மன அழுத்தமா? ஆமாம் எனச் சொன்ன ஊழியர்களை பணி நீக்கம் செய்த சலூன் நிறுவனம் - வெடித்தது விவாதம்!
Yesmadam என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், ஊழியர்கள் மன அழுத்தம் கொண்டுள்ளனரா? என்பதை அறிவதற்காக சர்வே நடத்திய பின் மேற்கொண்ட நடவடிக்கை இணையத்தில் அதிர்ச்சி அலையை உண்டாக்கி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் மனநிலையை நிறுவனங்கள் அறிந்து கொள்ள நினைப்பதும், முயற்சிப்பதும் நல்லது தான். இதற்காக சர்வே நடத்துவதும் வரவேற்க தக்கது தான். ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, ஊழியர்கள் மன அழுத்தம் கொண்டுள்ளனரா? என்பதை அறிவதற்காக சர்வே நடத்திய பின் மேற்கொண்ட நடவடிக்கை இணையத்தில் அதிரிச்சை அலையை உண்டாக்கி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
YesMadam எனும் சலூன் இல்லச் சேவை நிறுவனம், அண்மையில் தனது ஊழியர்கள் மத்தியில், மனச்சோர்வு தொடர்பான சர்வே நடத்தியது. பணிச் சூழலில் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்களா? என இதில் கேட்கப்பட்டிருந்தது.
ஊழியர்கள் இந்த கேள்விக்கு பதில் அளித்தனர். மனச்சோர்வுக்கு உள்ளான ஊழியர்கள் அதற்கான பரிவை எதிர்பார்த்த நிலையில், நிறுவன பதில் நடவடிக்கையால் திகைத்தனர். ஆம், நிறுவனம் அவர்களை பணி நீக்கம் செய்வதாக மெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான ஸ்கிரீன்ஷார்ட்டும் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தியை வெளியிட்ட இந்தியா டுடே, ஸ்கிரீன்ஷார்ட்டின் மூலத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை, என தெரிவித்துள்ளது.
ஸ்கீரீன்ஷார்ட்டில் பகிரப்பட்ட இ-மெயிலில், பணியிட்டத்தில் மன அழுத்தம் தொடர்பாக அறிந்து கொள்ள அண்மையில் சர்வே நடத்தினோம். ஆரோக்கியமான பணிச்சூழலை முன்னிறுத்தும் நிறுவனம் என்ற முறையில் உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம்.
பணியிடத்தில் யாரும் மன அழுத்தம் கொள்ளாததை உறுதி செய்ய, மன அழுத்தம் கொண்டவர்களை பணியிலிருந்து நீக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெயில் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இ-மெயிலின் பரிவற்ற முறையிலான உரையாடலை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது மிக மோசமான பணி நீக்க முறை என ஒருவர் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். மன அழுத்தம் கொண்டிருப்பதற்காக ஒரு நிறுவனம் பணி நீக்கம் செய்வது சரியா, என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பலரும் இணையத்தில் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக எந்த பதிலும் அல்லது விளக்கமும் அளிக்கவில்லை.
Edited by Induja Raghunathan