'கடந்த 2 ஆண்டுகளில் 1,200 கேமிங், சூதாட்ட தளங்கள் முடக்கம்` - ஐடி அமைச்சர் தகவல்!
ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு அபாயம் தொடர்பான கவலை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கேம்கள் மீதான பிடியை அரசு மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு அபாயம் தொடர்பான கவலை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கேம்கள் மீதான பிடியை அரசு மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் 2022 முதல் 2024 ஆகிய காலகட்டத்தில், 1298 ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங், கேமிங் இணையதளங்களை முடக்க உத்தரவு பிறப்பித்ததாக பத்திரிகை தகவல் அமைப்பு, பிஐபி தெரிவிக்கிறது.
"ஆன்லைன் கேமிங் தொடர்பான இடர்களையும், அடிமையாக்கும் தன்மை போன்ற ஆபத்துகளை அரசு அறிந்திருக்கிறது,” என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் மக்கள் அவையில் தெரிவித்தார்.

கேமிங் மேடைகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான நெறிமுறைகள் கொண்ட தகவல் தொழில்நுட்ப (இடைப்பட்ட நிறுவனங்கள் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக அறம்) விதிகள், 2021ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மேடைகள், சட்டவிரோதமான உள்ளடக்கத்தை குறிப்பாக, சூதாட்டம், பண மோசடி அல்லது சிறார்களுக்கு பாதிப்பான உள்ளடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும்.
2022 – 2024 காலத்தில், ஆன்லைன் சூதாட்டம், கேமிங்க், பெட்டிங் தொடர்பான 692 தளங்கள் மற்றும் செயலிகள் முடக்கப்பட உத்தரவிடப்பட்டதாக, டிசம்பர் மாதம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களைவையில் தெரிவித்திருந்தார்.
ஜிஎஸ்டி இயக்குனரகம், ஜிஎஸ்டி செலுத்தாமல் ஏமாற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மற்றும் செயலிகளை முடக்கலாம், என நிதி அமைச்சகம் ஜனவரி மாதம் அனுமதி அளித்தது. வரி ஏய்ப்பை தடுக்கவும், டிஜிட்டல் கேமிங் துறையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசின் டிஜிட்டல் கட்டுப்பாடு முயற்சிகள் கேமிங் துறையோடு நின்றுவிடவில்லை. ஆன்லைன் ஆபாசம், குறிப்பாக மைனர்கள் தொடர்பான உள்ளடக்கம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் வைஷ்ணவ் எழுத்து மூலமான பதிலில் தெரிவித்தார்.
ஆபாசமான மற்றும் பாலியல் தூண்டுதல் உள்ளடக்கத்தை வெளியிட்டால், ஐடி சட்டம் கடுமையான தண்டனை விதிக்க வழி செய்கிறது. மேலும், 2021 விதிகள், மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் தொடர்பாக இடைப்பட்ட நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என எச்சரிக்கிறது.
வல்லுறவு, சிறார் பாலியல் தாக்குதல், பாலியல் தூண்டும் உள்ளடக்கம் தொடர்பான குற்றங்களில் செய்தியை முதலில் பகிர்ந்தவரை சமூக ஊடக மேடைகள் அடையாளம் காட்ட வேண்டும். மேலும், தனியுரிமை மீறும் அல்லது பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தை இந்த மேடைகள் 24மணி நேரத்தில் அகற்ற வேண்டும்.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan