ரூ.5000 முதலீடு; 15 கோடி ரூபாய் டர்ன்ஓவர்: ஐஏஎஸ் கனவை விட்டு ஜவுளி வணிகத்தில் வெற்றி கண்ட பூஜா சௌத்ரி!
ராஜஸ்தானின் பில்வாரா பகுதியைச் சேர்ந்த பூஜா சௌத்ரி ஐஏஎஸ் ஆகவேண்டும் என்று அவரது அப்பாவின் கனவு. ஆனால் ஜவுளித் துறையில் ஆர்வம் ஏற்பட்டு வலைதளம் தொடங்கி இவர் இன்று லாபகரமாக வணிகத்தை நடத்தி வருகிறார்.
பூஜா சௌத்ரி ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில் பிறந்தவர். இவருக்கு படைப்பாற்றல்மிக்க வேலைகளில் ஈடுபாடு அதிகம். தனக்கு ஆர்வமுள்ள பகுதியில் செயல்பட விரும்பி ஜவுளித் துறையில் தொழில் தொடங்கினார். இவரது நிறுவனத்தின் பெயர் ’லாவண்யா தி லேபிள்’. இன்று இந்நிறுவனம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறது.
“சிறுவயதிலிருந்தே நான் கிரியேட்டிவான வேலைகளை ஆர்வமாக செய்வேன். வழக்கமான 9-5 வேலை எனக்கு திருப்தியளிக்கவில்லை. எனக்கு ஆர்வமுள்ள பகுதியிலேயே செயல்பட விரும்பினேன். ஆனால், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருந்தது. பல இடங்களுக்கு பயணம் சென்று என் தேடலை விரிவுபடுத்தினேன்,” என்கிறார் பூஜா.
விரிவான ஆய்விற்குப் பின்னர் பூஜா ஜவுளித் துறையைத் தேர்வு செய்தார். இன்று இவரது நிறுவனம்
, Pinterest போன்ற பிரபல பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.படிப்பு மற்றும் ஐஏஎஸ் கனவு
பூஜா சௌத்ரி பில்வாரா பகுதியிலேயே ஆரம்பப் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். ஆனால், இரண்டாம் வகுப்பு முடித்த பிறகு பிலானியில் உள்ள போர்டிங் பள்ளியில் சேர்ந்தார். அங்கேயே தங்கிப் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு லக்ஷ்மன்கர் பகுதியில் பிபிஏ முடித்தார். அதைத் தொடர்ந்து எம்பிஏ படிக்க ஜப்பான் சென்றார்.
பூஜா தாய்நாடு திரும்பியதும் மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தார். ஆனால், அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. அப்பா செய்துகொண்டிருந்த தொழிலில் சில நாட்கள் உதவியாக இருந்தார்.
யூபிஎஸ்சி தேர்வு எழுதி பூஜா ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பதே அவரது அப்பாவின் கனவு. சிவில் சர்வீஸ் தேர்விற்கு ஆயத்தமாவதற்காக அவரை ஜெய்ப்பூர் அனுப்பி வைத்தார் அவரது அப்பா.
“இந்த நகரில் நான் கற்றுக்கொண்டது என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. யூபிஎஸ்சி தேர்விற்கு தயாராக ஜெய்ப்பூர் சென்ற நான் ஜவுளித் துறையில் ஆர்வம் அதிகரித்ததால் துணிகள் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்,” என்கிறார்.
சிறு வயதில் பிறந்த ஆர்வம்
சிறு வயது முதலே பூஜாவிற்கு அழகான ஆடைகள் அணிந்துகொள்வது பிடிக்கும். அவர் ஜெய்ப்பூர் சென்ற பிறகு இந்த ஆர்வம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இல்லத்தரசியாக நேரத்தைக் கடத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஜெய்ப்பூரிலேயே வேலையைத் தொடங்கிவிட்டார்.
“நன்கு படித்துவிட்டு வீட்டில் முடங்கியிருக்க எனக்குப் பிடிக்கவில்லை. எனவே ஜெய்ப்பூர் மார்க்கெட் சென்று துணிகளை வாங்கினேன். தையல் வேலைகளின் டிசைன்களை கற்றுக்கொண்டு பில்வாரா திரும்பினேன்,” என்கிறார்.
பிராண்ட் அறிமுகம்
2018-ம் ஆண்டு Lavanya The Label என்கிற பெயரில் வலைதளம் ஒன்றை உருவாக்கினார் பூஜா. ஒரே ஒரு இயந்திரத்துடனும் ஒரே ஒரு கைவினைஞரின் உதவியுடனும் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
சில மாதங்கள் கடந்த நிலையில் அவரது அப்பா பில்வாரா திரும்பி வருமாறு அழைத்தார். அப்பாவின் விருப்பப்படி பில்வாரா திரும்பிய பூஜா பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.
பில்வாராவில் பெண்கள் தலைமையில் அதிக வணிகங்கள் இயங்கவில்லை. இங்கு ஒட்டுமொத்தமாக வணிகத்தை நிறுவுவது சவாலாக இருந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்த கைவினைஞர்கள் பில்வாரா வர விரும்பவில்லை. எனவே வங்காளத்தில் இருந்து கைவினைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் சம்பள அடிப்படையில் வேலையில் சேர்க்கப்பட்டனர். அதன் பிறகு பணி தொடங்கபட்டது.
வளர்ச்சி
சிறியளவில் 5 ஆயிரம் ரூபாயுடன் பூஜா தொடங்கிய முயற்சி இன்று 15 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
”என்னுடைய சேமிப்புத் தொகையான 5 ஆயிரம் ரூபாய் கொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். சிறியளவில் தொடங்கியிருந்தாலும் இத்தனை ஆண்டுகளில் இன்று 15 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ள நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
எந்த ஒரு வேலையும் வெற்றியடைய கடின உழைப்பு அவசியம். மனம் தளர்ந்து முயற்சியைக் கைவிடக்கூடாது. இதை இன்றைய இளம் தலைமுறையினரிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் பூஜா சௌத்ரி.
தமிழில்: சைபர் சிம்மன்