Zepto-வின் 'பிங்க் ஸ்டோர்' - சென்னையில் இந்தியாவின் முதல் பெண்களால் இயங்கும் 'டார்க் ஸ்டோர்'
இந்தியாவின் முன்னணி விரைவு-வணிக தளங்களில் ஒன்றான Zepto, அதன் முதல் பெண்களால் செயல்படும் விநியோகங்களுக்கான பிங்க் ஸ்டோர் எனும் பெயரில் மினி கிடங்கைத் மாடம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த விநியோக மையமானது 25 பெண்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தியாவின் விரைவு-வணிகத் தொழில் ஒரு பெரிய மைல்கல்லைக் கண்டுள்ளது. இந்தியாவின் முன்னணி விரைவு-வணிக தளங்களில் ஒன்றான Zepto, அதன் முதல் முழுக்க முழுக்க பெண்களால் செயல்படும் விநியோகங்களுக்கான மினி கிடங்கை சென்னையில் தொடங்கியுள்ளது. ஜெப்டோவின் 'பிங்க் ஸ்டோர்' எனும் பெயரில் சென்னை மாடம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சியானது, பணியிட உள்ளடக்கம் மற்றும் பாலின அதிகாரமளிப்புக்கான குறிப்பிடத்தக்க படியாகும்.
கடந்த மாத இறுதியில், Zepto-வின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியான ஆதித் பாலிச்சா, சென்னையின் மாடம்பாக்கத்தில் Zepto-வின் முதல் முழுக்க முழுக்க பெண்களால் இயங்கும் டார்க் ஸ்டோரை ("டார்க் ஸ்டோர்" என்பது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அல்லாத, ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்றுவதற்காக செயல்படும் சில்லறை விற்பனை நிலையம் அல்லது விநியோக மையமாகும். விநியோகங்களுக்கான மினி-கிடங்காகும்) தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த விநியோக மையமானது 25 பெண்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. Zepto-ன் புக்கிங் மற்றும் பேக்கிங் பணிகளில் 25 சதவீதத்தினர் பெண்களால் நிரப்பப்பட்டுள்ளனர். அவர்கள், அதிகாலை ஷிப்டுகளில் (காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) பணியாற்றுகின்றனர்.
"டெலிவரி பார்ட்னர்கள் முதல் ஷிப்ட் இன்-சார்ஜ்கள் மற்றும் செயல்பாட்டுத் தலைவர்கள் வரை வழக்கமாக ஆண்களால் ஆதிக்கம் செலுத்தும் பணிகளில் பெண்கள் சிறந்து விளங்குவதை நாங்கள் கவனித்தோம்," என்று Zepto-வின் தலைமை இயக்க அதிகாரி (COO) விகாஸ் சர்மா கூறினார்.

டெலிவரி கேர்ள் டூ பிங்க் ஸ்டோரின் மேனேஜர்!
ஜெப்டோவின் இம்முயற்சியின் மிகவும் ஊக்கமளிக்கும் அம்சங்களில் ஒன்று, ஸ்டோர் மேனேஜர் வினிதாவின் கதை. அவர் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெப்டோவில் டெலிவரி பார்ட்னராக சேர்ந்தார். சில மாதங்களுக்குள், பிங்க் ஸ்டோரில் ஒரு தலைவராக உயர்ந்தார். அவரது பயணம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், திறமையை அங்கீகரிக்கும் மற்றும் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதற்கான Zepto-வின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
29 வயதான வினிதா, கசப்பான மணவாழ்க்கைக்கு முற்று வைத்து, அவரது பெண் குழந்தையை வளர்க்கவேண்டிய பொறுப்புடனும், கடன்களை அடைக்க வேண்டிய கடமையிலும், ஒரு ஆண்டுக்கு முன்பாக ஜெப்டோவின் சிட்லபாக்கம் மையத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
பெரும்பாலும் ஆண்களே செய்யும் பணிகளான, டெலிவரி ஏஜென்டாகவும், லோடிங் அன்லோடிங் மற்றும் நைட் ஷிப்டுகளில் வினிதா பணியாற்றினார். ஜெப்டோவில் பணியாற்றுவதற்கு முன், அவர் ஒரு ரியல் எஸ்டேட் ஆலோசகராகப் பணிபுரிந்தார். ஆனால், அப்பணி வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களை பெரிதும் நம்பியிருந்ததால், ஊதியம் ஒழுங்காக கிடைக்கவில்லை.
"ஆறு மாதங்களாக, நானும் என் குழந்தையும் கோவில்களில் பிரசாதம் சாப்பிட்டு உயிர் பிழைத்தோம். ஏனென்றால் எங்களுக்கு வழக்கமான உணவு சாப்பிட வழியில்லாமல் இருந்தது," என்கிறார் வினிதா.
மத்திய கிழக்கில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவரது தாய், வினிதாவையும் அவரது குழந்தையையும் கவனித்து கொள்ள, அவர்களது சொந்தஊரான மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
"வாழ்க்கை முழுவதும் வசதியாக வாழ்ந்த அவர், எங்களுடன் வறுமையில் வாட இங்கு வந்தார். அவர் உடனிருப்பது என் குழந்தையைப் பராமரிக்க உதவியாக இருந்தது. ஆனால், நான் இப்போது மூவரின் 3 வேளை உணவிற்கான ஒரே ஆதாரம். வீட்டு வாடகை செலுத்த வேண்டும்," என்றார் வினிதா.
குடும்பச் சூழலின் காரணமாக விடுப்புகளைகூட எடுக்காமல், பண்டிகை தினங்களிலும் பணிசெய்தார். பொங்கல் பண்டிகையின் போது அவருக்குக் கிடைத்த தங்க நாணயம் உட்பட ஊக்கத்தொகைகளைப் பெறுவதற்காக அவர் பண்டிகைகளின் போதும் தொடர்ந்து வேலை செய்தார். மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட 1,000 ஆர்டர்களை முடித்தார். நான்கு மாதங்களின் முடிவில், அவரது பணியிடத்தில் அதிக சம்பளம் வாங்கும் தொழிலாளர்களில் ஒருவரானார்.
"இதனால், எங்கள் குழுவில் உள்ள ஆண்கள் மிகவும் கோபமடைந்தனர். ஒரு பெண்ணாக, இரவு நேரங்களில் சுற்றித் திரிவதற்கு, அவமானப்படுத்துவதன் மூலம் என்னைத் தூண்டிவிட முயன்றனர். ஆனால், இது எனக்கு சம்பாதிக்க கிடைத்த ஒரு வாய்ப்பு. போதுமான அளவு சம்பாதித்து, நிதி ரீதியாக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்று முடிவாகயிருந்தேன்," என்கிறார் வினிதா.

அயராது உழைத்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு, மூன்று மாதங்களுக்குள் அவரது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்தி, சிட்லபாக்கத்தில் உள்ள அவரது பணியிடத்திலே முதல் பெண் RSI அல்லது ரைடர்ஸ் மேலாளராக பதவி உயர்வு பெற்றார். இப்பணியால், ஒவ்வொரு டெலிவரி ஹப்பிலும் கடைசி மைல் செயல்பாடுகளுக்கு அவரே பொறுப்பானார்.
இது அவரது ஆண் சகாக்களை மேலும் கோபப்படுத்தியது. ஆனால், வினிதா அவரது வேலையில் வளர வேண்டும் என்ற இலக்கில் ஒற்றை எண்ணத்துடன் இருக்க அவரது வலிகளைத் தாண்டி உழைத்ததாகக் கூறுகிறார்.
"எங்களது ஊழியர்களின் அவமதிப்பு மற்றும் ஊக்கமின்மை இருந்தபோதிலும், மோதல்களைத் தீர்ப்பதிலும் அவர்களுடன் கலந்து பேசவும் நான் எப்போதும் இறங்கி வந்திடுவேன். எனது குழு எப்படி இருந்தாலும், ஒரு தலைவராக எனது பங்கை நான் எப்போதும் சரியாக செய்வேன்," என்கிறார் வினிதா.
இந்நிலையிலே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மாடம்பாக்கத்தில் தொடங்கப்பட்ட பிங்க் ஸ்டோரின் மேனேஜராக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. தினசரி செயல்பாடுகளை மேற்பார்வையிடுவது முதல் சரக்கு மற்றும் தளவாடங்களை நிர்வகிப்பது வரை, ஒவ்வொரு பெண்குழு உறுப்பினரும் அவர்களது தனித்துவமான பலத்தை வெளிக்காட்டுகிறார்கள்.
"இங்கே பணிக்கு சேர்ந்த பிறகு நிம்மதியாக உணரும் அதே வேளை சற்று கவலையாகவும் உள்ளது. ஏனெனில், இங்கே பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும், பேக்கிங், தர சோதனைகள் போன்றவற்றைத் தவிர, இரவில் தாமதமாகும். ஆனால், காலப்போக்கில், ஒரு குழுவாக இது வகுக்கப்பட்டது போல் கடினமாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்," என்றார்.
ஜெப்டோவின் துணிகர முயற்சி..
Gig ("கிக் வேலை" என்பது குறுகிய கால, ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு அல்லது ஃப்ரீலான்ஸ் வேலையை குறிக்கும்) மற்றும் விரைவு வணிக பணிகளில் பெண்களின் பங்கேற்பு வரலாற்று ரீதியாக குறைவாகவே இருந்து வருகிறது. இதற்கு முதன்மையாக பாதுகாப்பு, பணியிட சார்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட தலைமைப் பாத்திரங்கள் காரணமாகும். இருப்பினும், Zepto Pink Store போன்ற முயற்சிகள், பெண்கள் பங்கேற்பதை தாண்டி சிறந்து விளங்கக்கூடிய பாதுகாப்பான, மேலும் உள்ளடக்கிய பணியிடங்களை உருவாக்குவதற்கான மாற்றத்தைக் குறிக்கின்றன.
26 வயதான ஸ்டோர் ஷிப்ட் பொறுப்பாளரான ராஜேஸ்வரி பி கூறுகையில்,
"நைட் ஷிப்ட் வேலை செய்வது என்பது கனவு நனவாகியது போன்றது. தனிப்பட்ட முறையில், இது எனக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனெனில், இது வேலை நேரங்களின் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. நான் பணிபுரிந்த பிற இடங்களில் பெண்கள் காலையில் முதல் ஷிப்ட்டில் மட்டுமே வேலை செய்கிறார்கள். இது எங்களை மட்டுப்படுத்துவதை போலுள்ளது. ஏனென்றால், பெரும்பாலனவர்களால் கருதப்படுவதை போல எல்லா பெண்களும் பகலில் மட்டுமே வேலை செய்ய விரும்புவதில்லை," என்றார்.
23 வயதான கலைவாணி கலைசெல்வன், ஒரு வருடத்திற்கு முன்பு ஜெப்டோவில் சேருவதற்கு முன்பு ஒரு அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்தார்.
"பணியில் உதவி தேவைப்பட்டால், என் சக ஊழியர்கள் தலையிடுகிறார்கள். மாதவிடாய் நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், என் மேலாளரும் சக ஊழியர்களும் புரிந்துகொண்டு எனது சில வேலைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அனுதாபமும், ஒற்றுமையும் இந்த கடையை மற்ற எல்லா கடைகளுக்குமான ஒரு முன்மாதிரியாக மாற்றுவதற்கான முக்கியமான காரணமாகும்," என்று அவர் கூறுகிறார்.
"பெண்களால் இயங்கும் இந்த ஸ்டோரை அணுகக்கூடியதாகவும், நிலையானதாகவும் மாற்ற பிக் அப் மற்றும் டிராப் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களது பணியாளர்களில் 70% பேர் பெண்களாவர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், கல்வித் தடைகளை நீக்குவதற்கும், தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன," என்றார் சர்மா.

படித்த படிப்புக்கு வேலை இல்லை; டூவீலரில் குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தாய்!