்தில் உள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் கிடங்கில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தேவையான 5,000 செட் உடைகள் இருப்பில் வைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீது அக்கறை:

தேவைப்படுவோருக்கு பயன்படுத்தக்கூடிய உடைகள் சென்றடைய வேண்டும் என்பதில் உள்ள கவனம், பயன்படுத்தத் தகுதியில்லாத உடைகளை மறுசுழற்சி செய்வதிலும் காண்பிக்கப்படுகிறது.

ஏனெனில், சில வகை ஆடைகள் எளிதில் மக்காது, இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளையக்கூடும். எனவே, இந்த அமைப்பு AUMM உடன் இணைந்து பயன்படுத்த முடியாத ஆடைகளில் இருந்து நூலை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்கிறது.

இந்த தன்னார்வ அமைப்பு பெண் பணியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஆடைகளை சேகரிக்கும் பணியை சத்யா என்பவரும், சேகரிக்கப்பட்ட உடைகளை கிராமந்தோறும் விநியோகிக்கும் பணியை அபிஷோ, புவனேஸ்வரி ஆகியோரும் மேற்கொள்கின்றனர். இத்துடன் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லூரியும் தங்களது மாணவர்களை தன்னார்வலர்களாக அனுப்பி வருகின்றனர்.

எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது?

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட கிராமத்தை தேர்வு செய்து 2 நாட்களுக்கு அங்கு முகாம் நடத்தப்படுகிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பு நாடுகிறது. அவர்கள் திருமண மண்டபம் அல்லது சமூக நலக்கூடங்களில் இலவச ஷாப்பிங்கை அமைக்க ஏற்பாடு செய்து கொண்டுக்கின்றனர்.

helping hearts
தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் 500 செட் ஆடைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 700 முதல் 1000க்கும் மேற்பட்ட ஆடைகள் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மக்கள், தங்களுக்குத் தேவையான அளவுள்ள தலா 2 உடைகளை இலவசமாக எடுத்துச்செல்லலாம். துணிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பிறகு, அளவு போதவில்லை என்றாலோ, பிடிக்கவில்லை என்றாலோ மீண்டும் அதே இடத்தில் அளித்து மாற்றிக்கொள்ளலாம்.

மழலைகளை மகிழ்விக்க புது திட்டம்: 

அடுத்து, ஹெல்பிங் ஹார்ட்ஸ் புதிதாக மழலையர்களை மகிழ்விக்க உள்ளது. கோவையில் உள்ள அரசு மழலையர் பள்ளிகளைத் தேர்வு செய்து, வர்ணம் பூசுவது, விளையாட்டு சாமான்கள், கதை புத்தகங்களை வழங்குவது மற்றும் குழந்தைகளுக்கு சத்துணவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணேஷ் கூறுகையில்,

“இதன் முக்கிய நோக்கமே பொம்மைகளுடன் விளையாடுவதோடு, 2.5 வயது முதல் 5 வயதுள்ள மழலைகள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்,” என்கிறார்.

பயன்படுத்த உடைகளைப் போலவே விரும்பமுள்ள நன்கொடையாளர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகள் அல்லது புதிய பொம்மைகளை சேகரிக்க உள்ளனர். அப்படி சேகரிக்கப்படும் பொம்மைகளில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு மழலையர் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

ஹெல்பிங் ஹார்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சத்யா - 6374713775, 9944277721