பகலில் பள்ளிப் படிப்பு; மாலையில் கோழிப் பண்ணை முதலாளி!
பள்ளிக்குச் சென்று கொண்டே 10 கோழிக் குஞ்சுகளுடன் தொடங்கிய பண்ணை, ஒரே ஆண்டில் 150 கோழிகளாக பெருக்கி, கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி அசத்தியுள்ளார் இந்த 14 வயது சிறுவன்.
9ம் வகுப்பு படித்து கொண்டிருக்கையில் என்ன செய்தீர்கள் 90’ஸ் கிட்சுகளே? புத்தக மூட்டையை தூக்கிக்கொண்டு பள்ளிசென்று எப்படா பள்ளி மணியோசை கேட்கும் என்று காத்துக்கொண்டிருந்தீர்களா? அல்லது வீட்டுக்கு வந்தவுடன் வீடியோ கேம்ஸ் விளையாட எண்ணுனீர்களா? ஆனால், இந்த 9ம் வகுப்பு படிக்கும் பொன் வெங்கடாஜலபதி, பகலில் பள்ளிப்படிப்பும் பகுதிநேரத்தில் பண்ணையை கவனித்து 14 வயதிலே இளம் தொழில் முனைவோராக மின்னுகிறார்.
“என் பேரு பொன் வெங்கடாஜலபதி. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தான் எங்கூர். அம்மா ஜெயலெட்சுமி, பனியன் கம்பெனியிக்கு வேலைக்கு போறாங்க. அப்பா நாச்சிமுத்து கூல்டிரிங்ஸ் கம்பெனியில் வேலை செய்றாங்க. தாத்தா வீடு நெய்காரம்பாளையத்தில் இருக்கு. ஸ்கூல் லீவுனாலே தாத்தா வீட்ல தான் இருப்பேன். தாத்தா விவசாயம் பண்றாங்க. கோழிப் பண்ணையும் வச்சிருக்காங்க.
நான் எப்போ தாத்தா வீட்டுக்கு போனாலும், கோழிகளுக்கு தீனி போடுவேன், தண்ணி வைப்பேன். அப்படியே தாத்தா வீட்ல கோழிகளோட பழகி எனக்கும் பண்ணை வைக்கணும்னு ஆசை வந்திருச்சு” என்று கோழிகளுடனான ப்ரியம் எப்படி தொடங்கியது என்பதை பகிர்ந்தார் வெங்கடாஜலபதி.
குழந்தைகள் விருப்பப்படுவதை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பது அனைத்து பெற்றோர்களின் இயல்பே. ஆனால், வெங்கடாஜலபதி கேட்டது ஆசைக்கு ஒரு கோழி அல்ல, ஒரு கோழிப்பண்ணை. எனினும், அதை உடனே நிறைவேற்றினர் அவரது பெற்றோர்.
“எங்களுக்கு ஒரே பையன். எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும் போது திடீர்னு ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம் பண்ணிட்டான். கூட படிக்கிற பசங்க எல்லோரும் பாட்டு பாடுறாங்க, இல்ல டான்ஸ் ஆடுறாங்க, எனக்கு எந்த திறமையுமே இல்லையானு ஒரே புலம்பல். இல்ல கண்ணு, உனக்கும் ஒரு திறமை இருக்கும்னு சொன்னாலும் ஏத்துக்கல அவன். அந்த சமயத்தில தான் கோழிப் பண்ணை வைக்கணும்னு சொன்னான். நாங்களும் மறுப்பு தெரிவிக்கல.
ரூ.10 ஆயிரம் செலவில வேண்டிய ஏற்பாடு பண்ணிக்கொடுத்தோம். அவனுக்கு ஏதாவது சாதிக்கணும்னு ஆர்வம். அது எப்படினு ஒரு தடம் கிடைக்காம இருந்தான். கொஞ்சம் வழி காமிச்சோன கப்புனு பிடிச்சுகிட்டான்,” என்று பெருமையுடன் கூறுகிறார் அவருடைய தாய் ஜெயலெட்சுமி.
தொடக்கத்தில் 10 கோழிக்குஞ்சுகளை வாங்கி மேய்ச்சல் முறையில் கோழிகளை வளர்க்க துவங்கியுள்ளார். அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு தாத்தாவையும், அப்பாவையும் அணுகினாலும் இன்னபிற தகவல்கள் சேகரிக்க யூடியுப்பையே ஆசானாக்கிக் கொண்டார். தவிர, அக்கம்பக்கத்தில் உள்ள கோழி வளர்க்கும் சகவயதொத்தவர்களை இணைத்து வாட்சப் குரூப் ஒன்றையும் தொடங்கி ஒருவருக்கு ஒருவர் அறிந்த கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
“தொடக்கத்தில் தாத்தா கொஞ்சம் கற்று கொடுத்தாங்க. அதுக்கு அப்புறம் யூடியுப்பில் பார்த்து அனைத்தையும் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் நோய் மேலாண்மை இன்று வரை சிரமமாக தான் இருக்கிறது. முதன் முதலில் 10 கோழிக்குஞ்சு வாங்கிய பிறகு மேலும் 20 கோழிக்குஞ்சு வாங்கினோம். 20 கோழிக்குஞ்சும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கி இறந்திடுச்சு. இப்போது கொஞ்சம் பழக்கத்துக்கு வந்திருச்சு.
ஒரு நாள் கோழிக்குஞ்சுகளுக்கு மட்டும் டாக்டரிடம் தடுப்பூசி போடுவோம். மற்றப்படி வெள்ளை கழிச்சல்னா மஞ்சள் கலந்து சின்ன வெங்காயம் நறுக்கி வைத்து விடுவேன். அம்மை நோய்னா பாத்தாலே கொப்புளம் இருப்பது தெரியும். வேப்ப இலையும் மஞ்சளும் அரைத்து போடுவேன்.
காலையில 6 மணிக்கு எழுந்து 1மணிநேரம் கோழிகளுக்கு தீவனம் வைத்து, இடத்தை சுத்தம் செய்வேன். அப்புறம் ஸ்கூல் கிளம்பி போயிட்டு 5 மணிக்கு வந்து ஒரு மணிநேரம் பண்ணை வேலை, அவ்ளோ தான். படிக்க அதிகம் இருக்கும் சமயங்களில் அப்பா கொஞ்சம் உதவி பண்ணுவாங்க. ஏன்னா, ஒரு நாள் குஞ்சு மேயவிட்டா பக்கத்துலயே ஆளு நிக்கணும் இல்லாட்டி காக்கா தூக்கிட்டு போயிரும்,” என்கிறார் பொறுப்பாக.
அவர், பண்ணை பராமரிப்பு மட்டுமின்றி, தாய் கோழியை பெருக்குதல் தொடங்கி விற்பனை வரை சகலத்தினையும் கவனித்து கொள்கிறார்.
“கோழிகளுக்குத் தேவையான தீவனங்களை மாதத்திற்கு ஒருமுறை நானே சென்று வாங்கி வந்துவிடுவேன். பண்ணை தொடங்கிய ஆறு மாதத்திலிருந்தே விற்பனையை தொடங்கிவிட்டேன். 'P V சிக்கன் பார்ஃம்' என்று பெயர் எழுதி வீட்டு வாசலில் போர்டு வைத்துள்ளேன். அம்மா உடன் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பது தெரியும். அதனால், அவங்க வீடு தேடியே வந்து வாங்கிப்பாங்க.
வெயில் காலத்தில் மட்டும் முட்டைகளை விற்பனை செய்துவிடுவேன். ஒரு நாள் குஞ்சுகள் விற்பனை செய்யமாட்டேன். தாய்கோழிகள் மட்டும் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்கிறேன். மாதத்திற்கு ஏறக்குறைய 20 கிலோ சிக்கன் விற்பனை செய்வேன். ஒரு கோழிக்குஞ்சு தாய்கோழியாக 4 மாதங்கள் ஆகும். 4 மாதக் காலத்திற்கு அதற்குத் தேவையான தீவனம், மருந்து எல்லாம் சேர்த்து ஒரு தாய்கோழியை உருவாக்க ரூ.200 செலவு ஆகும்.
கடந்த ஒரு ஆண்டில் தாய் கோழி விற்பனையின் மூலம் ரூ.1 லட்சம் சேர்த்து வைத்துள்ளேன். அதை வைத்து பண்ணையை விரிவுப்படுத்த வேண்டும். இப்போது, 2 ஆட்டுக்குட்டியும், 2 வாத்தும் வளர்த்துவருகிறேன். எதிர்காலத்தில் வேளாண் கல்வி படித்து, ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பதே என் ஆசை, எனும் வெங்கடாஜலபதி எதிர்காலக் கனவுகளை இன்றே திட்டம் தீட்டிக் கொண்டுள்ளார்.