Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மறக்க முடியாத ‘கேப்டன்’ விஜயகாந்த் சாதனைகளும் சரிவும்! - ஒரு பார்வை

சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கியவர் விஜயகாந்த். கறுப்பு எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையே சினிமாவிலும், அரசியலிலும் அவர் பெற்றிருந்த வெற்றிக்கு ஒரு சாட்சி.

மறக்க முடியாத ‘கேப்டன்’ விஜயகாந்த் சாதனைகளும் சரிவும்! - ஒரு பார்வை

Thursday December 28, 2023 , 7 min Read

எப்பொழுதும் சிவந்த கண்கள், பளீர் சிரிப்பு, வீர நடை, கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தவர் விஜயகாந்த்.

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, நடிகர், தேமுதிக தலைவர் என இரண்டு துறைகளிலும் கோலோச்சி, பல சாதனைகளைப் படைத்த விஜயகாந்த், உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (டிச.28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

vijayakanth

எல்லா வெற்றியாளர்களைப் போலவே விஜயகாந்தின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதுதான். சாதனைகளைப் போலவே அவர் எதிர்கொண்ட சறுக்கல்களும் அதிகம். ஆனாலும், நடிப்பில் மட்டுமின்றி, தன் நல்லுள்ளத்தால் தனக்கென ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கியவர்தான் விஜயகாந்த்.

விஜயகாந்தாக மாறியது விஜயராஜ்

 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பிறந்தவர் விஜயகாந்த். அவரது தந்தை அழகர்சாமி ரைஸ் மில் நடத்தி வந்தார். விஜயகாந்திற்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.

படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்த விஜயகாந்த்திற்கு சினிமா பார்ப்பதுதான் பிடித்தமான பொழுதுபோக்கு. அதிலும் குறிப்பாக தினமும் நண்பர்களுடன் சென்று தியேட்டரில் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பது வழக்கம். பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்களைக் காட்சிக்கு காட்சி விளக்குமளவிற்கு சினிமா மீது ஆர்வம் ஏற்படவே, சென்னைக்கு சென்று சினிமாவில் சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

vijayakanth

ஆனால் அவர் நினைத்தது போல சினிமா பார்க்கும் அளவிற்கு, அதில் நடிப்பது எளிதாக இருக்கவில்லை. எங்கு சென்றாலும் அவரது நிறத்தைக் காட்டி நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் தனது முயற்சியை அவர் கைவிடவில்லை.

இனிக்கும் இளமை

அவரது தொடர் முயற்சியின் பலனாக, 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சியில் இருந்ததால், விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார் எம்.ஏ.காஜா.

தொடர்ந்து ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்த போதும், அவை விஜயகாந்திற்கு பெயர் சொல்லும்படி அமையவில்லை. பல்வேறு தோல்விகளுக்கு பிறகு இவர் நடித்த "தூரத்து இடி முழக்கம்" எனும் திரைப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு பிறகு தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

vijayakanth

ஒரு கட்டத்தில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தையும் உருவாக்கினார் விஜயகாந்த். விஜயகாந்த்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக உயர்ந்தார்.

ஒரே ஆண்டில் 18 படங்கள்

'வைதேகி காத்திருந்தாள்', 'உழவன் மகன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.

vijayakanth

விஜயகாந்த நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் இராம நாராயணன் ஆவர். இவர்களது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் எல்லாமே வசூலை வாரிக் குவித்து, வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தன.

புரட்சிக்கலைஞர் டூ கேப்டன்

எழுச்சிக் கலைஞர், புரட்சிக் கலைஞர் என விஜயகாந்துக்குப் பெயர் வைத்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆவார். அப்போது அவரது வசனத்தில் உருவான படங்களில் விஜயகாந்த் நடித்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர் 1991-ல் ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளிவந்த பின்னர் அவர் எல்லோருக்கும் கேப்டன் ஆக மாறினார்.

நடிகர் சங்கத் தலைவர்

படங்களில் மட்டுமல்ல நேரிலும் அவரது தலைமைப் பண்பைப் பார்த்தவர், 1999-ம் ஆண்டு அவரை நடிகர் சங்கத் தலைவராக்கினார்கள். விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவரானபோது, அச்சங்கம் பெரும் கடன் சுமையில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது.

vijayakanth

Image courtacy: X

எனவே, சங்கத்தின் கடன் சுமையைக் குறைக்கத் திட்டமிட்டார் விஜயகாந்த். முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களை அழைத்துச் சென்று வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். அவரது இந்த முயற்சிக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தந்தனர். அதன்பலனாக நடிகர் சங்க கடன்கள் அடைக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், இந்தக் கலை நிகழ்ச்சிகளில் வசூலான பணத்தில் நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். இதற்காக பெரும் தொகையை அவர் வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.

அரசியல் பிரவேசம்

தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவிற்கும், அரசியலுக்கும் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பு உள்ளது. திரையில் தாங்கள் காணும் நாயகர்களை நிஜ வாழ்க்கையிலும் தலைவராக்க மக்கள் விரும்பினார்கள். விஜயகாந்த்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

vijayakanth

சினிமா மற்றும் நடிகர் சங்க அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரைச் சம்பாதித்து வந்த விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி, அதில், ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

பிற கட்சிகளுக்கு தன்னை மாற்று என்று முன்வைத்த அவர் மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்றார். அடுத்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று விஜயகாந்த்துக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்தது.

சினிமா மூலம் அவருக்குக் கிடைத்த ரசிகர்கள், அவரது கட்சிக்கும் அபிமானிகளாக மாறினர். அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த விஜயகாந்த் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தீவிர அரசியலில் இறங்கியதும், நடிப்பிற்கு முழுக்குப் போட்டார் விஜயகாந்த்.

பின்னர் தனது மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

எம்ஜிஆரின் பிரச்சார வாகனம்

கட்சி தொடங்கினாலே எதிர்க்கட்சிகளின் வெறுப்பையும், பகையையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இதற்கும் விதிவிலக்காக இருந்தவர்தான் விஜயகாந்த். எம்ஜிஆரின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜானகி இராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாராங்களில் எம்ஜிஆர் பயன்படுத்திவந்த வாகனத்தை, கட்சி தொடங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த விஜயகாந்திற்கு வழங்கினார் என்பதே இதற்கு ஒரு சாட்சி.

vijayakanth

தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கட்சி தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கோலோச்ச முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சூழலில், கட்சி ஆரம்பித்த 8 ஆண்டுகளில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். இன்றைய ஆளுங்கட்சியான திமுகவை விட 2011ல் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கட்சி என்ற பெருமையும் தேமுதிகவிற்கு உண்டு.

சறுக்கல்களும் சரிவும்

ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நீடிக்கவில்லை. அரசியலில் மாபெரும் சறுக்கல்களையும் அடுத்தடுத்து விஜயகாந்த் சந்தித்தார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார்.

vijayakanth

தேர்தலில் தோல்வி, கட்சிக்குள் கலகம், இவற்றுடன் அவரது உடல்நலக்குறைவும் சேர்ந்து கொள்ள அவரது சரிவு மிக வேகமாகத் தொடங்கியது. தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகளால் அவரால் அடிக்கடி மக்களைச் சந்திக்க முடியாமல் போனது. சமீபத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தில்கூட, சக்கர நாற்காலியில் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட கேப்டனைப் பார்த்து அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.

இப்போதும் மக்கள் மத்தியில் முக்கிய கட்சிகளில் ஒன்றாகவே தேமுதிக விளங்கி வருகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் விஜயகாந்த் என்ற ஒற்றை மந்திரம்தான்.

வறுமை ஒழிப்பு தினமாக மாறிய பிறந்தநாள்: கட்சி தொடங்கிய பிறகு, 2006ம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கத் தொடங்கினார் விஜயகாந்த். அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், மூன்றுசக்கர வண்டி, இஸ்திரிப்பெட்டி போன்ற நலத்திட்ட உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர்.

ஒருமுறை படப்பிடிப்பில் தனக்கேற்பட்ட கசப்பான அனுபவத்தில் இருந்து, தன் படங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சக நடிகர், நடிகையர் யாரும் பசியோடு வேலை பார்க்கக்கூடாது என முடிவெடுத்தார் விஜயகாந்த்.

vijayakanth

Image courtesy: X

அவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் முன்னணி நடிகை ஒருவருக்காக, விஜயகாந்தை சாப்பிட விடாமல் காத்திருக்க வைத்தனர் படக்குழுவினர். ஒரு கட்டத்தில் பசி அதிகமாகி சாப்பிட ஆரம்பித்தவரை, சாப்பிட விடாமல் பாதியில் ஷாட் ரெடி என அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தான் அனுபவித்த பசிக் கொடுமையை தன்னுடன் பணி புரியும் யாரும், எக்காலத்திலும் அனுபவிக்கக் கூடாது என நினைத்த விஜயகாந்த், தன் படங்களில் லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாட்டை வழங்குவதை வழக்கமாக்கினார்.

'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே'

படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமல்ல.. வீட்டிலும் அதே கொள்கையைக் கடைபிடித்தார் விஜயகாந்த். தன் வீட்டிற்கு வரும் யாரும் பசியோடு திரும்பிச் செல்லக்கூடாது என்ற கொள்கையில் அவர் தீர்மானமாக இருந்தார். அன்னதானம் தானே என ஏனோதானோவென இருக்கக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்த விஜயகாந்த், தான் என்ன சாப்பிடுகிறோமோ அதையே மற்றவர்களுக்கும் தர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

கல்வி உதவி

படிப்பதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, நிறைய புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்வதில் விஜயகாந்திற்கு ஆர்வம் அதிகம். தன்னால் அதிகமாகப் படிக்க முடியாவிட்டாலும், தன்னால் இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கு கல்வி அறிவைத் தர விரும்பினார் அவர்.

vijayakanth

செங்கல்பட்டு அருகே விஜயகாந்திற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரியில் இணைய முடியாமல் கஷ்டப்படும் ஏழை மாணவ, மாணவிகளை, எந்தவொரு கட்டணமும் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் விஜயகாந்த்தின் கொள்கைகளுள் ஒன்று. அதை கல்லூரி ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறார்.

விளம்பரத்திற்காக இல்லாமல், நல்ல நோக்கங்களுக்காக விஜயகாந்த் செய்த செயல்கள்தான் அவரை மக்கள் மத்தியில் நல்ல தலைவராக மாற்றியது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கியபடிதான் செயல்பட்டு வந்தார் விஜயகாந்த். தெளிவாக பேச முடியாமல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்தார். அடிக்கடி மருத்துவமனை செய்திகளில் அவரது பெயர் அடிபட்டு வந்தது.

vijayakanth

ஒரு கட்டத்தில் வெளியில் கூட வர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. முக்கிய தினங்களில் அவரது புகைப்படங்களை மட்டுமே அவரது குடும்பத்தினர் வெளியிட்டு வந்தனர். இம்மாத துவக்கத்தில்கூட நுரையீரல் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். அப்போதே அவரது உடல்நிலை பெரும் பின்னடைவைச் சந்தித்ததாக மருத்துவமனை அறிக்கைகள் வெளியாயின.

அவர் எப்படியாவது நல்ல உடல் நலத்துடன் மீண்டு வருவார் என அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் என்று அப்போது கூறப்பட்டாலும், தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று, வெண்டிலேட்டர் சிகிச்சை என அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்து வருவதை அறிக்கைகள் உறுதிபடுத்தின.

vijayakanth

இந்நிலையில், இன்று விஜயகாந்த் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரிலும், சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காலத்தால் அழியாத கேப்டன்

‘தனக்கு மட்டும் சினிமாவில் சான்ஸ் கிடைக்காமல் போயிருந்தால் மீண்டும் மதுரைக்கே திரும்பி தங்கள் ரைஸ் மில்லை தொடர்ந்து கவனித்திருப்பேன்’ என எத்தனையோ பேட்டிகளில் விஜயகாந்த்தே கூறி இருக்கிறார். ஆனால், அவரை அப்படி ரைஸ் மில் முதலாளியாக மட்டும் வாழ்ந்து மறைய காலம் நினைக்கவில்லை.

vijayakanth

சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்தில் நல்ல ஒரு கேப்டனாக தன் கட்சித் தொண்டர்களை வழி நடத்தி, தனக்கென ஒரு வரலாற்றை எழுதிச் சென்றிருக்கிறார் விஜயகாந்த். அவரது உடல் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தாலும், அவர் விதைத்த, ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற நல்விதைகள் காலத்திற்கும் வேரூன்றி, அவர் பெயரை மேலும் விருட்சமாக்கும்.