Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 44 - Innovaccer: ஹெல்த்கேரில் 3 நண்பர்கள் கட்டமைத்த $2.13 பில்லியன் மதிப்பு நிறுவனம்!

மூன்று இளம் இந்தியர்களால் தொடங்கபட்டு, உலகின் ஒட்டுமொத்த டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்திய நிறுவனமான ‘இன்னோவாச்சர்’ ஆலமரமாக வளர்ந்துள்ளதன் கதையே இந்த அத்தியாயம்.

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 44 - Innovaccer: ஹெல்த்கேரில் 3 நண்பர்கள் கட்டமைத்த $2.13 பில்லியன் மதிப்பு நிறுவனம்!

Saturday February 22, 2025 , 6 min Read

‘யுனிக்’ கதை 44 - Innovaccer

கல்வி, உற்பத்தி என கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பமும் டிஜிட்டல் மயமாக்கலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதில், சுகாதாரத் துறையும் பின்தங்கவில்லை. சுகாதாரத் துறை நாளுக்கு நாள் பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது.

இன்று அரசு மருத்துவமனையும் சரி, தனியார் மருத்துவமனையும் சரி பாரம்பரிய முறையை விடுத்து டிஜிட்டலுக்கு மாறியுள்ளன. இந்த மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய ஓர் நிறுவனம் பற்றிய கதைதான் இந்த யூனிகார்ன் அத்தியாயம்.

வேகமாக வளர்ந்து வரும் சுகாதார தொழில்நுட்பத்தில் ஒரு நிறுவனம் மட்டும் டேட்டா மற்றும் ஹெல்த்கேர் அனலிடிக்ஸில் புதுமையான அணுகுமுறையால் தனித்து நிற்கிறது. ஜீரோவில் தொடங்கி, இன்று பல மில்லியன்களை குவித்து சுகாதார துறையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக நிலைத்து நீட்டித்து நிற்கிறது. அந்த நிறுவனம்தான் ‘இன்னோவாச்சர்’ (Innovaccer).

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ‘இன்னோவாச்சர்’, ஒரே நேரத்தில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் சுகாதார தீர்வுகளை வழங்கும் முன்னணி டிஜிட்டல் சுகாதார ஐ.டி தளங்களில் ஒன்றாகும்.

Innovaccer: Founders

ஒட்டுமொத்த சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்காக கிளவுட் அடிப்படையில் 2014-ல் தொடங்கப்பட்டது ‘இன்னோவாச்சர்’. இது, மருத்துவமனைகளுக்கு பல்வேறு புதுமையான டிஜிட்டல் தயாரிப்புகளை வழங்குகிறது. அதோடு, மருத்துவர்களின் பயிற்சிகளில் தொடங்கி நோயாளிகளின் ஆரோக்கியம் குறித்த நுண்ணறிவுகளை சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இன்னோவாச்சர் உதவுகிறது.

டிஜிட்டல் சுகாதார ஐ.டி சேவை கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2020-ல் டிஜிட்டல் சுகாதாரத் துறை 141.8 பில்லியன் டாலரை தாண்டியது. அதுவே, 2027-ம் ஆண்டுக்குள் இத்துறை இன்னும் 18% கூடுதல் வளர்ச்சியை பெறும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த வளர்ச்சியை முன்பே கணித்து, இன்னோவாச்சரை தொடங்கினர் 3 இளம் இந்தியர்கள். அவர்களால் உலகின் ஒட்டுமொத்த டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்திய நிறுவனமான ‘இன்னோவாச்சர்’ ஆலமரமாக வளர்ந்துள்ளது.

யார் அந்த மூவர்?

அபினவ் ஷஷாங்க், சந்தீப் குப்தா, கனவ் ஹசிஜா ஆகியோர்தான் ‘இன்னோவாச்சர்’ நிறுவனத்தின் மூலவர்கள். சந்தீப் குப்தா, இன்னோவாச்சரில் தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, டிசிஎஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர், அவர் மைக்ரோசாப்ட் மற்றும் இங்கர்சால் ரேண்ட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். அபினவ் ஷஷாங்க், கரக்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவர். இதேபோல், கனவ் ஹசிஜாவும் கரக்பூர் ஐஐடியில் அபினவ்வின் சக மாணவராக பயின்றவர். இந்த மூவரில் இன்னோவாச்சர் நிறுவனத்தின் உதயத்துக்கு அபினவ் ஷஷாங்க் முதன்மையானவர். ஏனென்றால் அவர்தான் இந்த யோசனையை உதிர்த்தவர்.

ஐஐடி போட்ட விதை

உத்தரப் பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட அபினவ், சிவில் சர்வீஸில் பணிபுரிந்த தந்தையின் மகனாக உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் தனது இளமை காலத்தை கழித்தவர். இயல்பாகவே அபினவ் குடும்பம் கல்வி பின்னணி கொண்டது. தந்தையின் பணி மாற்றம் ஒரு கட்டத்தில் லக்னோவில் நிற்க, அபினவ் குடும்பமும் லக்னோவில் தங்கியது. பள்ளிப் படிப்பை, லக்னோவில் முடித்த பின், ஐஐடி கரக்பூர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார் அபினவ்.

பள்ளிப் படிப்பில் முதலிடம் என்றாலும், ஐஐடி கரக்பூர் அபினவுக்கு ஆரம்பத்தில் சற்று சிரமத்தை கொடுத்தது. ஏனென்றால், ஐஐடி என்பதால் அவரை சுற்றியும் அவரை தாண்டிய அறிவாளிகள் நிறைய இருந்தனர். எனினும், விட்டுக்கொடுக்கவில்லை. தனது முயற்சியால் அவர்களுக்கு ஈடுகொடுக்க தொடங்கினார்.

ஐஐடியில் நடைபெறும் விழாக்களை நடத்துவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று சுற்றினார். அவருடன் பயின்ற கனவ் ஹசிஜாவுடன் இணைந்து ஐஐடியில் படிக்கும்போதே ஒரு விழாவுக்காக ரூ.1 கோடி நிதி திரட்டினர். ஐஐடியில் 4-வது ஆண்டு படிக்கும்போது அபினவ் மற்றும் கனவ் ஆகியோர் தங்கள் கல்லூரி ஆசிரியர்களுடன் சேர்ந்து கரக்பூர் கன்சல்டிங் குரூப் என்கிற பெயரில் ஸ்டார்ட்அப் தொடங்கினர். அவர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில் இந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் மூலம் டெக்னிக்கல் ப்ராஜெக்ட்களை எடுத்து பணிபுரிந்தனர். இந்த ஸ்டார்ட்அப் நன்றாக செயல்பட்டது. அப்போதே சில கோடி ரூபாய் வருவாயாக கிடைத்தன. லாபத்தில் கல்லூரியின் பங்கு போக, இவர்களுக்கும் ஒரு பங்கு கிடைத்தது. ஆனால், இந்த முயற்சி உண்மையில் அவர்களுக்கு அனுபவமாக அமைந்தது. இது புதிய நிறுவனங்கள் தொடங்க உத்வேகமாக அமைந்தது.

ஐஐடியில் படிப்பை முடித்த பின், இங்கர்சால் ரேண்ட் என்கிற நிறுவனத்தில் இன்டெர்ன் பயிற்சியாளராக அபினவ் இணைந்திருந்தார். அது ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்றிருந்த ஹார்டுவேர் கம்பெனி. 1000+ பேர் வேலை பார்த்த அந்த நிறுவனம், ஒரு புதிய பிசினஸ் செட் அப்பை நிறுவ விரும்பியது. அதில் மார்க்கெட்டிங் அனாலிஸ்ட் ஆக பணியாற்றும் வாய்ப்பு இன்டெர்னாக இணைந்திருந்த அபினவுக்கு கிடைத்தது.

உண்மையில் அபினவ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது இந்த கம்பெனியும் இந்த பயிற்சியும் தான். இங்கு பணியாற்றிய இரண்டரை வருடத்தில் டேட்டா அமைப்பு பற்றிய புரிதல் அவருக்கு கிடைத்தது. அது மட்டுமல்ல, உற்பத்தியில் தொடங்கி மார்க்கெட்டிங் வரை அனைத்துக்கான அடிப்படையையும் அபினவ் கற்றுக்கொண்டது இங்கேதான்.

innovaccer

இந்த நிறுவனம், புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற தைரியத்தையும் நம்பிக்கையையும் அவருக்கு கொடுத்தது. தனக்கு வந்த யோசனையை நேராக சென்று அந்த கம்பெனி சிஇஓவிடம் சொல்லியுள்ளார். அவர் 50,000 டாலர்களை அபினவுக்கு கொடுத்து பிசினஸ் தொடங்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த கம்பெனியில் அவருடன் பணியாற்றிய சந்தீப் மற்றும் கல்லூரியில் தன்னுடன் படித்த கனவ் சேர்ந்து ‘இன்னோவாச்சர்’ நிறுவனத்தை தொடங்கினர்.

இன்னோவேசரை தொடங்கும்போது அபினவுக்கும் சரி, கனவ்-வுக்கும் சரி, அனைவருக்கும் தெரிந்தது டேட்டா பற்றிதான். ஏனென்றால், இவர்கள் அனைவரும் டேட்டா அமைப்பில் வேலை பார்த்துள்ளனர். அதிலும் கனவ் பிக் டேட்டா, மருத்துவ பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சித் துறையில் நல்ல அனுபவம் பெற்றிருந்தார்.

அந்த அனுபவம் கைகொடுக்க, முதலில் பேராசிரியர்களுக்காக தொடங்கப்பட்டு பின்னர் அனைவரும் எளிதாக டேட்டாக்களை பெறும் வகையில் இன்னோவாச்சர் டேட்டா களஞ்சியமாக மாற்றப்பட்டது. இதற்கு வரவேற்பும் கிடைத்தது. டாப் 100 ஆராய்ச்சி கல்வி பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 65 கல்வி பல்கலைக்கழகங்கள் இன்னோவாச்சரை பயன்படுத்த தொடங்கினர். அதில் வருமானமும் கிடைத்தது.

யூனிவர்சிட்டி டூ யூனிகார்ன்...

ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்கான டேட்டா மையமாக இன்னோவாச்சர் செயல்படத் தொடங்கி வருமானமும் கிடைத்தாலும், அந்த வருமானம் அபினவ் & கோ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த தருணத்தில் கியரை மாற்றி பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்த அவர்கள் பல்கலைக்கழகங்களை தாண்டி தனியார் கம்பெனிகளுக்காக உழைக்க தொடங்கினர்.

‘ஃபார்ச்சூன் 500' பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்களுக்காக பணியாற்றினர். விளைவு, தொடங்கிய 3-வது வருடத்தில் டிஸ்னி, வால்டர், நாசா என முன்னணி நிறுவனங்கள் இன்னோவாச்சருடன் இணைய, 5 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது.

இந்த தருணத்தில், ஒரேயொரு ஹெல்த்கேர் வாடிக்கையாளர்தான் இன்னோவாச்சர் நிறுவனத்துடன் இணைந்திருந்தது. அந்த நிறுவனத்துடன் பணியாற்றும்போதும்தான் ஹெல்த்கேர் துறை எவ்வளவு பெரியது என்பதையும், அதில் உள்ள டேட்டா பிரச்சினைகள் என்னவென்பதையும் அபினவ் குழு அறியமுடிந்தது. அந்த பிரச்சனைகளை தீர்த்தால் இந்த துறையில் டாப் இடத்தை பிடிக்க முடியும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

innovaccer

அவ்வளவுதான் அனைத்தையும் நிறுத்தினர். இனி ஹெல்த்கேர் துறையில் மட்டுமே பணியாற்றுவது என்கிற தீர்க்கமான முடிவை எடுத்தனர். ஹெல்த்கேர் துறையை தேர்ந்தெடுக்க காரணம், அது பெரிய துறை மட்டுமல்ல, அதில் தான் டேட்டா டெக்னாலாஜியின் தேவை அதிகமாக இருந்தது.

மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பம் என்பது அப்போது சற்று அந்நியமாக இருந்தது. இதனை தங்களுக்கான வாய்ப்பாக பார்த்ததை அடுத்தே ஹெல்த்கேரில் முழு கவனம் செலுத்தி பணியாற்றுவது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதனால், ஆரம்பித்த 3 வருடங்களில் 5 மில்லியன் டாலர் வருவாய் தந்த பிசினஸை விடுத்து, மீண்டும் ஜீரோவில் இருந்து அனைத்தையும் தொடங்கினர். இன்னோவாச்சர் புதிய வடிவத்துடன் கால்பதித்து.

ஹெல்த்கேரில் என்ன செய்கிறது இன்னோவாச்சர்?

டிஜிட்டல் சுகாதாரத்திற்கும் சுகாதாரப் பராமரிப்புக்கும் இடையிலான இடைவெளியை தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், உலக அளவில் சுகாதாரத் துறையின் டேட்டாக்களை நிர்வகிக்கவும், அதை எளிதில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றவதுமே இன்னோவாச்சரின் நோக்கம்.

அதனை அடிப்படையாக கொண்டு நோயாளிகளை மையமாக கொண்டு ஹெல்த்கேரில் தேவையை, தேவையான மாற்றத்தை செய்கிறது இன்னோவாச்சர். அது எப்படி என்பதை அபினவ் விளக்கமாக கூறுகிறார்.

“பொதுவாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் தற்போதைய பிரச்சினைகளுக்கே டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பார்கள். இது சரியான வழி கிடையாது. ஏனென்றால், நோயாளிகளின் நோய் தன்மை பற்றிய பழைய விவரங்களை மருத்துவர்கள் அறியமுடிவதில்லை. இது மக்களின் ஆரோக்கிய நிலைக்கும் ஆபத்தாக அமைகிறது. எனவே, நோயாளிகளின் அனைத்து தகவல்களும் மருத்துவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

“360 டிகிரியில் நோயாளிகளைப் பற்றிய அனைத்து தகவல்களும் மருத்துவர்களுக்கு தெரிய வேண்டும். இதுபோன்ற அடிப்படை சிக்கல்களை தீர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. முதல்படியாக அதனைச் செய்ய தொடங்கினோம். ஒவ்வொன்றுக்கும் சாஃப்ட்வேர் தயார் செய்து ஒவ்வொரு நோயாளிகள் மீதும் தனி கவனம் செலுத்த முயற்சித்தோம். ஏஐ கொண்டும் ஒவ்வொன்றையும் மாற்றினோம்,” என்று விளக்குகிறார் அபினவ்.

இப்படி ஹெல்த்கேர் துறையின் அடிப்படையையே மாற்ற, 24 மணிநேரமும் மருத்துவமனையே கதி என்று இருந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கான தீர்வை தேடத் தொடங்கினர். பிரச்சினைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை வெளியிட்டனர்.

innovaccer

நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கிளவுட் டெக்னாலஜி அடிப்படையில் தீர்க்கத் தொடங்கினர். இதனால் முதலீடுகளும் வரத் தொடங்கின.

டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், லைட்ஸ்பீட் வென்ச்சர் பார்ட்னர், மைக்ரோசாஃப்ட் என பல நிறுவனங்கள் முதலீடு செய்தன. இதன்பயனாக 2022-ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை எட்டியது. ஹெல்த்கேர் துறையில் யூனிகார்ன் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் இதுதான்.

இப்போதும் ஆண்டுக்கு 100 சதவீதம் வளர்ச்சியை பெற்று ஹெல்த்கேர் துறையில் முன்னணியில் உள்ளது இளம் இந்தியர்கள் உருவாக்கிய இன்னோவாச்சர்.

இன்னோவாச்சரின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் உள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் இன்னோவாச்சர் கால் பதித்தது. ஆனால், இந்தியாவில் இல்லை. இந்திய யூனிகார்னாக இருந்தாலும், அது இந்திய சந்தைக்கு ஏற்றதாக இல்லை.

இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும், இன்னோவாச்சர் இந்தியத் துறையில் அதிகம் ஈடுபடவில்லை. விரைவில் இந்தியாவில் கால்பதிக்க தயாராகி வருவதாக அபினவ் குழு அறிவித்திருக்கிறது. இந்திய சந்தைக்குள் நுழையும்போது இன்னோவாச்சர் இன்னும் பல மடங்கு வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை.

யுனிக் கதை தொடரும்...


Edited by Induja Raghunathan