2020-ன் முக்கியமான 10 நிகழ்வுகள் என்ன? ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்!
திரும்பிப் பார்ப்போம் 2020ஐ – கவனத்தை ஈர்த்த டாப் 10 சம்பவங்கள்!
திரும்பிப் பார்ப்போம் 2020 – கவனத்தை ஈர்த்த டாப் 10 சம்பவங்கள்!
ஆண்டின் இறுதியில் வழக்கம்போல தொலைக்காட்சிகள், அடுத்தாண்டு எப்படியிருக்கும் என்று ஜோதிடர்களைக் கேட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படித்தான் 2019ம் ஆண்டு இறுதியில், 2020ம் ஆண்டு எப்படியிருக்கும் என்று கேட்க, ஜோதிடர்களோ, ‘சிறப்பான ஆண்டு’ என உற்சாகமாகக் கூறினார்.
ஆனால், அந்த கணிப்புக்கும், நம் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு ஆண்டாக 2020ம் ஆண்டு இருந்தது. தற்போது ஆண்டின் இறுதி நாட்களில் இருக்கிறோம். இந்நிலையில் இந்தாண்டில் நாட்டில் நடந்த மிக முக்கியமான 10 சம்பவங்கள் குறித்து பார்ப்போம்.
NCA, CAA போராட்டங்கள்!
இந்திய அரசு, ‘குடியுரிமை திருத்தச்சட்டம் 2019’- ஐ அமல்படுத்தியது. குடியுரிமைச் சட்ட திருத்தத்தோடு, தேசியக் குடியுரிமை பதிவேட்டையும் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
முஸ்லீம்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணைந்து, சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று குரல் எழுப்பினர். 1971ம் ஆண்டுக்குப் பிறகு புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு அசாம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தாண்டு ஜனவரி மாதம், டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் என்ற இடத்தில் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சார்ந்து பின்பு இந்தியாவில் குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் இந்த குடியுரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, குடியுரிமை பெறுவதை தடை செய்தும், அவர்கள் குடியுரிமை பெறுவதற்கு வேறு வழிகளை நாட வேண்டி வந்ததையும் எதிர்த்தும் போராட்டங்கள் ஷாஹீன் பாக்கில் நடந்தது.
இந்த போராட்டத்தில் பில்கிஸ் பானு என்ற 82 வயதான மூதாட்டி ஒருவர் கலந்துகொண்டார். டைம் இதழ் வெளியிட்ட தலைச்சிறந்த மக்கள் செல்வாக்குடைய 100 பேர் கொண்ட பட்டியலில் பில்கிஸ் பானு இடம்பிடித்திருந்தார். இப்படியாக ஆரம்பித்தது 2020ம் ஆண்டு. கொரோனா பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்கம் காரணமாக இந்த போராட்டம் கைவிடப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் அவல நிலை!
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக டீ கடை முதல் மால்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள்தான். தங்கள் சொந்த ஊரை விட்டு, வேலை காரணமாக மற்றொரு இடத்தில் தங்கியிருந்தவர்களுக்கு கையில் காசில்லாமல், ஊருக்குப் போக பேருந்து, ரயில் வசதியில்லாமல் தவித்தனர்.
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு வரை நடந்தே சென்ற பலர், வழியில் இறந்தும் விட்டனர். காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சிய சிலர், ரயில்வே தண்டவாளங்கள் வழியாகத் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
குழந்தையை சூட்கேஸில் வைத்து இழுத்துச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களையும் இந்த 2020ல் நாம் பார்த்தோம். அதுமட்டுமா, கர்ப்பிணி தாய், பச்சிளம் குழந்தை, மகன், மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன், தனது தாயை இடுப்பில் சுமந்து சென்ற மகன் என புலம்பெயர் தொழிலாளர்களின் கஷ்டத்தை நாடே கண்டது. இந்த புகைப்படங்களைக் கண்டவர்கள் மனம் வெதும்பினர்.
ஹத்ராஸ் கொடூரம்!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் காட்டுத்தீயாய் எரிந்தது.
அரசியல் தலைவர்கள் தொடங்கி, விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், நெட்டிசன்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த கொடுமையைத் தொடர்ந்து, அந்த பெண் உயிரிழந்த நாளே அவசர அவசமாக அதிகாலை 2-3 மணிக்கு பெண்ணின் உடலை காவல்துறையினர் தகனம் செய்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவைச் சீண்டிய சீனா!
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் 15ம் தேதி இந்தியா – சீன ராணுவப் படைகளுக்கிடையே ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான தாக்குதலாக இது அமைந்தது. மேலும் இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம்!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். நெப்போடிசம் காரணமாக இந்த தற்கொலை நடத்திருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சுஷாந்த் சிங் தந்தை மகன், உயிரிழப்பு சந்தேகம் உள்ளதாக வழக்கு தொடர்ந்தார். பாலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணைக்கு இடையே பாலிவுட் பிரபலங்கள் சிலர் சட்டவிரோதமாக போதைப் பொருட்களைப் பரிமாற்றம் செய்ததாக சுஷாந்தின் தோழி, ரியா சக்ரபோர்த்தி 4 வாரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். பாலிவுட்டின் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை மையமாக வைத்து இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு!
கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு வந்த பார்சலை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுவரை 20 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் ரோஷ்ணி நில மோசடி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி வசிப்பவர்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கே அந்த நிலத்தை விற்று, அந்த பணத்தில் ஜம்மு காஷ்மீரின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் தான் ரோஷினி திட்டம்.
ஆனால் முக்கியப் புள்ளிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. இந்த மோசடி 2014ம் ஆண்டு தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரோஷினி திட்டத்தின் கீழ் சட்டத்திற்கு புறம்பாக நடந்த இந்த நில அபகரிப்பு குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
பெங்களூர் கலவரம்!
ஆகஸ்ட் 11 அன்று, முகமது நபியை பற்றிய அவதூறான செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரை கைது செய்யக் கோரி போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேரையும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டனர்.
விவசாயிகள் போராட்டம்!
’டெல்லி சலோ’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஹரியானா, பஞ்சாப், உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். மத்திய அரசின் சட்டதிருத்தங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியைச் சந்தித்தது. சட்டங்களை வாபஸ் பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறி, நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைகளை முடக்கியும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இது தவிர, தமிழகத்தில் பென்னிக்ஸ் – ஜெயராஜ் படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல அண்மையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் என பல்வேறு சம்பவங்கள் இந்த ஆண்டில் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.