ஸ்பேம் கால் பட்டியலில் இந்தியா 9வது இடம்: ட்ருகாலர் அறிக்கை!
ஸ்பேம் அழைப்புகள் பட்டியலில் 2019ம் ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 9 வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்தியா மொபைல் பயனாளிகளுக்கான ஸ்பேம் அழைப்புகள் 2020ம் ஆண்டு 34 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இதன் காரணமாக ஸ்பேம் அழைப்புகள் பட்டியலில் இந்தியா 9 வது இடத்திற்கு சரிந்துள்ளதாக ட்ருகாலர் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்குள் குஜராத் மாநிலம் அதிக ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றுள்ளது. பயனாளிகள் பெற்ற ஸ்பேம் அழைப்புகள் எண்ணிக்கையில் 2019ம் ஆண்டில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 9வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது என்றும் பிரேசில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது என்றும் ட்ருகாலர் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் 34 சதவீதம் குறைந்திருந்தாலும், அதிக ஸ்பேம் அழைப்புகள் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா பத்து இடத்திற்குள் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பத்து இடங்களில் உள்ள பிற நாடுகளாக; அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து, ஸ்பெயின், இந்தோனேசியா, யு.கே. உக்ரைன், சிலி ஆகிய நாடுகள் அமைகின்றன.
"98.5 சதவீத ஸ்பேம் அழைப்புகள் இந்தியாவில் உள்ளூர் எண்களில் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் குறைந்திருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது. ஏனெனில், ஆண்டு துவக்கத்தில் நாட்டில் அமல் செய்யப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, டெலிமார்க்கெட்டர்களால் பணி செய்யமுடியவில்லை அல்லது ஸ்பேம்களை பெரிய அளவில் அனுப்பி வைக்க இயந்திரங்களைப் பயன்படுத்த முடியவில்லை என,” அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
அதே நேரத்தில், பொதுமுடக்கக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் அவசரகால அழைப்புகள் 148 சதவீதம் அதிகரித்ததுள்ளது.
ஸ்வீடன் நிறுவனமான ‘Truecaller' இந்தியாவில் 180 மில்லியன் பயனாளிகளைக் கொண்டுள்ளது. ஆப்பரேட்டர் நிறுவனங்கள் ஸ்பேம் அழைப்புகளை அனுப்புவதில் இந்தியாவில் முதலிடம் வகிப்பதாகவும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அடுத்த இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக ஸ்பேம் அழைப்புகள் பெறும் மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் 10 பெண்களில் 8 பேர், மோசமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக தவறான தகவல்களுக்கு உள்ளாவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பொதுமுடக்கம் அமல் செய்யப்பட்ட ஏப்ரல் மாதத்தில் ஸ்பேம் அழைப்புகள் மிகவும் குறைந்ததாகவும் ட்ருகாலர் அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் மே மாதம் முதல் ஸ்பேம் அழைப்புகள் அதிகரிக்கத்துவங்கின.
“அக்டோபர் மாதத்தில் அதிக அளவில் ஸ்பேம் அழைப்புகள் பதிவாயின. பொதுமுடக்கத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது 22.4 சதவீதம் அழைப்புகள் அதிகரித்தன,” என்று ட்ருகாலர் தெரிவிக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்தன.
செய்தி: பிடிஐ