Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆப் - சமூக மாற்றத்திற்கு வித்திட்ட திவ்யா பாலாஜி!

பெண்களின் சுகாதாரத்திற்காகத் தொடங்கப்பட்ட 'பிங்கி ப்ராமிஸ்` செயலியானது, மகப்பேறு, மாதவிடாய், கருவுறுதல், தாய்ப்பால் மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரம் போன்ற பொதுவெளியில் பெண்கள் பேச தயங்கும் பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளித்து, மகளிர் மத்தியில் நன்வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆப் - சமூக மாற்றத்திற்கு வித்திட்ட திவ்யா பாலாஜி!

Wednesday August 21, 2024 , 4 min Read

இன்றைய நவீன உலகில் இருக்கும் இடத்திலிருந்தே உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம் என சகல சேவைகளையும் நொடிபொழுதில் மொபைல் ஆப்களின் மூலம் பெறுவது சாத்தியம். இந்த வரிசையில் மிக முக்கிய சேவையான மருத்துவ சேவையை வழங்குகிறது ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் 'பிங்கி ப்ராமிஸ்' செயலி. பிரத்யேகமாக பெண்களின் சுகாதாரத்திற்காக தொடங்கப்பட்ட இந்த ஆப், மகப்பேறு, மாதவிடாய், கருவுறுதல், தாய்ப்பால் மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரம் போன்ற பொதுவெளியில் பெண்கள் பேசத் தயங்கும் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளித்து, மகளிர் மத்தியில் நன்வரவேற்பை பெற்றுள்ளது.

இணையதளமாகவும், செயலி வழியாக இயங்கும் திவ்யா பாலாஜி கமர்கர் நிறுவிய 'Pinky Promise' ஆனது, மேம்பட்ட AI/ML தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதுவரை பிங்கி ப்ராமிஸ் செயலியினை 80,000க்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 10,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மருத்துவ சேவையினை பெற்றுள்ளனர்.

 Pinky Promise

தேவையின் தேடலால் தொடங்கிய முயற்சி!

அமெரிக்காவின் யேல் பல்கலைகழகத்தில் சுற்றுசூழலில் பட்டம்முடித்த திவ்யா, கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் எச்ஐவி பராமரிப்பு சேவைகள் பெண்களுக்கு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இதன் பிறகு, பீகாரில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை மேம்படுத்தும் திட்டத்தில் பணியாற்றுவதற்காக அவர் இந்தியாவுக்குத் திரும்பினார்.

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காக டெல்லி மகளிர் ஆணையத்திலும் பணியாற்றினார். அவருடைய சக யேல் பல்கலைகழகத் தோழர்கள் கைநிறைய சம்பாதித்தாலும், மாதம் ரூ.30,000 சம்பளத்திற்கு பேருந்தில் வேலைக்கு சென்று திரும்பி, சமூகப்பணிகளில் தன்னை ஈடுப்படுத்தி வந்தார் திவ்யா.

"என் வீட்டிலிருந்து சில நிமிடங்களில் சென்றுவிடும் இடத்தில் தான் நிர்பயா சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பங்கேற்று, டெல்லியிலுள்ள பெண்களிடம் ஆலோசனை பெற்று, அதன் பரிந்துரைகளை உருவாக்க நீதிபதி வர்மாவின் தலைமையிலான கமிஷனுக்கு உதவியாக செயல்பட்டேன்," என்று பகிர்ந்தார்.

இதற்கிடையில், கோவிட்-19 தொற்றுநோய் உலகைத் தாக்கிய சமயத்தில் திவ்யா, முதல்முறையாக கர்ப்பமாவும் இருந்தார். அப்போது அவர் அமெரிக்காவின் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில், குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக இந்தியாவுக்கு திரும்பினார்.

"பிரசவக் காலத்தில் உடலில் சில மாறுதல்கள் தென்பட்டன. அதனைப்பற்றி அறிந்து கொள்ள மருத்துவரை அணுகலாம் என்றால் தொற்றுக்காலத்தில் வெளியே செல்வது கேள்விகுறியாக இருந்தது. அதனால், ஆன்லைனில் மகப்பேறு நிபுணரை அணுகினேன். ஆனால், நோயறிதலை கண்டறிய 2 வாரங்களாகியது."

என் கர்ப்பக் காலம் குறித்த சரியான தரவுகளுடனும் முழு மருத்துவ வரலாறுடன் மருத்துவரை அணுகியிருந்தால், முதல் வாரத்திலே நோயினை கண்டறிந்திருக்க முடியும். இந்த அனுபவம், இந்தியாவின் சுகாதாரத்தில் நிலவிய ஒரு முக்கியமான இடைவெளியை புரிய வைத்தது. இதன் விளைவாய், இந்தியாவில் முதன்முறையாக பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட AI/ML- அடிப்படையிலான கிளினிக்காக பிங்கி பிராமிஸ் என்ற தளத்தை உருவாக்க இது எங்களுக்கு வழிவகுத்தது, என்று திவ்யா நினைவு கூர்ந்தார்.

 Pinky Promise

பிங்கி ப்ராமிஸ் டீம்

பிங்கி ப்ராமிஸ் எப்படி வேலை செய்கிறது?

2022ம் ஆண்டு அவருக்குள், இந்த யோசனை வேரூன்றியபோது, ​​நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களிடம் பேசி களநிலவரத்தை அறிய ஆழமாக ஆய்வு செய்தார். ஆய்வில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட பெண்கள், பெண்ணுடல் சார்ந்த நோய் பிரச்சினையை அனுபவித்தபோது என்ன செய்தார்கள் என்பதற்கு பதிலளித்தனர். ஆய்வின் முடிவுகள் கண்களைத் திறக்கும் அனுபவமாக இருந்தன.

"ஆய்வில் 70%-க்கும் அதிகமானோர் மகப்பேறு மருத்துவரிடம் செல்வதைத் தவிர்த்தனர் என்பதை நாங்கள் அறிந்தோம். 73% க்கும் அதிகமானோர் முதலில் தங்கள் அறிகுறிகளை ஆன்லைனில் தேடிப் பார்த்த்தாக தெரிவித்தனர். அவர்களது பிரச்சினைகளைப் பற்றி நண்பர்களிடம் பேசுவதை விட ஆன்லைனிலே அதிகம் தேடினர். பெண்களுக்கான பிரத்யேகமாக டிஜிட்டலில் முதல் சுகாதாரத் தளத்தை உருவாக்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை இது எங்களுக்கு உணர்த்தியது," என்றார்.

பிங்கி ப்ராமிஸ் செயலி பயன்பாட்டை உருவாக்கும் முன், அவர்கள் ஒரு எளிய எக்செல் தாளில் பல்வேறு பொதுவான இனப்பெருக்க உடல்நலப் பிரச்சினை குறித்த கேள்விகளை உருவாக்கி, பின்னர் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரு சாட்பாட் மூலம், பெண்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்ட சோதனையை மேற்கொண்டனர். சோதனையில் பங்கேற்ற பெண்கள் தொலைபேசி அழைப்பில் விவாதிப்பதை விட, மெசேஜ் சேட்டிங் வடிவில் விவாதிப்பதை வசதியானதாக கருதுவதை கண்டறிந்தனர்.

இதனால் சாட்டிங் அடிப்படையில், மேம்பட்ட AI/ML தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார சேவையை வழங்கும், செயலியை உருவாக்கினர். இரண்டு ஆண்டுகளாக, திவ்யா அவரது வீட்டில் இருந்து பிங்கி ப்ராமிஸை உருவாக்கினார். மேலும், 2023ம் ஆண்டில், அவரது கணவரின் தோழியான அகன்ஷா வியாஸ் அவருடன் இணைந்தார். ஹெல்த்டெக் மீது கவனம் செலுத்தி AI தயாரிப்புகளை உருவாக்குவதில் வியாஸுக்கு 12 வருட அனுபவம் இருக்கிறது.

 Pinky Promise

நீங்கள் செயலியை பயன்படுத்தியதும், உடனடியாக மகளிர் மருத்துவ நிபுணரை நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். அதே நேரத்தில், சாட்பாட் உங்களிடம் தொடர்ச்சியாக கேள்விகளைக் கேட்கும். அதை மருத்துவர் அவர்களின் செயலியில் பார்க்க முடியும். முந்தைய பதில்களின் அடிப்படையில் அடுத்தடுத்த கேள்விகளும் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன. இந்த உரையாடலின் நடுவே எப்போது வேண்டுமானலும் மருத்துவர்கள் தலையிட முடியும்.

மேலும், நோயாளியிடம் கூடுதல் கேள்விகளையும் கேட்க முடியும். சாட்பாட் 250க்கும் மேற்பட்ட சிறந்த மருத்துவ நெறிமுறைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சியளிக்கப்பட்டது மற்றும் மருத்துவ நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. மேலும், பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.

கேள்விகள் மற்றும் பதில்களின் அடிப்படையில் மருந்துகளை பரிந்துரைக்கிறது. பின்னர், அதை நோயாளியுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் மருத்துவரால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. செயலியில், ஒரு பெண் 97 சதவீத இனப்பெருக்க சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் உடனடியாக ஆலோசனை செய்து, அவர்களது நீண்ட கால நாள்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறமுடியும். அடுக்கு I மற்றும் அடுக்கு II நகரங்களில் உள்ள 18-34 வயதுக்குட்பட்ட பெண்களே பிங்கி ப்ராமிஸின் இலக்கு பார்வையாளர்கள்.

"புவியியல் ரீதியாக, எங்கள் வாடிக்கையாளர்களில் தோராயமாக 70% பேர் அடுக்கு 2 நகரங்கள் மற்றும் இந்தியாவின் சிறிய பகுதிகளை சேர்ந்தவர்கள். மேலும், 60% க்கும் அதிகமானோர் இதற்கு முன்பு ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் சென்றதில்லை. மேலும் பிங்கி ப்ராமிசில் தான் முதல் முறையாக ஆலோசனை பெறுகிறார்கள்," என்றார் அவர்.

ஸ்டார்ட் அப்பின் ஆரம்ப வளர்ச்சியானது பெரும்பாலும் சுயநிதி மற்றும் மானியங்கள் மற்றும் விருதுகள் மூலம் பெறப்பட்டது. "முலாகோ அறக்கட்டளை எங்களுக்கு $100,000 வழங்கியது, USAID எங்கள் பணிக்காக மற்றொரு $1,00,000 நிதி வழங்கியது. இறுதியாக, எங்களை நம்பி ஆதரவளித்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட ஒரு சில தேவதைகள் எங்களிடம் உள்ளனர்.

"வருவாயைப் பொறுத்தவரை, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.1.5 கோடியையும், 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரூ. 8 கோடி அல்லது அதற்கும் அதிகமான மைல்கற்களை எட்ட திட்டமிட்டுள்ளோம். மேலும் நாள்பட்ட பராமரிப்பு சலுகைகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறி முடித்தார்.

ஒரு மொபைல் போனிலே மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் பிங்கி ப்ராமிசின் முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும், நாள்பட்ட உடல்பிரச்னைகளுக்கு மருத்துவரை நேரில்காண்பது நலம்!

தமிழில்: ஜெயஸ்ரீ