வீட்டின் சமையல் அறையில் தொடங்கி 200 கோடி ரூபாய் நிறுவனமாக உருவெடுத்த மெடிமிக்ஸ்!
இந்த ஆயுர்வேத பிராண்ட் பல்வேறு சவால்களைக் கடந்து துறையில் நிலைத்து செயல்பட்டு தற்போது 30-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஆர்கானிக் சோப்பு வகைகள் சந்தையில் அறிமுகமாவதற்கு வெகு காலம் முன்பே இந்திய நுகர்வோர்களின் வீடுகளில் சருமத்திற்கான செயற்கை க்ளென்சர்கள் முக்கிய இடம் வகித்திருந்தது. பல்வேறு சருமப் பராமரிப்பு பிராண்டுகள் தவறான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை நம்பவைத்து ரசாயனங்களையும் எஸ்எல்எஸ் சார்ந்த பொருட்களையும் வழங்கியது.
எனினும் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்பம் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்த சமயத்தில், ஆயுர்வேதத்தின் மீது மக்கள் தயக்கம் காட்டிய காலகட்டத்தில் உருவானதுதான் ’மெடிமிக்ஸ்’.
சோலயில் குடும்பம் சருமப் பிரச்சனைகளுக்கு விப்ரதி எண்ணெயைப் பயன்படுத்திய சமயத்தில் உருவானதுதான் மெடிமிக்ஸ். 1969-ம் ஆண்டு இந்தக் குடும்பத்திற்கு முக்கியமான காலகட்டமாக இருந்தது. அந்த சமயத்தில்தான் மறைந்த விபி சிதன் சருமத்தை பாதுகாக்கும் சோப்பை உருவாக்க பாரம்பரியத்தையும் வணிகம் தொடர்பாக அவருக்கிருந்த புத்திக்கூர்மையையும் ஒன்றிணைத்தார்.
ஆயுர்வேத சோப்பு கட்டி அறிமுகப்படுத்தப்பட்டது
இந்திய ரயில்வே துறையில் அலோபதி மருத்துவராக பணிபுரிந்து வந்த சிதன் 1969-ம் ஆண்டு மெடிமிக்ஸ் ஆயுர்வேத பிராண்டை அறிமுகப்படுத்தினார். அவரது பணி வாழ்க்கையின்போது சருமப் பிரச்சனைகளுடன் சிகிச்சைக்கு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்தார். ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவரான சிதன் ஆயுர்வேத முறையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்பினார். 18 மூலிகைகள் மற்றும் இயற்கை எண்ணெயைச் சேர்த்து மெடிமிக்ஸ் தயாரித்தார்.
ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்டு 18 மூலிகைகள் மற்றும் இயற்கை எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மெடிமிக்ஸ் இன்றளவும் மக்கள் தேடி வாங்கும் பிராண்டாக விளங்குகிறது.
இயற்கையின் ரகசியங்கள் அடங்கிய இந்த மரபானது பாதுகாக்கப்பட்டு பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. இயற்கையான முறையில் தீர்வுகாணக்கூடிய பிரச்சனைகளுக்கு இதைக் கொண்டு பல்வேறு தயாரிப்புகள் உருவாக்கப்பட்டது.
50 ஆண்டுகள் கடந்த நிலையில் சருமப் பராமரிப்பு பிரிவில் மெடிமிக்ஸ் முன்னணி ஆயுர்வேத பிராண்டாக உருவாகியுள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் தரமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்த பிராண்ட் இதுவரை நிதி ஏதும் உயர்த்தவில்லை.
இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 200 கோடிக்கும் அதிகம் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது. சோப்பு, ஃபேஸ் வாஷ், பாடி வாஷ், மாய்ஸ்சரைசர், ஷாம்பூ, ஹைஜீன் வாஷ் என பல்வேறு பராமரிப்புப் பொருட்களை வழங்குகிறது. புதிய பிரிவுகளில் தயாரிப்புகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
சோலயில் பிரைவேட் லிமிடெட் (மெடிமிக்ஸ் தாய் நிறுவனம்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் சோலயில் எஸ்எம்பி ஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் கூறும்போது,
”அறிவியலாளர் மற்றும் ஆயுர்வேத நிபுணர்கள் எங்களது பல்வேறு சூத்திரங்களை சோதனை செய்கின்றனர். எங்களது நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூலிகை மற்றும் இயற்கை தயாரிப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. நுகர்வோரின் முக்கியத் தேவைகளை நாங்கள் கண்டறிந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பரிசோதனை மூலம் ஆயுர்வேத தீர்வுகளை வழங்குகிறோம்,” என்றார்.
2011-ம் ஆண்டு டாக்டர் விபி சிதன் மறைந்த பிறகு சோலயில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொறுப்புகளை பிரதீப் ஏற்றுக்கொண்டார். மெடிமிக்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் குட்டிகுரா, கிருஷ்ணா துளசி என்கிற சோப்பு பிராண்ட் ஆகிய இரண்டு பிராண்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
துறையில் நிலைத்திருத்தல்
தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் பிரிவில் சோப்பு மற்றும் ஃபேஸ்வாஷ் சந்தை அதிக போட்டி நிறைந்தது. பல்வேறு பிராண்டுகளுடன் போட்டியிடுவதும் சந்தைப்படுத்துவதும் கடினமாக இருப்பதாக பிரதீப் தெரிவிக்கிறார். மக்கள் மூலிகை மற்றும் ஆர்கானிக் தயாரிப்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினாலும் ஃபேன்சி சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை முழுமையாக நிராகரிக்கவும் தயங்குகின்றனர்.
மெடிமிக்ஸ் இத்தகைய ஒழுங்கற்ற சந்தையில் சிறந்து விளங்க மாறுபட்ட தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பிரதீப் கூறும்போது,
“மற்ற பிராண்ட்களைக் காட்டிலும் மாறுபட்ட ஒன்றை வழங்க விரும்பினோம். நுகர்வோரிடம் இது குறித்து கலந்துரையாடியபோது ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற பழங்கால இந்திய நடைமுறைகள் மெதுவாகவே செயல்படும் என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு லக்ஷ்மணனின் உயிரைக் காப்பாற்றிய சஞ்சீவினி பூதி குறித்து ராமாயணத்தில் படித்திருப்போம். இன்றும் மக்கள் சரும தொற்றுக்கள் குணமாக நீம் வாஷும் சருமம் வறண்டு விடாமல் இருக்க கற்றாழையும் பயன்படுத்துகின்றனர்.
சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை உடனடியாக நீக்க கடலைமாவையும் திருமண நிகழ்வுகளின்போது சருமம் உடனடியாக பளபளக்க மஞ்சளையும் பயன்படுத்துகின்றனர். ஆயுர்வேத மூலப்பொருட்கள் உடனடியாக செயல்படும் எனில் ஆயுர்வேதம் மட்டும் எவ்வாறு மெதுவாக செயல்படும்? " என்றார்.
மெடிமிக்ஸ் தயாரிப்புகளில் விரைவாக செயல்படக்கூடிய மூலப்பொருட்கள் உள்ளன. இதிலுள்ள 18 மூலிகைகளின் கலவையானது தெளிவான, முகப்பருக்கள் இல்லாத, துர்நாற்றம் இல்லாத சருமத்தை அளிக்கிறது. இந்த பிராண்ட் அதன் செயல்படும் திறனுக்கும் தரத்திற்கும் பெயர்போனது என்கிறார் பிரதீப். இந்நிறுவனம் பாராபீன் இல்லாத, விலங்குகளின்மீது சோதனை செய்யப்படாத தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த சோப்பு அமேசானில் அதிக நட்சத்திரக் குறியீடு பெற்றுள்ளது.
மெடிமிக்ஸ் ஆயுர்வேத பிரிவில் முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்த பிராண்ட் இளம் வாடிக்கையாளர்களைச் சென்றடையும் நோக்கத்துடன் ‘வேகமாக செயல்படக்கூடிய ஆயுர்வேதத்தைக் கொண்டு சருமத்தை பராமரிக்கலாம்’ என்கிற கருத்தை முன்வைக்கிறது. இந்த பிராண்டிற்கு புதுப்பொலிவை வழங்கி இந்த கருத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க மெடிமிக்ஸ் நிறுவனம் நடிகை பரினீதி சோப்ராவை இணைத்துக்கொண்டது.
உலகம் முழுவதும் சென்றடைதல்
இந்த மிகப்பெரிய துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மெடிமிக்ஸ் பல்வேறு சவால்களை சந்தித்தது. மற்ற பிராண்டுகளிடம் இருந்து வேறுபட்டு தனித்துவமாக செயல்படுவதுடன் ஆயுர்வேதத்தையும் ஊக்குவித்தது.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் மெடிமிக்ஸ் AVA க்ரூப் உடனான ஏற்பாட்டின்படி தற்போது தென்னிந்தியா தவிர இந்தியா முழுவதும் சென்றடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிராண்ட் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான் போன்ற 30க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
வருங்காலத் திட்டம்
சோலயில் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் பணிபுரிந்து வருகிறது. அனைத்து வகையான ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு தீர்வுகளுடன் மிகப்பெரிய ஆயுர்வேத பிராண்டாக உருவாக திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா