Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘தமிழ் விக்கிப்பீடியா முதல் பிழை திருத்தி வரை’ - தமிழில் புதிய மென்பொருட்களை உருவாக்கும் ‘நீச்சல்காரன்’

தனது தேவைகளுக்காக கண்டுபிடித்த மென்பொருள்களை, இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பயன்படுத்தும் வகையில் இலவசமாக தந்து, தமிழரின் பெருமையை, தமிழின் பெருமையை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

‘தமிழ் விக்கிப்பீடியா முதல் பிழை திருத்தி வரை’ - தமிழில் புதிய மென்பொருட்களை உருவாக்கும் ‘நீச்சல்காரன்’

Thursday December 22, 2022 , 4 min Read

இணையம் சார்ந்த, கணினி சார்ந்த துறையில் தமிழில் புழங்குபவர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு ’நீச்சல்காரன்’ பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம்.

‘நீச்சல்காரன்’ என்றதும் தண்ணீரில் நீந்துபவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இந்த நீச்சல்காரன் நீரில் அல்ல இணையம் என்ற கடலில் நீந்தும் ஒரு இளைஞன்.

இணையக் கடலில் தான் நீந்துவதற்காக உருவாக்கிய கருவிகளை, மற்றவர்களுக்கும் உதவும் வகையில் இலவசமாக தந்து, புதிய தமிழ் சார்ந்த மென்பொருள்களை உருவாக்கி, தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பணிகளைச் செய்து வருகிறார்.

இணையத்தில் இருக்கும் ஒரே தமிழ் எழுத்துப்பிழை திருத்தியான வாணி எனும் தளத்தை (http://vaani.neechalkaran.com) உருவாக்கியவர் இவர்தான்.

Neechalkaran Rajaraman

இணையத்தில் நீந்து நீச்சல்காரன்

நீச்சல்காரனின் நிஜப்பெயர் ராஜாராமன் ஆகும். மதுரைக்காரரான இவர், 34 வயது இளைஞர். இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்று, கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, செங்கல்பட்டில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.

பணி நிமித்தம் வடமாநிலங்களுக்குச் சென்ற பிறகுதான், தனிமை அவரை வாட்ட, ‘நீச்சல்காரன்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கியுள்ளார் ராஜாராமன். அப்போதே தனது கவிதைகளை நீச்சல்காரன் என்ற பெயரிலேயே இணையத்தில் வலைப்பூ தொடங்கி பதிவேற்றத் தொடங்கினார்.

“அடிப்படையில் நான் தமிழ்ப் பிரியனோ அல்லது கணினி பிரியனும் இல்லை, இயற்பியல் மாணவன். எங்கள் குடும்பத்திலும் தமிழ் வல்லுநர்கள் யாரும் கிடையாது. ஆனால், சிறுவயது முதலே கவிதைப் பிரியனாகவே வளர்ந்தேன். புனேயில் வேலை கிடைத்து, அங்கு சென்ற பிறகுதான், வலைப்பூக்கள் எழுத ஆரம்பித்தேன். அப்போது என் கவிதைகளில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருந்தது.

அதனைத் திருத்த, அப்போது எனக்கு ஒரு மென்பொருள் தேவைப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த மென்பொருள்கள் திருப்தியாக இல்லாததால், என் தேவைக்கு ஏற்ப நானே ஒரு மென்பொருளை உருவாக்க முடிவெடுத்தேன். அதன்பிறகுதான்,

”தமிழ் சார்ந்து மென்பொருள் ஆய்வில் ஈடுபட ஆர்வம் வந்தது. அப்போது உருவானதுதான், ‘நாவி’ எழுத்துப் பிழைகளைத் திருத்தும் மென்பொருள் கருவி,” என்கிறார் ராஜாராமன்.

நாவி பிறந்த கதை

முறையான கணினி அறிவோ, தமிழில் புலமையோ இல்லாத ராஜாராமனுக்கு, அப்படி ஒரு பிழைகளைத் திருத்தும் மென்பொருள் கருவி உருவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இதற்கென தொழில்ரீதியாக கணினி கற்றுக் கொண்டார். தனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் எல்லாம், தமிழ் இலக்கணத்தையும், அதன் கூடவே மென்பொருள் கருவி உருவாக்கும் தொழில்நுட்ப அறிவையும் ஒரு சேரக் கற்றார்.

’நாவி’யில் சிலப்பல திருத்தங்களைச் செய்ய பேராசிரியர் ஒருவர் அவருக்கு உதவ, தனக்கென உருவாக்கிய எழுத்துப் பிழைகளைத் திருத்தும் அந்த மென்பொருளை மற்றவர்கள் பயன்பாட்டிற்கும் உதவிடும் வகையில் இலவசமாக இணையத்தில் வெளியிட்டார் ராஜாராமன்.

வாணி

நாவி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதனைத் தொடர்ந்து ’வாணி’ பிழை திருத்தி, தமிழிணைய பிழை திருத்தி, ’பேச்சி’ என்ற மொழி பெயர்ப்புக் கருவி, சுளகு என்ற எழுத்தாய்வுக் கருவி (http://apps.neechalkaran.com/sulaku), ’ஓவன்’ என்ற ஒருங்குறி மாற்றி (http://apps.neechalkaran.com/oovan ), மென்சான்றிதழ் உருவாக்கும் கருவி, வாணி தொகுப்பகராதி, ’விக்கி உருமாற்றி’ என மேலும் பல கண்டுபிடிப்புகளைப் படைத்தார்.

“ஒற்றுப் பிழைகளோடு, எழுத்துப் பிழைகளையும் சேர்த்து திருத்தினால் நன்றாக இருக்கும் என நான் நினைத்ததன் பலனாக, 2015ல் உருவானதுதான் வாணி மென்பொருள் (http://vaani.neechalkaran.com/). இது ஒற்றுப் பிழைகளோடு, எழுத்துப் பிழையையும் சரி செய்யும். இணையத்தில் நான் உருவாக்கியது போன்ற மொழி திருத்திகள் முறையாக வேறு எந்த மொழிகளிலுமே கிடையாது,” என பெருமிதத்தோடு கூறுகிறார் ராஜாராமன்.

இவரது கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட தமிழக அரசு, இலவச மடிக்கணினிக்காக இதே போன்ற மென்பொருள் வேண்டும் என இவரை அணுகியது. அதனைத் தொடர்ந்து வாணியின் மேஜைப்பதிப்பை ராஜாராமன் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

“இதன் நவீன படைப்பாக சமீபத்தில் வாணி எடிட்டர்.காம் என்ற பெரிய தளத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் மக்கள் தங்களது முழுப் புத்தகத்தையே பதிவேற்றம் செய்து, ஒற்றுப்பிழை, பிறமொழிச் சொல், எழுத்துப்பிழை என எது தேவையோ அதனை மட்டும்கூட திருத்திக் கொள்ள முடியும் எனது இந்த சேவையைப் பயன்படுத்தி, பலர் முழுப் புத்தகத்தையே திருத்தம் செய்து, அதனை விற்பனைக்கும்கூட விட்டுள்ளனர். எனது கண்டுபிடிப்புகள் மக்களுக்கு இந்தளவிற்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் ராஜாராமன்.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை நிர்வாகி

புதிய மென்பொருள்கள் உருவாக்குவது மட்டுமின்றி, தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளில் ஒருவராக கட்டுரைகள் எழுதி வருகிறார் ராஜாராமன். புதிய கட்டுரைகளை உருவாக்குவது, மற்றவர்கள் பதிவேற்றம் செய்யும் கட்டுரைகளில் தவறு இருந்தால், அதனைச் சுட்டிக் காட்டுவது, திருத்தம் செய்வது போன்ற சிறப்பு அனுமதிகளை விக்கிப்பீடியா இவருக்குக் கொடுத்துள்ளது. தானியக்கக் கட்டுரைகள், தானியக்கப் பிழைதிருத்தம் என 85000த்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளை இவர் செய்துள்ளார்.

“ஆரம்பத்தில் இருந்தே நான் விக்கிப்பீடியாவிலும் எழுதி வருகிறேன். அப்போது விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளின் தரவை அதிகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டது. அதன் தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறை அவர்களது கோயில்கள் தொடர்பான சுமார் 38 ஆயிரம் தரவுகளைத் தந்தார்கள். வெறும் குறிப்புகளாக மட்டுமே கிடைத்த அந்தத் தகவல்களை என் மொழி அறிவை வைத்து கட்டுரைகளாக நான் மாற்றி, விக்கிப்பீடியாவில் ஏற்றினேன்.”
rajaraman

இப்படியாக சுமார் 22,500 கட்டுரையை விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்தேன். தற்போது இந்திய அளவில் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளது.

”விக்கிப்பீடியாவில் ஒரு பாட் எனப்படும் தானியங்கியை உருவாக்கியுள்ளேன். இந்தியாவிலேயே தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமே இப்படி ஒரு தானியங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,” எனப் பெருமையுடன் கூறுகிறார் ராஜாராமன்.

பிரபல நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை, ஓய்வு நேரத்தில் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதுவது, புதிய தமிழ் சார்ந்த மென்பொருள் கருவிகளை உருவாக்குவது என எப்போதும் பரபரப்பாக இருக்கும் ராஜாராமன், கூடுதலாக கல்லூரி மாணவர்களுக்கும் தன்னார்வலராக விக்கிபீடியாவில் எழுதுவது குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்று வருகிறார்.

பேச்சி

ராஜாராமனின் கண்டுபிடிப்புகளில் மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது ’பேச்சி’ செயலி ஆகும். இதில் மலையாளக் கட்டுரைகளை காப்பி செய்தால், அழகாக தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கும். மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு கூகுளில் வார்த்தைக் கட்டுப்பாடுகள் உண்டு. எனவே, அவற்றையும் தன் செயலியில் நிவர்த்தி செய்யும் வகையில், தமிழ், மலையாள இலக்கணப்படி பேச்சியை உருவாக்கியுள்ளார் ராஜாராமன்.

“எதிர்காலத்தில் பேச்சியை எல்லா இந்திய மொழிகளுக்கும் விரிவுப் படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு நுட்பத்தை பன்னாட்டு நிறுவனங்களைச் சாராமல் நாமே உருவாக்க முடியும் என்பதற்கு பேச்சி ஒரு சாட்சி.”

சிறுவயதில் இருந்தே கவிதைகள் மீது ஒரு பிணைப்பு இருந்தது. அந்த பிணைப்பு தான் எழுத எழுத தமிழ் மீது ஒரு ஈர்ப்பை எனக்கு உருவாக்கியது. தற்போது மேலும் பல மொழிகளைக் கற்று வருகிறேன். அப்போது தான் பேச்சி போன்று பிறமொழிகளைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள்களை தெளிவாக உருவாக்கமுடியும், என்கிறார் ராஜாராமன்.

rajaraman

இவரது இந்த சேவைகளைப் பாராட்டி 2015ல் கனடா கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கணிமை விருது பெற்றுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களும் இவரது சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளனர். 2019ம் ஆண்டு தமிழக அரசின் ’கணினித்தமிழ் விருது’ பெற்றுள்ளார். சமீபத்தில்கூட மதுரையில் நடந்த விழாவில், இணையத்தில் தமிழ் வளர தொண்டாற்றியதற்காக டிஜிட்ஆல் விருதைப் பெற்றுள்ளார்.

“வருமானத்திற்கென கார்ப்பரேட் வேலை இருப்பதால், லாபநோக்கற்று இந்தப் பணியைச் செய்து வருகிறேன். வேறு பொழுதுபோக்கு அம்சங்களே எனக்குக் கிடையாது. எனவே என் ஓய்வு நேரங்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன். நானே கண்டுபிடித்த சில துணைக்கருவிகள் மூலம் எனது நேரத்தை மேலும் மிச்சப்படுத்திக் கொள்கிறேன்,” என மனமிருந்தால் மார்க்கமுண்டு எனக் கூறுகிறார் ராஜாராமன்.

நீச்சல்காரன் என்ற கவிதை தளம் மட்டுமின்றி, திரள் என்ற செய்திகள் திரட்டும் தளம் ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் மொழி வளமைக்கு இவர் ஆற்றி வரும் தொண்டு நிச்சயம் பாராட்டுகளுக்கு உரியது.