'நகைகளை அடகுவைத்தே அம்மா என்னை படிக்கவைத்தார்' - அம்மாவை பெருமைப்படுத்திய பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ்!
நகைகளை விற்று ஐஏஎஸ் படிக்க வைத்த அம்மாவை சந்தோஷப்படுத்த, தன்னுடைய பெயருக்கு பின்னால் அவரின் பெயரை சேர்த்ததாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் தேர்வுகளிலேயே மிகவும் பிரபலமான மற்றும் கடினமான தேர்வு என்றால் அது UPSC நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு. தமிழ்நாட்டில் இருந்து பலர் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்று கலெக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா பங்கஜம்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் பிறந்து படித்து வளர்ந்தவர், தற்போது தஞ்சாவூரின் கலெக்டராக பொறுப்பு வகிக்கிறார்.
ஐஆர்எஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இருந்து கொண்டே 2015ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வெழுதிய இவர், அதில் வெற்றி பெற்று 133வது இடத்தை பிடித்தார். 2015ல் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றவர், கோயம்புத்தூரில் ஆட்சியராக பயிற்சி பெற்றார். தொடர்ந்து ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் சார் ஆட்சியராக பணி செய்தார். அதன் பிறகு, திருப்பத்தூரில் சார் ஆட்சியராகவும் இருந்தவர், மதுரையில் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர், மகளிர் மேம்பாட்டு இயக்குநகரத்தில் செயல் இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவரை 2024ம் ஆண்டு தஞ்சை மாவட்ட கலெக்டராக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தஞ்சை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பெண் ஆட்சியராக பொறுப்பேற்ற பிரியங்கா அதே மண்ணைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமையான விஷயமான இருந்தது.
பேச்சில் மரியாதை, மக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்வு காண்பதில் கண்ணியமிக்கவர் என்று தஞ்சாவூர் மாவட்ட மக்களை தன்னுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சியடை வைத்தார் பிரியங்கா பங்கஜம். பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஒரு முறை மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு சாலை மற்றும் பேருந்து வசதி கோரி கவனத்தை ஈர்ப்பதற்காக பள்ளிச் சீருடையில் மாணவர்களை அழைத்து வந்தவர்களை கடுமையாக சாடினார்.
பள்ளி செல்லும் மாணவர்களிள் நேரத்தை வீணடித்தால் FIR போட்டு வழக்கு பதிந்துவிடுவேன் என்று பெற்றோரையும், கவுன்சிலரையும் எச்சரித்தார். மற்றொரு சமயம் மனு கொடுக்க வந்த பெண் காலில் செருப்பை கழட்டி விட்டு நின்ற போது, 'எதற்காக செருப்பை கழட்டினீர்கள்? போடுங்கள்...' என்று சொல்லி சமத்துவத்தை கற்றுத் தந்தார். இப்படி, தான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அறத்தை முன்நிறுத்தும் பிரியங்கா தஞ்சாவூர் மாவட்டப் பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஆட்சியர் பிரியங்காவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
“நகையை அடமானம் வைத்து என்னுடைய அம்மா என்னை படிக்க வைத்தார். என்னுடைய அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், அவரை பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. சின்ன வயசுலேருந்து என்னவாக வேண்டும் என்கிற திட்டம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை. எங்க அம்மா சந்தோஷப்படவேண்டும், அவங்க பொண்ணு நான்னு எல்லோரும் சொல்றத அவங்க கேட்கனும்னு நெனைச்சேன். ஐஏஎஸ் ஆனதுக்கு அப்புறம் என்னோட பேருக்கு பின்னாடி 'பங்கஜம்' எனும் அவருடைய பெயரை சேர்த்துக் கொண்டேன். பிரியங்கா ஐஏஎஸ் என்று போட்டுக் கொள்வதை விட என்னுடைய பெயரை 'பிரியங்கா பங்கஜம்' ஐஏஎஸ் என்று அம்மாவின் பெயரையும் சேர்த்து போட்டுக் கொள்வதே அவருக்கு நான் என்னுடைய நன்றிக்கடனை திரும்ப செலுத்தும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன், என்று தெரிவித்து இருந்தார்.“
மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், கல்வி மட்டுமே ஒருவரின் நிலையை உயர்த்தும் என்பதை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார் பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ்.

க்ளீனர் டு ஐஏஎஸ்..! - யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே, உழைப்பால் உயர்ந்த அப்துல் நாசர்!