சாப்பிட்டால் ஆரோக்கியம்; பயிரிட்டால் லாபம் – சிகப்பு முள்ளங்கி சாகுபடி!
வண்ணமயமான சிகப்பு முள்ளங்கி உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிப்பதுடன் சாகுபடி செய்தால் நல்ல லாபமும் கொடுக்கிறது.
ஆரோக்கியம் பற்றி குறிப்பிடும் மருத்துவர்கள்கூட கலர்ஃபுல் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுங்கள் என்றே அறிவுறுத்துவார்கள். பச்சை, வெள்ளை, ஊதா, சிகப்பு என காய்கறிகள் முதலில் நம் கண்களுக்கு விருந்தளித்துவிடுகின்றன.
தக்காளி என்றதும் எப்படி நாம் சிகப்பு நிறத்தை கற்பனை செய்து பார்க்கிறோமோ அதேபோல் முள்ளங்கி என்றதும் வெள்ளை நிறத்தில் பச்சை நிற இலைகளுடன் இருக்கும் முள்ளங்கியே நம் கண்முன் விரிகிறது.
ஆனால், சிகப்பு முள்ளங்கி பார்க்க வண்ணமயாக இருப்பதுடன் உடலுக்கும் நன்மையளிக்கிறது. அதுமட்டுமா? விவசாயம் செய்ய விரும்புவோர் சிகப்பு முள்ளங்கி பயிரிட்டால் நல்ல லாபம் பெறலாம். ஏராளமான விவசாயிகள் சிகப்பு முள்ளங்கி சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருவதே இதற்கு சான்றாக அமைகிறது.
சிகப்பு முள்ளங்கி சாகுபடி
தரமான விதையை தேர்வு செய்யவேண்டியது முக்கியம். சாகுபடிக்கு குளிர்காலம் ஏற்றது. ஏனெனில், வளிமண்டலத்தில் இருக்கும் ஈரப்பதம் பயிர் வளர்ச்சிக்கு உதவும்.
நல்ல வடிகால் கொண்ட களிமண் சிகப்பு முள்ளங்கி சாகுபடிக்கு ஏற்றது. நிலத்தை இரண்டு, மூன்று முறை நன்றாக உழுவேண்டும். அதன் பிறகே விதைகளை விதைக்கவேண்டும். மண்ணின் pH அளவு 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். பூசா மிருதுளா ரக சிகப்பு முள்ளங்கியைப் பயிரிடலாம்.
விதைகளை நடுவதற்கு முன்பு மாட்டு சாணத்தை நிலத்தில் சேர்க்கவேண்டியது அவசியம். அத்துடன் உரம் சேர்க்கலாம். இதனால் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆர்கானிக் உரம் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும்.
பாலிஹவுஸ் முறையில் விவசாயம் செய்தால் லாபம் அதிகரிக்கும். 50-60 நாட்களில் சிகப்பு முள்ளங்கி வளர்ந்துவிடும்.
சிகப்பு முள்ளங்கியின் பயன்கள்
சிகப்பு நிற முள்ளங்கியில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் ஆண்டிஆக்சிடெண்ட் அதிகளவில் உள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது. இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. புற்று நோய் பரவாமல் தடுக்கும் ஆற்றல் சிகப்பு முள்ளங்கியில் உள்ளது. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
காய்கறி சூப், சாலட் போன்றவற்றில் சிகப்பு முள்ளங்கியை சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை இதில் கிடைக்கும். இத்தனை நன்மைகள் கொண்டிருப்பதால் சிகப்பு முள்ளங்கிக்கான தேவையும் அதிகமாக உள்ளது. இதுவும் லாபம் கிடைப்பதற்கான முக்கியக் காரணம்.