சிறு, குறு. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புது வாழ்வளிக்கும் ‘சுயசார்பு இந்தியா திட்டம்’
‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், எம்எஸ்எம்இ நிதியத்திற்கான நிதியம் மூலமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் பங்குத்தொகை வழங்குவதும் அறிவிக்கப்பட்டது.
பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதித்துள்ளது. நிலையான வருமானம் இல்லாததால், அவர்களால், தாங்கள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான வட்டி செலுத்துவதும், தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதும் மிகவும் சிரமமானதாக இருக்கிறது.
இந்தத் தொழில்துறைக்கு உதவிக்கரம் அளிப்பதன் அவசியத்தை உணர்ந்து, சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், இதர வர்த்தக அமைப்புகளுக்கும் பிணையில்லா ஆட்டோமேட்டிக் கடனாக 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழான இந்த அறிவிப்பு, சிறுதொழில் நிறுவனங்களுக்கு புதுவாழ்வளித்துள்ளது. எம்எஸ்எம்இ நிதியத்திற்கான நிதியம் மூலமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் பங்குத்தொகை வழங்குவதும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பல நிறுவனங்கள் மீண்டும் செயல்பட உதவும்.
பிணையில்லாக் கடன்கள் வழங்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் என்று வீட்டு வசதிப்பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான ஏ.எம்.ஐ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின் சிங்காரவேல் கூறினார்.
சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME நிறுவனங்கள்) வந்து சேரவேண்டிய தொகை இன்னும் 45 நாட்களுக்குள் அரசால் விடுவிக்கப்படும் என்ற ஆணை உடனடியாக செயல்படுத்தப்படும் என்ற முடிவை தொழிலதிபர்கள் வரவேற்றுள்ளனர்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனளிக்கும். சரக்குகளின் சேவைகளுக்கு உலக அளவிலான டெண்டர்கள் கோரப்பட மாட்டாது என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன. உலக நிறுவனங்கள் வந்தால், அந்தப் பொருள்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்தியாவில் உபரித் தொழில்களின் வளர்ச்சிக்கு இது உதவும். ஐந்து கோடி ரூபாய் வரையிலான பணப்புழக்கம் கொண்ட நிறுவனங்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்தலாம் என்று அரசு அனுமதித்துள்ளது. எந்தவித வரையறையும் இன்றி, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும், 6 மாத காலங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
BHEL சிறு தொழில் சங்கம் - BHELSIA திருச்சிராப்பள்ளி, நலிவுற்ற தொழில்களுக்கென வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்றுள்ளது. வாராக்கடன் பட்டியலில் அல்லது நலிவுற்ற பிரிவுப் பட்டியலில் உள்ள இரண்டு லட்சம் எம்எஸ்எம்இ-களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் பிணையில்லா துணைக்கடன் (சபார்டினேட் கடன்) வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
மொத்தப் பங்கில் 15 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் கடன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கைச் செலுத்த ஆகஸ்ட் மாதம்வரை மூன்று மாத காலத்திற்கு அவகாசம் அளித்திருக்கும் அரசின் முடிவையும் சிறு தொழில் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. மூன்று மாத காலத்துக்கு, 6750 கோடி ரூபாய் பணப் புழக்கம் இருக்கும் என்பதற்காக, வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தவேண்டிய கட்டாயப் பங்களிப்பை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
பொது முடக்கத்தின் காரணமாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு அரசு பங்களிக்கும் என்ற அறிவிப்பிற்கு, தனியார் நிறுவனமொன்றின் இயக்குநரான கிருஷ்ணமூர்த்தி அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது போன்ற கடினமான நேரத்தில் MSME பிரிவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் மிக உதவியாக உள்ளன என்று திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தின் TIDITSSIA தலைவர் இளங்கோ கூறினார்.
வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்வது உட்பட பல உதவிகள் கிடைக்கும் என்று சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்கள் நம்பிக்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
பொது முடக்கம் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியிலிருந்து மீண்டு புதிதாக செயல்பட தொழில் துறைக்கு அரசின் ஆதரவு மிகவும் அவசியம். சரியான நேரத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருக்கும்.
தகவல்: பிஐபி