பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து இழைகளாக மாற்றும் மாணவர்!
பள்ளி மாணவரான 17 வயது ஆதித்யா பங்கர் சொந்தமாக நிறுவனம் தொடங்கி, பிளாஸ்டிக்கை அதிகளவில் மறுசுழற்சி செய்து துணிகளின் இழைகளாக மாற்றி வருகிறார்.
பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்ந்து தீர்வு காணவேண்டிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வரும் நிலையிலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிலங்களை மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்து வருகிறது.
பிளாஸ்டிக் மறுசுழற்சி இந்தப் பிரச்சனையின் தீர்வு நோக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. பள்ளி மாணவரான 17 வயது ஆதித்யா பங்கர் பிளாஸ்டிக்கை அதிகளவில் மறுசுழற்சி செய்து துணிகளின் இழைகள் போன்று மாற்றி வருகிறார். இதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கியிருக்கிறார்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஆதித்யா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 'Trash to Treasure’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். 2019ம் ஆண்டு ஆதித்யா சீனா சென்றிருந்தார். அப்போதுதான் அவருக்கு இந்த யோசனை வந்துள்ளது.
சீனாவில் நடைபெற்ற ஜவுளி கண்காட்சிக்கு ஆதித்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் கழிவுகளை இழைகளாக மாற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிய வந்துள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதை உணர்ந்து இந்த முயற்சியில் இறங்கிவிட்டார்.
குடும்பத்தினர் ஆதரவு
ஆதித்யாவின் முயற்சிக்கு அவரது குடும்பத்தினர் முழு ஆதரவு அளித்துள்ளனர்.
ஆதித்யாவின் குடும்பத்தினர் ஜவுளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். எனவே அவர் தயாரிக்கும் இழைகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இன்று ஆதித்யாவின் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை 10 ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை ஆதித்யா மறுசுழற்சி செய்து நூல் இழைகளாக மாற்றியுள்ளார்.
ஆதித்யா பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்போரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்கிறார். அவை சுத்தப்படுத்தப்பட்டு சிறு துண்டுகளாக்கப்படுகின்றன. பின்னர், அவை உருக்கப்பட்டு இயந்திரங்களின் உதவியுடன் இழைகளாக மாற்றப்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
ஒரே ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மக்குவதற்கு 450 ஆண்டுகள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கவேண்டும் என்பதே ஆதித்யாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழில்: ஸ்ரீவித்யா