Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை’ - மாறன் இடமிருந்து அஜய் சிங்குக்கு ஸ்பைஸ்ஜெட் போனது எப்படி?

விமான நிறுவனம் நடத்துவது எளிதல்ல என்பதற்கு வரலாற்றில் இருந்து பல உதாரணங்கள் உள்ளது. அதில் நமக்கு தெரிந்த, நம்மால் எளிதாக புரிந்துக் கொள்ளக்கூடிய உதாரணம் ஸ்பைஸ்ஜெட்.

‘தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை’ - மாறன் இடமிருந்து அஜய் சிங்குக்கு ஸ்பைஸ்ஜெட் போனது எப்படி?

Tuesday December 01, 2020 , 4 min Read

'சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு விமானப் போக்குவரத்துத் துறை குறித்த ஆர்வம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. தவிர விமான நிறுவனம் தொடங்குவது எளிதோ என்னும் எண்ணம் கூட உருவாகி இருக்கிறது.


ஆனால் விமானம் நிறுவனம் நடத்துவது எளிதல்ல என்பதற்கு வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை நம்மால் கூற முடியும். நமக்கு தெரிந்த, நம்மால் எளிதாக புரிந்துக் கொள்ளக்கூடிய உதாரணம் ஸ்பைஸ்ஜெட்.


தென் இந்தியாவில் மிகப்பெரிய மீடியா குழுமமாக சன் குழுமம் இந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வாங்கியது. ஆனால் வாங்கிய சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. கிட்டத்தட்ட நிறுவனம் மூடப்பட போகிறது என்னும் சூழலில் அஜய் சிங், அந்த நிறுவனத்தை வாங்கி மீண்டும் நடத்தத் தொடங்கினார்.

ஸ்பைஸ்ஜெட்

SpicJet-ல் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...


சில தொழில்களில் மெதுவான சீரான வளர்ச்சி இருக்கும், சில தொழில்களில் குறுகிய காலத்துக்கு மட்டுமே வளர்ச்சி இருக்கும், சில தொழில்களில் குறிப்பிட்ட சுழற்சியில் மட்டுமே சிறப்பாக செயல்படும் (ஸ்டீல், சிமெண்ட், உள்ளிட்டவை). சில தொழில்களில் குறுகிய காலத்தில் மிக அதிகமாக வளர்ச்சி இருக்கும்.


ஆனால் இதுபோன்ற எந்தவரையரைக்குள்ளும் விமானப் போக்குவரத்துத் துறை வராது. தற்போது லாபம் கிடைத்திருக்கிறது என்றால் அடுத்த காலாண்டிலும் லாபம் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. இது போன்ற ஒரு சூழலில்தான் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கலாநிதி மாறன் வாங்கினார்.


ராயல் ஏர்லைன்ஸ் என்னும் பட்டியலிடப்பட்ட நிறுவனம் செயல்பட்டுவந்தது.  ஆனால் பெரிய அளவில் எந்தவிதமான ஏற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு அஜய் சிங் கணிசமான பங்குகளை வாங்கினார். இவருடன் இணைந்து வெளிநாட்டு முதலீட்டாளரான கன்ஸகராவும் முதலீடு செய்தார். அமெரிக்க முதலீட்டாளரான வில்பர் ரோஸ் 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் ரூ.345 கோடி முதலீடு செய்து 30 சதவீத பங்குகளை வாங்கினார். 

Ajay singh

ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்

சில ஆண்டுகளாகவே நஷ்டத்தை சந்தித்துவந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த 2010 ஆண்டு சமயத்தில் லாபம் அடையத் தொடங்கியது. இந்த சமயத்தில் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் முதலீடு செய்தார்.

இரு ஆண்டுகளில் சுமார் 50 சதவீத லாபத்தில் இந்த பங்குகளை கலாநிதி மாறனிடம் விற்றுவிட்டு வில்பர் ரோஸ் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஓபன் ஆஃபர் மூலம் மேலும் ரூ.800 கோடி ரூபாய் முதலீடு செய்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 53 சதவீத பங்குகளை மாறன் கைப்பற்றினார்.

விமானப் போக்குவரத்துத் துறை என்பது சிக்கலான துறை, நீங்கள் மீடியாவில் நல்ல லாபத்தில் இயங்கி வருகிறீர்கள், அதே லாபம் இங்கு கிடைக்குமா என எக்கனாமிக் டைம்ஸ் கேள்வி எழுப்புகிறது. அதற்கு பதில் அளித்த மாறன்,

“ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு அந்தத் துறை குறித்து தொலைநோக்கு பார்வை இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு திறன் தேவை. தொலைக்காட்சி சானல் தொடங்கும்போது இதேபோன்ற விமர்சனம் இருந்தது. அதேபோல எப்எம் ரேடியோ, டிடிஹெச் போன்ற தொழில்களில் இறங்கும்போது இதே விமர்சனம் இருந்தது,” என மாறன் கூறினார்.

ஆனால் ஸ்பைஸ்ஜெட் வாங்கிய 3 ஆண்டுகளுக்குள்ளாகவே கடும் சிக்கலை சந்திக்க வேண்டி இருந்தது. அதுவரை இருந்த விமானங்கள் இல்லாமல் புதிய ரக விமானங்களை (பம்பார்டியர்) வாங்கினார் மாறன்.


இதனால் வருமானத்தில் பெருமளவுக்கான தொகை விமானங்களைப் பராமரிப்பதிலே செலவானது. மேலும் வாங்கிய விமானங்களை சரியாக பயன்படுத்தவும் முடியவில்லை. அதாவது விமானம் அதிக நேரம் பயணிக்க முடியவில்லை. விமானங்களை தரை இறக்குவது, மீண்டும் எடுப்பது ஆகியவை சரியாக நடக்கவில்லை. 2013ம் ஆண்டு இறுதியில் கடும் சிக்கலை சந்திக்கத் தொடங்கியது.


நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. தவிர எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, விமான நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை என அனைத்து தரப்பிலும் தொகை அதிகரித்து. இதன் தொடர்ச்சியாக அதிகளவுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

kalanithi maran

கலாநிதி மாறன்

அந்த சமயத்தில் தனிப்பட்ட முறையில் பல நிறுவனங்களின் தலைவர்களிடன் உரையாடி இருக்கிறேன். பெரும்பாலானவர்கள் ஸ்பைஸ்ஜெட்டில் டிக்கெட் பதிவு செய்யத் தயங்கினார்கள். சிக்கல் அதிகரித்தது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தாததால் பெட்ரோல் கிடைக்கவில்லை. இதனால் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகளுக்கும் ஸ்பைஸ்ஜெட் பணியாளர்களுக்கும் நடந்த வாக்குவாதம் அப்போது பிஸினஸ் நாளிதழ்களின் தலைப்பு செய்தியானது.

அந்த சமயத்தில் சன் டிவியின் நிகர லாபம் 717 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் மேலும் முதலீடு செய்வதை சன் குழுமம் விரும்பவில்லை. சன் குழுமம் ஏற்கெனவே போதுமான தொகையை முதலீடு செய்தாகிவிட்டது.  மேலும் முதலீடு செய்ய தொகை இல்லை. அதனால் வங்கி நிதியை எதிர்பார்க்கிறோம். அதற்கு நிறுவனர்கள் உத்தரவாதம் கொடுப்பார்கள் என அப்போதைய தலைமை நிதி அதிகாரி எஸ்.எல்.நாராயணன் தெரிவித்தார்.


தலைமை செயல்பாட்டு அதிகாரி (சி.ஓ.ஓ) சஞ்சிவ் கபூர், எண்ணெய் நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டினார். எண்ணெய் நிறுவனங்கள் தேவையான எரிபொருளை வழங்காததால் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இன்று காலைமுதல் இயங்கவில்லை என ட்விட் செய்திருந்தார்.

மீண்டும் அஜய் சிங்

கலாநிதி மாறன் வெளியேறும் சமயத்தில் நிறுவனத்தின் நெட்வொர்த் எதிர்மறையாக இருந்தது. குறுகிய கால கடன்கள் ரூ.2,000 கோடியாக இருந்தது. 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.687 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. கிட்டத்தட்ட மீண்டும் ஒரு கிங்பிஷர் என்னும் சூழலில்தான் அப்போது ஸ்பைஸ்ஜெட் இருந்தது.


உயிருக்கு போராடும் போது ஆக்ஸிசன் கொடுத்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், இறந்தபிறகு ஆக்ஸிசன் கொடுப்பதால் எந்த பயனும் இல்லை என அப்போதைய விமானப் போக்குவரத்து துறை இணைசெயலாளர் அசோக் குமார் ஸ்பைஸ்ஜெட் குறித்த விவாதித்தின் போது குறிப்பிட்டார். அதனால் ஸ்பைஸ்ஜெட்டை காப்பாற்றும் நடவடிக்கைகளை அனைத்து தரப்பும் எடுத்தது. இதனைத் தொடர்ந்து அஜய் சிங் ரூ.500 கோடி முதலீடு செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

அஜய் சிங்

அஜய் சிங், பட உதவி: Time of India

இதனைத் தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து வெண்டார்களிடம் பேசி கால அவகாசம் வாங்கப்பட்டது. அதிக சம்பளம் வாங்குபவர்கள் நீக்கப்பட்டனர். எண்ணெய் நிறுவனங்கள் கால அவகாசம் வழங்குமாறு விமானபோக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

இந்த நடவடிக்கைகளால் நிறுவனத்தின் பணப்புழக்கம் உயர்ந்தது. மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் சரியான நேரத்துக்கு செயல்படும் என்னும் உத்தரவாதத்தை ஸ்பைஸ்ஜெட் வழங்கியதால் பயணிகளுக்கு நம்பிக்கை உயர்ந்தது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் நடவடிக்கைகளிலும் ஸ்பைஸ்ஜெட் இறங்கியது.

காலமும் அஜய் சிங்குக்கு சாதகமாக இருந்தது. கலாநிதி மாறன் வாங்கும் சமயத்தில் (2010) ஒரு லிட்டர் ஜெட் பெட்ரோல் 40 ரூபாயாக இருந்தது. ஆனால் அடுத்த சில காலாண்டுகளில் அதிகபட்சம் 77 ரூபாயாக அதிகரித்தது. ஸ்பைஸ்ஜெட் நஷ்டத்துக்கு இதுவும் முக்கியமான காரணம்.

அஜய் சிங் வாங்கும் சமயத்தில் பெட்ரோல் விலை குறையத் தொடங்கியது. 40 ரூபாய்க்கு கீழ் கூட சரிந்தது. 2014-15 நிதி ஆண்டில் ரூ.2410 கோடி அளவுக்கு எரிபொருளுக்கு செலவு செய்யப்பட்டது. ஆனால் 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.1,392 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. செலவுகள் குறைந்ததால் லாப பாதைக்கு ஸ்பைஸ்ஜெட் சென்றது.
kalanithi family

கலாநிதி மாறன் மற்றும் மனைவி, படம்: Rediff

மீண்டும் தொடங்கிய இடத்தில்...

2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை காலத்தில் 18 காலாண்டுகளில் ஸ்பைஸ்ஜெட் லாபத்தை சந்தித்திருக்கிறது. ஆனால் கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை நிறுவனம் சந்தித்துவருகிறது.


கோவிட் காரணமாக விமான நிறுவனங்களுக்கு பாதிப்பு என்றாலும் அதற்கு முந்தைய காலாண்டுகளிலும் ஸ்பைஸ்ஜெட் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.


மார்ச் காலாண்டில் 807 கோடி நஷ்டம், ஜூன் காலாண்டில் 593 கோடி நஷ்டம், செப்டம்பர் காலாண்டில் 112 கோடி நஷ்டம் என தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்துவருகிறது. நஷ்டம் குறைவதை வைத்து நிலைமை மேம்பட்டுவருகிறது என சொல்ல முடியாது. ஸ்பைஸ்ஜெட் மட்டுமல்லாமல் மொத்த விமானப் போக்குவரத்து துறையும் திசை தெரியாமலே உள்ளன.