Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘சுற்றுலாத் துறைக்கு பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றது’ - நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிறுவனங்கள்!

கொரோனா இரண்டாம் அலை முடிந்து ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள இச்சூழலில், கடந்த லாக்டவுன் முதல் சுற்றுலாத் துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள துறை நிறுவனங்கள் பகிரும் விஷயங்கள்.

‘சுற்றுலாத் துறைக்கு பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றது’ - நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிறுவனங்கள்!

Wednesday June 23, 2021 , 6 min Read

கோவிட்-19 தாக்கம் அனைத்துத் துறைகளுக்கும் வெவ்வேறு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதில் குறிப்பாக சுற்றுலாத் துறையை எடுத்துக்கொண்டால் ஊரடங்கால் முதலில் தடை செய்யப்படும் துறையாகவும், கடைசியாக அனுமதிக்கப்படும் துறையாகவே இருந்து வருகிறது. அதாவது வழங்கப்படும் தளர்வுகளில் கடைசி இடம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத்தான்.


பயணம் என்பதே கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு அத்தியாவசியத்துக்கு மட்டுமே என்ற நிலையில், விடுமுறைக்காக, பொழுதுபோக்கிற்காக செய்யப்படும் பயணங்கள் மீதான கட்டுப்பாடு உலகமெங்கும் நிலவிவருகிறது. உள்ளூர் பயணங்களே சிரமமாகவும், ரிஸ்காகவும் இருக்கும்போது, மக்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். இதன் மத்தியில் தான் சுற்றுலாத்துறை கடந்த ஓர் ஆண்டாக இயங்கிவருகிறது.


கொரோனா இரண்டாம் அலை முடிந்து ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள இச்சூழலில், கடந்த லாக்டவுன் முதல் சுற்றுலாத் துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள இத்துறையைச் சேர்ந்த சிலரிடம் உரையாடினோம். பயணம் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் சந்தித்த சவால்கள் என்ன? இந்த துறை மீளப்போவது எப்படி என்பதை விரிவாக பகிர்ந்தனர்.

Tourism dept

Pick Your Trail என்ற பயணம் சார்ந்த நிறுவனத்தின் நிறுவனர் ஹரி கணபதியுடன் பேசினோம். இந்த நிறுவனம் சுற்றுலாத் துறையில் இருந்தாலும் வெளிநாட்டு சுற்றுலாவில் மட்டுமே கவனம் செலுத்தும் நிறுவனமாகும். ஓரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல முடியாத சூழல்லில், வெளிநாட்டுச் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருந்த நிறுவனம் என்னவானது என அவர் பகிர்ந்தார்.


சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்லாமல் போக்குவரத்தை நம்பி இருந்த அனைத்து துறைகளுக்குமே பாதிப்புதான். ஓட்டல், ஷூ, காலணி, பேக் என அனைத்து பிரிவுகளில் வருமான இழப்பை சந்தித்தன. ஆனால் பல வெளிநாட்டு அரசுகளில் மானியம் கொடுத்தன அல்லது பணியாளர்களின் சம்பளத்தின் சில சதவீதமாவது வழங்கப்பட்டது. அதனால் வெளிநாடுகளில் கோவிட் காரணமாக இத்துறைகளில் பெரிய அளவுக்கு வேலை இழப்புகள் இல்லை.

”ஆனால் எங்களுக்கு வருமானமே இல்லை என்பதால் ஊழியர்களைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். நிறுவனத்தை மாற்றி அமைத்தோம். வேறு வழி இல்லாமல் இந்த முடிவினை எடுக்க வேண்டி இருந்தது,” என்றார் ஹரி.

உதாரணத்துக்கு ஜெர்மனியில் நண்பர் ஒருவர் ஓட்டல் நடத்திவருகிறார். அவருடைய கடந்த மூன்று ஆண்டு கால வருமானத்தை அடிப்படையாக வைத்து அவரது நிறுவனத்துக்கு ஊரடங்கு சமயத்தில் நிதி வழங்கப்பட்டது. இதுபோல ஒவ்வொரு நாடும் தொழில்களுக்கு எதாவது ஒருவகையில் நிதி உதவி செய்ததால் அந்த நிறுவனங்கள் பெரும் சிக்கலில் மாட்டவில்லை.

Pickyourtrail founders

Pickyourtrail நிறுவனர்கள் ஸ்ரீநாத் சங்கர் மற்றும் ஹரி கணபதி

கடந்த லாக்டவுனில் முதல் சில மாதங்கள் எந்த விற்பனையும் இல்லை. வெளிநாட்டுக்கான வாய்ப்பு உடனடியாக இல்லை என்பது தெரிந்ததால் பிஸினஸ் மாடலை மாற்றி அமைத்தோம். Staycation (Stay + vacation) என்னும் புதிய மாடலை அறிமுகம் செய்தோம். அதாவது சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இருந்து 8 அல்லது 10 மணி நேர கார் பயணத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களை இலக்காக வைத்து புதிய திட்டங்களை உருவாக்கினோம். இதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது.

இரண்டாவதாக இந்தியாவில் இருந்துதான் வெளிநாடு செல்ல முடியாதே தவிர சர்வதேச அளவிலான பயணங்கள் இருந்துகொண்டுதான் இருந்தன.


உதாரணத்துக்கு துபையில் இருந்து மொரிஷியஸ் செல்ல முடியும். அதேபோல அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா செல்ல முடியும். அதனால் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பிரிவை கவனிப்பதை விட இதர நாடுகளில் இருந்து செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாவை கவனிக்கலாம் எனத் திட்டமிட்டோம். அதன் தொடர்ச்சியாகதான் மாலத்தீவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தினோம். இதன் மூலம் கோவிட்டுக்கு முன்பு கிடைத்த வருமானத்தில் 75 சதவீதம் வரை ஈட்ட முடிந்தது.


இந்த நிலையில்தான் தற்போது இரண்டாம் அலை உருவானது. அதனால் மீண்டும் வருமானம் குறைந்தது என ஹரி கூறினார்.


எதிர்காலத்தில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என்னும் கேள்விக்கு,

“இந்தியாவில் 130 கோடி மக்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சுற்றுலாவுக்குச் செலவதில்லை. 70 சதவீத இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது. தவிர கடந்த லாக்டவுனில் தெளிவு இல்லை, தற்போது தடுப்பூசி வந்திருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தடுப்பூசி நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதனால் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வெளியே செல்ல வேண்டும் என்னும் எண்ணம் நகர்ப்புர இந்தியர்களிடம் இருக்கிறது. அதனால் உள்நாட்டு சுற்றுலாவுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.”

குறிப்பாக எங்களுக்கு பெரிய வாய்ப்பு இருக்கும் என்றே கருதுகிறோம். ஆண்டுக்கு ரூ.15 லட்சம் குடும்ப வருமானம் இருப்பவர்கள்தான் எங்களுடைய வாடிக்கையாளர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் குறையவில்லை. செலவுகள் குறைந்திருப்பதால் சேமிப்பு உயர்ந்திருக்கிறது. அதனால் இந்தியர்களின் நுகர்வுத் திறன் குறைந்திருப்பதாக தெரியவில்லை என நம்பிக்கையுடன் பேசினார் ஹரி.


தமிழ்நாட்டு நிலவரம் தெரிந்துகொள்ள ஜிடி ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் மணிகண்டனுடன் உரையாடினேன். அவர் இத்துறை பற்றி பகிரும்போது, இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டாலுமே சர்வதேச அளவில் 2020 ஜனவரியில் இருந்தே மந்த நிலை தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் சிறியதும் பெரியதுமாக சுமார் 15,000 சுற்றுலா நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால் 50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் சுமார் 20 என்னும் அளவில் இருக்கும். அதேபோல சில கோடிகளில் வருமானம் ஈட்டுக்கும் நிறுவனங்கள் சுமார் 100க்கு மேல் இருக்கும்.

ஜிடி

ஜிடி ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் மணிகண்டன்

இதனைத் தாண்டி இருக்கும் நிறுவனங்களுக்கு சீரான பிஸினஸ் மாடல் இருக்கும். குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இருப்பார்கள். இந்த வாடிக்கையாளர்கள் இவர்களை தாண்டி செல்லமாட்டார்கள், இவர்களைத் தாண்டிய புதிய வாடிக்கையாளர்களைத் தேடி இந்த நிறுவனங்களும் செல்லவில்லை. இவர்களுக்கு சுற்றுலா என்பது அவர்களுக்கு இருக்கும் சில பிஸினஸ்களில் ஒன்றாக இருந்தது.

வருமானம் இல்லை என்பதால் புதிய விஷயங்களுக்கோ அல்லது பணியாளர்கள் நலனிலோ சில நிறுவனங்கள் கவனம் செலுத்தவில்லை. அதனால் கடந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகு சந்தையில் தேவை இருந்தாலும் சிலரால் அந்தத் தேவையை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால் நாங்கள் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து எங்களுடைய இருப்பை சமூகவலைதளங்கள் மூலம் தொடரந்து பதிவு செய்துகொண்டே இருந்தோம். இப்போதைக்கு வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் எனத் தெரியும். ஆனால் நிலைமை மேம்படும்போது வாடிக்கையாளர்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தோம்.

இதற்கான பலன் தற்போது கிடைத்திருக்கிறது. லாக்டவுன் முடியும் போது எங்கள் குடும்பத்துக்கு 5 டிக்கெட் போட்டுவிட்டு அழைக்கவும் என பலர் எங்களிடம் முன்பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது தடுப்பூசி வந்திருப்பதால் பயம் குறைந்திருப்பதாகவே நினைக்கிறேன்.

சுனாமி வந்தபோது கடல் என்பது அச்சமூட்டும் இடமாக இருந்தது. இன்னமும் அந்த காட்சிகள் நம்மிடம் உள்ளன. ஆனால் அதற்காக நாம் கடலுக்கு செல்லாமலா இருக்கிறோம். அதுபோல இந்த சூழல் விரைவில் மாறும் என நம்புகிறோம் என கார்த்தி கூறினார்.


சூழல் நன்றாக அமையும்போது அனைவரும் தொழிலுக்கான வாய்ப்பு கிடைக்குமா அவர்களின் கடந்த கால நஷ்டத்தை ஈடுகட்ட முடியுமா என்றதற்கு,

ஒவ்வொரு துறையிலும் நடப்பதுபோல unorganized-ல் இருந்து organize துறையாக சுற்றுலாத் துறையும் மாறும். பணியாளர்களை தக்க வைக்காத, வாடிக்கையாளர்கள் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தாத சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம்.

ஆனால் எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு வருமான இழப்புதான் அதிகமாக இருந்ததே தவிர நஷ்டம் என பெரிதாக இருக்காது. அலுவலக வாடகை மற்றும் பணியாளர்கள் சம்பளம்தான் முக்கியச் செலவுகள். கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஓட்டல் நடத்துபவர்களுடன் ஒப்பிடும்போது சுற்றுலா ஆப்பரேட்டர்களின் இழப்பு பெரிது கிடையாது என கார்த்தி கூறினார்.

சுற்றுலா துறையையும் ஓட்டல் துறையையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. ஓட்டல்கள் இருந்தால்தான் சுற்றுலா வெற்றியடையும். இந்த நிலையில் தென் இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் இயக்குநர் (செயல்பாடுகள்) சுந்தர் சிங்காரத்திடன் இது குறித்து உரையாடினோம்.

Sundar

தென் இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் இயக்குநர் (செயல்பாடுகள்) சுந்தர் சிங்காரம்

இந்தியாவில் சுற்றுலா என்பது பல துறைகளில் ஒன்று. ஆனால் சுற்றுலாவை நம்பி மட்டுமே பல நாடுகள் உள்ளன. இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாதான் முக்கியமான வருமானம். இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பல சாதகமான மாற்றங்கள் நடக்கும். இதையெல்லாம் உணர்ந்த சில நாடுகள், சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.


சிங்கப்பூர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அதனால் அங்கு ஓட்டல் அறைகள் எப்போது 90 சதவீதத்துக்கு மேலான ஆக்குபன்ஸியில் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவில் 50 சதவீதம் என்பதே பெரிய விஷயம். சில குறிப்பிட்ட இடங்களில் 70 சதவீத அறைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.


அதாவது கோவிட்டுக்கு முன்பும் கூட ஓட்டல்  துறையினர் பெரும் லாபத்தில் இல்லை என்பதுதான் நிஜம். கோவிட் வந்தபிறகு நிலைமை இன்னும் மோசம், பல நாடுகளில் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இருந்து இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அரசு பல நடவடிக்கைகள் எடுக்கின்றன.

ஆனால் இங்கு அரசு உதவவில்லை என்றாலும் கூட சொத்துவரி, பார் வரி உள்ளிட்ட 23 உரிமங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. ஏற்கெனவே பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறோம் இந்த நிலையில் வருமானமே இல்லாமல் அதிக செலவு உருவாகிறது.

வருமானமே இல்லாத சொத்துக்கு வரி செலுத்துகிறோம். மூடப்பட்ட பாருக்கு அனுமதி கட்டணம் செலுத்திவருகிறோம் என்பதுதான் நிஜம். பயன்படுத்தாமல் இருக்கும் காலத்துக்காவது விலக்கு அளித்தால் நன்றாக இருக்கும், என்றார்.


ஆனால் ஓட்டல் துறையினர் கோவிட் காலத்தில் அரசுக்கு உதவி செய்திருக்கிறோம். டாக்டர், நர்ஸ், நோயாளிகள் என பலருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் அறைகளை வழங்கினோம்.

ஆனால் அரசு எங்களுக்கு நிதி வழங்காமல் கடன் கொடுக்கிறோம் வாங்கிக்கொள்ளுங்கள் என எங்களை மேலும் கடன்காரர்களாக ஆக்குகிறது. பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் ஓட்டல் தொழிலே வேண்டாம் என விற்பனை செய்யவும் முடிவெடுத்துவிட்டார்கள்.


இந்தியாவில் கேரள அரசு சுற்றுலாவை ஊக்குவிக்கிறது. ஆனால் அதுவும் மிகவும் அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்றது. இந்தியாவில் தமிழ்நாட்டில் சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலமே பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்போதுதான் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். இதுவரை மற்றவர்களுடன் ஒப்பிட்டு விலையை குறைப்பதனால் மட்டுமே நாங்கள் வியாபாரம் செய்துவருகிறோம். அதிக மக்கள் வரும் போது நாங்கள் எங்களுடைய வளர்ச்சியை மட்டுமே பார்ப்போம்.


உதாரணத்துக்கு அத்திவரதர் காட்சிதந்த அத்தனை நாட்களிலுமே காஞ்சிபுரத்தில் அனைத்து ஓட்டலும் முழுமையாக நிரம்பின. ஓட்டல் நிறுவனங்கள், தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அதுபோன்ற சூழல் வரவேண்டும் என்றால் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டல் நிறுவனங்களை பொறுத்தவரை 2022-ம் ஆண்டு கூட ஏற்றம் இருக்காது. 2023-ம் ஆண்டில்தான் பழைய நிலைமைக்கு திரும்புவோம் என நம்புகிறோம் என சுந்தர் தெரிவித்தார்.

வீட்டிலேயே முடங்கிக் கடந்த மக்கள் பலரும் சுற்றுலாவிற்கு வெளியூர்கள் செல்ல ஆர்வமாக இருக்கின்றனர். எனவே சுற்றுலாத் துறைக்கு பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அரசும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் மேலும் வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம்.