மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய சாம்சங் தொழிலாளர்கள்...
மொத்தம் உள்ள 1,750 ஊழியர்களில் 500 ஊழியர்கள் மேற்கொள்ளும் இந்த உள்ளிருப்பு போராட்டம் தங்கள் உடனடி கோரிக்கை ஏற்கப்படும் வரை தொடரும், என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் அமைந்துள்ள சாம்சங் நிறுவன ஊழியர்களின் ஒரு பிரிவினர் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ள, புதிதாக அமைக்கப்பட்ட சி.ஐ.டி.யூ., ஆதரவு பெற்ற சாம்சங்கள் தொழிலாளர்கள் சங்கத்தைச்சேர்ந்த மூன்று ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், என்று கோரி வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
மொத்தம் உள்ள 1,750 ஊழியர்களில் 500 ஊழியர்கள் மேற்கொள்ளும் இந்த உள்ளிருப்பு போராட்டம் தங்கள் உடனடி கோரிக்கை ஏற்கப்படும் வரை தொடரும். என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாம்சங்க் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு 30 நாள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு தலையிட்டு இந்த போராட்டத்தை முடித்து வைத்தது.
நிர்வாக ஆதரவு கொண்ட தொழிலாளர்கள் அமைப்பில் சேர வேண்டும், என வலியுறுத்தக்கூடாது என்பது நிர்வாகத்திடம் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. ஏற்கனவே 25 தொழிலாளர்கள் இதில் இணைய கையெழுத்திட்டுள்ளனர். இந்த அமைப்பில் இணையுமாறு மற்ற தொழிலாளர்களையும் நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது.
"கடந்த ஆண்டு போராட்டத்தின் போது இந்த விஷயத்தை முக்கியமாக வலியுறுத்தினோம். ஆனால், சாம்சங் இந்தியா நிர்வாகம் இதை மீறிவிட்டது. மேலும், நிர்வாகம் சொன்னபடி, இந்த அமைப்பில் இணையாத மூன்று தொழிலாளர்களை நீக்கிவிட்டது,” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடன் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் துணைத்தலைவர் மற்றும் துணை செயலாளர்களாக பதவி வகிக்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்சங் நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றது, என மறுத்துள்ளது. மேலும், யாரையும் அமைப்பில் சேர அல்லது தொழிற்சங்கத்தில் இருந்து விலக வற்புறுத்தவில்லை, என்றும் கூறியுள்ளது.
பிப் 5 ஆம் தேதி முதல் நடக்கும் இந்த வேலைநிறுத்தம் பற்றி குறிப்பிட்டுள்ள நிர்வாகம், பணியிடத்தில் தொழில் அமைதியை பாதிக்காத எந்த சட்டவிரோதமில்லாத நடவடிக்கைகளையும் நிர்வாகம் தடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த கொள்கைக்கு விரோதமாக நடந்த தொழிலாளர்கள் மீதே தொடர்புடைய அதிகாரிகளிடம் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. முறையான விசாரணைக்கு பின் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணிச் சூழலை பாதுகாக்க அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொருத்தமான இந்திய சட்டங்கள் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களோடு, அரசு அதிகாரிகள் உதவியோடு பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒருசிலரின் சட்டவிரோத நடவடிக்கைகளை மீறி பெரும்பாலான தொழிலாளர்கள் வர்த்தக செயல்பாடுகள் தொடர்வதில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு கூட்டாக தீர்வு காண முயன்று வருகிறோம். இது தொடர்பாக அரசு முன்னெடுக்கும் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளோம்,” என்று நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
யாரையும் அமைப்பில் சேர அல்லது தொழிற்சங்கத்தில் இருந்து விலக வற்புறுத்தவில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தொழிற்சங்கத்தின் புகார் தவறானது என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.
பொதுவாக வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ளும் என்று கூறிய மூத்த தொழிலாளர் ஒருவர், இதுவரை துறையிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும், என சி.ஐ.டி.யூ உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தகவல்: பிடிஐ
Edited by Induja Raghunathan