Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

30 வயதில் 60 கோடிக்கு அதிபதி; இன்று சர்ச்சை நாயகன் - யார் இந்த யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா?

இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி, கண்டனங்கள், விமர்சனங்கள், வழக்குகளுக்கு இலக்காகி பேசு பொருளாகி இருக்கும் ரன்வீர் அல்லபாடியா இந்திய கிரியேட்டர் இணைய பரப்பில் மிகவும் பிரபலமானவர். இவர் சிக்கியுள்ள சர்ச்சை என்ன?

30 வயதில் 60 கோடிக்கு அதிபதி; இன்று சர்ச்சை நாயகன் - யார் இந்த யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா?

Monday February 17, 2025 , 3 min Read

இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி, கண்டனங்கள், விமர்சனங்கள், வழக்குகளுக்கு இலக்காகி பேசு பொருளாகி இருக்கும் ரன்வீர் அல்லாபாடியாவை (Ranveer allahbadia), யார் இவர் என கேட்பவர்கள், யூடியூப், இன்ஸ்டா பக்கம் புழங்காதவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், யூடியூபராக, பாட்காஸ்ட்டரான ரன்வீர், இந்திய கிரியேட்டர்கள் அடங்கிய இணைய பரப்பில் மிகவும் பிரபலமாக நன்கறியப்பட்டவர்.

ரன்வீரின் மிகவும் பாப்புலரான 'BeerBiceps' உள்ளிட்ட ஏழு யூடியூப் சேனல்களுக்கு என மொத்தம் 12 மில்லியனுக்கும் மேல் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். ரன்வீர் முன்னணி யூடியபர் மட்டும் அல்ல, யூடியூப் புகழால், இணைய தொழில்முனைவோராகவும் உருவாகி இருக்கிறார்.

அவரது மாங்க்-இ நிறுவனம், செல்வாக்குமிக்க டிஜிட்டல் ஏஜென்சியாக விளங்குகிறது.

60 கோடிக்கும் மேல் நிகர மதிப்பு கொண்டவராக அறியப்படும் ரன்வீர், சொகுசு கார்கள், ரியல் எஸ்டேட் முதலீடு, என கெத்தாக வாழ்கிறார். இதை எல்லாம், 30 வயதுக்குள் சாதித்திருக்கிறார். அதோடு, அவரது பாட்காஸ்டிங் நிகழ்ச்சியும் பிரபலமாகவே இருக்கிறது.

Beerbiceps Ranveer

ரன்வீர் அல்லாபாடியா

பிரபல கிரியேட்டர் சர்ச்சையில் மாட்டியது எப்படி?

இணையத்தின் வெற்றிகரமான கிரியேட்டர்களில் ஒருவராக கருதப்படும் ரன்வீர் அல்லாபாடியா, இப்போது யோசிக்காமல் பேசிய கருத்திற்காக அனைவராலும் வறுத்தெடுக்கப்படுகிறார்.

இதுவரை அவரது பாட்காஸ்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் வழக்கறிஞர் பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். ரன்வீரை காவல்துறை வலைவீசித் தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ரன்வீர் சர்ச்சைக்கு புதியவர் அல்ல என்றாலும், இந்த முறை அவரது கருத்துக்கள் எல்லை மீறி விட்டதாக பலரும் ஆவேசம் கொள்கின்றனர். ஒரே நேரத்தில் முகஞ்சுளிக்க வைத்து, கடுங்கோபத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு அவரே வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ரன்வீரின் சர்ச்சை பற்றி பார்ப்பதற்கு முன், இணைய உலகில் அவர் கடந்து வந்த பாதையை பார்ப்பது விடலாம்.

யார் இந்த ரன்வீர் அல்லாபாடியா?

ரன்வீர் அல்லாபாடியா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் பொறியியல் பட்டதாரியான பிறகு, 2014ம் ஆண்டில் யூடியூப்பில் அறிமுகமானார். மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதிலிருந்து மீண்டு வந்தவர், தனது பிட்னஸ் பயணத்தை நேர் நிறையாக யூடியூபில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்.

தனது பலவீனத்தையே பலமாக மாற்றிக்கொண்டு பார்வையாளர்களை கவர்ந்தார். ” நீங்கள் மிகவும் அடிமட்டத்திற்கு சரியும் போது, அதிலிருந்து மேலெழுந்து மட்டுமே வர முடியும்” என இந்த நிலை பற்றி அவர் பின்னர் உற்சாகமாக கூறியிருக்கிறார்.

Ranveer Allahbadia

பிட்னஸ் வீடியோக்களால் லட்சக்கணக்கானோர்கள் கவர்ந்த நிலையில், தொழில்முனைவு, ஆண்களுக்கான பேஷன், உடல் நலம் ஆகிய தலைப்புகளிலும் பேசத்துவங்கினார். இன்று அவரது யூடியூப் சேனல்கள் ஒவ்வொன்றும் அந்த பிரிவில் பிரபலமாக உள்ளது. மேலும், அவரது பெயரிலான புதிய சேனலும் இந்தி மொழி பேசுபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிஜிட்டல் கிரியேட்டராக வெற்றி பெற்ற பிறகு, ரன்வீர் தன்னைப்போன்ற இளைஞர்களுக்கு உள்ளடக்க உருவாக்கம், பிராண்டிங்கில் வழிகாட்ட, டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனம் மாங்க் எண்டெர்டெயின்மண்டை வெற்றிகரமாக நடத்த துவங்கினார். உள்ளடக்க உருவாக்கம், சமூக ஊடக மார்க்கெட்டிங், வீடியோ தயாரிப்பு, என பல பிரிவுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

அவரது பாட்காஸ்டிங் நிகழ்ச்சியான ரன்வீர் ஷோவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரம் அர்னால்டு, பிரியங்கா சோப்ரா மற்றும் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களை இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக அழைத்து அவர்கள் வாழ்க்கை பயணத்தை பகிர வைத்து வருகிறார்.

ரன்வீர் சிக்கிய சர்ச்சை என்ன?

இணைய உலகின் சாதனை மற்றும் வெற்றிக்காக பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார் ரன்வீர். இந்த நிலையில் தான், பிரபல காமெடியன் கிரியேட்டர் சமெய் ரெய்னா நடத்தும், India's Got Talent என்ற யூடியூப் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று பேசிய ரன்வீர், காதை பொத்திக்கொள்ள வைக்கும் அளவுக்கு பெற்றோர்கள் மற்றும் பாலியல் தொடர்பான கருத்தை தெரிவித்து கண்டனத்திற்கு இலக்கானார்.

இளைஞர்கள் மற்றும் டீன்கள் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்து தரப்பினரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், என்றும் பலரும் ஆவேசமாக குரல் கொடுத்துள்ளனர்.

Ranveer Allahbadia

இதற்கு முன்பே சில முறை ரன்வீர் சர்ச்சைக்கு இலக்காகி இருக்கிறார் என்றாலும், இந்த முறை எல்லை மீறியிருப்பதாக பலரும் கருதுகின்றனர். விமர்சனங்கள், வழக்குகள் காரணமாக தலைமறைவாகி இருப்பதாக கருதப்படும் ரன்வீர், இன்ஸ்டா பக்கம் மூலம் அளித்திருக்கும் விளக்கத்தில்

”நான் பெற்றோர்கள் குறித்து பேசிய கருத்துகள் அவமரியாதை மற்றும் தவறானவை. அதற்கு மனமார்ந்த மன்னிப்பை கோருகிறேன். நான் பீதிக்குள்ளாகி இருக்கிறேன், என்ன செய்வது எனத்தெரியவில்லை, ஆனால், ஓடி ஒளியவில்லை, இந்திய காவல்துறை மற்றும் நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார்.

அதோடு தானும் தனது குழுவும் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்கிய முன்னணி டிஜிட்டல் செல்வாக்காளருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை பரிதாபத்துக்கு உரியது தான். ஆனால், தனது பொறுப்பற்ற பேச்சே இதற்குக் காரணம் என்பதை அவர் உணர வேண்டும். இதனிடையே, இந்த சர்ச்சையை கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனும் கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

கருத்து சுதந்திரம் முக்கியம், சமூக பொறுப்பும் முக்கியம்!


Edited by Induja Raghunathan