Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கழிவறையை சுத்தம் செய்து ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவிடும் கோவை லோகநாதன்!

18 ஆண்டுகளாக கழிவறையை சுத்தம் செய்து, அதில் வரும் வருமானத்தில் இதுவரை 1200 ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார் வெல்டர் லோகநாதன். 

கழிவறையை சுத்தம் செய்து ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவிடும் கோவை லோகநாதன்!

Friday June 15, 2018 , 3 min Read

தன் வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய யோசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் 1200 குழந்தைகளின் கல்விக்காக கடந்த 18 ஆண்டுகளாக இதுவரை சுமார் 10 லட்ச ரூபாய் உதவியாக அளித்துள்ளார். அதே சமயம் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்யும் பணியை மன நிறைவுடன் செய்து வருகிறார், லோகநாதன்.

“நான் கோவை, அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவன். எனக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம். எல்லாத்திலேயும் முதல் ஆளா வருணும்னு ஆசைப்பட்டேன் மா. என்னுடைய விருப்பத்தை போல தான் என் அப்பாவும் நான் கேட்டதை வாங்கி தந்தாங்க. ஆனால் என்னுடைய இந்த ஆசையெல்லாம் ரொம்ப நாள் நீடிக்கலை. எனக்கு பத்து வயசிருக்கும் போது, உடம்பு சரியில்லாமல் அப்பா இறந்துட்டாரு. என் கூட பிறந்தவங்க 2 பேரு. இளநீர் வியாபாரம் செஞ்சு எங்க அம்மா எங்களை காப்பாத்துனாங்க. 

10ம் வகுப்பில் 402 மார்க்குகள் எடுத்த பின்தங்கிய ஏழை மாணவிக்கு உதவும் லோகநாதன்

10ம் வகுப்பில் 402 மார்க்குகள் எடுத்த பின்தங்கிய ஏழை மாணவிக்கு உதவும் லோகநாதன்


மூணு பேரும் பள்ளிக்கு போனதால் அம்மாவால் சமாளிக்க முடியலை. பொருளாதார தேவைகளை சந்திக்க கஷ்டப்பட்டாங்க. அதனால தம்பிங்க படிக்கட்டும்ன்னு சொல்லி நான் 6ம் வகுப்போட படிப்புக்கு முழுக்கு போட்டு, அம்மாவுக்கு உதவ ஆரம்பிச்சேன். கிடைச்ச வேலையெல்லாம் பார்த்துட்டு கடைசியா, வெல்டிங் வேலை பார்த்தேன். அப்ப, தொழில் நிமித்தமா வட மாநிலங்களுக்கு அடிக்கடி போவேன். அப்பெல்லாம், வடநாட்டு சனங்க சப்பாத்திக்கும் ரொட்டித் துண்டுக்கும் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்துருக்கேன். அவங்கள ஒப்பிடும்போது நம்ம எவ்வளவோ தேவலாம்னு நினைச்சுக்குவேன். அதேசமயம், இந்த மாதிரியான மக்களுக்கு நாமும் ஏதாச்சும் உதவணும்னு அப்பவே நினைப்பேன். அதைத்தான் இப்ப செஞ்சுட்டு இருக் கேன்...” என்று சொல்லும் லோகநாதன், கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கு வந்தது குறித்தும் பேசினார்.

“நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் சைக்கிள் மிதிச்சு வீடு வீடாப் போயி, உபயோகப்படுத்தாத துணி மணிகளை சேகரிப்பேன். பிறகு, அதை அநாதை இல்லங்களுக்குக் கொடுப்பேன். அப்ப, நான் வேலை பார்த்துட்டு இருந்த ஒர்க்ஷாப் முதலாளி என்னோட இந்த சேவையைப் பார்த்து நெகிழ்ந்துட்டார். 

“அந்த ஒர்க்ஷாப் கழிப்பறையை சுத்தம் செய்ய தினமும் ஒரு ஆள் வருவார். ஒருநாள், ‘இந்த வேலைய நான் செய்யுறேன் முதலாளி.. நீங்க அவருக்குக் குடுக்கிற சம்பளத்தை எனக்குக் குடுங்க. அதை வெச்சு ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவேன்னு சொன்னேன். இதைக்கேட்டு முதலாளி பதறிட்டார், ‘சீனியர் வெல்டரா இருந்துக்கிட்டு நீ போய் இந்த வேலையை செய்யுறதான்னு கேட்டார். ஒரு வழியா அவரைச் சமாதானப்படுத்தினேன். ‘சரி, உன் இஷ்டம்’னு சொல்லிட்டுப் போயிட்டார்.” 

அன்னையிலருந்து, தினமும் என் வேலையெல்லாம் முடிஞ்சதும், ஒர்க் ஷாப் கழிப்பறையை கழிவிட்டுத்தான் வீட்டுக்குக் கிளம்புவேன். அதுக்காக மாதா மாதம் முதலாளி குடுத்த 400 ரூபாயை வங்கியில் கணக்கு தொடங்கி பணம் போட ஆரம்பிச்சேன். அப்படியே அக்கம் பக்கத்து கடை கழிப்பறைகளையும் சுத்தம் செய்து அந்த வருமானத்தையும் வங்கியில் போட ஆரம்பிச்சேன். மூவாயிரத்துக்கு மேல வங்கியில் இருப்பு சேர்ந்துட்டா, அதை எடுத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு குடுத்துருவேன். இதே போல படிக்க வசதியில்லாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவி செய்வேன். 

டாய்லெட் சுத்தம் செய்யும் லோகநாதன் (இடது) மனைவி உடன் லோகநாதன் (வலது)

டாய்லெட் சுத்தம் செய்யும் லோகநாதன் (இடது) மனைவி உடன் லோகநாதன் (வலது)


”10ம் மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு, கல்வியை தொடர என்னால் முடிந்த உதவியை நேரில் சென்று செய்வேன்”.

ஒரு சமயம், கோவை காந்திமாநகர்ல அரசு ஆதரவற்றோர் இல்லக் கட்டிடம் இடிஞ்சு விழுந்துருச்சு. அந்த இல்லத்துக்கு உதவி செய்யுறதுக்காக மூவாயிரம் ரூபாய் செக்கை எடுத்துட்டுப் போயி கலெக்டர்கிட்ட குடுத்தேன், அப்ப கலெக்டரா இருந்த முருகானந்தம் சார், என்னைய பாராட்டுனதோட இல்லாம, இதை பத்திரிகைகளுக்கும் சொல்லிட்டார். அதுவரை வெளியில் தெரியாம இருந்த என்னோட இந்த வேலை அப்பத்தான் ஊரு முழுக்க தெரிஞ்சிருச்சு.

"இருந்திருந்து இப்படி கக்கூஸ் கழுவித்தான் சேவை செய்யணுமா? நம்மளை பத்தி சொந்தகாரங்க எல்லாம் என்னை நினைப்பாங்கன்னு என் மனைவி சசிகலா கேட்டா. சேவைன்னு வந்துட்டா இதெல்லாம் பார்க்கக் கூடாது. கஷ்டப்படரவங்களுக்கு நாம செய்யுற உதவி போயி சேரணுமே தவிர, இதை பற்றியெல்லாம் யோசிக்காதேன்னு சொல்லிட்டேன்.

உதவி செய்யறதுக்கு இதுதான் முதலீடு இல்லாத தொழில்னு சொல்லி அவளை ஒரு வழியா சமாதானப்படுத்தினேன். அதுலருந்து அவளும் என்னோட சேவைக்கு ஒத்துழைக்க ஆரம்பிச்சுட்டா,” என்று நெகிழ்கிறார் லோகநாதன்.

“எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உதவிதொகைக்கு என்று எடுத்து வைத்த பணத்தை ஒரு போதும் தொட்டதில்லை என்கிறார், லோகநாதன் மனைவி சசிகலா தேவி.”

கடந்த 18 ஆண்டுகளாக இந்த சேவையைத் தொடரும் லோகநாதன், தனது உழைப்பில் மகனை எம்.பி.ஏ., படிக்க வைத்திருக்கிறார். மகன் தனியார் அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். மருமகள் கல்லூரி பேராசிரியையாக இருக்கிறார். மகள் சி.பி.எஸ்.சி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார். உடன் பிறந்தவர்களும் நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள். இருப்பினும் எதற்காக கழிவறையை சுத்தம் செய்கிறேன் என்பதை குடும்பத்தினர் புரிந்து கொண்டு அவர்களும் லோகநாதனுக்கு ஒத்துழைக்கிறார்கள். 

“சொந்தமா வெல்டிங் பட்டறை வெச்சதுல கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் ஆடு, மாடுகள் இருக்கதால ஓரளவுக்கு சமாளிக்க முடியுது. தற்போது அருகிலுள்ள மருத்துவமனை, கடைகளின் கழிவறைகளை சுத்தம் செய்து அதில் வரும் வருமானத்தையும் பள்ளி மாணவர்களின் கல்விக்காக செலவிடுகிறேன். 

இன்னைக்கும் நான் சாலையில் நடந்து போனால், உதவிய சில மாணவர்கள் நல்ல வேலையில் இருப்பதை பார்க்கும் போது, கஷ்டங்கள் எல்லாம் மறந்துவிடும் எனும் லோகநாதனின் கண்களில் பலரது வாழ்வில் ஒளியேற்றிய பெருமை பளிச்சிட்டது. 
image


”இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கணும். அதைவெச்சு இன்னும் நிறையப் பேருக்கு உதவணும்,” எனும் லோகநாதனின் மனதில், ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பதை உணர முடிந்தது. அவரது வார்த்தைகளில், தான் தவற விட்ட கல்வியின் வலியையும் நம்மால் பார்க்க முடிந்தது.