2022: சாதாரண பின்புலத்தில் இருந்து தொழில்முனைவில் முத்திரைப் பதிக்கும் தமிழக இளைஞர்கள்!
தொழில்முனைவில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷனாக 2022-ல் வலம் வந்த தமிழக இளம் தொழில்முனைவோர் குறித்த ஊக்கம் தரும் கதைகளின் தொகுப்பு இது.
இன்றைய காலக்கட்டத்தில் படித்து முடித்த பிறகு வேலைக்குச் செல்லாமல் சொந்தமாக நிறுவனம் தொடங்கி பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற முனைப்பு நம் இளைஞர்களிடையே கூடியிருக்கிறது.
இதற்காக, புதுப்புது தொழில்முனைவு யோசனைகளை செயல்படுத்துவது, சரியான பாதையில் நிதி திரட்டும் உத்திகளைக் கையாள்வது, நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு வியூகங்களை செயல்படுத்துவது என தங்களை நிரூபித்துக் காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவு இளைஞர்களை ‘யுவர்ஸ்டோரி தமிழ்’ தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களின் வெற்றி கதைகளை ஊக்கப்பாடமாக வாசகர்களுக்கு அளித்தது.
அவர்களில் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து அசாதாரண பயணத்தை மேற்கொள்ளும் சில உத்வேக இளைஞர்களின் கதைகளின் தொகுப்பு இதோ...

ஓர் இளைஞர் படையின் அட்டகாச முயற்சி!
திறமை + ஆர்வம் + முயற்சி - இந்தக் கூட்டணியுடன் குழுவாக ஒருமித்து செயல்படும் பக்குவம் இருந்தால் தொழில்முனைவில் ஜெயித்துக் காட்டலாம் என்பதற்கு நம் கண்முன் முன்னுதாரணமாக நிற்கிறது இந்த இளம்படை.
ஆம், சென்னையைச் சேர்ந்த ‘பிக் மை ஆட்’ (PickMyAd) நிறுவனத்தின் பின்புலத்தில் ஆர்வமிகு இளைஞர்கள் 16 பேர் கொண்ட குழு இருக்கிறது. பிராண்ட்கள் தங்கள் வர்த்தகத்தை விளம்பரம் செய்வதற்காக இன்ஃப்ளூயன்ஸர்கள் எனப்படும் செல்வாக்காளர்களை ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான மேடையாக விளங்குகிறது இந்த நிறுவனம். வித்தியாசமானதும், காலத்தின் தேவை மிகுந்ததுமான இந்த கான்சப்படில் வெற்றி நடை போடத் தொடங்கியிருக்கிறது ‘பிக் மை ஆட்’ நிறுவனம்.

பொதுமுடக்கத்தின்போது நண்பர்களான பிரபு தாஸ், சிவகுமார் செல்வராஜ், அருண் போய்ஸ் மற்றும் அருள்ஜோதி குப்புசாமி, யூடியூப் சேனல் ஒன்றை துவக்க விரும்பினர். மாறுபட்ட முறையில் செயல்படத் தீர்மானித்தவர்கள் பல வர்த்தக எண்ணங்களை பரிசீலித்து, முற்றிலும் வேறுபட்ட யோசனையாக, ‘பிக் மை ஆட்’ எண்ணத்தை தேர்வு செய்தனர்.
மொத்தம் 16 பேர் கொண்ட குழுவுடன் இயங்கத் தொடங்கினர். தனது மேடையில் 900 செல்வாக்காளர்களைப் பெற்றுள்ள இந்நிறுவனம் 30 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது தமிழக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இளைஞர்கள் நிச்சயம் படித்து உத்வேகம் அடைய வேண்டிய கதை இவர்களுடையது.
முழுமையாக வாசிக்க: பிராண்ட்கள் இன்ஃப்ளுயென்சர்களை ஒப்பந்தம் செய்ய உதவும் சென்னை ஸ்டார்ட் அப்!
‘பேக்பென்ச்சர்’ முன்னுக்கு வந்த கதை!
Shrewd Business Solutions என்ற வெப் டிசைனிங் மற்றும் ஆப் டிசைனிங் நிறுவனத்தை நிறுவி சிஇஒ ஆக இரூகிறார் மார்கண்டன் மகாராஜன் என்னும் இளைஞர். மதுரை உசிலம்பட்டிக்கு அருகே வளர்ந்த மார்கண்டனுக்கு தற்போது சென்னை மற்றும் கோவையில் அலுவலகம் இயங்கி வருகிறது.
28 ஊழியர்கள் வேலை செய்யும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. இந்தியாவில் முக்கியமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். இதுவரை 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான வெப் மற்றும் ஆப் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

‘இதில் என்ன சிறப்பு?’ என்று சிலர் வினவலாம். மார்கண்டன் மகாராஜன் தனது நிறுவனத்தை கட்டமைத்த விதம்தான் நம் ஒவ்வொருவருக்கும் ஏணிப்படி பாடம்.
ஆம், ப்ளஸ் டூவில் ஃபெயில், ஆனால் மீண்டும் பரீட்சை எழுதி பாஸ் ஆனார். எனினும், பொறியியல் படிக்க முடியவில்லை. முட்டி மோதி டிகிரி படித்தவருக்கு இன்ஃபோசிஸில் வேலை. அந்த அனுபவத்துடனும், தொழில்முனைவுடனும் மீண்டும் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியாது என்று நினைப்பவர்கள் மத்தியில், சொந்த நிறுவனம் தொடங்கி தன்னைப் போன்று இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார். இந்த இளைஞர் கடந்து வந்த பாதை, நிச்சயம் இந்தத் தலைமுறையினரைத் தூக்கிவிடும் படிக்கட்டு.
முழுமையாக வாசிக்க: ரூம் பாய் டு தொழில் முனைவர்: ஐடி நிறுவனம் தொடங்கி 2 கோடி வருவாய் ஈட்டும் ‘பேக்பென்ச்சர்’
சமூக வலைதளமே இவர்களின் ஆடுகளம்!
இன்றைய தலைமுறையினர் அதிகம் புழங்கும் இடம் சமூக வலைதளங்கள். பலரும் பொழுதுபோக்குவதற்காக பயன்படுத்தும் சமூக வலைதளங்களையே சிலர் தொழிலுக்கான வாடிக்கையாளர்களை உருவாக்கும் களமாகவும் கொண்டு தொழில்முனைவில் அசத்துகின்றன. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்தான் ‘தி சோசியல் கம்பெனி’ நிறுவனர் சுதர்சனன் கணபதி.
பல சமூக வலைதளங்கள் இருந்தாலும் Linkedin–இல் மட்டுமே கவனம் செலுத்தி, அதில் சிறந்த சேவை அளிக்கிறது இவரது நிறுவனம். தனிநபர்களின் லிங்கிடு இன் கணக்குகளை இந்த நிறுவனம் கையாளுகிறது. கவனிக்க, நிறுவனங்கள் அல்ல நிறுவனங்களின் தலைவர்களின் பக்கங்களை கையாளுகிறது.

இவர்கள் மார்க்கெட்டிங்காக எந்த செலவும் செய்வதில்லை. லிங்கிடுஇன்'னில் தங்களுடைய செயல்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். நிறுவனத்தின் தலைவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் என பலரும் இவர்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.
பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் ஒரே கட்டணம்தான். காரணம் வேலை என்பது இங்கு ஒன்றுதான். இப்போதைக்கு சுமார் 50 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் தற்போது 11 நபர்கள் வேலையில் உள்ளனர். சிறிய அலுவலகம் இருக்கிறது. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்துதான் வேலை செய்கிறார்கள். புது முயற்சிகளில் தொழில்முனைவில் புகுந்து விளையாடலாம் என்பதற்கு இவர்களே முன்னுதாரணம்.
முழுமையாக வாசிக்க: லாக்டவுனால் சரிந்த பிசினசை Linkedin மூலம் நிறுவனர் சுதர்சனன் கணபதி சரிசெய்தது எப்படி?
நேரமும் உழைப்பும்தான் இங்கே மூலதனம்!
வெறும் 200 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய அக்ரிடெக் தொழில்முனைவை விவசாயிகளுக்கு லாபம் தனக்கான அடையாளமாக்கி வெற்றி கண்டிருக்கிறார் கோவை இளம் தொழில்முனைவர் ஷியாம் ராஜசேகரன். அக்ரிடெக் சார்ந்த நிறுவனமான ‘Veg Route' தொடங்கி, அதில் வெற்றி கண்டுள்ள 26 வயது ஷியாம் ராஜசேகரன், விவசாயிகளையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாகவும் தன்னுடைய வெற்றிகரமான தொழிலாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அதிக நேரத்தை மூலதனமாக்கி ஸ்மார்ட் வொர்க் மூலம் இந்தத் தொழில்முனைவிற்கான வெற்றிப் பாதையை அமைத்தவர், முதன்முதலில் தொழில் செய்யத் தொடங்கியபோது அம்மா உதவியுடன் காய்கறிகளை பேக் செய்து பைக்கில் அவற்றை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வந்திருக்கிறார்.
இப்படியாக தொடங்கிய வர்த்தகமானது 71,000 ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மற்றும் 30,000 ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்கால இலக்காகக் கொண்டிருக்கிறார். இளைஞர்களுக்கு இவர் காட்டியிருக்கும் பாதை வேறு ரகம் என்பதில் ஐயமில்லை.
முழுமையாக வாசிக்க: ‘நீயெல்லாம் ஜெயிக்க மாட்ட’ - அக்ரி தொழிலில் ஆண்டு வருவாய் ரூ.12 கோடி ஈட்டி சாதித்த தொழில்முனைவர்!
நம்பிக்கையை விதைக்கும் இளைஞரின் முன்னெடுப்பு!
உற்பத்தித் துறையை ஒருங்கிணைக்கும் சென்னை நிறுவனமான 'ஃபிரிகேட்' ‘Frigate’ சமீபத்தில் ரூ.1.3 கோடிக்கு மேல் நிதியை திரட்டியிருக்கிறது. முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் காட்டும் இந்நிறுவனத்தில் தற்போது 23 ஊழியர்கள் இருக்கிறார்கள் சிறு உற்பத்தி நிறுவனங்களுகான முக்கியப் பிரச்சினையே போதுமான அளவுக்கு ஆர்டர் கிடைக்காததுதான். ஆர்டர் கிடைக்காததால்தான் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் ஃபிரிகேட் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியா முழுக்க பயணம் செய்து மூன்றாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட நகரங்களில் உள்ள சிறு, குறு நிறுவனங்களை தங்களுடன் இணைத்து, தங்களது நெட்வொர்க்கில் சுமார் 150 எஸ்.எம்.இ. நிறுவனங்களைச் சேர்த்தார் Frigate-இன் நிறுவனர் தமிழ் இனியன். இவரது தொழில் முனைவு பயணம் மலைக்கத்தக்கது. நமக்கு நிச்சயம் ஊக்கம் தரவல்லது.
முழுமையாக வாசிக்க: ‘12 வயதில் வீடுவீடாக ஸ்னாக்ஸ் விற்றேன்’ - உற்பத்தித் தொழிலில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டும் தமிழ் இனியன்!
சென்னை இளைஞரின் ஆரோக்கிய முயற்சி!
மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு சர்க்கரையோ கலோரியோ இல்லாத Polka Pop பானத்தை அறிமுகப்படுத்தி, ஃப்ளேவர்டு ஸ்பார்கிளிங் வாட்டர் தயாரித்துத் தரும் முதல் ‘மேட் இன் இந்தியா’ பிராண்ட் என்ற சிறப்பைப் பெற காரணமாக இருந்திருக்கிறார் கௌரவ் கெம்கா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். லயோலா கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். அமெரிக்காவிலுள்ள உலகின் முன்னணி கல்லூரியான பாப்சன் கல்லூரியில் எம்பிஏ முடித்துள்ளார்.

ஒரு மாதத்தில் 35,000 பாட்டில்கள் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் வரையிலும் உள்ள காலகட்டத்திற்குள் விற்பனை அளவை 1 லட்சம் பாட்டில்களாக அதிகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. கௌரவ் கெம்கா ஆரோக்கியம் சார்ந்து கவனம் செலுத்தியதற்கான காரணும், அதன் ஒரு பகுதியாக Polka Pop பானத்தை கையிலெடுத்ததன் பின்புலக் கதையும் வியக்கத்தக்கது.
முழுமையாக வாசிக்க: சர்க்கரை இல்லா ஜீரோ கலோரி ‘ஸ்பார்கிளிங் வாட்டர்’ - சென்னை இளைஞரின் ஆரோக்கிய முயற்சி!
அனிமேஷன் கற்பிப்பதில் சாதிக்கும் இளைஞர்!
கடலூரைச் சேர்ந்த பொறியாளர் பிரேம்குமார் Log2base2 எனும் நிறுவனம் தொடங்கி, கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் மொழிகளை அனிமேஷன் வடிவில் தயாரித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை வாடிக்கையாளர்களாக பெற்றுள்ளார். 1000+ வாடிக்கையாளார்களுடன், ஆண்டு வருவாயாக ரூ.1 கோடியை தாண்டி அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது இவரது நிறுவனம்.

இவர்களின் பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவில் இருந்துதான் வருகிறார்கள். ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, பூனே, லக்னோ உள்ளிட்ட முக்கியமான நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் வாடிக்கையாளர்கள் ஆகுகின்றனர். இதுதவிர, 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இதில் அமெரிக்காவில் கணிசமான வாடிக்கையாளர்கள் (6%) உள்ளனர். தவிர இலங்கை, வங்கதேசம் ஆகியவையும் முக்கியமான சந்தையாக உள்ளது. பிரேம்குமார் தனது நிறுவனத்தை உருவாக்கிய கதையும், அதற்காக அவர் நிதி திரட்ட எடுத்த முன்னெடுப்புகளும் கவனத்துக்கு உரியவை.
முழுமையாக வாசிக்க: அனிமேஷன் வடிவில் புரோகிராமிங் மொழிகள்: ரூ.1 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் ஸ்டார்ட்-அப்!

2022: தமிழ்நாட்டில் தொடங்கி இந்திய அளவில் திரும்பி பார்க்கவைத்த 10 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்!
Edited by Induja Raghunathan