'சம்பளம் தரமாட்டோம்; நீங்க ரூ.20 லட்சம் நன்கொடை செய்யவேண்டும்' - Zomato நிறுவனர் பதிவிட்ட வித்தியாச வேலைவாய்ப்பு!
ஒரு உயர் நிர்வாகப் பள்ளியில் படிக்கும் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பை விட இந்த வேலை 10 மடங்கு அதிகமான கற்றலை வழங்கும் என்கிறார் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல்.
Zomato இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல், புதுமையான ஒரு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளார். அதாவது, ஜோமாட்டோவில் தன்னுடன் பணிபுரிய தலைமைப் பணியாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், ட்விஸ்ட் என்னவென்றால் அந்த பணிக்கு ஓராண்டுக்கு அவருக்குச் சம்பளம் கிடையாது என்பதே.
தலைமைப் பணியாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியருக்கு சம்பளம் கிடையாது என்பதோடு, முதல் வருடம் அந்த பணியில் இருப்பவர், ஜோமாட்டோவின் 'ஃபீடிங் இந்தியா' என்ற சமூக முன்முயற்சிக்கு நன்கொடையாக ரூ.20 லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயல் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதே காலகட்டத்தில், இந்தப் பொறுப்பை ஏற்கும் ஊழியர் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்தை (தலைமை ஊழியர் சம்பளத்திற்கு சமம்) Zomato அளிக்கும். சம்பளம் குறித்த அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில்தான் மேற்கொள்ளபடும் என்று கோயல் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சரி! இப்படிப்பட்ட வேலைவாய்ப்புக்கான, பணி விவரம் என்ன என்று பார்த்தால் அதிலும் தெளிவற்ற போக்கே காணப்படுகிறது. தலைமைப் பணியாளரின் (Chief of Staff) பணி என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த வேலையானது,
"Zomatoவின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு (பிளிங்கிட், டிஸ்ட்ரிக்ட், ஹைப்பர் ப்யூர் மற்றும் ஃபீடிங் இந்தியா உட்பட) அனைத்து ப்ராண்டுகளில் மாற்றத்தை ஏற்பதுத்தும் அனைத்தையும் உள்ளடக்கும்," என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
சரி இதனால் அந்த ஊழியருக்கு என்ன பயன் என்று கேட்டோமனால் தீபிந்தர் கோயல் அந்தப் பதிவில் அதற்கு பதில் அளிக்கும் போது,
“ஒரு உயர் நிர்வாகப் பள்ளியில் படிக்கும் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பை விட இந்த வேலை 10 மடங்கு அதிகமான கற்றலை வழங்கும், ஏனெனில், இந்தப் பணியில் சேருபவர் சிறந்த CXO மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களுடன் பணியாற்றும் அரிய வாய்ப்புக் கிட்டும்.“
“வித்தியாசமாகச் சொல்ல வேண்டுமெனில் நீங்கள் இதில் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் உங்களுக்கான வேகமான கற்றலுக்கான ஒரு வாய்ப்பாக இதை நினைத்துப் பாருங்கள், என்கிறார் ஜொமேட்டோ சி.இ.ஓ.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 200 வார்த்தைகள் கொண்ட கடிதத்தை அனுப்புமாறு கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். சுய-விவர ஆவணம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.