உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியல்; பாரத பிரதமர் மோடி முதலிடம்!
உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள உலகத் தலைவர்கள் தரவரிசை தொடர்பாக வெளியான பட்டியலில் 71 சதவீத ஆதரவு பெற்று பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் 2014ம் ஆண்டு முதல் புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வு நடத்தி வருகிறது குறிப்பாக பிராண்டுகள், பொருளாதாரம், புவிசார் அரசியல் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் 2022ம் ஆண்டுக்கான ’உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 13 நாடுகளில் நடத்தப்பட்ட புள்ளிவிவர கணக்கெடுப்பின் படி தலைசிறந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி,
“தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் 2022ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் 7 நாட்களுக்கு, அந்தந்த நாட்டில் உள்ள இளம் குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நாடு வேறுபடும்,” எனத் தெரிவித்துள்ளது.
அனைத்து நாடுகளிலும் முறையான மொழிபெயர்ப்பு நிறுவனங்களின் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை 45,000 பேரிடமும், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைப் பொறுத்தவரை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் நபர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் மோடி; 6வது இடத்தில் ஜோ பைடன்:
உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு பாரத பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள உலகத் தலைவர்கள் தரவரிசை தொடர்பான பட்டியலில் 71 சதவீத ஆதரவை பெற்று பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளது இந்திய மக்களை பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் இந்தியா சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், 30 சதவீதம் பேர் இந்தியா தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
2020ம் ஆண்டு 84 சதவீத ஆதரவை பெற்ற பிரதமர் மோடி, 2021ம் ஆண்டு மே மாதம் வெளியான மார்னிங் கன்சல்ட் கணிப்பின் போது 63 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றிருந்ததையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பட்டியலில் அடுத்தடுத்து இருப்பது யார்?
மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 66 சதவீத ஆதரவு பெற்று இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தாலி பிரதமரான மரியோ ட்ராகி 60 சதவீதத்துடன் 3வது இடத்திலும், ஜப்பான் பிரதமரான ஃபுமியோ கிஷிடோ 48 சதவீத ஆதரவுடன் 4வது இடத்திலும் உள்ளார்.
ஜெர்மன் அதிபரான ஓலாஃப் ஸ்கோல்ஸ் 44 சதவீத ஆதரவுடன் 5வது இடத்திலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43 சதவீத ஆதரவுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 43 சதவீதத்துடன் 7வது இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமரான ஸ்காட் மோரிசன் 41 சதவீதத்துடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
40 சதவீத ஆதரவை பெற்ற ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 9வது இடத்திலும், 38 சதவீத ஆதரவுடன் தென் கொரிய அதிபர் மூன் - ஜோ - இன் 10வது இடத்திலும் உள்ளனர்.
தகவல் உதவி: மார்னிங் கன்சல்ட்