சாதாரண ஊழியனை விட CEO-க்களுக்கு 500 மடங்கு சம்பளம் - அமெரிக்க முதலாளியம் குறித்து ஸ்ரீதர் வேம்பு கடும் விமர்சனம்!
ஜோஹோ நிறுவன சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு Freshworks மீது தொடுத்த தாக்குதல், விமர்சனங்களைத் தொடர்ந்து இன்றும் தன் எக்ஸ் தளத்தில் அமெரிக்க முதலாண்மையியத்தின் பேராசை பிடித்த சுயநலப்போக்குகளை பற்றி கடுமையாக சாடியுள்ளார்.
வங்கியில் ரொக்கமாக 1 பில்லியன் டாலர்களை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையிலிருந்து தனது பங்குகளையே மீள்கொள்முதல் செய்யக்கூடிய பேராசை பிடித்த ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் 660 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் போது தங்கள் ஊழியர்களிடமிருந்து விசுவாசத்தை மட்டும் எதிர்பார்க்கலாமா என்று ஜோஹோ நிறுவன சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு தொடுத்த தாக்குதல் விமர்சனங்களைத் தொடர்ந்து இன்றும் தன் எக்ஸ் தளத்தில் அமெரிக்க முதலாண்மையியத்தின் பேராசை பிடித்த சுயநலப்போக்குகளை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளார்.
அவர் தன் எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டதாவது,
Nvidia மற்றும் AMD போன்ற நிறுவனங்களை உதாரணங்களாக நான் முன் வைக்கிறேன். இந்த நிறுவனங்கள் இறுதியில் தங்களின் பொறியாளர்கள் மற்றும் முக்கியமாக ஆழ்-தொழில்நுட்பத்தில் வேலை செய்ய நீண்ட காலம் பணியாற்றிய பொறியாளர்கள் காரணமாக வெற்றி பெற்ற நிறுவனமாகத் திகழ்கின்றனர். அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தைவானைச் சேர்ந்தவர்கள். இப்போது தைவானே TSMC போன்ற நம்பமுடியாத ஆழமான தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கியுள்ளது, திறமைக்கு ஒத்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இத்தனைக்கும் தைவான் இலங்கை அளவு மக்கள் தொகை கொண்ட நாடுதான்.
மூலதனக் கட்டுமானம் உண்மையில் இப்படித்தான் வேலை செய்யும். அதாவது, உங்கள் ஊழியர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுங்கள், ஊழியர்கள்தான் உங்களின் மதிப்பு மிக்க சொத்து, இவர்கள் மூலமே நீண்ட கால வெற்றி நிறுவனங்களை உருவாக்க முடியும்.
மாறாக இண்டெல் நிறுவனம் என்ன செய்தது, ‘வால்ஸ்ட்ரீட் மீது அக்கறை கொண்டது. அதனால் TSMC, AMD மற்றும் Nvidia போன்ற நிறுவனங்களிடம் தோற்றது. இப்போது வால்ஸ்ட்ரீட்டையும் இழந்தது. பிற்கால ஹெட்ஜ் ஃபண்ட், மற்றும் பங்குவர்த்தகம் பங்குவிலை, பங்கு வர்த்தக வருவாய் மீதான முதலீடுகள் ஆகிய முழுக்க முழுக்க நிதியியத்தை நாம் முதலாளியம் என்று நினைப்பது ஆங்கில மொழியின் வக்கிரமாகும்.
முதலாளித்துவத்திற்கு முதலாளிகள் தேவை - இவர்கள் சொந்த மூலதனத்தை சொந்தமாக பணயம் வைப்பவர்கள். மாறாக அமெரிக்காவில் இன்று நடப்பதோ, மற்றவர்களின் பணத்தில் விளையாடுவோம், வெற்றி பெற்றால் நிறைய லாபங்களை எடுத்துச் செல்வோம், தோற்றால் நம்மை மீட்க நிதியுதவி கேட்டு மத்திய வங்கியை நாடுவோம். நாங்கள் எங்கள் நிதிக் கருவிகளைப் பணமாக்கிக் கொள்ள, சொத்து மதிப்பீட்டை உயர்வாக வைத்திருக்க மத்திய வங்கியை உற்சாகப்படுத்துவோம் - பங்குச் சந்தையை ஒருபோதும் கீழே விடமாட்டோம், என்ன நடந்தாலும் CEO-களுக்கு சராசரி ஊழியரை விட 500 மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற ரீதியில் பேராசைப் பொருளாதாரமாக நடந்து வருகிறது. இது முதலாளித்துவமாக உங்களுக்குத் தெரிகிறதா?
ஆனால், அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக இத்தகைய நடைமுறையைத்தான் மேற்கொண்டு வருகிறது. இதை விட பயங்கரம் இந்த நடைமுறை அங்கு சிவில் யுத்தம் நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு சிலிகான்வேலி வங்கியை மீட்க மத்திய வங்கி உதவியது, இதனை நிறைய தொழில்நுட்ப முனைவோர்கள் கொண்டாடினர்.
இவர்கள் உடனே ‘கேப்பிடலிசம்’ என்பதை மறந்து விட்டனர். இந்தியா இத்தகைய அமைப்பை இறக்குமதி செய்து கொள்ள வேண்டுமா? இந்த நடைமுறையை பின்பற்ற மறுத்தால் அது சோஷலிசமா? இத்தகைய சிஸ்டம்தான் இங்கு வர வேண்டுமா? ஆகவே எனக்கு சோஷலிசம் குறித்து யாரும் சொற்பொழிவு ஆற்ற வேண்டாம்.
முதலில் உண்மையான கேப்பிடலிசத்தை பின்பற்றுங்கள். உங்கள் மக்கள் நலன்களை கவனியுங்கள். அதுவும் நம் தர்மம்தான், என்று விளாசியுள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் இத்தகைய நீண்ட பதிவு தத்துவார்த்தமாக, கோட்பாட்டு ரீதியாக சரி என்றாலும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் மீது மட்டும் இத்தகைய தாக்குதல் ஏன் என்பதற்கான ஒரு பின்னணித் தகராறு இரு நிறுவனங்களுக்கு இடையிலும் உண்டு.
அதாவது, ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் ஜோஹோவின் முன்னாள் ஊழியர். இரு நிறுவனங்களுக்கும் இடையே வழக்காடுதல் உள்ளன. அதாவது, ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் ஜோஹோவிடமிருந்து ரகசியத் தகவலைத் திருடியதாக ஜோஹோ நிறுவனம் ஃப்ரெஷ்வொர்க்ஸ் மீது வழக்கு தொடர்ந்தது. தகவல் திருடியது உண்மைதான் என்று ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, 2021-ல் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இந்த கசப்பான வரலாறு இப்போது ஸ்ரீதர் வேம்பு அந்நிறுவனத்தை மட்டுமல்லாது வர்த்தகத்தின் ‘அமெரிக்க கேப்பிடலிச மாடலையும்’ கேள்விக்குட்படுத்தத் தூண்டியுள்ளது.