2020ல் யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்ட 'தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை' தொகுப்பு!
2020ல் யுவர்ஸ்டோரி தமிழ் நமக்கு நன்கு தெரிந்த நிறுவனங்கள் பற்றித் தெரியாத மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகளை வெளியிட்டது. அவற்றை பற்றி தெரிந்தவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல்; தெரியாதோருக்கு இது ஒரு ஊக்கமிகு தொகுப்பு...
கல்யாண் ஜுவல்லர்ஸ், மலபார் கோல்ட், முத்தூட் பைனான்ஸ் என்பதெல்லாம் நமக்கு நன்கு பரீட்சயமான பெருநிறுவனங்களின் பெயர்கள். இன்று வெற்றி பெற்று மக்கள் மனதில் நிற்கும் பிராண்டாக மாறியுள்ள ஒவ்வொரு நிறுவனத்துக்கு பின்னாலும் ஒரு கதையுண்டு. முட்டிமோதி, போராடி இந்நிலையை எட்டுவதற்கு அந்நிறுவனங்கள் கடந்து பாதை அது. அத்தகு போராட்டக் கதைகளை யுவர்ஸ்டோரி தமிழ் கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. அப்படியாக,
2020ல் யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்ட 'தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை' தொடரில் இடம்பெற்ற சில பெருநிறுவனங்களின் வெற்றிக் கதைகள் அடங்கிய தொகுப்பு:
'நம்பிக்கை அதானே எல்லாம்'; 5 ஆண்டுகளில் 250 ஷோரூம்...
மின்னும் தங்க நகைகளின் மாளிகைகள் நிறைந்து காணப்பட்ட தெரு அது. பொன் மின்னும் தெருவில் தனியே தன்னந்தனியேவென இருந்தது ஒரு ஜவுளிக்கடை. ஜொலிக்கும் தங்கத்தெருவில் கடை வைத்திருந்த ஜவுளிக்கடைக்காரருக்கோ நகைக்கடை தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதையே இலக்காகவும் கொண்ட அவர், நம்பிக்கையுடன் அவரது முதல் நகைக்கடையை தொடங்கினார். அதுவும், 4,000 சதுர அடியில் கடையை பிரம்மாண்டமாய் கடல்போல காட்சியளிக்க வைத்தார்.
அனுபவமற்ற தொழில் எனினும், நம்பிக்கையுடன் கால் பதித்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. ஏனெனில், இன்று அந்த நகைக்கடை 250 கிளைகளுடன் இந்தியா முழுக்க பரவி, ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தான் என்னவோ 'நம்பிக்கை அதானே எல்லாம்' என்பதை தாராக மந்திரமாகவும், நிறுவனத்தின் டேக்லைனாகவும் கொண்டுள்ளது. ஆம், அந்த கடைத்தான். நடிகர் பிரபு விளம்பரப்படுத்தும் கல்யாண் ஜூவல்லர்ஸ்-ன் ஆரம்பகாலக் கதை.
கல்யாண் ஜூவல்லர்சின் வெற்றி பயணத்தின் மீதக்கதையையும் விரிவாக படிக்க
மிதிவண்டி விற்பனையிலிருந்து ரூ.135 கோடி வருவாய் ஈட்டும் பிராண்ட்...
ஆவணங்கள் எழுதும் பணி மேற்கொள்ளும் அப்பா, இல்லதரசி அம்மா, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் மாதவருமானம் என ஏழ்மையான குடும்பப பின்னணி கொண்டவர் ஹரீந்திரன். திருவனந்தபுரம் அரசு ஆயூர்வேத கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அவர், பூஜப்புராவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால், ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு தொழில் தொடங்கி, ஏழை குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்பதே ஹரீந்திரனின் கனவு.
கனவை நிறைவேற்ற காசு வேண்டுமே..! நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து 50,000 ரூபாய் கடன் பெற்று தொழிலை தொடங்கினார். கொள்முதல், தயாரிப்பு, விற்பனை, மார்கெட்டிங் என ஒட்டுமொத்த வேலையையும் ஒற்றை ஆளாய் நிர்வகித்தார். இருசக்கர வாகனத்தில் மருந்துகளை எடுத்துக்கொண்டு 200-300 கி.மீட்டர் சுற்றி திரிந்து மருந்துகளை விநியோகித்தார்.
இப்படித் தான் இருந்தது இன்றைய வெற்றிகர பங்கஜகஸ்தூரி-ன் ஆரம்ப நாட்கள். ஆம், மிதி வண்டியில் ரோடு ரோடாய் பயணித்து விற்கப்பட்ட பங்கஜகஸ்தூரியின் மருந்துகள், இன்று அமேசான், ஃப்ளிப்கார்ட், மெட்லைஃப், நெட்மெட்ஸ் போன்ற மின்வணிக தளங்கள் மூலம் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நாடெங்கும் 650 கிளைகள்; 2000 கோடி வணிகம்!
உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான பெரும் தொழில்முனைவர்கள் போன்றே சுபாஷூம் ஸ்கூல் டிராப் அவுட் ஸ்டூடென்ட். ஆனால் என்ன, வகுப்பில் முதல் மாணவனாக திகழும் படிப்பில் ஆர்வமிகு மாணவர். காலத்தின் கட்டாயத்தால், அப்பா நடத்தி வந்த 'சங்கீதா' எனும் வீட்டு உபயோக சாதனங்கள் விற்கும் கடையை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆனால், வணிகத்தை அதிகரிக்க அவரது தந்தை மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் தோல்வியை சந்தித்தன. கடையை இழுத்து மூடும் நிலையும் உருவானது. ஆனால், தந்தையின் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற வெறி சுபாஷிடம் இருந்தது.
பிசினஸை பிக்அப் செய்ய புதுபுது யுக்திகளை கையாண்டார் சுபாஷ். சந்தையில் போன்கள் அறிமுகமாகிய காலமது. அப்போது காஸ்ட்லி சாதனங்களுள் ஒன்றாக விளங்கிய போனை, திருட்டு பயத்தால் மக்கள் வீட்டில் வாங்கி வைக்கவே அஞ்சினர். அதற்காக, தொலைபேசிகளுக்கு காப்பீடு திட்டம், எளிதில் வாங்குவதற்கு ஏதுவாக தவணை முறை திட்டம் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தி தொலைபேசியை வீட்டு உபயோக பொருள்களுள் ஒன்றாக்கினார்.
தொடர்ந்து கைபேசி தயாரிப்பிலும் இறங்கியதுடன், பல முன்னணி தொலைபேசி நிறுவனங்களும் சங்கீதா மொபைல்சை அதன் விநியோகஸ்தராக்க விரும்பியது. இந்நிலையில் வணிகத்தின் மீண்டும் ஒரு சறுக்கல் அமேசான், பிளிப்கார்ட் எனும் பெயரில் வந்தது. இருப்பினும் தங்களின் இருப்பை நிரூபித்த ‘சங்கீதா மொபைல்ஸ்’ தற்போது ஒவ்வொரு நாளும் 7000 போன்கள் விற்பனை செய்கின்றனர். ஒரு மாதத்தில் 2 லட்சம் எண்ணிக்கை வரை செல்போன் விற்பனை ஆகின்றது.
இந்தியாவின் முதல் கார்பரேட் மருத்துவமனை...
வெளிநாட்டுலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த கருவிகள், வெளிநாட்டு டாக்டர்கள், உயர்ந்த மருத்துவ உபகரணங்கள் என ஹைடெக்காகயிருக்கும் அப்போலோ மருத்துவமனை தான் இந்தியாவின் முதல் கார்பரேட் மருத்துவமனை. உண்மையில், பிரதாப் ரெட்டி அப்போலோவை துவங்குவதற்கான நோக்கமும் இது தான்.
ஒருமுறை இளம் வயதுடைய நோயாளி ஒருவர் முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அவரைப் பெரிதும் பாதித்தது. அந்த இளைஞரால் சிகிச்சைக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இந்தியாவில் அந்த வசதியும் இல்லை. இதுவே தனியார் துறையில் இந்தியாவின் முதல் பல்நோக்கு மருத்துவமனையை உருவாக்கும் திட்டத்திற்கு உந்துதலாக இருந்தது. வெளிநாட்டுப் பயணக் கட்டணம், நேர விரயம், மொழிப் பிரச்னை என எச்சிரமும் இன்றி இந்தியாவிலேயே சகல வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை பிரதாப் ரெட்டி கட்டி முடிக்கையில் அவருடைய வயது 50.
இந்த வயதி்ல் இப்படியொரு முயற்சி எடுத்ததற்காக எல்லோரும் அவரை முட்டாள் என்று அழைத்துள்ளனர். இன்று, அரசியல், சினிமா பிரபலங்களின் மருத்துவமைனயாக பிரபலமாகி, நாடு முழுவதும் 12,000 படுக்கை வசதிகள் கொண்ட 71 மருத்துவமனைகளாக விரிவடைந்ததுள்ளது.
அவசரத்துக்கு உதவும் ஆபரணங்கள்!
ஜொலி ஜொலிக்கும் தங்கநகைகள் இந்தியர்களை பொறுத்தவரை அழகு கூட்டும் ஆபரணம் மட்டுமல்ல அவசரத்துக்கு உதவும் முதலீடு. ஆனாலும், அணியும் நகைகளை அடகு வைப்பதை மக்கள் அவமானமாக கருதுகின்றனர் எனும் முத்தூட் பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் அதை மாற்றுவதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொண்டு அதை வர்த்தகமாக மாற்றி சாதித்துள்ளா்.
1939-ம் ஆண்டு கேரளாவில் முத்தூட் பைனான்ஸ் மறைந்த எம் ஜார்ஜ் முத்தூட் அவர்களால் நிறுவப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாகவே தங்கம் அதிகம் சேமித்து வைப்பது வழக்கம். இவர்களுக்கு சிறு தங்க நகைக்கடன்களை வழங்குவதில் முன்னோடியாக இருக்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் விருப்பமாக இருந்தது. இன்று அதையே சாத்தியப்படுத்தி, இந்தியாவில் 5,330க்கும் அதிகமான கிளைகளுடன் அமெரிக்கா, யூகே, அரபுநாடுகள், மத்திய அமெரிக்கா, இலங்கை, நேபால் என உலகளவிலும் செயல்படுகிறது.
நறுமணப்பொருள் டூ நகைத்தொழில்!
வணிகர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் அஹமத். அதனாலே தொழில் முனைவு என்பது அவருக்கு புதிதானதாக அமையவில்லை. அவரது 20வது வயதிலே ஏலக்காய், மிளகு போன்ற நறுமணப் பொருள்களையும், தேங்காயையும் சிறு வணிகர்களுக்கு விற்கும் மொத்த வியாபாரத்தை தொடங்கினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போலில்லை வணிகம். தொழிலை மாற்ற தீர்மானித்தார் அஹமத். அவர் தேர்ந்தெடுத்தது நகைத்தொழில். அவரது நிறுவனத்தின் பெயர் 'மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்'.
தொடக்கத்தில் அவருடைய தொழில் யோசனையை அவரது உறவினர்களுடன் பகிர, பலரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. 7 முதலீட்டாளர்களுடன், குடும்ப சொத்தை விற்று ரூ.50 லட்சம் முதலீட்டில் தொழிலை தொடங்கினார். 1993ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மலபாரின் முதல் கடை. சரியாக 18 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள நகைகளை விற்றிருந்தது.
அப்போது தான் அவர்களது 50வது கிளையும் திறக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு 7 முதலீட்டாளர்களோடு துவங்கிய நிறுவனம் இன்று 4600 முதலீட்டாளர்கள் உள்ளனர். சென்ற நிதியாண்டில் மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸின் விற்பனை ரூ.27000 கோடிகள் ஆகும்.
மலபார் கோல்டின் பிரம்மாண்ட வளர்ச்சி கதையை அறிய.
மல்லையாவை கடனளிக்க மறுத்த ஹெச்டிஎஃப்சி...
இன்று, ஹெச்டிஎஃப்சி என்பது பெரிய பெயராக இருக்கலாம். ஆனால், தொடங்கிய சமயத்தில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே பெரும் விவாதமாக தான் இருந்துள்ளது. 1991ம் ஆண்டில் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Housing Development Finance Corporation (HDFC) வங்கி தொடங்க முடிவெடுத்தது. அப்போது, ஹெச்டிஎஃப்சி- யின் தலைவராகயிருந்த தீபக் பரேக், புதிதாக தொடங்கவிருக்கும் வங்கியின் தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் ஈடுபட்டார்.
தீபக் பரேக் அழைத்ததன் பேரில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த சிட்டி வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு, புதிதாக தொடங்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி வங்கியில் இணைந்தார். இன்று, சர்வதேச அளவில் ஹெச்டிஎஃப்சி முக்கியமான பிராண்டாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு ஆதித்யா பூரி காரணம் என்று சொன்னால் மிகையாகாது.
வாராக்கடன் தொல்லை தான் வங்கிகளுக்கு பெரிய தலைவலி. ஆனால், வாராக்கடன் அதிகமில்லாத வங்கியாக ஹெச்டிஎஃப் இருப்பதற்கு ஆதித்யா பூரியின் சமயோஜித புத்தியே காரணம். கிங்பிஷருக்கு பல வங்கிகள் கடன் கொடுத்தன, ஹெச்டிஎஃப்சி வங்கியை தவிர. அதேபோல நீரவ் மோடியின் மோசடியும் இங்கு எடுபடவில்லை.
ரூ.5000 முதலீடு டூ ரூ.8,700 கோடி மதிப்புள்ள நிறுவனம்!
பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தவர் செளந்திரராஜன். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவருடைய தந்தை சொந்தமாக ஏதாவது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆர்வத்துடனிருந்த செளந்திரராஜன், 20 ஏக்கர் பரம்பரை நிலத்தில் காய்கறி விவசாயம் செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக கடன் பெருகியது.
ஐதராபாத்தில் சகோதரர் நடத்தி வந்த விவசாய மோட்டார் உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவரை விடவில்லை. 1986ம் ஆண்டில் ஜி.பி.சுந்திரராஜன் மற்றும் செளந்திரராஜன் ஆகிய இரு சகோதரர்களும் இணைந்து சுகுணா ஃபுட்ஸ் பிரைவெட் லிட் எனும் கோழி பண்ணை நிறுவனத்தை கோவையில் துவக்கினர். கடன் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல், நிலையில்லா வருமானத்தால் பல விவசாயிகளும் தொழிலை கைவிட்டனர். அப்போது யோசித்தது தான் ஒப்பந்த முறையிலான கோழி வளர்ப்பு.
கோழித்தீவனம் முதல் மருந்துகள் வரை எல்லாவற்றையும் நிறுவனமே விவசாயிகளுக்கு வழங்கும். உற்பத்தியாகும் கோழிகளை விவசாயிகள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இதுவே ஒப்பந்த முறையன கோழி வளர்ப்பு. இம்முறை வெற்றி அடையாது என்று எள்ளி நகையாடியவர்கள் முன், இந்தியாவின் 20 மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் விரிந்த நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
பீனிக்ஸ் பறவையாக எழுந்த ஸ்பைஸ் ஜெட்!
'உயிருக்குப் போராடும் போது ஆக்ஸிசன் கொடுத்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், இறந்தபிறகு ஆக்ஸிசன் கொடுப்பதால் எந்த பயனும் இல்லை'- நஷ்டத்துக்கு மேல் நட்டத்தை சந்தித்த ஸ்பைஸ்ஜெட் குறித்து விமானப் போக்குவரத்து துறை இணைசெயலாளர் இவ்வாறாக தான் குறிப்பிட்டார்.
ஆம், 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.687 கோடி அளவுக்கு நஷ்டம். கிட்டத்தட்ட மீண்டும் ஒரு கிங்பிஷர் என்னும் சூழலில்தான் அப்போது ஸ்பைஸ்ஜெட் இருந்தது. அச்சமயத்தில் தான் அஜய் சிங் ரூ.500 கோடி முதலீடு செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.
அதிகசம்பளத்தார்கள் நீக்கப்பட்டார்கள். எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து தொகையை செலுத்த கால அவகாசம் கேட்டார். அஜய் சிங்கின் நடவடிக்கைகளால் ஸ்பைஸ்ஜெட் மேல் சுவாசிக்கத் தொடங்கியது. காலமும் அஜய்சிங்கிற்கு சாதமாகின. லாபம் பார்க்கத் துவங்கயது ஸ்பைஸ்ஜெட். ஒரு விமானநிறுவனத்தை துவங்குவதற்கு முன்னான சிரமங்களை சூரரை போற்று மாறன் வழி அறிந்திருப்பீர்கள்.
எல்டி விளக்கால் பிரகாசமாகிய நிறுவனம்!
ராஜேஷ் மற்றும் கோவிந்த் உத்தம்சந்தனி தொடங்கிய சிஸ்கா க்ரூப் நிறுவனம் இன்று 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. Syska LED, Syska personal care, Syska mobile accessories, Syska Wires என பல்வேறு பிரிவுகளுடன் வளர்ச்சியடைந்துள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் சிஸ்காவின் பயணமே வேறு. 1989ம் ஆண்டு Shree Sant Kripa Appliances Pvt Ltd (SSK Group) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் டி-சீரிஸ் ஆடியோ கேசட், சிடி, ஆடியோ வீடியோ சிஸ்டம் போன்றவற்றின் விநியோகம் தொடர்பாக செயல்பட்டது.
இந்நிலையில் தான், சொந்தமாக பிராண்ட்டை அறிமுகப்படுத்தும் யோசனையில், எல்ஈடி விளக்குகள் பிரிவில் பயணிக்க ஆரம்பித்தது. எல்இடி பிரிவிற்கு பாலிவுட் நடிகர்கள் இர்ஃபான் கான், அமிதாப் பச்சன் ஆகியோரைக் கொண்டு ஊடகங்களில் விளம்பரபடுத்தியதில் மக்களுக்கு பரிச்சயமான பிராண்டாக உருவானது.
இரண்டாம் தலைமுறையினரான குருமுக் உத்தம்சந்தனி மற்றும் கீதிகா உத்தம்சந்தனி மற்றும் ராஜேஷ் உத்தம்சந்தனியின் குழந்தைகளும் குடும்பத் தொழிலில் இணைந்து கொண்டனர். இவர்கள் சிஸ்கா தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், சிஸ்கா மொபைல் ஆக்சசரீஸ் போன்ற தயாரிப்புகளை கையாண்டு 1,200 கோடி மதிப்புமிகு நிறுவனமாக மாற்றியுள்ளனர்.